விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன?
2014இல் பிரதமர் பதவியை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நரேந்திர மோடி, தனது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியதிகாரத்துக்கு வருமானால், அரசாங்கம் அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித்தரும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த விலை நிர்ணயத்தை முதலில் பரிந்துரைத்தது டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம். விவசாயிகளின் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காக 2004இல் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் இந்தப் பரிந்துரையைச் செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை மோடி கடுமையாகச் சாடினார். பாஜக தேர்தல் அறிக்கை மோடியின் வாக்குறுதியைத் திரும்பவும் கூறியது. “விவசாயகத்தை லாபகரமாக்குவதற்காக” விவசாய இடுபொருள் விலைகளைக் குறைப்பது, விவசாயக் கடன்கள் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கை கூறியது.
மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மாபெரும் நிறுவனமான இந்திய உணவுக் கழகம், நடைமுறையில் இருந்த குறைந்தபட்ச விலைகளுக்கு மேல் விவசாயிகளுக்குக் கூடுதல் ஊக்குவிப்புத் தொகை வழங்கிய மாநிலங்களிலிருந்து தானியங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்திக்கொண்டது. இதனால் அந்த மாநிலங்கள் இந்த நடைமுறையைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது விவசாயிகளின் வருவாய் கீழே இறங்குவதற்கு இட்டுச்சென்றது. 2015 பிப்ரவரியில், உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த மோடி அரசாங்கம், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஒப்புக்கொண்டது. விவசாயத்தை வணிகம் சார்ந்து தாக்குப் பிடிக்கக்கூடியதாக ஆக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று விவசாயிகள் அமைப்பு ஒன்று கேட்டது. அதற்குப் பதிலளித்த மோடி அரசாங்கம், “சார்புள்ள பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே உற்பத்திச் செலவுடன் குறைந்தது 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயிப்பது சந்தையில் சீர்குலைவை ஏற்படுத்திவிடக்கூடும்,” என்று கூறியது.
விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை
மோடி அரசாங்கம் தனது முதல் நான்காண்டு ஆட்சியில் விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகக் குறைவாக வைத்திருந்தது. ஏழு முக்கியமான பயிர்களுக்கான விலை உற்பத்திச் செலவை ஈடுகட்டுகிற அளவுக்குக்கூட வரவில்லை. விவசாயிகளுக்குக் கிடைத்த வருவாய், எந்தவொரு பயிருக்குமே, 50 சதவீதத்திற்குப் பக்கத்தில் வரவில்லை. முந்தைய ஆட்சியில் கிடைத்ததைவிட இப்போது அநேகமாக எல்லாப் பயிர்களுக்குமே மிகக் குறைவான வருவாய்தான் குறைந்தபட்ச விலைகளின் மூலம் கிடைத்தது.
இதற்கிடையே, நாடு முழுவதுமே 2014 முதல் 2016 வரையில் நிலவிய வறட்சி நிலைமைகள், மோடியின் பண மதிப்பொழிப்புப் பரிசோதனை, விவசாய விளைபொருள்களுக்கு உலகச் சந்தையில் ஏற்பட்ட விலைச்சரிவு போன்ற கேடுகளை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. வறட்சி நிலைமைக்கு மோடி அரசாங்கத்தைப் பொறுப்பாக்க முடியாதுதான். ஆனால், அது எப்படிக் கையாளப்பட்டது என்ற மோசமான அணுகுமுறைக்குப் பொறுப்பேற்கத்தான் வேண்டும். விளைபொருள்களின் விலைச்சரிவு பெருமளவுக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதுதான். ஆனால் கச்சா எண்ணை விலை குறைந்ததால் அரசாங்கக் கருவூலத்திற்குத் திடீரெனக் கிடைத்த பெரும் ஆதாயங்களை விவசாயிகளுக்கு மடை மாற்றியிருக்க முடியும்.
பண மதிப்பொழிப்பைப் பொறுத்தவரையில் அது மோடியால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுதான். அத்துடன் சேர்ந்து, பல விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் மீது தங்களுக்கு உள்ள பிடியை பலவீனப்படுத்துவதற்கும், தங்கள் நிலத்தையே முற்றிலுமாக எடுத்துக்கொள்வதற்கும் அரசாங்கம் பிடிவாதமாக மேற்கொண்ட முயற்சிகளையும் எதிர்கொண்டார்கள்.
விவசாயிகளின் கையறு நிலை
இக்காரணிகள் எல்லாமாகச் சேர்ந்து விவசாயிகளைக் கையறு நிலைக்குத் தள்ளியுள்ளன. இதற்கு முன்பும் அவர்கள் சீராட்டப்பட்டுவிடவில்லைதான். காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள், அதற்கு முன்பும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதைப் போல. ஆனால் 2014க்கு முந்தைய பத்தாண்டு காலத்தில் விவசாய உற்பத்தி விகிதமும் விவசாயிகளின் வருவாயும் விவசாய விளைபொருள் ஏற்றுமதிகளும் அதிகரித்தன. விவசாயத் துறை, இந்தியக் குடியரசு உருவாகிய நாள் முதல் இந்நாள் வரையிலான ஒட்டுமொத்தக் காலம் முழுக்க அல்ல என்றாலும், குறைந்தது முப்பதாண்டுக் காலம் கட்டமைப்பு சார்ந்த நெருக்கடியில் சிக்கியிருந்துள்ளது.
ஆனால், மோடி, விவசாயக் களத்தில் மிகவும் ஆக்கபூர்வமான கட்டத்தைச் சுவீகரித்துக்கொண்டு வந்தார். நீண்ட நாட்களாக அந்த இடத்தில் இருந்துவருகிறார். ஒப்பீட்டளவில் ஒரு உயர்வான நிலைக்கு வந்திருந்த இந்திய விவசாயம் ஒரு புதிய தாழ்வான நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. ஆங்காங்கே நடந்து வந்த விவசாயிகள் போராட்டங்கள் கடந்த கோடைக்காலம் முதல் ஒரு இயக்கமாக ஒருங்கிணைந்துள்ளன. சென்ற நவம்பரில் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களுக்குத் தீர்வு கோரி தலைநகர் தில்லியில் அணிவகுத்தனர். (அரசியல்வாதியாகிய நான், தேசிய விவசாயிகள் இயக்கத்தை உருவாக்கியவன் என்ற முறையில் அந்தப் பேரணியை நடத்த உதவினேன். ஒரு சமூக அறிவியலாளராகச் செயல்பட்ட நாட்களிலிருந்தே நான் வேளான் பொருளாதாரத்தில் அக்கறை காட்டிவருகிறேன்.
அரசு மீது விவசாயிகளின் அதிருப்தி
விவசாயிகள் தங்களுடைய அவலத்திற்கு அரசாங்கத்தின் கொள்கைகளே காரணம் என்று இணைத்துப் பார்க்கத் தவறவில்லை. கடைசி இரண்டு ஆண்டுகளில் கிராமப் பகுதிகளில் பாஜக செல்வாக்கு தொடர்ச்சியாகச் சரிவடைந்ததைக் கண்டோம். கடந்த ஆண்டின் கோடைக்காலத் தொடக்கத்தில், முன்னேறும் சமூகங்கள் ஆய்வு மையம் நடத்திய ஒரு கள ஆய்வு, விவசாயிகளிடையே பாஜக எதிர்ப்பு 12 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் காட்டுகிறது.
மோடி அரசாங்கம் இதற்குத் தனக்கே உரிய வழியில் தடபுடல் விளம்பரங்களோடும் தடுமாற்றங்களோடும் எதிர்வினையாற்றியது. பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், விவசாயிகளுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்கிறது. அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக, அதற்கு மேலும் செய்திருப்பதாகக் கூறுகிறது. அவை வெற்றுக் கூவல்களே எனப் புரிந்துகொள்வது கடினமல்ல. ஆயினும் அந்தத் தடபுடல்களின் பின்னால் விவசாயக் களத்தில் அரசாங்கத்தின் தோல்விகள் இருப்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் கூவல்களைப் பரிசீலிக்கத்தான் வேண்டும்.
அசாதாரணமான வறட்சியும் அதை எதிர்கொண்ட விதமும்
அரசாங்கம் எதிர்கொண்ட வறட்சி நிலைமையைப் பொறுத்தவரையில் அசாதாரணமானதுதான். கடந்த நூற்றாண்டில் இவ்வாறு அடுத்தடுத்த ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்டது என்பது இதற்கு முன் இரண்டு முறை நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அவற்றை நூற்றாண்டின் மிக மோசமான வறட்சி நிலைமைகள் என்று சொல்லிவிட முடியாது. உண்மையில், கடந்த பல ஆண்டுகளில் மிக மோசமாகக் கையாளப்பட்ட வறட்சி நிலைமைகளில் இவற்றையும் சேர்க்கலாம்.
இந்தப் பிரச்சினையை ஒன்றிய அரசாங்கம் கண்டுகொள்ளத் தவறியது பற்றி 2015இல் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. நீதிமன்றத்தின் கேள்விக்கு மோடி அரசாங்கம் அளித்த பதில் என்னவென்றால், வறட்சி நிவாரணப் பணிகள் மாநில அரசாங்கங்களின் பொறுப்பு என்பதே. தன்னால் இயன்றதனைத்தையும் செய்துவிட்டதாகவும் அரசாங்கம் சொன்னது.
அது உண்மையல்ல. வறட்சி நிலைமைகளை முன்கூட்டியே கணிப்பதும், முடிந்த வரையில் பாதிப்புகளைத் தணிப்பதும் மத்திய அரசாங்கத்தின் சட்டபூர்வ கடமை. வறட்சி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கும், அவற்றைக் கையாளுவதற்கும் வழிகாட்டல்களை உருவாக்குவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நிவாரணப் பணிகளுக்கு உரிய நிதியை வழங்குவது, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது ஆகிய சட்டப்பூர்வப் பொறுப்புகளும் மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், மோடி அரசாங்கம் தன் கைவசம் இருந்த வானியல் நிலவரத் தகவல்களைச் செயல்திறனோடு பயன்படுத்தவில்லை. நிவாரணப் பணிகளுக்கு வழிகாட்டவும் இல்லை. அழிந்த பயிர்களுக்காக இழப்பீடு வழங்குதற்கான நிதியுதவிகளை மாநிலங்களுக்கு அனுப்புவதை மத்திய அரசாங்கம் தாமதப்படுத்தியது.
நீதிமன்றம் 2016 மே மாதம் சில நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு ஆணையிட்டது என்றாலும், அரசாங்கம் அவற்றில் பெரும்பாலானவற்றைச் செயல்படுத்தத் தவறியது. பாதிக்கப்பட்ட எந்தப் பகுதிக்கும் ஒரே சீரான உணவு தானிய விநியோகம் நடைபெறவில்லை. ஒரு சில விவசாயிகளுக்குத்தான் இழப்பீடு கிடைத்தது. சிலருக்குத்தான் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கெடு தள்ளிவைக்கப்பட்டது. சிலருக்குத்தான் புதிய கடன் பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணம் வழங்குவது தாமதப்படுத்தப்பட்டது. அதுவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குக் குறைவாகத்தான். குறிப்பாக இதனால் சிறிய விவசாயிகளும் விளிம்புநிலை விவசாயிகளும் பாதிக்கப்பட்டார்கள். விவசாயத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பவர்கள் அவர்கள்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிலை
ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான பட்ஜெட் நிதியை அதிகரித்திருப்பதாக அரசாங்கம் பின்னர் கூறியது. ஆனால், தொகைக் கணக்கில் இது உண்மைதான் என்றாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தோடு ஒப்பிடுகையில் உண்மையில் இந்த நிதி இந்தப் பத்தாண்டுக் காலத்தின் தொடக்கத்தில் 0.53 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டு 0.42 சதவீதமாகச் சுருங்கிவிட்டது. இத்திட்டத்தின் கீழ் வேலை பெறத் தகுதியுள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தரப்பட்ட வேலை நாட்களின் சராசரி எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தாமதமான பணப் பட்டுவாடாவுக்குரிய இழப்பீட்டுத் தொகை பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி வேலைக்கான பணம் 14 நாட்களுக்குள் வழங்கப்பட்டாக வேண்டும். அவ்வாறு 14 நாட்களுக்குள் தொழிலாளர்களைப் பணம் சென்றடைந்தது மூன்றிலொரு பங்குதான் என்று இது தொடர்பான ஒரு தனி ஆய்வு தெரிவிக்கிறது.
2016 நவம்பரில் பணமதிப்பு ஒழிக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்ற வேறொரு மோசமான தருணம் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்க முடியாது. அப்போதுதான் அவர்கள் வறட்சி நிலைமைகளிலிருந்து மீண்டுகொண்டிருந்தார்கள். தங்களுடைய சம்பா சாகுபடி அறுவடையை அப்போதுதான் விற்பனை செய்திருந்தார்கள். குறுவை சாகுபடிக்கான பருவ காலத்தின் நடுக்கட்டத்தில் இருந்தார்கள். பணமதிப்பு ஒழிப்பால் அவர்களின் ரொக்கக் கையிருப்புகள் சுருங்கி மெலிந்தன. கடன்களைக் கட்ட முடியாத நிலைமை ஏற்பட்டது. விதைகளையும் உரங்களையும் விவசாயக் கருவிகளையும் வாங்குவது தாமதமானது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி கிடைக்கவில்லை. போக்குவரத்து முடங்கியதால், அழுகும் பொருள்களாகிய காய்கறிகளையும் கனிவகைகளையும் சந்தைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் சீர்குலைந்தன.
உற்பத்தி கூடியும் பிரச்சினை குறையவில்லை
இத்தனை சிரமங்களுக்கிடையேயும் விவசாயிகள் வறட்சி நிலைமைகளுக்குப் பின் அடுத்தடுத்து நல்ல அறுவடைகளையே வழங்கினார்கள். ஆனால் விளைபொருள்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. பல வகையான விளைபொருள்களுக்கும் ஏற்பட்ட இந்த விலை வீழ்ச்சியின் பாதிப்பு, அரசாங்கத்தின் கொள்கையால் மேலும் மோசமடைந்தது.
உதாரணமாக, பயறு வகைகளின் விலைகள் முந்தைய ஆண்டுகளில் அதிகமாக இருந்ததைக் காட்டி, வெளிநாடுகளிலிருந்து மிகப்பெருமளவுக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்தது. அதிக விளைச்சலைக் கண்ட தானியங்கள் சந்தைக்கு வர வர அவற்றின் விலைகள் கீழிறங்கின. மற்ற விளைபொருள்களின் நிலைமையும் இதுதான். அரசாங்கம் கொள்முதல்களை அதிகரிப்பதன் மூலம் இந்தச் சந்தை நிலவரத்தை சமாளிக்க முயன்றது. ஆனால், அதனால் பயன் விளையவில்லை. அரிசியும் கோதுமையும் மட்டுமே முக்கியமாகக் கொள்முதல் செய்யப்பட்டன. அதுவும் சில மாநிலங்களில்தான்.
அதே நேரத்தில், அரசாங்கக் கொள்முதல் பட்டியலில் இல்லாத உருளைக்கிழங்கு, வெங்காயம், இதர பாய்கறிகள், பால் முதலியவற்றின் விலைகளும் சரிவடைந்தன. 2014இல் விலைக் கட்டுப்பாடு நிதித் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்தியது. ஆனால், அது நுகர்வோருக்கான விலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதேயன்றி, கொள்முதல் மூலமாக விவசாயிகளுக்கு உதவுவதாக இல்லை. விளைபொருள் சந்தையில் தலையிடுவதற்கான இதர அதிகாரபூர்வ திட்டங்களுக்கு மோசமான முறையில் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டது
2017 நவம்பரில், சம்பா சந்தைக் கால விலை நிலவரங்கள் பற்றிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க அங்கீகாரம் பெற்ற சந்தைகளில் தானியங்களின் கொள்முதல் விலை, அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாக இருந்தது என்று அந்த ஆய்வு தெரிவித்தது. ஒப்புதலளிக்கப்பட்ட எட்டு விளைபொருள்களில் ஏழு பொருள்களுக்கான விலை இவ்வாறு குறைவாக இருந்தது. அந்தப் பருவ காலத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட விவசாயிகளுக்கு 32,702 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எட்டு மாநிலங்களில் உள்ள விவசாயச் சந்தைகளுக்கு அண்மையில் குறுவைப் பருவ காலத்தையொட்டி நான் சென்றிருந்தேன். அப்போது அங்கே இதே போன்ற நிலைமையைத்தான் கண்டேன்.
அரசின் நையாண்டி ஆட்டம்
இதெல்லாம் நடந்துகொண்டிருக்க, மோடி அரசாங்கம் ஒரு மிகப் பெரிய நையாண்டி ஆட்டத்தை ஆடியது. 2016 பிப்ரவரியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று முழங்கினார். அது தற்காலிக சமாளிப்பாக வந்த ஒரு புதிய வாக்குறுதிதான். இந்த முழக்கத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறுநாள் தனது பட்ஜெட் உரையில் எதிரொலித்தார். அந்த அறிவிப்பைப் பரப்பப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டு ஓடிய பிறகும் அது எப்போது செயல்படுத்தப்படும் என்று எதுவும் சொல்லப்படவில்லை. அப்புறம், அது 2023ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்கள்! தற்போதைய அரசாங்கத்தின் பதவிக் காலத்திற்கு அப்பால்! அத்துடன், விவசாயிகளின் வருமானம் என்றால் அது தொகை அடிப்படையிலா அல்லது உண்மையான வருவாய் அடிப்படையிலா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. அதற்குப் பிறகு அரசாங்கம் செய்ததெல்லாம் விவசாயிகள் வருமான இரட்டிப்புக் குழு ஒன்றை அமைத்ததுதான். அந்தக் குழு சில அருமையான ஆய்வறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதென்றால், ஏழாண்டு காலத்தில் விவசாயிகளின் வருமானத்தில் ஆண்டுக்கு 10.4 சதவீதம் கூட்டு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றும் குழு கணக்கிட்டது. அரசாங்கம் இதை அறிவித்த பிறகு விவசாயிகளின் வருமான நிலை குறித்த புள்ளிவிவரம் எதையும் வெளியிடவில்லை. ஆனால், நிதி ஆயோக் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், உண்மையான வருவாய் நிலவரப்படி விவசாயிகளின் வருமானம் 2011க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் வெறும் 0.44 சதவீதம் மட்டுமே அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்திரமான அறிவிப்புகள்
கைவிடப்பட்ட முந்தைய வாக்குறுதிகளின் வரிசையில் இதுவும் சேர்கிறது. அரசாங்கம் தம்பட்டம் அடித்துக்கொள்கிற விஷயங்களில் ஒன்று, விவசாயத்திற்கு ஆதரவான தனது செலவுகள் இரு மடங்காகியுள்ளது என்பதாகும். இரண்டு புள்ளிவிவரத் தந்திரங்களின் அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
முதல் தந்திரம், அரசாங்கம் பணவீக்கத்திற்கு (விலைவாசி உயர்வுக்கு) ஏற்பத் திருத்தியமைக்கப்பட்ட உண்மை வருவாய் நிலவரம் அல்லாமல், செலவிடப்பட்ட தொகை நிலவரத்தைப் பயன்படுத்தியது. இதனால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பணவீக்கத்துக்கு ஏற்ப விவசாயத் துறைக்கான பட்ஜெட்டில் இயல்பாகவே அதிகரிக்கப்பட்ட தொகை, விவசாயத்துக்கான உண்மை ஒதுக்கீட்டை அதிகரித்துவிட்டது போலக் காட்டப்படுகிறது.
இரண்டாவது தந்திரம், அரசாங்கம் தனது “வட்டி உதவி நிதி” அல்லது வட்டிக்கான மானியத்தில் ஒரு பகுதியை நிதியமைச்சகக் கணக்குப் புத்தகங்களிலிருந்து வேளான் அமைச்சகக் கணக்குப் புத்தகங்களுக்கு மாற்றியது. இதன் மூலம், விவசாயத்திற்காகக் கூடுதலாகச் செலவிட்டிருப்பது போலக் காட்டப்படுகிறது. உண்மை என்னவென்றால், இந்த அரசாங்கம் விவசாயத்திற்காக ஒதுக்கியது மத்திய பட்ஜெட்டில் 1.75 சதவீதம்தான். இது, முந்தைய அரசாங்கம் ஒதுக்கிய நிதி அளவேதான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டது 0.25 சதவீதம்தான். இதுவும் முந்தைய ஆட்சியில் ஒதுக்கப்பட்ட அளவேதான்.
பயிர்க் காப்பீடு திட்டத்தின் நிலை
அப்புறம், ஏகப்பட்ட தடபுடல் விளம்பரங்களோடு 2016இல் கொண்டுவரப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம். காகிதத்தில் இது முந்தைய வேளான் காப்பீட்டுத் திட்டங்களோடு ஒப்பிடுகையில் ஒரு முக்கியமான முன்னேற்றம்தான். இதில் பலவகையான எதிர்பாரா இழப்பு நிலைமைகள் (ரிஸ்க்) விரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இழப்பு மதிப்பீடும் காப்பீடும் விரிவான நிர்வாக அளவில் அல்லாமல் தனிப்பட்ட கிராம அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய முன்தவணைத் தொகை (பிரீமியம்) ஒரு நியாயமான விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, மீதித் தொகையை அரசாங்கம் செலுத்த வகை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட முக்கியமான எதிர்பாரா நிலைமைகளை இந்தத் திட்டம் கண்டுகொள்ளவில்லை. கிராம அளவிலான காப்பீடு என்பது அந்தந்த மாவட்டத்தின் முக்கியப் பயிர்களுக்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால், கோட்ட அளவில் அல்லது மாவட்ட அளவில் மதிப்பீடு செய்கையில், இதர பயிர் சாகுபடிகளில் ஈடுபடும் விவசாயிகள் கைவிடப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியே ஏதேனும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் மட்டுமே இவர்களுக்கும் காப்பீட்டு உதவி கிடைக்கும்.
காப்பீடு செய்யப்பட்டுள்ள விவசாயிகளில் பலருக்கும், தங்களுக்கு இந்தக் காப்பீடு எப்படிப் பலன் தரும் என்பதே தெரியவில்லை. முந்தைய திட்டங்களைப் போலவே இந்தத் திட்டத்திலும், அவர்களுக்கு முறைப்படியான வேளான் கடன் கிடைப்பதோடு தானாகவே காப்பீட்டுப் பலன் கிடைக்கும் வகையில்தான் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. காப்பீடு செய்துகொள்கிறவர்களுக்குத் திட்ட ஆவணம்கூட தரப்படுவதில்லை. இத்திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டுக்குள் இந்திய விவசாயிகளில் பாதிப்பேர் காப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேர்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். முந்தைய காப்பீட்டுத் திட்டங்களிலும் இப்படித்தான் நடந்தது.
இந்தத் திட்டம் விவசாயிகளைவிடவும் காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் பல மடங்கு உதவியாக இருந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் உறுதியளிக்கப்பட்ட தொகையில் 40 சதவீதம் வரையில் பிரீமியமாக வசூலித்தன. குஜராத்தின் ராஜ்காட் மாவட்டத்தில், நிலக்கடலைப் பயிருக்கு அளித்த காப்பீட்டில், 58 சதவீதம் வசூலிக்கப்பட்டது. திட்டத்தின் முதல் ஆண்டில், விவசாயிகளுக்குத் தரப்பட்ட தொகை 15 கோடியே 33 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். வசூலிக்கப்பட்ட பிரீமியம் 22 கோடியே 55 லட்சம் ரூபாய். நிறுவனங்களுக்கு 32 சதவீத லாபம். 2917 சம்பா சாகுபடியில் இந்த லாபம் 51 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது.
சில காப்பீட்டுக் கோரிக்கைகள் இன்னமும் ‘செட்டில்’ செய்யப்படாத நிலையிலேயே இவ்வளவு லாபம். இத்திட்டத்திற்கான செலவை அரசாங்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. ஆனால் பொதுமக்களின் பணம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் திருப்பிவிடப்பட்டது. உறுதியளிக்கப்பட்ட தொகையை விட அதிக அளவுக்குப் பிரீமியங்கள் அதிகரிக்கின்றன. காப்பீடு செய்யப்படும் வட்டாரங்களின் எண்ணிக்கையும் விவசாயிகள் எண்ணிக்கையும் சிறு அளவுக்குத்தான் விரிவடைந்துள்ளன. தேசிய வேளான் வளர்ச்சித் திட்டம் போன்ற இதர விவசாயத் திட்டங்களுக்கான நிதிகளும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்குத் திருப்பப்படுவதால், உண்மையிலேயே விவசாயிகளிடம் வந்து சேரும் நிதி சுருங்கிக்கொண்டிருக்கிறது.
விவசாயக் கடன்கள் விரிவுபடுத்தப்பட்டனவா?
பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போல, விவசாயக் கடன்களை விரிவுபடுத்தியிருப்பதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது. அரசாங்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிற இலக்குகளைவிட அதிகமாக வங்கிகள் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்துள்ளன என்பது உண்மையே. ஆனால், வங்கிக் கடன் என்பது பட்ஜெட் ஒதுக்கீடு அல்ல. இதில் அரசாங்கம் ‘வட்டி உதவி’ நிதியை சிறிதளவுக்கு அதிகரித்தால் போதும். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, “விவசாயக் கடன்” தொகையில் பெரும் பங்கு விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும்தான் போய்ச் சேர்கிறதேயன்றி, விவசாயிகளுக்கு அல்ல.
வங்கிகள் கார்ப்பரேட் அல்லாத, சிறு குறு விவசாயிகளுக்கான கடன் இலக்குகளை அடையத் தவறின. இத்தகைய நிறுவனபூர்வமான கடன் வாய்ப்பு வழிகள் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பெருமளவுக்கு அடைபட்டுள்ளன. இதனால் அவர்கள் கடும் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களையே சார்ந்திருக்க வேண்டியதாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து திரும்பிவராத பெரும் கடன்தொகைகளை தள்ளுபடி செய்கிற, அல்லது மாற்றியமைக்கிற மோடி அரசாங்கம் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மிகவும் தயங்குகிறது.
இடுபொருள்கள் விஷயத்தில் பாதிப்பு
விவசாய இடுபொருள்களைப் பொறுத்தமட்டில் இந்த அரசாங்கம் மூன்று வழிகளில் விவசாயிகளைக் காயப்படுத்தியிருக்கிறது. முதலில், விவசாயிகளுக்குப் போதுமான யூரியா உரம் கிடைப்பதைத் தனது அரசு உறுதிப்படுத்தியுள்ளது என்கிறார் பிரதமர் மோடி. ஆனால், தனது ஆட்சியின் முதல் ஆண்டில் யூரியா இறக்குமதிகளை விளக்கமேதுமின்றி வெட்டியதால், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதை அவர் மறந்துவிட்டார்.
இரண்டாவதாக, உர விலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. உலகச் சந்தையில் உர விலைகள் அதிகரித்ததும், ரூபாய் மதிப்பு சரிவடைந்ததும் இதற்குக் காரணம். மூன்றாவதாக, மற்ற நுகர்வோரைப் போலவே, எரிபொருள் விலை உயர்வைத் தாங்கிக்கொள்ளுமாறு விவசாயிகளுக்கும் சொல்லப்பட்டது. உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்திருப்பதுதான் இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால், உலகச் சந்தையில் எண்ணை விலை கீழே இறங்கியபோது உள்நாட்டில் விலை குறையவில்லை.
முடிவடையாத பாசனத் திட்டங்கள்
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நீர்ப்பாசனத்தை எடுத்துக்கொண்டால், இன்னமும் முடிவடையாமல் இருக்கிற பாசனத் திட்டங்கள் முடிக்கப்பட வேண்டிய அவசரத் தேவை இருப்பது பற்றி மோடி பல முறை பேசியிருக்கிறார். எவ்வித ஆதாரத்தையும் காட்டாமலே, தனது அரசாங்கம் உண்மையிலேயே அதைச் செய்துவருகிறது என்று அவர் கூறிக்கொண்டார். ஆனால் திட்டப் பணிகள் முடிக்கப்படுகிற விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளிலிருந்து வெகுதொலைவு விலகியே இருக்கிறது. அந்தத் திட்டங்களுக்காக உறுதியளிக்கப்பட்ட பட்ஜெட் நிதி ஒரு போதும் முழுமையாக ஒதுக்கப்பட்டதில்லை.
விவசாய விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக என ‘இ-நாம்’ என்ற ஒரு வலைத்தள வணிக மேடை ஏற்படுத்தப்பட்டது. அது ஓரளவுக்கு செயல்படத் தொடங்கியது. ஆனால், இணையத் தொடர்பு, கணினி வசதிகள், தொலைபேசி இணைப்புகள், உரிய வகைப்பாடுகள், ஏற்மதி ஏற்பாடுகள் ஆகியவை இல்லாததன் காரணமாக அதன் செயல்பாடு முடங்கியிருக்கிறது. தற்போது விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை, அதிகாரபூர்வமாக யாருக்கு விற்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான், அவர்கள் முடிவு செய்கிற விலைக்கு விற்கிறார்கள்.
இ-நாம் மேடையால், விவசாயிகள் தங்கள் உற்பத்திகளுக்கு யார் நல்ல விலை தருகிறார்களோ அவர்களுக்கே விற்பனை செய்ய முடியும் என்று கூறப்பட்டது. அது இன்னமும் நிறைவேறவில்லை. விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை யாருக்கு எப்படி விற்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிற சட்டம் ஒன்று இருக்கிறது. ‘விவசாய விளைபொருள் சந்தைக் குழு சட்டம்’ என்ற அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்பது பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி. அவ்வாறு திருத்தம் செய்வதை நோக்கி ஓரடிகூட நகரவில்லை.
கரிமப் பண்ணை வளர்ச்சி
ஆர்கானிக் ஃபார்மிங் எனப்படும் கரிமப் பண்ணை வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மற்றொரு வாக்குறுதி. பண்ணைத் தொழிலாளர்களுக்கும் முதியோருக்குமான குறிப்பான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும், சிறு குறு விவசாயிகளுக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். உயர் வீரிய விதைகள் வழங்கப்படும், “வேளான் உணவு பதப்படுத்தல் கூட்டமைப்புகள்” ஏற்படுத்தப்படும், நடமாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் இயக்கப்படும் என்று இன்னும் என்னென்னவோ வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. எதுவுமே செயலுக்கு வரவில்லை. பங்கு விவசாயிகள், நிலமற்ற சாகுபடியாளர்கள், குத்தகை விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிவாசி விவசாயிகள் ஆகியோர் இன்னமும் இத்தகைய ஆதரவுத் திட்டங்களிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வகுப்புவாத அரசியல் தூண்டுதலோடு, விவசாயப் பொருளாதாரம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் கால்நடைகளை இறைச்சிக்காகக் கொல்லக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல விவசாயிகளுக்குத் தங்களிடமிருந்த, பயனற்ற கால்நடைகளை விற்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இத்தகைய பயன்பாடு முடிந்துபோன கால்நடைகளை விற்பதன் மூலம் கிடைக்கிற பணத்தை விவசாயிகள் புதிய இளம் கால்நடைகளை வாங்குவதில்தான் முதலீடு செய்வார்கள். மேற்படி தடை ஆணையால் அந்த வருவாய் தடைப்பட்டது. அத்துடன், பயனற்ற கால்நடைகளைப் பராமரிக்கிற சுமை வேறு சேர்ந்துகொண்டது. அந்தக் கால்நடைகள் விளைந்துள்ள பயிர்களை அழிக்கின்றன.
இத்துடன் சேர்ந்து, பால் விலைச் சரிவுக்கு இட்டுச் சென்ற அளவுக்கு மிஞ்சிய பால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி நிலைமைகளைத் தொடர்ந்து பால் உற்பத்திச் செலவுகள் எகிறியபோது, அதைக் கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நிலத்தைக் கையகப்படுத்துதல்
விவசாயிகளின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் கைப்பற்றுவதற்கு இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் மேற்படி துரோகங்களின் பாதிப்புகள் பல பகுதிகளில் மேலும் தீவிரமடைந்தன. மோடி பிரதமாரவதற்கு முன் 2013ஆம் ஆண்டில் புதிதாக நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு உடைமையாளர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும், நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும், மனிதர்கள் குடியேற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், சுற்றுச் சூழல் தாக்கம், சமூகத் தாக்கம், உணவுப் பாதுகாப்புத் தாக்கம் ஆகியவை தொடர்பான ஆய்வுச் சோதனைகளில் தேற வேண்டும் என்ற விதிகள் இருந்தன.
மோடி பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் ஒரு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது, அது காலாவதியானதும் மறுபடியும் ஒரு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த அவசரச் சட்டங்கள் மூலம், பாதுகாப்புத் துறை, தொழில் பேட்டைகள், கட்டுப்படியாகும் வீட்டுக் கட்டுமானத் திட்டங்கள், ஊரக உள்கட்டுமானம், சமூக உள்கட்டுமானம் போன்றவற்றிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் மேற்படி விதி எதுவும் பொருந்தாது என்று மாற்றப்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிப் போக விடப்பட்டது.
ஆனால் பல்வேறு மாநில அரசாங்கங்கள் சட்டத்தைத் தலைமுழுகும் வகையில் தங்களுடைய சொந்தச் சட்டங்களைக் கொண்டுவந்தன. 2014க்குப் பிறகு அரசாங்க அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகளில் சட்ட விதிகள் மீறப்பட்டன. வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடி விவசாயிகள், தங்களது பாரம்பரிய நிலங்கள் மீதும் அவற்றின் வளங்கள் மீதும் பெற்றிருந்த உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளிலும் மோடி அரசாங்கம் இறங்கியது.
பாஜக தேர்தல் அறிக்கையில் நிலப் பயன்பாட்டை முறைப்படுத்தவும், விளை நிலங்களில் சாகுபடி தொடரவும் ஒரு புதிய தேசிய கொள்கை உருவாக்கப்படும் என்று உறுதியளித்தது. மற்ற வாக்குறுதிகள் போலவே இந்த வாக்குறுதியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
குறைந்த வெளிநாட்டு வருவாய்கள்
தற்போதைய துயர நிலைமைகளிலிருந்து விடுபட வெளிநாட்டு வருவாய்கள் விவசாயிகளுக்கு உதவியிருக்கக்கூடும். ஆனால், ‘பணவீக்க இலக்கு’ என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை முடிவு செய்த நடவடிக்கைகளும், விவசாயிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நுகர்வோருக்கும் வணிகர்களுக்கும் சாதகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் ஏற்றுமதிகளைக் கைகழுவச் செய்தன. மோடி பிரதமராவதற்கு முந்தைய பத்தாண்டு காலத்தில், இந்தியாவின் வேளான் ஏற்றுமதிகள் ஐந்து மடங்காக அதிகரித்திருந்தன. அந்த ஏற்றுமதிகளிலிருந்து கிடைத்த மிகு வருவாய் 27 பில்லியன் டாலர் (19 லட்சத்து 19 ஆயிரத்து 29 கோடியே 50 லட்சம் ரூபாய்) என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டன. தற்போதைய அரசாங்கத்தின் மூன்று ஆண்டுகளில், இந்த மிகு வருவாய் 7.8 கோடி டாலர் (55 ஆயிரத்து 445 கோடியே 13 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவுக்கு வீழ்ந்துவிட்டது.
சென்ற ஆண்டு திடீரென்று, விளைபொருள்களுக்கான கொள்முதல் விலை உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் என்ற மோடியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதி அரசாங்கத்துக்கு நினைவுக்கு வந்தது. 2018 ஜூலையில் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டன. அதன் மூலம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இதில் உண்மையை மறைக்கும் ஒரு தந்திரம் இருக்கிறது. இந்தப் புதிய விலைகள் இனி வரும் சம்பா சாகுபடிக்குத்தான் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் பதவிக் காலத்தில் இதுதான் கடைசி சம்பா சாகுபடிக் காலம். இந்தப் புதிய விலைகளைக் கணக்கிடுவதற்கான ஒரு வரம்புக்கு உட்பட்ட நடைமுறையை அறிவித்திருக்கிறது. அதிகாரபூர்வ வட்டாரத்தில் அந்த நடைமுறைக்கு ‘ஏ2 பிளஸ் எப்எல்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. விவசாயிகள் “செலவிட்ட தொகை”, மதிப்பிடப்படும் குடும்ப உழைப்பு ஆகியவைதான் உற்பத்திச் செலவாக ஏற்கப்படும். விரிவான உற்பத்திச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் குவிண்டாலுக்கு 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையில் விலை வேறுபாடு ஏற்படுகிறது. இந்தப் புதிய விலைகளுக்கான கூடுதல் நிதியையும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவில்லை. கொள்முதலுக்கான புதிய வழிகாட்டல்களையும் அறிவிக்கவில்லை. ஆகவே இந்தப் புதிய விலைகளால் உண்மையிலேயே விவசாயிகளின் வருமானம் அதிகரிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இப்படிப்பட்ட தந்திரங்களுக்கும், விவசாயக் களத்தில் மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கும் ஒரு திட்டவட்டமான பதில், வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்துதான் வர வேண்டும். விவசாயிகளுக்குப் பெரிதாக எதுவும் செய்யாமலே தப்பித்துக்கொள்ளலாம் என்று மோடி அரசாங்கம் மீண்டும் மீண்டும் நம்புகிறது. அந்த நம்பிக்கை பொய்யானது என்பதையும் விவசாயிகள் காட்டுவார்கள்.
விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாத எந்த அரசும் ஆட்சியில் தொடர்ந்து இருக்க முடியாது . பெருமுதலாளிகளின் நண்பராக உள்ள இப்போதைய ஆளும் அரசு தன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஏதேனும் பொய்யான வாக்குறுதிகள் முலம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சிக்கக்கூடும். பொய்யான வாக்குறுதிகள் அதையே பெருமளவு விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே ஊடககங்கள் வளைக்கப்பட்டுவருகிறது. மொத்தத்தில் மக்களுக்கு கிடைக்கபோவது என்னவோ நாமம் தான்.
Sir ungaloda savuku book padithen . Ennai mirala vaithathu…oru tanimathan nermayaka irundal inda society il enna nerum enbatharku nengal oru example …ungal pani todarattum