தலித்துகளும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் பாஜகவுக்கு எதிராக திரளவும், 50 சதவீத வரம்பு நீக்கப்பட கோரிக்கை வைக்கவும் இது வழி வகுக்கும்.
இதுவரை இடஒதுக்கீட்டில் விலக்கப்பட்டிருந்த சமூகப் பிரிவினரில் பொருளாதார நோக்கில் பின் தங்கிய பிரிவினருக்கு, கல்வி நிறுவனங்களிலும், அரசு பணிகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடரபான அரசு முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறதா? இல்லையா என்பதை மீறி, இது வாக்காளர்கள் பாஜகவை விட்டு விலகிச் செல்லாமல் கட்டுப்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவும். அவர் நிபுணத்துவம் பெற்றிருக்கும் சார்பு நிலை அரசியலை மேற்கொள்ளவும் உதவும்.
ஆனால், இந்த முடிவு எதிர்பார்க்காத விளைவுகளை கொண்டிருக்கலாம். ஒரு விஷயம், இது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் தலித்களை மேலும் ஒருங்கிணைக்கும். மற்றொன்று, மேலும் பலர் விகிதசார அடிப்படையை கோர இது வழிவகுக்கும். அரசு வேலைகளும், கல்லூரி இடங்களும் சமூகப் பிரிவினரின் விகிதாசாரஜ்ம் அடிப்படையில் அமைய வேண்டும் என கோர வைக்கும்.
இடஒதுக்கீட்டில் இடம்பெறாத சமூக குழுக்கள் தங்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நீண்ட காலமாக இட ஒதுக்கீடு கேட்டுவருகின்றன. இந்த முடிவுக்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவிப்பது, 2016இல் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்ததற்கு இணையாக அமையும். ஏழைகள் இதை வர்க்கப் போராட்டத்திற்கான மாற்று என நினைத்துக்கொண்டனர். பணக்காரர்கள் தண்டிக்கப்பட்டு தாங்கள் பலன் பெறுவோம் என நினைத்தனர். ஆனால் இது தவறு எனப் புரியக் காலமானது.
பாஜகவின் இடஒதுக்கீடு உத்தியின் மேலோட்டமான தன்மை போகப்போக வெளிப்படும்.
உத்தேசிக்கப்பட்டுள்ள ஒதுக்கீடு, மேல் சாதியினருக்கு மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் இதர பிறபடுத்தட்டவர்கள் தவிர அனைத்து பிரிபினருக்குமானது. இதில் பட்டேல், ஜாட், மராத்தா மற்றும் கப்பு வருவார்கள். இவர்கள் மேல் சாதியினர் இல்லை ஆனால், சாதி அடுக்கில் இடைப்பட்ட பிரிவினர். இதர பிறபடுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பரிந்துரைத்த மண்டல் குழுவால் இந்த பிரிவினர் சமூக மற்றும் கல்வி நோக்கில் முன்னேறிய சமூகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரிவினர் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிவந்தாலும், இதன் பலன் மேற்பூச்சானது என்பதை விரைவில் புரிந்துகொள்வார்கள். காரணம், அவர்கள் ஆதிக்கச் சாதியினருடன் போட்டியிட வேண்டும். ஆதிக்கச் சாதியினர், பல ஆண்டுகளாக நவீன கல்வியை பெற்று வருவதால், தங்கள் வரலாற்று சாதகம் காரணமாக புதிய இடஒதுக்கீட்டின் பெரும் பங்கு பலனைப் பெறுவார்கள். இடஒதுக்கீடு பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வருமான வரம்பு போலவே இதற்கும் ரூ. 8 லட்சம் வரம்பு என்பதால் இது இன்னும் தீவிரமாகும். தற்போது பொதுப் பிரிவில் உள்ளது போலவே, 10 சதவீத பிரிவிலும் போட்டி கடுமையாக இருக்கும். மத்திய சாதியினர் மற்றும் மேல்சாதி ஏழைகள் அரசு பணிகளில் தங்கள் தற்போதைய நிலையில் பெரிய மாற்றம் காண வாய்ப்பில்லை.
இடஒதுக்கீடு கனவு விற்பனை
ஆனால், இந்த புதிய உத்தரவால், தாங்கள் அதிகம் பலன் பெறப்போவதில்லை என சமூக, கல்வி நோக்கில் மேம்பட்ட மேல்சாதி அல்லாத பிரிவினர் புரிந்துகொள்ளும்போது தேர்தல் முடிந்து போயிருக்கும். இப்போதைக்கு மோடி இடஒதுக்கீடு கனவைக் கொண்டு இந்தப் பிரிவினரை ஈர்ப்பார். எப்படியும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல்களில் மேல் சாதியினர் பெருமளவு பாஜகவை விட்டு விலகிச் சென்றனர். இந்தப் பிரிவினருக்கு பாஜக அளித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீடு பரிசு, தனது ஆதரவு சரிவதைத் தடுத்த நிறுத்தத்தான்.
ஆனால், இந்த நடவடிக்கை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள தரப்பினரை, உச்சநீதிமன்றம் விதித்த 50 சதவீர இட ஒதுக்கீடு வரம்பை நீக்க போராடத் தூண்டும். இதற்கு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. மண்டல் குழு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத ஒதுக்கீட்டை பரிந்துரைத்தபோது, அவர்கள் மக்கள் தொகையில் 52 சதவீதம் எனக் கொள்ளப்பட்டது.
மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக இருக்கக் கூடாது என்பதற்காக, இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அவர்கள் விகிதாசாரத்திற்கு ஏற்ப 52 சதவீத இட ஒதுக்கீடு கோரவில்லை என பி.பி. மண்டல் விளக்கம் அளித்தார். “இதை கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 22.5 சதவீதம் போக, 50 சதவீதத்திற்குள் இருக்கும் வகையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு இருக்க வேண்டும் என கருதினோம். என்றார். மண்டல் இதை 27 சதவீதம் என வரையறுத்தார்.
இதன் காரணமாகவே, முன்னேறிய பிரிவினரில் ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு கோரப்படும் போதெல்லாம், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 50 சதவீத வரம்பு அகற்றப்பட வேண்டும் என கோருகின்றனர். மோடி இப்போது 50 சதவீத வரம்பை மீறி இருப்பதால், அவர்கள் தங்கள் இட ஒதுக்கீடு 52 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் எனக் கோருவதில் நியாயம் உண்டு.
தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினருக்கான 22.6 சதவீதத்துடன் 52 சதவீதத்தைக் சேர்த்துக்கொண்டால் 74.5 சதவீதம் வருகிறது. இது பொதுப் பிரிவில் 22.5 சதவீத அரசு வேலைகள் மட்டும் இருப்பதைக் குறிக்கும். இது விகிதாசார அடிப்படையில் வேலை வழங்குவதற்குச் சமம். 10 சதவீத இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டால், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படை எதிர்ப்பு அகற்றப்படும். இதுவும் விகிதாசாரத்தை நோக்கிய படியாக அமையும்.
2015இல் பிகார் தேர்தலுக்கு சில வாரங்கள் முன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இடஒதுக்கீடு முறையைப் புதிதாகப் பார்க்க வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட சாதியினர் அவரது கருத்தை இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச்செய்யும் உத்தி எனக் கூறினர். அதன் காரணமாக, தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றாகத் திரண்டனர்.
மேல் சாதி ஆதிக்கம்
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது, ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி, மேல் சாதியினர் ஆதிக்கத்தை முறியடிப்பதாக இருக்கிறது. இது நேர் எதிராகவும் உண்மையானது. மேல்சாதியினருக்கான இடஒதுக்கீடு, அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாக அமையும். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அகிலேஷின் சம்ஜவாதி கட்சி மற்றும் மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை 10 சதவீத இடஒதுக்கீட்டை மொத்தமாக எதிர்க்காமல் இருந்தாலும், 50 சதவீத வரம்பு அகற்றப்பட அவர்கள் குரலை உயர்த்தலாம். தெற்கில் உள்ள கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
10 சதவீத இட ஒதுக்கீடு, இந்தி பேசும் மாநிலங்களில் அவர் செய்துவருவது போல, தன்னுடைய பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தன்மை பற்றி மோடி பேச முடியாமல் செய்துவிடும். அவர் மேல் சாதி உத்தியைக் கையாண்டதாக கருதப்படலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு உட்பிரிவு அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் முன் அவர் சமூக நோக்கில் மேம்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கிடு வழங்கியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அவரது கட்சிக்கு எதிராக இது திரளச்செய்யும்.
இதன்படி பார்த்தால், 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மோடி அரசியல் ரிஸ்க் எடுத்துள்ளார். இதன் ஒரே பலன் என்னவெனில், மேல் சாதியினரும், பட்டேல் போன்ற பிரிவினரும் பாஜகவை விட்டு விலகிச்செல்வதை தடுக்கலாம். இந்தப் பிரிவின் அதிருப்தியை பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் மீண்டுவரப் பார்த்தது. இந்தப் பிரிவினருக்கு மோடி இட ஒதுக்கீடு வழங்க முன்வந்துள்ளதால், 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பை பெறாமல் போகலாம்.
எப்படி பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏழைகளுக்கு நலன் பயக்காமல் இந்தியப் பொருளாதாரத்தை பாதித்தோ அதேபோல மோடியின் 10 சதவீத இட ஒதுக்கீடு, ஏழைகளுக்கு பலன் அளிக்காமல் இந்தியாவை பாதிக்கலாம். ஆனால் பணமதிப்பு நீக்கம் போல் அல்லாமல் இந்த உத்தி புதிதல்ல. 2014 தேர்தலுக்கு முன், மன்மோகன் சிங் அரசு ஜாட்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. பல மாநிலங்கள் 50 சதவீத வரம்பை மீற முடியாததை உணர்ந்துள்ளன. மேல் சாதியினரில் உள்ள ஏழைகள், மோடியும், பாஜகவும் தேர்தல் நலனுக்காக தங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை வரலாறு மூலம் உணரலாம்.
அஜாஸ் அஷ்ரப்
(அஜாஸ் அஷ்ரப் தில்லி பத்திரிகையாளர்)
நன்றி: தி ஸ்க்ரோல்
https://scroll.in/article/908705/modis-10-upper-caste-quota-is-a-political-gamble-that-may-backfire-just-like-demonetisation
–
10 சதவிகிதத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் எந்த சாதியாயிருந்தாலும் இட ஒதுக்கீடு பெறலாம் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன …
ஊடகங்கள் உயர்சாதியில் உள்ள , பிற்படுத்தப்பட்டோர் அல்லாத , தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர்களுக்கான பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்று எழுதிக்கொண்டிருக்கின்றன …
எது சரி என்று தெளிவு பெற்ற பிறகு கட்டுரை எழுதுவது தான் சரி
…
பாதிக்கப்படுவது நாட்டில் 60-70 சதவிகிதம் உள்ள ஓபிசி தான் .. ஏனென்றால் ஏற்கனவே 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் 8 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ள ஓபிசி யினர் பங்கு பெற முடியாது ..
இப்போது அவர்களுக்கு இருக்கிற பொதுப்பிரிவு 30 ல் பத்தில் பங்கு பெற முடியாது
…
முன்னேறிய சமூகத்தினைர் இட ஒதுக்கீடு குறித்த தேசிய கட்சிகளின் பெரும்பாமையான ஆதரவு மற்ற சமூகத்தினரை ஒன்றிணைக்கவும் மாநில கட்சிகள் வளர்ச்சிக்குமே உதவியாக இருக்கும் பிஜேபி எதிர்பாத்த பலன் நிச்சயம் தரப்போவதில்லை.