”அமைச்சர் தயாநிதி மாறனை மையமாகவைத்துக் கிளம்பி உள்ள விவகாரத்தில், ‘ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் பெயர் அடிபடுகிறது. இவர் நடத்திய ஏர்செல் நிறுவனத்துக்குத்தான் தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் செய்ததாகவும்… ஆனால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் இதன் பங்குகளை வாங்கிய பிறகு அனுமதி கிடைத்ததாகவும் டெல்லி மீடியாக்கள் போட்டுத் தாக்குகின்றன. இந்த சந்தேக வலையை சி.பி.ஐ. வசம் பின்னிவிட்டவரே சிவசங்கரன்தான் என்றும், கடந்த மே 15-ம் தேதி சி.பி.ஐ. வசம் சிவசங்கரன் ஒரு கடிதத்தைத் தாக்கல் செய்து உள்ளதாகவும் தகவல்.
சிவசங்கரனைப் பின்னால் இருந்து இயக்கும் ஆட்கள், சென்னையில் அதுவும் குடும்ப உட்பகை நபர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல். ‘செல்வாக்கான குடும்பத்தின் பெண்மணி ஒருவர் டெல்லி ஹோட்டல் ஒன்றில் சிவசங்கரனை சந்தித்துப் பேசினார். அதன் பிறகுதான் இந்தக் கடிதத்தை அவர் சி.பி.ஐ-க்கு அனுப்பினார்’ என்கிறார்கள் டெல்லியில். இந்த வாக்குமூலங்களை வைத்து சி.பி.ஐ. என்ன செய்யப்போகிறது என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துபோகும்!”
இதில் இவர்கள் சூசகமாக சுட்டிக் காட்டுவது என்னவென்றால், ராசாத்தி அம்மாள் தான் பின்னால் நின்று சிவசங்கரனை இயக்குகிறார் என்பதுதான். ராசாத்தி அம்மாள் சிவசங்கரனை பின்னால் நின்று இயக்கினால் என்ன ? தயாநிதி மாறன் யோக்கியமானவரா ?
இதே இதழில் கழுகார் பகுதியில் ஒரு கேள்வி பதில்.
ஆ.ராசா மீது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒரு வெறுப்பு அல்லது காழ்ப்பு இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. சரியா?
1999-ல் ஆ.ராசா மத்திய அமைச்சராக ஆகிவிட்டார். அதில் இருந்தே அவரைக் குறை சொல்லி எழுதிக்கொண்டு இருந்தால், உங்கள் கேள்வியில் அர்த்தம் இருக்கும். 10 ஆண்டுகள் கழித்து 2009-ம் ஆண்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆதாரங்களுடன் நமக்குக் கிடைத்த பிறகுதான், அவரை விமர்சித்து எழுதினோம். நாங்கள் அப்போது எழுதியபோது, உள்நோக்கம் கற்பித்தார்கள். நாங்கள் எழுதியது சரியான தகவல்கள்தான் என்பதை சி.பி.ஐ. கைதுப் படலம் இப்போது நிரூபித்து உள்ளது. இப்போதும் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் குற்றச் செயல்களைத்தான் விமர்சிக்கிறோமே தவிர, ஆ.ராசா என்ற தனி மனிதரை அல்ல!
அடுத்து தயாநிதி மாறனையும் சிபிஐ கைது செய்யப் போகிறதே… அப்போது ராசாவைப் பற்றி கசிந்த செய்திகளை விட, இப்போது தயாநிதி மாறனுக்கு எதிராக ஏராளமாக ஆவணங்கள் வெளியாகியிருக்கிறதே…. ஏன் அமைதி காக்கிறார்கள் ?
இப்படி அப்பட்டமாக, வெளிப்படையாக தயாநிதி மாறனுக்கு விகடன் நிறுவனம் சப்போர்ட் செய்வதற்கான காரணம் என்ன என்ற புலனாய்வில் சவுக்கு இறங்கியது.
அந்த விபரங்களை பார்க்கும் முன்பு, ஜுனியர் விகடன் பத்திரிக்கையைப் பற்றி சில விபரங்களைப் பார்ப்போம். விகடன் குழுமத்தை வாங்கி நடத்தி வந்தவர் எஸ்.எஸ்.வாசன் என்பதை அறிவீர்கள். அவருக்குப் பிறகு, அவரது மகன் பாலசுப்ரமணியன் இணை மேலாண் இயக்குநராக பொறுப்பேற்கிறார். அப்போதெல்லாம் அவர் சேவற்கொடியான் என்ற பெயரில், சிறுகதைகள் எழுதுவது வழக்கம்.
முழுப் பொறுப்பும், பாலசுப்ரமணியம் வசம் வந்ததும், அவர் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், புதிய திறமைகளை நாம் உள்ளிழுக்க வேண்டும் என்பதே….
1983ம் ஆண்டு, ஜுனியர் விகடன் தொடங்கப் படுகிறது. தொடக்கத்தில் பிரமாதமாக விற்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட ஜுனியர் விகடன், அந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. 1984ம் ஆண்டு, முதன் முறையாக மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் என்று ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்துகிறார்கள்.
இந்த மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் பெரும் வெற்றியைப் பெறுகிறது. இளம் மாணவர்களாக களமிறங்கும் மாணவர்கள், புதிய உத்வேகத்தோடு, சமுதாயத்தைப் பீடித்திருக்கும் பல்வேறு விஷயங்களை எடுத்து எழுதுகிறார்கள். இதனால், ஜுனியர் விகடனின் சர்குலேஷன், மள மளவென்று ஏறுகிறது.
கொத்தடிமைகளை கண்டுபிடிப்பது, இரட்டைக் குவளை முறையை வெளிக் கொணர்வது, சட்ட விரோத மரம் வெட்டுதலையும் கடத்தலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்று பல்வேறு சமுதாய பிரச்சினைகளை பற்றி எழுதுவதோடு அல்லாமல், ஜுனியர் விகடன் சார்பாகவே பொது நல வழக்கும் தொடுக்கப் பட்டது.
மூச்சுக்கு முன்னூறு தடவை வாசகர்கள் தான் ஜுனியர் விகடனை உருவாக்கியவர்கள், காப்பாற்றுபவர்கள் என்று சொல்லுவார் என்று கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இப்போது போல், அப்போதெல்லாம், வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது பேஷன் ஆகவில்லை. ஆனாலும், ஒரு போஸ்ட் கார்டில் எதிர்ப்பு தெரிவித்து எழுதினால் கூட, அதற்கு மரியாதை கொடுப்பார் பாலசுப்ரமணியம்.
ஒரு முறை கிணத்துக்கடவைச் சேர்ந்த 65 வயது முதியவர், ஜுனியர் விகடனில் நடுப்பக்கத்தில் சினிமாவுக்காக வெளியிடப்படும் படங்கள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது, என்னால் ஜுனியர் விகடனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என்று கடிதம் எழுதினார். உடனடியாக ஒரு நிருபரை அந்த பெரியவரை சென்று சந்திக்கச் சொல்லி, அடுத்த வாரம் முதல், நடுப்பக்கத்தில் நாகரீகமான படத்தைப் போடுங்கள் என்று கூறினார் பாலசுப்ரமணியன்.
திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்த பாலசுப்ரமணியன், அதில் வெற்றி பெறாத காரணத்தால், மீண்டும் அதில் நுழையவேயில்லை. திரைத் துறையில் ஈடுபாடு, பத்திரிக்கையை நாசம் செய்து விடும் என்று நம்பினார் அவர். அதனால், அவர் பொறுப்பில் இருந்த வரை திரைப்படத் துறையில் நுழைய முயற்சிக்கவேயில்லை. ஆனால், துரதிருஷ்ட வசமாக, திரைப்படத் துறையில் நுழைவதற்காக பத்திரிக்கையை நாசப்படுத்தி வருகிறார் சீனிவாசன் என்பதுதான் வேதனையான விஷயம்.
மற்றொரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், நடிகை திரிஷா, குளிக்கும் காட்சியை ஒரு இணைய தளம் வெளியிட்டது. அப்போது, நக்கீரன் இதழ், ஃப்ரேம் ஃப்ரேமாக இந்த காட்சியை வெளியிட்டது. நடிகை திரிஷா கூட, பின்னாளில் ஒரு பேட்டியில், இணைய தளத்தில் வெளியானதை விட, நக்கீரனில் வெளியிட்டது குறித்துதான் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஜுனியர் விகடன் சார்பாக, காவல்துறையில் புகார் செய்யப் பட்டு, சுவீடனில் இயங்கிக் கொண்டிருந்த அந்த இணையதளத்தின் சர்வர் முடக்கப் பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட பாலசுப்ரமணியத்திடம் விவாதிக்கும் போது, அந்த வீடியோவில் உள்ள ஒரு காட்சியை படமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது. “உங்கள் டேஸ்ட் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று சீறியிருக்கிறார்.” இல்லை சார், இஷ்யூ நல்லா விக்கும் என்று சொன்னவுடன், ”அதற்கு சரோஜா தேவி நடத்தி விட்டு போய் விடலாமே” என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். இதுதான் பாலசுப்ரமணியம். அந்த இதழில், ஜுனியர் விகடன் அட்டையில், திரிஷா புடவை கட்டியிருக்கும் படம் வெளியானது.
இதுதான் பாலசுப்ரமணியம்.
1991ல், இணை இயக்குநராக பொறுப்பேற்கிறார் சீனிவாசன். பிறகு 2000 அல்லது 2001ம் ஆண்டில் மேலாண் இயக்குநராக ஆகிறார். அதன் பிறகு, பத்திரிக்கை என்பதை வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்கிறார். சுட்டி விகடன், சட்டி விகடன் என்று பல்வேறு பத்திரிக்கைகளை சராமாரியாக தொடங்கியது மட்டுமல்லாமல், தொலைக் காட்சித் தொடர் மற்றும் சினிமா எடுக்கத் தொடங்கிய போதுதான் இவரின் சரிவு தொடங்குகிறது.
வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வேலை செய்கிறார் சீனிவாசன். ஆனந்த விகடன் இதழில் முதல் முறையாக, ஒரு நூதனமான விளம்பரம் செய்யும் உத்தியை கையாள்கிறார். அது என்னவென்றால், செய்தி போலவே விளம்பரம் போடுவது. அதற்குப் பெயர் ஸ்பாட்டைட். இந்த ஸ்பாட்லைட்டை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அச்சு அசலாக செய்தி போலவே இருக்கும், விளம்பரம் என்பதற்கான எந்த அறிகுறியும் இருக்காது. எழுதியவர் பெயர், புகைப்படக்காரர் பெயர், ஆகிய அனைத்தும் இருக்கும். சாதாரமாக விளம்பரம் செய்ய ஆகும் கட்டணத்தை விட, மூன்று பங்கு ஆகும்.
அடுத்த அயோக்கியத்தனம், 2004 தேர்தலின் போது. வேட்பாளர் தம்பட்டம் என்ற பெயரில், ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றியும், நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு, ஆகா, ஓகோ என்று புகழ்ந்து எழுதுவார்கள். அந்தப் பக்கத்தின் கீழே, துளியூண்டாக advt என்று இருக்கும். இதில் கோடிக்கணக்கான லாபம் பார்த்தாக தகவல்கள் கூறுகின்றன.
2006 தேர்தலின் போது, வைகோ, ஒரு குற்றச் சாட்டை முன் வைத்தார். மதுரையில் ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் “அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகபல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இதை தயாநிதி மாறனால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் பல்வேறு பத்திரிக்கைககளுக்கு நெருக்கடி கொடுத்து திமுகவுக்கு ஆதரவாககருத்துக் கணிப்புகளை வெளியிட முயற்சித்து வருகிறார்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் திடீரென ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளைவெளியிட்டுள்ளது. இல்லாத ஒன்றை இட்டுக் கட்டிக் கூறி திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடடுள்ளது.
இப்போது இவர்கள் ஜூனியர் விகடனை வளைத்து விட்டார்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் தினகரனை பணம் கொடுத்துவாங்கினார்கள். அதன் மூலம் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்போது ஆனந்த விகடனை வளைத்துள்ளார்கள். ஆனந்த விகடன் பத்திரிக்கைதரதமான, மிகச் சிறந்த, உயர்ந்த பத்திரிக்கை. நேர்மைக்கு இலக்கணமானபத்திரிக்கைக் குடும்பம் அது.
அப்படிப்பட்ட பத்திரிக்கை சமீப காலமாக, சில வெளியில் சொல்ல முடியாதபிரத்யேக காரணங்களினால், சன் தொலைக்காட்சியின் தயவு தேவைப்படும்இக்கட்டில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமான செய்திகளை வெளியட வேண்டியநிலையில் உள்ளது.
அப் பத்திரிக்கையின் நடுநிலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இப்போது முற்றிலும்போய் விட்டது.
வருகிற நாட்களில் திமுக கூட்டணிக்கு 200 இடங்கள் வரை கிடைக்கும் என்றஅப்பட்டமான, பொய்யான செய்தியை வெளியிட அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
அந்த செய்தியை தினகரன், சன் டிவியில் வெளியிட்டு வாக்காளர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவான பிரமையை ஏற்படுத்தி அதன் மூலம் கொஞ்சம் ஓட்டுக்கள் கிடைக்காதா என்று முயற்சிக்க நினைக்கிறார்கள்.
ஜூனியர் விகடனின் நிருபர்கள் பலர் மிரட்டப்பட்டுள்ளார்கள். உண்மையைச்சொன்னதற்காக அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அந்தப் பத்திரிக்கையை விலைக்கு வாங்க தீவிரமாக முயற்சித்து வந்தனர். அந்த முயற்சியில் அனேகமாக வெற்றி பெற்று விட்டதாகவே எனக்கு தெரிய வந்துள்ளது “ என்றார் வைகோ.
வைகோவின் அந்த பேட்டி, பின்னாளில் மறுக்கப் பட்டதாக தெரிகிறது.
ஆனால் இப்போது, விகடன் குழுமத்தில் 46.15 சதவிகித பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஆவணங்களை சவுக்கு முதன் முறையாக, பிரத்யேகமாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
இப்போது இந்த ஆவணங்களைப் பார்த்தீர்கள் என்றால், Bodies Corporate என்ற இடத்தில் 46.15 சதவிகித பங்குகள் காண்பிக்கப் பட்டிருக்கிறன்றன அல்லவா ? இது மாறன் சகோதரர்களின் குழுமத்தைக் குறிக்கிறது. மீதம் உள்ள 53.85 சதவிகித பங்குகள் இயக்குநர் அல்லது அவரது உறவினர்கள் என்று உள்ளது. இயக்குனராக உள்ளவர் சீனிவாசன். அவரது மனைவி திருமதி.ராதிகாவைத் தவிர, வேறு ஒருவருக்கும் இவர் பங்குகளை ஒதுக்கவில்லை என்கிறது விகடன் வட்டாரங்கள். பாலசுப்ரமணியத்திற்கு மொத்தம் 5 பெண்கள். ஒரு ஆண் குழந்தை. சீனிவாசன் தான் அந்த ஒரே ஆண் குழந்தை. அந்த 5 பெண்களில் ஒருவருக்குக் கூட, பங்குகளை ஒதுக்கவில்லை சீனிவாசன்.
ஆக, அந்த 46.15 சதவிகித பங்குகளும், கேடி சகோதரர்களுடையதே என்று சவுக்கு அறுதியிட்டுச் சொல்கிறது. வழக்கமாக கம்பெனிப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில், ஷேர் வைத்திருப்பவர்களின் முழுமையான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், விகடன் குழுமத்தால் முழுமையான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பத்திரிக்கை சட்டத்தின் படி, ஆண்டுதோறும், மார்ச் மாதத்தில், பத்திரிக்கை நடத்துபவர்கள், தங்களின் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பவர்களின் விபரத்தை வெளியிட வேண்டும். இது சட்டம். ஒரு சதவிகிதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருந்தாலும் வெளியிட வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால், விகடன் குழுமத்தார் ஒரு முறை கூட இந்த விபரங்களை வெளியிட வில்லை என்பதில் இருந்தே, இவர்களின் திருட்டுத் தனம் தெரிகிறது.
நிற்க. கடந்த மூன்று மாதங்களாக, ஜுனியர் விகடன் மற்றும், ஆனந்த விகடன் பத்திரிக்கைகள், திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக, மு.க.சர்கார் என்ற தலைப்பில் மார்ச் மாதம் வந்த அந்தக் கட்டுரை. மிக கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்த அந்தக் கட்டுரையில், கேடி சகோதரர்களைப் பற்றி இருந்தது இது மட்டும் தான்.
“கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க… குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய… ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்! “
கேடி சகோதரர்களின் அசுர வளர்ச்சி, திமுகவைப் பயன்படுத்தி அவர்கள் செய்த அட்டூழியங்கள் எதுவுமே இடம் பெறவில்லை. கனிமொழியின் மகன் ஆதித்யாவின் புகைப்படம் உள்ளிட்டவற்றை வெளியிட்ட விகடன், தயாநிதியின் படத்தை வெளியிடவில்லை.
ஒரு ஊழலில் சிக்கி, ஆதாரங்களோடு அம்பலமாகி சின்னாபின்னமாகி நிற்கும் நிலையில், இந்தியா முழுக்க உள்ள அத்தனைப் பத்திரிக்கைகளும் தன்னைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், ஜுனியர் விகடனில் செய்தி வெளி வராமல் தடுக்க முயன்ற, தயாநிதி, தன்னைத் தூக்கி வளர்த்த, தன்னை ஆளாக்கிய, தன்னை எம்பியாக்கி, தன்னை மந்திரியாக்கி அழகு பார்த்த, சன் டிவி என்ற சாம்ராஜ்யம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் இப்படியா விமர்சனம் செய்து எழுதுவது ? மனசாட்சி இருக்கிறதா மாறன்களுக்கு ? இதனால் தான் சவுக்கு கருணநிதியை விட பெரிய தீய சக்தி எது என்று 2011 ஏப்ரல் 9 அன்று எழுதியது.
இது மட்டும் அல்லாமல், திமுக அமைச்சர்களின் ஊழல்களை கல்வித் தந்தைகள் என்றும் புதிதாக முளைத்த சாராய ஆலைகள் என்றும் ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டதே… ? அதெல்லாம், திமுகவில் அத்தனை பேரையும் அழித்து விட்டு, தாங்கள் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கமல்லாமல் வேறு என்ன ?
ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கு அந்த நிறுவனத்தை யாருக்கு வேண்டுமானாலும், விற்கவோ, விற்க மறுக்கவோ, இழுத்து மூடவோ உரிமை உண்டு. ஆனால் அந்த வியாபாரம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
ஒன்பது ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கும் வாசகனாக எனக்கு இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது. வாசகனான நான், தினகரனிலோ, குங்குமத்திலோ, சன் டிவியிலோ, கேடி சகோதரர்களுக்கு எதிரான செய்திகளை எதிர்ப்பார்க்கப் போவதில்லை. ஆனால் ஜுனியர் விகடனிலும், ஆனந்த விகடனிலும், எதிர்ப்பார்ப்பதற்கான காரணம், இதை நடுநிலையான ஊடகம் சீனிவாசன் மட்டுமே இதன் முதலாளி என்று நம்பிக் கொண்டிருப்பதுதான்.
உங்கள் குழுமத்தில் கேடி சகோதரர்கள் 46.15 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை பட்டவர்த்தனமாக உலகுக்கு சொல்லுங்கள். அதற்குப் பிறகு ஜுனியர் விகடன், தமிழ் மக்களின் நாடித்துடிப்பு அல்ல…. கேடி சகோதரர்களின் நாடித் துடிப்பு என்பதை புரிந்து கொள்வோம். உங்களை நம்ப மாட்டோம்.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.
ஏமாற்றிப் பிழைப்பது என்பதைப் போன்ற இழிவான காரியம் எதுவுமே இல்லை. உங்கள் பத்திரிக்கையை வாங்கும் வாசகர்கள் அத்தனை பேரும் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அல்ல….. உழைத்த பணத்தில் உங்கள் பத்திரிக்கையை வாங்குகிறார்கள்.