தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் ? இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா ? பிஜேபி எதிர்ப்பு நூலா ? மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும். இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது. கண் மூடித்தனமான பக்தர்கள் தவிர்த்து, மனசாட்சி உள்ள, இந்நாட்டு மக்களை நேசிக்கும் அத்துனை பேரும், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தியாவில் மதத்தின் பெயராலும், தேச பக்தியின் பெயராலும் நடந்து வரும் அக்கிரமங்களை பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். 56 இன்ச் மார்பளவு கொண்ட ஒரு பரமபிதா இந்தியாவை வல்லரசாக்க வந்தே விட்டார் என்று நம்பியே 2014ல் பலரும் வாக்களித்தார்கள்.
என் நண்பன் ஒருவன், 2014 தேர்தல் அன்று, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஊழல்கள் காரணமாக, காலையில் அலாரம் வைத்து முதல் ஆளாக வாக்குச் சாவடிக்கு சென்று மோடிக்கு வாக்களித்தான். இன்று அவனைப் போல வெறித்தனமான மோடி எதிர்ப்பாளரை பார்க்க முடியாது. 2014ல் மோடி குறித்து நல்அபிப்ராயம் வைத்திருந்தவர்கள் கூட இன்று மோடியின் பொய் மற்றும் புரட்டுக்களால் மனம் நொந்திருக்கிறார்கள். மோடி மட்டுமில்லாமல் அவர் அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் பொய் பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியிலாவது தப்பித் தவறி ஒன்றிரண்டு அமைச்சர்கள் உண்மையுரைத்து, சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலத்தில் With impunity என்று சொல்வது போல,திமிரோடு பொய் பேசி தண்டனைகளிருந்து தப்பித்து கொள்கிறார்கள் பாஜக அமைச்சர்கள்.
மனசாட்சி உள்ள இந்திய குடிமக்கள், இந்நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறார்கள். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ன ஆகுமோ என்று அஞ்சுகிறார்கள். சாதாரண மக்களே இப்படி எண்ணுகிறார்கள் என்றால், சிறுபான்மையினரைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் கடுமையான அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். நாட்டில் எதிர்க்கட்சிகளையே இல்லாமல் செய்வேன் என்று மோடியும் அமித் ஷாவும் சூளுரைப்பது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
மோடியின் செயல்பாடுகள் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு முழுமையான தொகுப்பாக நூல்கள் ஏதும் வெளிவரவில்லை. அவரின் மாய்மாலங்கள் எங்கும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்வதன் ஒரு நோக்கமே இந்நூல். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, “மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து என்னை வீழ்த்த சதி செய்கிறார்” என்று மோடி உரைத்தது போல அப்பட்டமான பொய்களைக் கொண்டதல்ல இந்நூல்.
விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, மோடியின் செயல்பாடுகள் குறித்து, உரிய தரவுகளோடு ஆய்வு செய்து எழுதப்பட்டதே இந்நூல். கண்மூடித்தனமான மோடி பக்தர்களிடம் இந்நூல் எந்த மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. ஆனால், திறந்த மனதோடு விருப்பு வெறுப்பின்றி, காய்த்தல் உவர்த்தலின்றி, தரவுகளை நேர்மையாக அணுகுபவர்களுக்கே இந்நூல்.
இந்நூலின் நோக்கம் குறித்து, இந்நூலின் முன்னுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகத்தார் அனுமதியோடு, அந்த முன்னுரையை சவுக்கில் பதிப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
சென்னை புத்தக கண்காட்சியில், கிழக்கு பதிப்பக அரங்குகள்
365,366,453 மற்றும் 454ல் இந்நூல் கிடைக்கும். படியுங்கள். விமர்சியுங்கள். விவாதிப்போம். இந்நாட்டில் ஜனநாயகத்தை தழைக்க வைப்போம்.
அன்புடன்.
சவுக்கு சங்கர்.
முன்னுரை
இந்தியாவை ஐந்தே ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆக்கிக் காட்டுகிறேன், நாட்டில் இன்று நிலவும் அத்தனை சிக்கல்கள், பிரச்சினைகளுக்கும் காரணம் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பமே, கருப்புப் பணத்தை ஒழிப்பேன், ஊழலை ஒழிப்பேன், லோக் ஆயுக்தா அமைப்பேன், ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சத்தை போடுவேன், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன், கங்கையை தூய்மைப்படுத்துவேன் என்று பல்வேறு வாக்குறுதிகளோடு ஆட்சிக்கு வந்தார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய ஏராளமான ஊழல்கள் காரணமாக, நரேந்திர மோடியை, இந்தியாவை வாழ்விக்க வந்த ஒரு மாபெரும் அவதார புருஷர் என்றே பிஜேபி பக்தர்கள் நம்பினார்கள். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகாலமாக, நரேந்திர மோடி தான் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை ‘ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருகிறேன்’ என்று கூறுகிறார் மோடி. ஆனால் நான்கு ஆண்டுகளில், அதாவது 1475 நாட்களில், மோடி 800 நாட்களை நாடு முழுக்க பேரணிகளை நடத்தி செலவிட்டிருக்கிறார். 150 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணம். ஆனால் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த நாட்கள் வெறும் 19. மேலும், இந்தியா முழுக்க வெறுப்புணர்வு வளர மோடி ஒரு பெரும் காரணமாக இருந்து வருகிறார்.
நாடெங்கும் சிறுபான்மை இனத்தவர் மிகுந்த அச்ச உணர்வில் இருக்கிறர்கள். இந்தியாவின் குறு, நடுத்தர மற்றும் சிறுதொழில்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது.
சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாகவும், பிஜேபிக்கு எதிராகவும் கருத்து வெளியிடும் பெண்களை, மிகுந்த ஆபாசமாகவும், வன்முறையோடும், மிரட்டும் நபர்களை ட்விட்டரில் பின் தொடர்பவராக இருக்கிறார் மோடி. நாடெங்கிலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பலவற்றில் பிஜேபியினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து மோடி எப்போதும் கண்டனம் தெரிவித்தது இல்லை.
நாட்டில் பசு பாதுகாப்பு என்ற பெயரில், மாட்டுக் கறியை உண்ணும் இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப் படுகிறார்கள். ‘நானும் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்யவும் விட மாட்டேன்’ என்று செங்கோட்டையில் கொடியேற்றுகையில் பெருமையாக கூறிய நரேந்திர மோடியின் ஆட்சியில்தான், இந்திய பொதுத் துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கில் மோசடி செய்து ஏமாற்றிய தொழில் அதிபர்கள், வசதியாக எவ்வித சிக்கலுமின்றி தப்பித்து வருகிறார்கள். ஒவ்வொருவராக வெளிநாட்டுக்கு தப்பித்து சென்ற பிறகு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அவர்களை தேடத் தொடங்குகிறது.
தான் படித்த பட்டப் படிப்பை கூட வெளியே வெளிப்படையாக சொல்லாமல் பொய் சொல்லும் ஒரு பிரதமராக மோடி இருந்து வருகிறார். கொஞ்சம் கூட கூசாமல் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியேயும், மோடி பொய்ப் பேசி வருகிறார். நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் கூட, விவாதத்தில் பங்கேற்காமல், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்து வருகிறார்.
சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளோடு எவ்வித நல்லுறவையும் பேண மோடியால் முடியவில்லை. பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இந்திய எல்லைக்கு அருகே உள்ள தோக்லாமில் சாலைகளை கட்டுமானம் செய்யும் வேலையை சீனா செய்து வருகிறது. இலங்கை நாட்டிலும் சீனா கால் பதிக்கும் வேலைகளைத் தொடங்கி விட்டது. பாகிஸ்தானுடனான உறவு, மிக மிக மோசமான சூழலில் உள்ளது. புதிதாக பதவியேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பையும் நிராகரித்தார் மோடி.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பத்திரிகையாளர்களை தானாக முன்வந்து அழைத்து சந்திக்காத பிரதமராக மோடி இருந்து வருகிறார். அவர் அளிக்கும் பேட்டிகள் அனைத்தும் ஏற்கனவே ஒத்திகைப் பார்க்கப்பட்டு பதில் தருவது போல அமைந்துள்ளன. வெளிப்படையாக எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் நடத்தவில்லை. தன்னை விமர்சித்து எழுப்பப்படும் எந்தக் கேள்விகளையும் அவர் ரசிப்பதில்லை. தன்னை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவே கருதிக் கொண்டிருக்கிறார்.
குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரபல பத்திரிகையாளர் கரன் தாப்பர் அவரை பேட்டியெடுத்தார். குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கையை மோடி முதல்வராக இருந்து கொண்டு எடுக்கத் தவறினார் என்பது குறித்து, தாப்பர் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார். அப்போது பேட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, எழுந்து சென்ற நரேந்திர மோடி, இறுதி வரை கரன் தாப்பரை மன்னிக்கவேயில்லை என்பதையும், தாப்பருக்கு பேட்டியளிப்பதை பிஜேபி தலைவர்கள் பலர் தவிர்த்து வந்தனர் என்பதையும் சமீபத்தில் எழுதிய Devil’s Advocate, The untold story என்ற தனது புத்தகத்தில் கரன் தாப்பார் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி, அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றன. இந்தியாவில் வெறுப்பு குற்றங்கள் (Hate Crimes) குறித்து ஒரு டேட்டா பேஸை உருவாக்கியது இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு. இதனாலேயே இந்துஸ்தான் டைம்ஸ் எடிட்டர் பாபி கோஷ் என்பவரை, ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு. அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட இரு நாட்களில், இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் இணையதளத்தில் இருந்த வெறுப்பு குற்றங்கள் குறித்த அந்த இணைப்பு நீக்கப்பட்டது.
இந்துஸ்தான் டைம்ஸ் உரிமையாளர் ஷோபனா பார்ட்டியா மோடியை சந்தித்த ஓரிரு நாட்களில் பாபி கோஷ் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்டிடிவி சேனலைத் தவிர்த்த எந்த ஊடகமும், மோடி அரசை விமர்சித்து எழுதுவதில்லை. ஊழல் புகார்கள் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்கின்றன. இது குறித்து செய்திகளை வெளியிட்ட என்டிடிவி நிறுவனம் மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது.
தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும், பொது நல ஆர்வலர்கள் நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். ‘அர்பன் நக்சல்’ என்ற வார்த்தையை மோடியே பயன்படுத்துகிறார்.
பண மதிப்பிழப்பு என்று ஒரே இரவில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார் மோடி. முதலில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு என்றார். ‘50 நாட்களுக்குள் பிரச்சினைகள் தீரவில்லை என்றால், என்னை உயிரோடு கொளுத்துங்கள்’ என்றார். சில நாட்கள் கழித்து கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காகவே பணமதிப்பிழப்பு என்றார். பிறகு, தீவிரவாதிகளுக்கு வரும் நிதியை தடுப்பதற்காக என்றார்கள். சில நாட்கள் கழித்து, இந்தியாவின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக என்றார்கள். ஒரு வருடத்தில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்களில் 98 சதவிகிதம் திரும்ப ரிசர்வ் வங்கிக்கு வந்து விட்டது என்றும், 10,200 கோடி மட்டுமே திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்தது.
ஆனால் இதற்குள், தாங்கள் உழைத்து வங்கியில் சேமித்திருந்த பணத்தில் குறைந்தபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக மக்கள் நாடு முழுவதும் வரிசைகளில் நின்றார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெரிசலிலும், வெயிலிலும் சிக்கி இறந்தார்கள். சிறு, நடுத்தர மற்றும் குறுந்தொழில்கள் நசிந்தன. விவசாயக் கூலிகள் ஊதியமின்றி தவித்தனர். ஆனால் அதே நேரத்தில் சேகர் ரெட்டி போன்றோர் கோடிக்கணக்கில் புதிய நோட்டுக்களோடு வலம் வந்தனர். அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் விசாரணையின் இறுதியில், எந்த வங்கிக் கிளைக்கு எந்த ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அனுப்பியது என்ற விபரமே இல்லை என்ற செய்தி வெளியில் வந்தது. இது போலவே புதிய நோட்டுக்களை கோடிக்கணக்கில் வைத்திருந்தவர்களை எதுவும் செய்ய முடியாமல் சிபிஐ விழி பிதுங்கி நிற்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தோல்வி என்பதை மோடி இன்னும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இந்த மாதம் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட, கருப்புப் பணம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது என்று மார்தட்டுகிறார்.
இந்தியாவின் ஒவ்வொரு அமைப்பையும் சிதைத்தார் மோடி. ஐஐடி, மத்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம், சிபிஐ என ஒவ்வொரு நிறுவனமாக மோடி சிதைத்து வருகிறார்.
வழக்கத்துக்கு மாறாக தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை மோடியின் வசதிக்கு ஏற்ப அறிவித்தது. ஐந்து மாநிலத் தேர்தல் தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம், 6 அக்டோபர் 2018 அன்று மதியம் 12.30க்கு பத்திரிக்கையாளர் சந்திப்பை அறிவித்திருந்தது. அஜ்மீர், ராஜஸ்தானில் மோடி அன்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு ஒரு பேரணியில் உரையாற்ற இருந்தார். எந்தக் காரணத்தையும் கூறாமல், தேர்தல் தேதி அறிவிப்பை அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணிக்கு தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம்.
நாட்டின் உயர்ந்த புலனாய்வு நிறுவனமான சிபிஐயில் மோதல் போக்கை வளர்த்து விட்டார் மோடி. ஊழல் கறை படிந்த, தனக்கு நெருக்கமான குஜராத் அதிகாரிகளை சிபிஐக்குள் நுழைத்து, அந்த அமைப்பில் பனிப் போரை உருவாக்கினார். சிபிஐயின் கூடுதல் இயக்குநர் மீதே ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிலைமை கைமீறிப் போனது தெரிந்ததும் நள்ளிரவில் சிபிஐ இயக்குநரையும், கூடுதல் இயக்குநரையும் விடுப்பில் போக வைத்து, ஊழல் கறை படிந்த நாகேஸ்வர ராவ் என்பவரை அதே நள்ளிரவில் இயக்குநராக நியமித்து உத்தரவிட்டார் மோடி.
ரபேல் விமான ஊழல் விவகாரத்தில் பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி புகார் அளித்தனர். அந்தப் புகார் மனு மீது சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா விசாரணையைத் தொடங்கிய பிறகு தான் நள்ளிரவில் மேற்கூறிய நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டன.
நாட்டில் தன்னிச்சையான ஒரு அமைப்பாக இன்று வரை இருந்து வரும் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும் பலியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுத்தது. ரிசர்வ் வங்கியில் இது வரை எந்தப் பதவியையும் வகிக்காத ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களை நியமித்து, அதன் சுதந்திரத்தை பறிக்க அத்தனை நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுத்தது. தொலைக்காட்சி விவாதங்களில் வெறுப்பை உமிழும் பிஜேபி செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ராவை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. மத்திய அரசின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக கஜேந்திர சவுகானை நியமித்தது. மகாபாரத தொலைக்காட்சி தொடரில் ஒரு பாத்திரத்தில் நடித்ததை தவிர வேறு அனுபவம் இல்லாதவர அவர். இதோடு கூடுதல் தகுதியாக ஆபாசப்படங்களை எடுத்து வெளியிட்டவர் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம். இப்படியான பட்டியல் நீளமானது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நீதித் துறையின் சுதந்திரமே மோடி அரசால் பறிக்கப்பட்டது. நீதிபதிகள் நியமனத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குளறுபடிகளை மோடி அரசு செய்தது. மனம் வெறுத்துப் போன உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர், வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதுவரை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதான குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது. அதன் பிறகும் கூட நீதித் துறை நியமனங்களில் தங்களின் போக்கை மோடி அரசு தளர்த்தவேயில்லை.
இப்படிப்பட்ட மோடியை வெறுக்காமல் எப்படி நேசிக்க முடியும் ? மோடி மீது நமக்கு தனிப்பட்ட பகையா என்ன ? ஆட்சியாளர்களிடம் நல்லாட்சியைத்தானே எதிர்ப்பார்க்கிறோம். நல்லாட்சி தராவிட்டாலும் பரவாயில்லை. நாடெங்கும் கலவரத்துக்கான விதைகளைத் தூவி, நாட்டை கலவர பூமி ஆக்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
இந்தியாவில் மோடி பதவியேற்ற பிறகு, ஏழை மக்கள் மேலும் ஏழைகளாகியிருக்கிறார்கள். நடுத்தர மக்கள் வறுமைக் கோட்டின் விளிம்பில் நிற்கிறார்கள். ஆனால், அம்பானிகளும், அதானிகளும், டாட்டாக்களும், மிட்டல்களும், மேலும் மேலும் தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொண்டுள்ளனர் இந்த நான்கு ஆண்டுகளில் என்பது முகத்தில் அறையும் உண்மையல்லவா ?
ரூபாய் நோட்டுக்களின் நிறத்தை மாற்றியதைத் தவிர, ஒரே ஒரு சாதனையாக எதையாவது மோடியால் பெருமையாக கூறிக் கொள்ள முடியுமா ?
மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை, கூட்டாட்சி தத்துவம், தலித்துகளின் வாழ்வாதாரம், சிறுபான்மையினரின் வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாகும்.
மீண்டும் மோடிக்கு வாக்களிக்க வேண்டுமா இல்லையா என்று உங்களை யோசிக்க வைப்பது மட்டுமல்ல இந்நூலின் நோக்கம். தவறான நபரை தேர்ந்தெடுப்பதில் உள்ள ஆபத்துகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் தான்.
சமத்துவத்தை நோக்கி நடைபோட வேண்டிய ஒரு ஜனநாயகத்தை, சர்வாதிகார புதைகுழிக்குள் மோடி தள்ள முயற்சித்து வருவதை அம்பலப்படுத்துவதும் தான்.
ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக எல்லோரையும் நம்ப வைக்க வேண்டி மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம். அவரின் தலைமையில் நடந்த தவறுகளை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்கிற ஒரு சாமானியனின் குரலே இந்தப் புத்தகம்.
வழக்கம் போல, இந்நூல் உங்கள் கைகளில் தவழ்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த நண்பர் மருதன் மற்றும் நண்பர் பத்ரி சேஷாத்ரி ஆகியோருக்கும், இந்நூலை மிகச் சிறப்பாக எடிட் செய்தளித்த தோழர் ஜா.தீபாவுக்கும், இந்நூல் வெளிவர தூண்டுகோலாக இருந்த நண்பர் ஜீவானந்த் ராஜேந்திரனுக்கும், என் உளப்பூர்வமான நன்றிகள்.
Death rate increases during 2014-2019
எல்லாம் சரிதான் தோழர். புத்தகம் கிழக்கு பதிப்பகத்தினரால் வெளிவருவதுதான் சந்தேகம் கொள்ள வைக்கிறது.
60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி பற்றி ஒரு நூல் அல்லது 10 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதுங்கள் தோழரே…..
அப்படியே கேரள அரசு பற்றியும் எழுதுங்கள்….
100% இந்திய நாட்டிற்கு எதிராக நரேந்திரமோடி செயல்படுகிறார் என்ற ஒரு வாக்கியம் மிஸ் ஆகிவிட்டது ஜி😁
என்னது.. பத்ரி ஷேசாத்ரி பி. ஜே. பி க் எதிர்ஆக இந்நூலுக் உதவினாரா? மாறிட்டாரா?
கொடநாடு கொலை கொள்ளை பற்றி நீங்க விரிவாக எழுதவும். உண்மையை அறிய ஆவலாக உள்ளது
who will be next ruler
Unnecessary and senslesz arguments.
Unnecessary and senslesz arguments.
நான் தினம்தோறும் எதனை நினைத்து தூங்காமல் பயந்து கொண்டு இருக்கின்றேனோ…..அனைத்தும் உங்கள் வரிகளில் உள்ளது…..