புதிய இட ஒதுக்கீடு மசோதா தரும் வரையறையின்படி எல்லா இந்தியர்களும் ஏழைகள்தான்!
கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது. நரேந்திர மோடி அரசின் எண்ணம் அப்படித்தான் இருப்பதுபோல் தெரிகிறது. இதற்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய ஆதாரமாக, அரசியல் சாசன 124ஆவது திருத்த மசோதா, ஜனவரி 7ஆம் தேதி உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அவசரத்தைக் குறிப்பிடலாம்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க எத்தனை காலம் ஆகியிருக்கும் என நினைத்துப்பாருங்கள். 1951இல் அரசியல் சாசன முதல் திருத்தத்திற்கான வரைவை உருவாக்கி நிறைவேற்ற எவ்வளவு காலம் ஆனது என நினைத்துப்பாருங்கள். சமூக மற்றும் கல்வி நோக்கில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான கருத்தாக்கத்தை முதல் திருத்தம் அறிமுகம் செய்தது. சிறப்பு ஒதுக்கீடு என்பதே இட ஒதுக்கீடு எனப் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
அச்சமே காரணம்
பொது விவாதம் மற்றும் நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தாமல் 48 மணி நேரத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்டது என்பதுதான் 124ஆவது சட்டத் திருத்தம் மீதான விமர்சனமாகும். இதற்கு மாறாக, மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் இரு பங்கு இடங்களை அளிப்பதற்கான மசோதா 2008 முதல் நிலுவையில் இருக்கிறது.
124ஆவது சட்டத் திருத்தத்தின் தகுதி ஒரு புறம் இருக்கட்டும்; பாஜகவும் அரசும் பீதியில் உறைந்திருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே இது அமைகிறது. விவசாயிகளுக்கு ரொக்க மானியம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளும் இந்த வரிசையில் காத்திருக்கின்றன.
நோக்கத்தில் தவறில்லை
இப்போது இந்த மசோதாவின் தன்மையைப் பார்க்கலாம். இந்த மசோதாவின் நோக்கம் என்ன? குடிமக்களில் பொருளாதார நோக்கில் பின்தங்கியவர்கள், பொருளாதார நோக்கில் வலுப்பெற்றவர்களோடு போட்டியிட முடியாத தன்மை காரணமாக உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளிலிருந்து விலக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிடுகிறது மசோதா. இந்த மசோதாவுக்குப் பின் உள்ள நோக்கத்தை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை (2014 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அளிக்க வாக்குறுதி அளித்திருந்தது.)
எனவே இந்த மசோதாவுக்கான எதிர்ப்பு, நோக்கம் தொடர்பானது அல்ல. மாறாக, கவனிக்க வேண்டிய மற்றும் பொருத்தமான மற்ற காரணங்களுக்கானவது. அவற்றில் சில வருமாறு:
- பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கடந்த நான்கு ஆண்டுகள் ஏழு மாதங்களில் முன்னுரிமை பெறவில்லை எனில் (முத்தாலக் மசோதா முன்னுரிமை பெற்றதுபோல), மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள 60 நாட்களுக்கு முன் முன்னுரிமை பெற்றது ஏன்?
- 15ஆவது பிரிவின் உத்தேசிக்கப்பட்டுள்ள (6) (ஏ) மற்றும் (பி) ஷரத்துகள் இதே பிரிவின் (4) மற்றும் (5) ஆகிய ஷரத்துகளின், ஒரு முக்கிய மாற்றத்துடன் வெட்டி ஒட்டப்பட்ட நகலே ஆகும். பிரிவு (15) (5), சிறப்பு ஒதுக்கீடு (இட ஒதுக்கீடு) சட்டத்தின் மூலமே மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிய ஷரத்தில் சட்டம் எனும் வார்த்தை இல்லை. இதன் பொருள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசு ஆணை மூலம் அரசு இட ஒதுக்கீடு வழங்கும்.
3.16ஆவது பிரிவின் உத்தேசிக்கப்பட்டுள்ள (5)ஆவது ஷரத்தும் இப்பிரிவின் தற்போதுள்ள (4)ஆம் ஷரத்தின், வெட்டி ஒட்டப்பட்டவை ஆகும். ஒரு முக்கிய மாற்றத்துடன் இது செய்யப்பட்டுள்ளது. பிரிவு 16 (4) பணிகளில் போதிய பிரதிநித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டிற்கு வழி செய்கிறது. புதிய ஷரத்தில் இது நீக்கப்பட்டுள்ளது.
சட்ட, தார்மிக சவால்கள்
- உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சட்டப்படி, வகுப்பினருக்குப் போதிய பிரதிநித்துவம் இல்லை எனில் இடஒதுக்கீடு சாத்தியம் இல்லை. மேலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தன்மை காரணமாக மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி இல்லை. ஆனால் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு முன்னர் அரசியல் சாசன அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் இவை. அரசியல் சாசனம் திருத்தப்பட்டால் அது இந்தத் தீர்ப்புகளை மீறுவதாக அமையும் என அரசுக்கு அறிவுரை சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த மசோதாவின் அடிப்படையை ஆதரிப்பவர்கள், இந்தத் தவறான பரிசோதனையில் தாங்களும் பங்குதாரர்களாக இருப்பதை தவிர்ப்பதற்காக, அரசு பெற்ற சட்ட ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரியுள்ளனர். இதற்குச் செவிசாய்க்கப்படவில்லை.
- மிக முக்கியமான விமர்சனம், ஏழைகளை வரையரை செய்வது தொடர்பானது. ஜனவரி 8ஆம் தேதி எல்லா நாளிதழ்களும், டிவிகளும் ஒரே மாதிரியான வரையரையை வெளியிட்டன (அரசு தந்த தகவலின்படி அமைந்திருக்க வேண்டும்). ஒரு சில விலக்குகளுடன், ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானத்திற்குக் குறைவாகப் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஏழை என வரையறுக்கப்படுகிறார். ரூ.8 லட்சம் எனும் வரையறை எப்படிப் பெறப்பட்டது என எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு இன்னும் பதில் இல்லை. பொதுவெளியில் உள்ள தரவுகள், மக்கள்தொகையில் (125 கோடி) 95 சதவீதத்தினர் இதன் கீழ் வருவார்கள் எனத் தெரிவிக்கின்றன. இவர்களில் வெகு சிலர் மட்டுமே விடுபடுவார்கள். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி எல்லோருமே ஏழைகள்தான். இதில் பாதிக்கப்படுபவர்கள், இது யாருக்காகக் கொண்டுவரப்படுகிறதோ, அவர்கள்தான். அதாவது, ஏழைகளிலும் ஏழைகள்தான் இந்த வரையறையால் பாதிக்கப்படுவார்கள். ஏழை என்பது, பொருளாதார ஏணியில் கீழ் இருக்கும் 20 சதவீதத்தினரை உள்ளடக்கும் வகையில், மிகவும் குறுகலாக வரையறுக்கப்படாவிட்டால், இந்த ஒதுக்கீடு சட்ட மற்றும் தார்மிகப் பார்வையில் கேள்விக்குள்ளாகும்.
- மிகப் பெரிய கேள்வி, வழங்கும் ஆற்றல் சார்ந்தது. உள்கட்டமைப்பு வசதி அல்லது ஆசிரியர்கள் தரம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக இடங்களை உருவாக்கலாம். ஆனால், அரசு வேலைகளில் என்ன செய்ய முடியும்? எங்கே வேலைகள் இருக்கின்றன? அரசை , மத்திய, மாநில, பஞ்சாயத்து மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து தரப்பிலும் விரிவாக்குவது அரசின் நோக்கமா? மத்தியப் பொதுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 2014 மார்ச்சில் 16,90,741 என்பதாக இருந்தது. இது 2017 மார்ச்சில் 15,23,586 ஆகக் குறைந்துள்ளது. கையில் இருக்கும் கேக்கின் அளவு மாறவில்லை. ஆனால், அதில் மேலும் ஒரு துண்டு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதிலிருந்தே அரசு நடவடிக்கையின் அபத்ததைப் புரிந்துகொள்ளலாம்.
ப.சிதம்பரம்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/opinion/columns/across-the-aisle-nearly-all-indians-are-poor-p-chidambaram-narendra-modi-10-per-cent-quota-caste-constitution-5535771/
Even Govt colleges and schools including IITs and IIMs are not in a position to increase their intake.While 27% reservation was done as per Mandal Commission recommendations,the UGC granted funds for creating additional infrastructure.But this time the Central Govt asked all colleges/universities/schools to fend for themselves.
முன்னேறிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு வருமான அடிப்படையில் என்பது ஒரு ஏமாற்று வேலையே . இந்த வருமான சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் காட்டில் இனி மழைதான். காசு உள்ள யார் வேண்டுமானாலும் இந்த சலுகையை தவறான வழியில் எளிதாக பெற முடியும். மேலும் இதனால் பலன் பெறப்போவது என்னவோ பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினராகவே இருக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது என்பதை அனைவரும் அறிவர். பிஜேபி அரசானது தன்னுடைய கொள்கையை மிக அழகாக தந்திரமாக சட்டவடிவமாய் மாற்றியுள்ளது . இதனால் பலன் யார் அடைய போகிறார்கள் என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும்.