வேலைவாய்ப்பு தொடர்பாகப் போதுமான தரவுகள் இல்லை என்பதை மோடி அரசு 5ஆவது ஆண்டில் கண்டறிந்தது எப்படி?
இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்பு இல்லை. அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான போதிய தரவுகள் இல்லையா? பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசும் இரண்டாவது விஷயத்தைத்தான் நீங்கள் நம்ப வேண்டும் என விரும்புகின்றன. “யாரேனும் ஒருவர் உங்கள் அலுவலகம் முன் பக்கோடா கடை திறந்து, தினமும் 200 ரூபாய் சம்பாதித்தால், அது வேலைவாய்ப்பு இல்லையா? என 2018இல் அளித்த பேட்டியில் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தார். “இதற்கு முன் எந்த அமைப்பு இந்தத் தகவல்களைப் பதிவு செய்தது?” என்றும் அவர் கேட்டிருந்தார்.
லட்சக்கணக்கானோர் சுய வேலைவாய்ப்பை நாடும் நிலையை மோடி ஏற்படுத்தியிருக்கிறார், ஆனால் அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் பிரச்சினை எனும் வாதம் பக்கோடா பொருளாதாரம் என குறிப்பிடப்படுகிறது. 2018 டிசம்பரில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 மாத கால அளவில் அதிகமாக இருப்பதகாவும், இந்தியா கடந்த ஆண்டில் 11 மில்லியன் வேலைவாய்ப்புகளை இழந்திருப்பதாகவும் கூறப்படும் செண்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எக்கானமி அமைப்பின் (சி.எம்.ஐ.இ.) அறிக்கை பற்றி அண்மையில், ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்கப்பட்டபோது அவர் இதே பாணியில் பதிலளித்தார்.
கோயலின் பதில் என்ன தெரியுமா? இந்தத் தரவுகளின் துல்லியத்தை அவர் கேள்விக்குள்ளாகினார். “சி.எம்.ஐ.இ. அமைப்பு எங்கிருந்து இந்தத் தரவுகளை பெற்றது எனத்தெரியவில்லை’ என்று கூறியவர் அரசு விவரங்களுடன் இது முற்றிலும் பொருந்தாமல் இருப்பதாகக் கூறினார். அரசிடம் போதுமான தரவுகள் இல்லை என மோடியே கூறியிருப்பதால் இந்த நிலைப்பாடு சிக்கலானதாகும்.
ஆனால், கோயலின் கருத்து சரியானதாக இல்லை. வேலைவாய்ப்பு – வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த ஆய்வின்படி, கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 2016-17இல் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்ததாக பிஸினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி தெரிவிக்கிறது.
வேலைவாய்ப்பு தொடர்பாக இது கடைசியாகக் கிடைத்த அறிக்கையாகும். வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான தற்போதைய அரசின் தரவுகள் உணர்த்தும் போக்கினை ஒட்டியே சி.எம்.ஐ.இ. அறிக்கை அமைந்திருப்பதை இது உணர்த்துகிறது. இந்த அறிக்கை நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு பதிலாக அரசு, கால அளவிலான தொழிலாளர் வள ஆய்வை ஏற்படுய்த்தியுள்ளது. 2017-18க்கான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. 2019 தேர்தலுக்கு முன் அது வெளியாகும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின், செண்டர் பார் சஸ்டெய்னபில் எம்பிளாய்மென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையும், 2015இல் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அதிகம் எனத் தெரிவிக்கிறது. மற்ற காரணிகளும் இதே விஷயத்தைத்தான் உணர்த்துகின்றன. இந்தியா போதுமான வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. இதை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியே கடந்த வாரம் எதிரொலித்திருந்தார்.
ஆனால், இதை வைத்து, இந்தியாவிடம் வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள் சிறப்பான முறையில் இருப்பதாகக் கொள்வதற்கில்லை. முந்தைய அணுகுமுறையில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, வேலைவாய்ப்பை அளவிடும் முறையில் மாற்றம் தேவை என ஒரு குழு சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்டும் அல்ல, சேமநல நிதி அமைப்பின் தகவல்களைக் கொண்டு, அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக மோடி சுட்டிக்காட்டுவதை, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது என தலைமை புள்ளியியல் வல்லுனர் பவித்ரா ஸ்ரீவத்சவா கூறியிருந்தார்.
அதாவது இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புகளும் இல்லை, அதே நேரத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான துல்லியமான தரவுகளும் இல்லை. இந்த இரண்டையும் சரி செய்வது, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுபவர் முதலில் செய்ய வேண்டிய செயலாகும்.
இது முக்கியமானதொரு கேள்வியை எழுப்புகிறது: பெரிய அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, வேலைவாய்ப்பு தொடர்பான அரசின் தரவுகள் போதுமானவை அல்ல என்பதைத் தனது கடைசி ஆண்டில்தான் கண்டறிந்ததுள்ளது. இதுவரை ஏன் இதைப் பற்றி கவனம் செலுத்தவில்லை?
ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
நன்றி; தி ஸ்க்ரோல்
https://scroll.in/article/909755/the-daily-fix-india-doesnt-have-enough-jobs-or-jobs-data-and-pakodanomics-wont-fix-that?