2018 டிசம்பர் 12 அன்று மும்பை நகர உரிமையியல் மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.சர்மா (தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார்) அளித்த தீர்ப்பு நீதியை மிகப் பெரிய அளவில் கேலி செய்வதாக இருக்கிறது. நாட்டின் நீதி மேலாண்மையில் படிந்துள்ள வன்மத்தைப் பிரதிபலிக்கிறது. அந்தத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்திற்கும் அது வரையறுத்துள்ள சட்டத்திற்கும் செய்யப்பட்டுள்ள நேரடி அவமதிப்பாகும். சோராபுதீன், அவரது மனைவி கௌசர்பீ, துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட ரூபாபுதின், நர்மதா பாய் வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பு மட்டுமேயல்ல, போலீசார் நடத்துகிற என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக நிறுவப்பட்ட சட்டமும் அவமதிக்கப்பட்டிருக்கிறது.
358 பக்கங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்பை நான் படித்துப் பார்த்தேன். தகவல்கள் முற்றிலுமாக ஆராயப்படவில்லை, சட்டம் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை, மனித உயிர்கள் மதிக்கப்படவில்லை என்தையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது என்பேன்.
தீர்ப்பை முழுமையாகப் படிக்கிறபோது, வாய்மொழியாகவும் ஆவணபூர்வமாகவும் தன் முன் வைக்கப்பட்ட ஆதாரங்களைச் சிறிதும் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதில் மதிப்பிற்குரிய நீதிபதி கறாராக இருந்தார் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. அதற்கு இடைஞ்சலாக வரக்கூடியவை அனைத்தையும் ஒதுக்குவதும், வேண்டுமென்றே கொன்றார்கள் என்பதற்கான தடயம் எதுவும் இல்லை என்று அறிவித்ததன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்திய கொலைகள் பற்றிய ஒரு நகைப்புக்குரிய கதையைக் கட்டுவதுமே அவருடைய அணுகுமுறையாக இருக்கிறது. சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் இரண்டுமே கொடூரமான முறையில் எள்ளிநகையாடப்பட்டுள்ளன.
முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது தீர்ப்பு. ஏனெனில், நீதிபதி244 முதல் 259 வரையிலான பாராக்களில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 197வது விதியின் கீழ் ஒப்புதலளிப்பது தொடர்பான சட்டம் குறித்து விவாதிக்கிறார். ஆனால், அதன் பிறகு 260ஆவது பாராவில், அசாதாரணமானதொரு கருத்தைப் பதிவு செய்கிறார்:
“குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 பேரும் போலீஸ் துறையினர், தங்களது அலுவல்பூர்வமான கடமையை நிறைவேற்றுகிற வகையிலேயே செயலிலும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர் என்பதையும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 197ஆவது பிரிவில் சொல்லப்பட்டுள்ளதன் அடிப்படையிலான பலனைப் பெற உரிமையுள்ளவர்கள் என்பதையும் நடந்துள்ள விவாதம் தெளிவுபடுத்துகிறது… ஒப்புதல் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுவிக்கப்படுவதற்கு உரிமைபெற்றவர்களாவர்.”
இந்த முடிவு 1 முதல் 243 வரையிலான பாராக்களுடன் முற்றிலுமாக முரண்படுகிறது. அந்த மூன்று பேர் கொல்லப்பட்டதில் குற்றம்சாட்டப்பட் 22 பேரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அந்தப் பாராக்களில் அவர் பதிவு செய்கிறார். கற்றறிந்த நீதிபதி பின்வருமாறும் பதிவு செய்கிறார்:
“262… இது போன்றதொரு கடுந்தன்மை வாய்ந்த குற்றத்திற்குத் தண்டனையளிக்கப்படாமல் போவது பொதுவாக சமுதாயத்திற்கும் குறிப்பாக மரணமடைந்தோர் குடும்பங்களுக்கும் எந்த அளவுக்கு வேதனையையும் விரக்தியையும் ஏற்படுத்தும் என்பதை அறியாதவனல்ல நான். ஆனால், தார்மீக உறுதிப்பாட்டின் அடிப்படையில், அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் தண்டனை அளிப்பதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை… சோராபுதீன், துள்சிராம் பிரஜாபதி இருவரும் கொல்லப்பட்டது தண்டனை இல்லாமல் போகிறது என்பதில் ஐயமில்லை.”
“ஒரு குற்றவியல் வழக்கில் நிரூபிக்கிற பொறுப்பு ஒருபோதும் மாறிவிடாது. ஏற்கத்தக்க ஆதாரத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி தனது வழக்கை நிரூபிப்பது எப்போதுமே அரசு வழக்குரைத் துறையின் பொறுப்புதான்,” என்கிறார் நீதிபதி.
கற்றறிந்த நீதிபதி சட்டம் பற்றிய முழு அறியாமையில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. போலீஸ் கைகளால் குடிமக்கள் கொல்லப்படுவது தொடர்பான சட்டம், உச்ச நீதிமன்றத்தால் தொடர்ச்சியான பல தீர்ப்புகளில் சிறப்பாக நிறுவப்பட்டு வந்துள்ளது.1990ல் கௌரி சங்கர் சர்மா எதிர் உ.பி. மாநில அரசாங்கம் என்ற வழக்கில், ஒரு போலீஸ் அதிகாரியை விடுவித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவர் குற்றவாளிதான் என்று அறிவித்தது. அப்போது,
“நடந்துள்ள குற்றம் ஒரு கடுந்தன்மை வாய்ந்ததாகும். குடிமக்களைப் பாதுகாப்பார் என்றும் அவர்கள் தனது காவலில் இருக்கிறபோது அவர்களைக் கொடூரமாகத் தாக்குவதற்குத் தனது சீருடையையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்த மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்படுகிற ஒருவரால் அந்தக் குற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இக்குற்றம் மேலும் தீவிரமானதாகிறது. போலீஸ் காவலில் மரணம் என்பது ஆழ்ந்த கவலையுடன் பார்க்கப்பட வேண்டும். இல்லையேல் போலீஸ் ஆட்சிக்கான திசையை நோக்கி அடியெடுத்துவைப்பதற்கு நாம் உதவியவர்களாவோம்,” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
2011இல் பிரகாஷ் கதம் எதிர் ராம்பிரசாத் விஸ்வநாத் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் மேலும் ஒருபடி சென்று இவ்வாறு அறிவித்தது:
“விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போலீசார் மீது போலி என்கவுன்டர் நிரூபிக்கப்படும் வழக்குகளில், அதனை அரிதிலும் அரிதான வழக்காகக் கருதி, அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். போலி “என்கவுன்டர்கள்” என்பவை சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதற்கென உள்ளவர்களால் செய்யப்படுகிற ஈவிரக்கமற்ற கொடூரமான கொலைகளேயன்றி வேறில்லை.”
“போலீசாரை எச்சரிக்கிறோம். “என்கவுன்டர்” என்ற பெயரில், தங்களது உயரதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள், அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களானாலும், இட்ட கட்டளைகளைத்தான் செயல்படுத்துகிறோம் என்ற சாக்கில் கொலை செய்வதற்காக மன்னிக்கப்பட மாட்டார்கள்… “என்கவுன்டர்” என்ற பெயரில் மக்களைக் கொல்லலாம், பின்னர் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிற துப்பாக்கி மோகப் போலீஸ்காரர்கள் தங்களுக்காகத் தூக்கு மேடைகள் காத்திருப்பதை அறிய வேண்டும்,” என்றும் உச்ச நீதிமன்றம் முழங்கியது.
சோராபுதீன் வழக்கில் தீர்ப்பளித்த கற்றறிந்த நீதிபதி இது தொடர்பான அக்கறை எதையும் வெளிப்படுத்தவில்லை, மேற்படி சட்டம் குறித்துத் தனக்குத் தெரியுமா என்பதையும் வெளிப்படுத்தவில்லை. இதைவிடவும் கவலையளிப்பது என்னவென்றால், இந்திய அரசமைப்பு சாசனத்தில் சட்ட உரை 21 என ஒன்று இருப்பதை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.
அவருடைய தீர்ப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பொறுத்தவரையில் அவர்களது கடமையை நிறைவேற்றும் வகையில்தான் செயல்பட்டிருக்கிறார்கள் என்றும், மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், என்கவுன்டர் என்பதாகக் கூறப்படும் விசயத்தில் அந்த 3 பேர் கொல்லப்பட்ட பிறகு குஜராத் போலீஸ் என்கவுன்டர்களின் விவரங்களைத் தெரிவிக்கும் முதல் தகவல் அறிக்கைகளையும் குற்றப் பத்திரிகைகளையும் தாக்கல் செய்திருப்பதையும், குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் (இதே வழக்கில் முன்பு விடுவிக்கப்பட்டவர்களும்) என்ன செய்தார்கள் என்பதையும் திட்டவட்டமாகப் பதிவு செய்கிறது. இதற்கு மேலும் என்ன தேவைப்படுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இத்தகைய கொலைகளுக்கான ஆதாரங்களை மதிப்பிடுவது தொடர்பான கொள்கைகளை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமான முறையில் நிறுவியுள்ளது என்பது கற்றறிந்த நீதிபதிக்கு ஒருவேளை தெரியாமலிருக்கலாம். அந்தக் கொள்கைகள் பின்வருமாறு:
“6. போலீஸ் சித்திரவதை அல்லது காவல் சாவு ஆகிய அரிதான வழக்குகளில், நேரடியான கண்கூடான ஆதாரம் என்பது போலீஸ் அலுவலர்களின் குற்றவுணர்ச்சிதான். தங்களது காவலில் இருந்த நபர் மரணமடைந்த சூழல்களை அவர்களால்தான் விளக்க முடியும்.
- அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் நியாயமான ஒவ்வொரு சந்தேகத்துக்கும் அப்பால் ஆதாரத்தை நிறுவ வேண்டும் என்பதை மிகையாகச் சார்ந்திருப்பதும், அதை வலியுறுத்துவதும், சில நேரங்களில் வழக்குத் தொடுக்கும் அமைப்புகளே பிரச்சினையில் சிக்கியிருக்கும்போது, குறிப்பானதொரு வழக்கில் கள யதார்த்தங்களையும் உண்மைச் சூழலையும் தனித்துவ நிலைமைகளையும் புறக்கணிப்பது தவறான தீர்ப்புக்கு இட்டுச்சென்றுவிடும், நீதி முறை மீது சந்தேகத்தையும் அது பலியாகக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்திவிடும்… ஆகவே நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளை அவற்றிற்குரிய ஒரு மெய்நிலைத் தன்மையோடும் கூர்மதியோடும் கையாள வேண்டும்.” (முன்ஷி சிங் கௌதம்எதிர் மத்தியப் பிரதேச அரசாங்கம், (2005) 9 SCC 631)
தன் முன்னுள்ள வழக்கைக் கையாள்வதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ள இந்திய ஆதாரச் சட்டம், 1872 என்ன சொல்கிறது என்பதையும் அந்தச் சட்டத்தின் பல விதிகளையும் கற்றறிந்த நீதிபதி கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை என்பதும் தெரியவருகிறது. “குறிப்பாக கவனத்திற்கு வந்துள்ள உண்மையை நிரூபிக்கிற பொறுப்பு” பற்றி அந்தச் சட்டத்தின் 106ஆவது பிரிவு பேசுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அறிந்து வைத்துள்ள சில உண்மைகளை நிரூபிப்பது அரசுத்தரப்புக்கு சாத்தியமில்லாமல் போகக்கூடிய சில விதிவிலக்கான நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்காகவே பிரிவு 106 ஏற்படுத்தப்பட்டது.
இது தொடர்பான சட்டம் 1956இல் ஷாம்பு நாத் மெஹ்ரா எதிர் அஜ்மீர் அரசு வழக்கு முதல் 2012இன் பிரிதிபால் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்கு வரையில் நிறுவப்பட்டுவந்துள்ளது. அந்தக் கடைசி வழக்கில் உச்ச நீதிமன்றம், பஞ்சாப்பில் ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளர் கொல்லப்பட்டதில் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளே என்று உறுதிப்படுத்தியது. அந்தத் தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
- “இந்தியாவில் போலீஸ் வன்கொடுமைகள் எப்போதுமே சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உரிய பொருளாக இருந்து வந்துள்ளன. அரசமைப்பு சாசனத்தின் சட்ட உரை 21 ஏற்பாடுகளின்படி, எந்த வடிவத்திலும் சித்திரவதை அல்லது கொடுமை, மனிதத்தன்மையின்மையின்றி அல்லது இழிவுபடுத்தும் வகையில் நடத்துவது தடுக்கப்பட்டிருக்கிறது.”
- “அசாதாரணமான நிலைமைகள அசாதாரணமான தீர்வுகளைக் கோருகின்றன. முன்னெப்போதும் நடந்திராத ஒரு வழக்கைக் கையாளுகிறபோது, ஒரு அசாதாரணமான உண்மை நிலைமையில் அசாதாரணமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பதை மனதில் கொண்டு சட்டத்தைப் புதிய வழியில் கையாள வேண்டும், வழக்கத்திற்கு மாறான ஆணையைப் பிறப்பிக்கவும் செய்யலாம்.”
- “போலீஸ் காவலில் ஒருவர் மரணமடைந்தார் என்பதான ஒரு வழக்கில், எந்த வகையான ஆதாரத்தையும் பெறுவது கடினமாகிறது.”
- “இந்த வழக்கைப் போல, போலீஸ் வன்கொடுமைகளைச் சகித்துக்கொள்வது என்பத சட்டத்தின் ஆட்சி திட்டமிட்ட முறையில் மீறப்படுவதையும் அரிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்வதாகவே இருக்கும்.”
இந்தத் தீர்ப்பின் 33ஆவது பாராவில், சுயேச்சையான அமைப்புகள் விசாரணை நடத்துவதற்கு ஆணையிடப்படுவதன் நியாயத்தைச் சொல்லும் வகையில் மற்ற அம்சங்களோடு, இவ்வாறு கொல்லப்படுகிற நிகழ்வுகளையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
கற்றறிந்த நீதிபதி தனது தீர்ப்பில் எங்கேயும், உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்ட தீர்ப்புகளைப் படித்துப்பார்க்கவில்லை என்பது ஆழ்ந்த கவலையைத் தருகிறது. 2010இல் ரூபாபுதின் ஷேக் வழக்கில், விசாரணையை சீபீஐக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம் திட்டவட்டமான முறையில் பின்வருமாறு பதிவு செய்தது:
“54. குற்றச் செயலில் மாநில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருககிறபோது, உண்மையில் அவர்கள்தான் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறபோது, விசாரணையை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க ஆணையிடப்படுமானால் அதுவே முறையானதாக இருக்கும், நீதி நோக்கம் சிறப்பாக நிறைவேறும் என்பதும் நன்கு அறியப்பட்டதேயாகும்.
- தற்போதைய சூழல்களிலும் மாநில போலீஸ் சம்பந்தப்பட்டிருப்பதாலும், எங்கள் கண்களை நாங்கள் மூடிக்கொள்ள முடியாது, மாநில போலீசார் தங்கள் விசாரணையையும் குற்றப் பத்திரிகையையும் தொடர ஆணையிட முடியாது, ஒரு முறையான நியாயமான விசாரணை நடைபெற, இந்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.”
நர்மதா பாய் எதிர் குஜராத் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் இதற்கு மேலாகவும் சென்றது:
“59. துள்சிராம் பிரஜாபதியின் ஒரு கூட்டாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் உயரதிகாரிகளும் ஒரு உயர்நிலை அரசியல்வாதியும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை, மாநில போலீஸ் நடத்தும் விசாரணையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அசைத்துவிடக்கூடும். சட்டத்தின் ஆட்சி என்ற மாண்பு உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டுமானால், குற்றவாளிகள் எந்தப் பதவியில் இருந்தாலும் எத்தகைய அதிகாரங்கள் அவர்களுக்கு இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைப்பது விரும்பத்தக்கதாகும்.”
உதய்ப்பூர் சிறையில் இருந்த பிரஜாபதி, தன்னை நிலுவையில் உள்ளதொரு குற்றவியல் வழக்கிற்காக அகமதாபாத் கொண்டுசெல்லும் வழியில் போலி என்கவுன்டரில்தான் கொல்லப்படலாம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தெரிவித்தார் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விசயம். அவருடைய கடிதத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ராஜஸ்தான், குஜராத் போலீஸ் துறைகளுக்கு அனுப்பி, அவருடைய உயிருக்குப் பாதுகாப்பளிக்கக் கேட்டுக்கொண்டது.
ஆனால், 2006 டிசம்பர் 27இல், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிடமிருந்து பாதுகாப்பை நாடிய அவர் எதை நினைத்து அச்சப்பட்டாரோ அதுதான் அப்படியே நடந்தது. 2005 நவம்பரில் சோராபுதீன், கௌசர்பீ இருவரையும் சுட்டுக் கொன்ற பயங்கரவாத எதிர்ப்புப் படையின் டீஐஜி, பிரஜாபதி கொல்லப்படுவதற்கு சற்று முன் எல்லை வட்டார டிஐஜியாக மாற்றப்பட்டார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில்தான் அது நடந்தது. அப்போது குஜராத் மாநில உள்துறைக்குப் பொறுப்பு வகித்தவர் முதலமைச்சராக இருந்த திரு. நரேந்திர மோடி. உள்துறை இணையமைச்சராக இருந்தவர் திரு. அமித் ஷா. குஜராத்தின் மாங்ரோல் நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, பின்வருமாறு பேசியதன் மூலம் சோராபுதீன் கொலைக்குப் பொறுப்பேற்றார் என்பது பதிவாகியுள்ளது:
“சோராபுதீனுக்கு நடக்க வேண்டியதுதான் நடந்திருக்கிறது,” என்று கூறிய மோடி, மக்களைப் பார்த்து, “சோராபுதீன் விவகாரத்தில் குஜராத்தின் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், மக்களுக்கு அந்தக் கட்சி விளக்கமளித்தாக வேண்டும். சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் வைத்திருந்த ஆளை என்ன செய்வது? (மக்களே) நீங்கள் சொல்லுங்கள், சொராபுதினை என்ன செய்திருக்க வேண்டும்?…” என்று கேட்டார்.
“அவனைக் கொல்ல வேண்டும், அவனைக் கொல்ல வேண்டும்,” என்று கூட்டத்தினர் எதிரொலித்தனர். உடனே மோடி, “நல்லது, அதுதான் நடந்திருக்கிறது.இதைச் செய்வதற்கு நான் சோனியா காந்தியிடம் அனுமதி பெற வேண்டுமா” என்று கேட்டார். என்கவுன்டர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த (குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை தலைவராக இருந்தவரும் என்கவுன்டர் கொலைகள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான) வன்ஜாரா, “அந்த என்கவுன்டர் நடக்காமல் போயிருந்தால், மோடிஜியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடினமாகியிருக்கும். குஜராத்தை இன்னொரு பயங்கரவாதிகள் நிறைந்த காஷ்மீராக மாற்றுவதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கும்,” என்றார்.
இவ்வாறாக, 2002 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் நடந்ததெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான பகையுணர்வைக் கட்டுகிற வேலைதான். போலி என்கவுன்டர்களில் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவது என்பது மாநில அரசின் கொள்கையாகவே அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் 29வது கேள்விக்குப் பதிலளித்த திரு.மோடி, “இதையெல்லாம் இவர்கள் எப்படிச் சொல்கிறார்கள்? அண்மையில் சொராபுதின் வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது.தீர்ப்பைப் படியுங்கள்.நிறுவன அமைப்புகள் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பாருங்கள்,” என்று கூறினார்.
சிறந்த வழக்குரைஞரும், நான் பெரிதும் மதிக்கிறவருமான திரு.அருண் ஜேட்லி, “சோராபுதீன் விசாரணையைக் கொன்றது யார்” என்று வருந்தத்தக்க முறையில் கேட்டார். “நடவடிக்கையைக் கேள்வி கேட்கிறவர்கள் அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது சிபிஐக்கு என்ன செய்தார்கள் என்று தங்களைத் தாங்களே விசாரித்துக்கொள்ளட்டும்,” என்றார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அவரை (சொராபுதின் ஷேக்கை) யாரும் கொல்லவில்லை. அவர் இறந்துவிட்டார் அவ்வளவுதான்,” என்றார்.“ஒரு அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே சிபிஐ திரு.அமித் ஷாவைக் குறிவைத்தது,” என்றும் கூறினார்.
இது ஒருபுறமிருக்க, அதிகாரத்தில் இருப்பவர்களின் கட்டளைப்படி இந்த ஒட்டுமொத்த விசாரணையும், இட்டுக்கட்டப்படவில்லை என்றாலும் எப்படி பலவீனப்படுத்தப்பட்டது என்பது தேசத்துக்குத் தெரியவந்தாக வேண்டும். 2012இல் திரு.அமித் ஷாவுக்கு ஜாமின் அனுமதியை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், திட்டவட்டமான முறையில் இரண்டு வழக்குகளையும் மும்பைக்கு மாற்றியதோடு பின்வருமாறு ஆணையிட்டது:
“39. (நீதிமன்ற) நிர்வாகக் குழு இந்த வழக்கை விசாரணை நியாயமாக நடக்கக்கூடிய ஒரு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்… ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஒரே நீதிபதியால் விசாரணை நடத்தப்படுவதையும் நிர்வாகக்குழு உறுதிப்படுத்த வேண்டும்.”
ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பது .ஒரு நீதிபதி மரணமடைந்தார். அவர் சந்தேகத்திற்குரிய சூழலில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினரே கூறுகிறார்கள். உச்ச நீதிமன்றமோ, அவர்களது பேட்டியின் துண்டுப் பகுதிகள்தான் தாக்கல் செய்யப்பட்டன என்று கூறி, அவர்கள் கோரியதைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதேவேளையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மை பற்றி உச்ச நீதிமன்றம் எந்தவொரு கட்டத்திலும் கேள்வி எழுப்பவில்லை.குடும்பத்தினரது பேட்டிப் பதிவை முழுமையாகத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கூறவில்லை.
கடைசி நீதிபதியாக திரு சர்மா நியமிக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், அவர் டிசம்பரில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் இருந்தார், தீர்ப்பை எழுதுவதற்காக அவருக்குப் பணி நீடிப்பு வழங்கப்பட்டது. சட்டம் பற்றி எதுவும் தெரியாதவர் என்று நன்றாகத் தெரியவருகிற இந்தக் குறிப்பிட்ட நீதிபதியைத் தேர்வு செய்தது ஏன் என்று பம்பாய் உயர் நீதிமன்றமும் நிர்வாகக் குழுவும் நாட்டிற்கு முழுமையாக விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளன. ஒருநாள் உச்சநீதிமன்றம் தனது ஆணையை பம்பாய் உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு மீறியது ஏன் என்று ஆராய வேண்டியிருக்கும். இது இந்தத் தீர்ப்பு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என்பதைக் காட்டவில்லையா? ஒரு முறையான மறுவிசாரணை மறுபடியும் முதலிலிருந்தே நடத்தப்பட்டாக வேண்டும் என்று உணர்த்தவில்லையா?
இதில் காங்கிரஸ் ஒன்றும் சிபிஐ அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தவில்லை. சொராபுதினின் சகோதரரும், பிரஜாபதியின் தாயாரும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம்தான் அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. எங்களில் சிலரும் உச்சநீதிமன்றத்தை அவ்வாறு செய்யுமாறு வலியுறுத்தினோம். அரசியல் ஆதாயங்களுக்காக அல்ல, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக.
திரு.மோடி நியமித்துள்ள இடைக்கால இயக்குநரின் கீழ் சிபிஐ இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் என்றும், பம்பாய் உயர் நீதிமன்றம் இதில் நியாயமாக நடந்துகொள்ளும் என்றும் எதிர்பார்ப்போமாக.
துஷ்யந்த் தாவே
(கட்டுரையாளர் மூத்த வழக்குரைஞர். உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர்.)
நன்றி: பார் & பெஞ்ச்
தமிழில்: அ.குமரேசன்
எழுதி வைத்து கொள்ளுங்கள் இதே மாதிரி தீர்ப்பு தான் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கிலும் வரும்
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
Excellent draft
Judicial accountability நீதிபதியின் நம்பகத்தன்மை இப்படி இருந்தால் Rule of Law சட்டத்தின் ஆட்சி படிப்படியாக காணாமல் போய்விடும். ஒரு கட்டத்தில், ஏன் இப்போது கூட பல நிகழ்வுகளில் நீதிமன்றம் உத்தரவுகள் செயல்படுத்தப்படாமல் காகிதத்தில் மட்டும் இருப்பதை பார்க்கலாம். குன்ஹா தீர்ப்புபடி ஜெ. சொத்துக்களை அரசுடைமை இன்று வரை ஆக்கவில்லை. நாட்டில் உள்ள Bar Associations அனைத்து த்தும் இது போன்ற நிகழ்வுகளை விவாதம் செய்யும் தகுதியில் உள்ளதா? இந்த நாட்டில் இப்போது தகுதியான வழக்கறிஞர்கள் போதிய அளவில் இல்லை. நீதித்துறை என்பது தகுதியான வழக்கறிஞர்களையம் உள்ளடக்கியதாகும் .