கடந்த வெள்ளியன்று மக்களவையில் ரஃபேல் பேரம் மீதான விவாதத்திற்கு 150 நிமிட நேரம் பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது கட்சி எம்.பி.க்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அனைவரும் ’கட்டாயம்’ பார்க்க வேண்டிய காணொளிக் காட்சி என்று ட்விட்டரில் கூறியுள்ள பிரதமர் மோடி அமைச்சரின் பேச்சு ரஃபேல் பேரம் மீதான தவறான பிரசாரத்தைச் ‘சுக்குநூறாக்கும்’ பேச்சு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை எதிரொலித்துள்ள பாஜகவின் தலைவர் அமித் ஷா “உண்மைகள் நிறைந்த தன் அற்புதமான பேச்சால் காங்கிரஸ் கட்சியினரின் பொய்களையும் ராகுலின் பொய்த்தகவல் பிரசாரத்தையும் முற்றிலும் தரைமட்டமாக்கியுள்ளார் நமது பாதுகாப்பு அமைச்சர் சீதாராமன்ஜி அவர்களை உண்மையை தேசத்தினரின் பார்வைக்குக் கொண்டுவந்ததற்காக மனமாரப் பாராட்டுகிறேன்,” என்றார்.
“மிக அற்புதமான” பேச்சிற்காகப் பாதுகாப்பு அமைச்சரை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் பாராட்டியுள்ளார்.
இப்புகழ்ச்சியை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பிரான்ஸிடமிருந்து 126 ஜெட் விமானங்கள் வாங்க இருந்த முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவை 36 விமானங்கள் எனக்குறைத்த மோடி அரசின் முடிவில் குளறுபடிகள் இருந்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ‘பாயிண்ட் பாயிண்ட்டாகவும்’ உக்கிரமாகவும், வளமான போர்க்குணத்துடனும் பேசிய அமைச்சரிடம் உச்ச நீதிமன்றத்திடம் ரஃபேல் ஜெட் விமான பேர விஷயத்தில் ‘நல்ல பேர்’ வாங்கிய சந்தோஷத்தைக் காண முடிந்தது.
ஆனாலும், இறுதியில் அவரது செயல் திறன் – பேச்சு, தகவல் தந்த விதம் –இளவரசர் இல்லாத ‘ஹேம்லட் நாடகத்தை’ பார்ப்பது போலிருந்தது. அங்கில்லாத அந்த இளவரசர் – வேறு யார் – அனில் அம்பானியேதான்!
ரஃபேல் ஜெட்விமான பேரத்தின் முக்கிய மர்மங்களுள் ஒன்று பொதுத்துறை நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் இதிலிருந்து விலகியதும் அனில் அம்பானியில் நிறுவனம் ஜெட்விமான உற்பத்தியாளர் டஸால்ட் ஏவியேஷனுடன் பெரும்பான்மைக் கூட்டாளியாக உள்ளே நுழைந்ததும்தான்.
உங்களையும் என்னையும் போன்ற ஒரு வெளி ஆளுக்கு பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தங்களின் நுணுக்கங்கள் அவ்வளவாகத் தெரியாது என்ற காரணத்தால் இதை மாற்றியமைப்பது அரசுக்கு மிகச் சுலபமாக இருந்தது.
போஃபர்ஸ் பீரங்கி வழக்கில் இருந்ததுபோல் ரஃபேல் ஜெட் பேரத்திலும் எந்தத் ‘தரகரும்’ இல்லாததுதான் இது ‘சுத்தமான, ஊழலற்ற ஒப்பந்தம்’ என்ற அரசின் கூற்றை நம்ப முடியாமல் நம்மை ஆக்கிவிட்டது.
உண்மை மேலும் குழப்பமானது. அனில் அம்பானிக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் பிரதமர் மோடி ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றிவிட்டார் என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ‘ஆப்ஃசெட்’ எனும் கருத்தாய்வு 2005ஆம் ஆண்டுதான் பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. உபகரணத்தை சப்ளை செய்யும் அந்நியர் (உபகரண உற்பத்தியாளர் / வியாபாரி எனக் குறிப்பிடப்படுபவர்) தன் தயாரிப்பின் குறிப்பிட்ட ஒரு விழுக்காட்டை வாங்கும் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதற்காக அந்நாட்டில்‘ஆஃப்செட்’ கூட்டாளிகளை அந்நிறுவனம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். ரஃபேல் பேர ஒப்பந்தம் ரூ.59,000 கோடி மதிப்புடையது என்பதால், இந்தியாவில் இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கும் கூட்டாளிக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் லாபமாகக் கிடைக்கும்.
ஐமுகூ அரசு ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசு 18 ஜெட் விமானங்களை ‘இயக்கும்’ நிலையில் வாங்க இருந்தது; மீதமிருந்த 108 ஜெட்களை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டாக நம் நாட்டிலேயே டஸால்ட் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் 2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்றிருந்த நரேந்திர மோடி இயக்கும் நிலையில் 36 விமானங்கள் மட்டுமே வாங்குவோம், வேறெதையும் வாங்க மாட்டோம் என்று யாரும் எதிர்பார்க்காத புதியதொரு ஒப்பந்தைத்தை அறிவித்தார். இந்தியாவில் உற்பத்தி செய்யாமல் டஸால்ட் வேறொரு கூட்டாளியைத் தேர்ந்தெடுத்து தன் ‘ஆஃப்செட்’ பணிகளைச் செய்தாக வேண்டும். பாரீஸில் பிரதமரின் இந்த அறிவிப்பு வந்தவுடன் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் எவ்வித அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் புது நிறுவனத்தைக் கூட்டாளியாக டஸால்ட் தேர்ந்தெடுத்தது.
அனில் அம்பானியின் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க பிரான்ஸை இந்தியா நெருக்கியது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிசெய்வது போல் முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஃப்ராங்கோயிஸ் ஹாலண்ட் பாரீஸ் இணையதள நேர்காணல் ஒன்றில் “இதில் எங்கள் பேச்சு எடுபடவில்லை. ரிலையைன்ஸை டஸால்ட்டின் கூட்டாளியாக ஆக்க இந்திய அரசுதான் முன்மொழிந்தது. எங்களுக்கு வேறு தேர்வும் இல்லை” என்று 2018 செப்டம்பரில் கூறியிருந்தார்.
இரண்டு காரணங்கள் கூறி இக்குற்றச்சாட்டை அரசு உறுதியாக மறுத்தது. டஸால்ட்டும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸும் எவ்வித ஒப்பந்தத்துக்கும் இணங்கவில்லை என்பதால் முந்தைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாம். இரண்டு, ஆஃப்செட் கூட்டாளியைத் தேர்ந்தெடுக்கும் டஸால்டின் முடிவில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லையாம். இரு தனியார் நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால்தான் டஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனம் உருவானதாகவும், அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் தலைமையிலான 3-நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 2018 டிசம்பர் 14ஆம் தேதி அளித்த தீர்ப்பில் அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்டதுவே கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனும் அருண் ஜெட்லியும் மிகுந்த போர்க்குணத்துடன் இருந்ததற்கான ஒரு காரணம். தவறான பரிவர்த்தனை நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால், எதிர்க்கட்சிகளின் வாதத்தைத் துச்சமாக நினைப்பது அரசுக்கு மிகச் சுலபமாக இருந்தது. ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் தூய்மையான மோடி அரசின் மேல் வீணாகப் பழி போட முயற்சிப்பதாக இந்த இரண்டு அமைச்சர்களும் வாதிட்டனர்.
ஆனால் அரசு சற்று அவசரப்பட்டு பீற்றிக்கொள்கிறதோ எனத் தோன்றுகிறது. காங்கிரஸின் குற்றாச்சாட்டை அரசியல் பொய்ப் பிரசாரம் என்றே அரசு சொன்னாலும், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மறுபரிசீலனை மனுவை அப்படி அலட்சியம் செய்துவிட முடியாது. சின்ஹாவும் ஷோரியும் பாஜக அரசில் அமைச்சர் பதவி வகித்தவர்கள்; வாழ்நாள் முழுவதும் ஊழலின் அனைத்து வடிவங்களையும் உறுதியாக எதிர்த்து வருபவர் பூஷண்.
ஊழல் தடைச் சட்டத்தின் கீழ் ரஃபேல் பேரத்துக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்திருந்த புகாரின் மேல் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும்படி மத்தியப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்த மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். டிசம்பர் 14ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி இன்னொரு மனுவையும் இம்மூவரும் தாக்கல் செய்துள்ளனர்.
சீரான வகையில் உருவாக்கப்பட்ட இம்மனுவானது நீதிமன்றத்தின் அரசின் வாதத்தை உடைக்கப் பலவித உண்மைகளைப் பட்டியலிட்டு அனில் அம்பானி உட்புகுந்தது பற்றிய பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
“அரசு வேண்டுமென்றே நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது; பிரமாணப் பத்திரம்கூட இல்லாத நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ‘சரியென்று’ சொன்னதன் மூலம் நீதிமன்றமும் பெரும் தவறு புரிந்துவிட்டது,” என்று சொல்லும் இம்மனு டஸால்ட்டும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டும் ஒப்பந்தத்தை எட்டத் தவறியதால் அனில் அம்பானியின் நிறுவனம் ஆஃப்செட் கூட்டாளியாக உட்புகுந்தது, இதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்ற அரசின் வாதத்தை உடைக்கச் சரியான சான்றுகளையும் சமர்ப்பித்துள்ளது.
“ரிலையைன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனமானது ஆஃசெட் கூட்டாளி எனத் தேர்ந்தெடுக்கத் தகுதியற்றது என்பதைக் கணக்கிலெடுக்க இத்தீர்ப்பு தவறிவிட்டது” என்று மனு சொல்கிறது. நெறிமுறைகளின்படி, DRDO உள்ளிட்ட தகுதி படைத்த பொருட்கள் / சேவைகள் தரும் இந்திய நிறுவனங்கள், நிலையங்கள், தொழிற்சாலைகளை ‘இந்திய ஆஃப்செட் கூட்டாளி’ என்பர். ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸின் ‘தாய்’ நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் ஆண்டறிக்கைகளிலிருந்து இந்நிறுவனம் இத்தகைய பொருட்கள் / சேவைகளைத் தரும் வேலையில் ஈடுபடவில்லை எனத் தெரியவருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆஃப்செட் கூட்டாளியாகத் தேர்வாகும் நிறுவனத்துக்குப் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் தர வேண்டும் (தனக்குத் தெரியாது என்று அரசு சொல்லிவிடக் கூடாது என்பதற்காக) என்றும் மனு சொல்கிறது. “ஆஃப்செட் கூட்டாளியைத் தேர்வு செய்யும் உரிமை டஸால்டுக்கு இருந்தாலும், இத்தேர்வை மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் அங்கீகரித்தாக வேண்டும். ஆஃப்செட் கூட்டளி பற்றிய விவரத்தை டஸால்ட் தரவில்லை என மத்திய அரசு சொல்லியதன் பேரில் இத்தீர்ப்பு தரப்பட்டுள்ளது. இதுதான் உச்ச நீதிமன்றத்தைப் பல வழிகளில் தவறாக நடத்த காரணமாக இருந்த்துள்ளது; மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி ஒப்பந்தத்தின்படி டஸால்ட் தன் தேர்வை எவ்வாறு அரசுக்குத் தெரிவிக்காமல் போனது என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஒப்பந்தத்தையும் நிறுவனத்தையும் அங்கீகாரம் செய்தாரா என்பதையும் கண்டுப்பிடித்தாக வேண்டும்” என மேலும் இம்மனுவில் சொல்லப்பட்டுள்ளது.
36 ஜெட் விமானம் உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு அனில் அம்பானியின் நிறுவனத்துடன் ‘கூட்டு’ வைக்க டஸால்ட் தள்ளப்பட்டதை நிரூபிக்க ஹாலண்டின் நேர்காணல் தவிர டஸால்ட் தொழிற்சங்க ஆவணங்கள் உள்ளிட்ட பிற ஆதாரங்களும் மனுவில் தரப்பட்டுள்ளன.
“திரு அம்பானியின் நிறுவனம் ஆஃசெட் கூட்டாளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் பற்றிய செய்முறை மீது மேற்சொன்ன உண்மைகள் சந்தேகத்தை எழுப்புவதால் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டாக வேண்டும்,” என மனு முடிகிறது.
இம்மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம், வாபஸ் பெறாமலும் இருக்கலாம். நிர்மலா சீதாராமனின் ‘ரஃபேல் பேரம் மோடியைத் திரும்ப (ஆட்சிக்கு) கொண்டுவரும்’ என்ற வாக்கு பலிக்காமல் போகலாம். என்ன நடந்தாலும்இந்தியாவின் மிகப்பெரும் பாதுகாப்புத் துறை ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிழல் படுவது போகவே போகாது; இதைப் பற்றி எவ்வளவு குறைவாக அரசு பேசுகிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக இந்நிழலின் தாக்கம் இருக்கும்!
மனினி சாட்டர்ஜி