பெரியதொரு நாடக மேடையாகிய இந்திய நீதித் துறையில் நடிகர்கள் மாறுகிறார்கள், அவர்களுடைய கதாபாத்திரங்கள் மாறுகின்றன.ஆனால் பிரச்சினைக்குரியதாக இருக்கிற மேடைக் கதையாக்கம் அப்படியே இருக்கிறது.
2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் – ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் – ஆகியோர் இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதினார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்கள்.அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மரபுகளை மீறுகிறார் என்றும் அரசாங்க நிர்வாகம் தலையிடுவதற்கு அனுமதிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்கள்.சீர்குலைவான நிலைமையை அவர்கள் சுட்டிக்காட்டியது பொதுமக்களின் பரிசீலனைக்குத் தேவையான வெளிச்சத்தைத் தந்தது.
தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெற்றபோது அவருடைய இடத்திற்கு, அந்த நான்கு கலக நீதிபதிகளில் ஒருவரான கோகோய் வந்தார்.அனைத்தும் சரிசெய்யப்படும், உச்ச நீதிமன்றத்தின் கம்பீரமும் சுதந்திரமும் மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்ததில் வியப்பில்லை.ஆனால் அவரது பதவிக்காலத்தின் கடந்த மூன்று மாதங்களில், பழைய நிலைமையே நீடிக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. சக நீதிபதிகளின் பணிப்பொறுப்பைத் தீர்மானிக்கிறவர் என்ற முறையிலும், உயர்நிலை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்பின் தலைவர் என்ற முறையிலும் அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. அவரது நடவடிக்கைகள் அவரது முன்னோடியின் நடவடிக்கைகளிலிருந்து மாறுபட்டதாக இல்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட அந்தச் செய்தியாளர் சந்திப்பு உண்மையிலேயே சாதித்தது என்ற கேள்வி எழுகிறது.
கொலீஜியத்தின் மர்மம்
2018இல், நீதிபதி கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதை மத்திய அரசாங்கம் எதிர்த்தது. அப்போது நீதித் துறை சார்ந்த எல்லோருமே கொலீஜியம் இதில் உறுதியாக நிற்க வேண்டும், தனது முடிவை வலியுறுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.அந்தக் கொலீஜியத்தின் உறுப்பினராக இருந்தவர்தான் கோகோய்.ஜோசப்பை உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்துவது என்ற முடிவில் உறுதியாக இருப்பது என்று கொலீஜியம் சரியாக முடிவு செய்தது.ஆயினும், அவருடைய பணிமூப்பு பிரச்சினையை மத்திய அரசாங்கம் எழுப்பியபோது கொலீஜியம் பணிந்துபோனது.
ஜோசப்பின் பணிமூப்பு விவகாரத்தில் விட்டுக்கொடுக்கப்பட்டதற்கு மிஸ்ராதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.அவரை மறுபடி முன்மொழிந்த கொலீஜியம் வேறு இரண்டு மூத்த நீதிபதிகளின் பெயர்களையும் சேர்த்து ஒரு பட்டியலை அளித்தது.அதற்கான தேவை என்ன வந்தது என்ற கேள்விகள் எழுந்தன.ஏனென்றால், அந்த மூன்று பேரில் இளையவர் ஜோசப்தான் என்று பிரச்சினை கிளப்புவதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்திக்கொடுத்தது.
அது ஒரு நெறிமீறல் என்றால், ஜனவரி 10ல் நடந்தது அதைவிடவும் கடுமையானது. கோகோய் தலைமையிலான புதிய கொலீஜியம் உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரண்டு நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப, டிசம்பரில் முந்தைய கொலீஜியத்தால் அளிக்கப்பட்டிருந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தது. தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜாக் ஆகியோர் பெயர்கள் அப்போது பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
புதிய கொலீஜியம் ஜனவரி 10இல் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் இவ்வாறு கூறியது:
“2018 டிசம்பர் 12இல் அன்றைய கொலீஜியம் சில முடிவுகளை எடுத்தது. ஆயினும் உச்ச நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறை குறுக்கிட்டதால் அந்த முடிவுகள் மீது தேவைப்பட்ட கலந்தாய்வையோ மேற்கொள்ளவோ நிறைவு செய்யவோ முடியவில்லை.நீதிமன்றம் திறக்கப்பட்டபோது கொலீஜிய உறுப்பினர்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. 2019 ஜனவரி 5, 6 தேதிகளில் நடந்த விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இவ்விஷயத்தைப் புதிதாக அணுகுவதும், கூடுதலாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் முன்மொழிவுகளைப் பரிசீலிப்பதும் கூடப் பொருத்தமாக இருக்கும் என்று புதிதாக அமைக்கப்பட்ட கொலீஜியம் கருதுகிறது.”
இதன் அர்த்தம் என்னவெனில், மேனன் நந்த்ராஜாக் ஆகியோருக்குப் பதிலாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, தில்லி உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியான சஞ்ஜீவ் கன்னா ஆகியோரை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுவர கொலீஜியம் முடிவுசெய்துவிட்டது என்பதுதான். டிசம்பரில் எடுக்கப்பட்ட முடிவு ஒருபோதும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
கொலீஜியத்தின் செயல்பாடு எந்த அளவுக்கு மர்மமாக இருக்கிறது என்றால், டிசம்பர் முடிவை மாற்றுவதற்கு இட்டுச் சென்ற “கூடுதல் தகவல்கள்” என்ன என்பது பற்றிப் பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது. அந்தத் தகவல்களில், இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உயர்த்துகிற முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்த அளவுக்கு அந்தக் கூடுதல் தகவல்களில் அப்படியென்ன அதிமுக்கிய விஷயங்கள் இருக்கின்றன? டிசம்பர் முடிவை எடுத்த கொலீஜியத்தில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் தற்போதைய கொலீஜியத்தில் இருக்கிறார்கள்.அவர்கள் தங்களது முந்தைய முடிவை ஒரே மாதத்தில் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? இன்னொரு பிரச்சினை என்னவெனில், கொலீஜியம் தனது தேர்வை முடிவு செய்வதற்கு முன்பாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி மூப்பு, அவர்களது தகுதி, பதவி உயர்வுக்க்கான அவர்களது பொருத்தப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாக ஜனவரி 10 தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியே பார்த்தாலும், கன்னாவைத் தேர்வு செய்ததில் குறைந்தது 30 நீதிபதிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2024இல் அவர் டி.ஒய்.சந்திரசூட் ஓய்வுபெற்றதும் தலைமை நீதிபதியாக முடியும். வேடிக்கை என்னவென்றால், கன்னாவின் பெரியப்பா அல்லது சித்தப்பாவான நீதிபதி எச்.ஆர். கன்னா, 1976இல் இந்திரா காந்தி அரசாங்கத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்திலிருந்து பதவி விலகினார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்குக் கடிதம் அனுப்பியுள்ள தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கைலாஷ் கம்பீர் குறிப்பிட்டிருப்பதைப் போல, கொலீஜியம் தனது முடிவை மாற்றிக்கொண்டது ஏன் என்பது பற்றிய தகவல்கள் இல்லாதநிலையில், பின்னுக்குத் தள்ளப்பட்ட 30 நீதிபதிகளின் மரியாதை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த நவம்பரில் கொலீஜியத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்தான் நீதிபதி தினேஷ் மஹேஸ்வரி.அவரை இப்போது மேலே கொண்டுவருவது ஏன் என்பதற்கும் கொலீஜியம் எந்தக் காரணமும் கூறவில்லை.
இந்த முடிவுகள் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளேயே பிளவை ஏற்படுத்தியுள்ளன. நீதிபதி சஞ்ஜய் கிஷன் காவுல், ஏற்கெனவே தலைமை நீதிபதி கோகோய்க்குக் கடிதம் எழுதி, தற்போதைய பதவி உயர்வு நடவடிக்கையில் பணிமூப்புக் கோட்பாடு பின்பற்றப்படாதது பற்றிக் கவலை தெரிவித்துள்ளார்.
கொலீஜியத்தின் பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் வேகவேகமாக ஏற்றுக்கொண்டது சுவாரசியமானது.சென்ற ஆண்டு நீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வுக்கு, பணிமூப்பை காரணம் காட்டித்தான் அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டது.இப்போது நீதிபதி கன்னா உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவதைப் பிரச்சினையாக்கவில்லை.கொலீஜியம் பரிந்துரைத்த ஆறே நாட்களில் கன்னா, மஹேஸ்வரி இருவரது நியமனதையும் உறுதிப்படுத்தினார் குடியரசுத் தலைவர்.
அயோத்தி வழக்கிற்குப் புதிய அமர்வு
இந்த மாதம் கோகோய் எடுத்த மற்றொரு சர்ச்சைக்குரிய முடிவு, அயோத்தி வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் அமர்வுக்குழுவை மாற்றியமைத்ததாகும்.ஜனவரி 8ல் உச்ச நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த வழக்கை இனி ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கையாளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.அந்த அமர்வில் கோகோயுடன் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்தே, என்.பி.ரமணா, யுயு லலித், டீஒய் சந்திரசூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே தலைமை நீதிபதிகளாவதற்கான வரிசையில் நிற்கிறவர்கள்.
கடந்த செப்டம்பர் வரையில் இந்த வழக்கை தீபக் மிஸ்ரா, அசோக் பூஷன், அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது.அந்த அமர்வு, 1994ம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை விரிவான அமர்வுக்கு அனுப்ப மறுத்தது. அதன் மூலம் அயோத்தியில் சம்பந்தப்பட்ட இட உரிமை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் இறுதி விசாரணைக்காக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் மறுபடியும் வைக்கப்படும் அந்த அமர்வுக்குழு குறிப்புக் காட்டியது.
அமர்வுக்குழு நீதிபதிகள் மாற்றப்பட்டதற்கு விளக்கமளித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியது:
“2013இன் உச்ச நீதிமன்ற விதிகள் விதி 1ன் வரிசை 6 அமர்வுக்குழு நீதிபதிகளின் எண்ணிக்கை பற்றிக் கூறுகிறது.அதன்படி, விரிவாக வரையறுக்கவியலாத பல்வேறு பொருத்தமான காரணிகளையும் சூழல்களையும் கருத்தில்கொண்டு, எப்போதுமே தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம்.தலைமை நீதிபதி முறையானது என்று கருதுகிற எண்ணிக்கையில் நீதிபதிகளைக் கொண்டதாக அமர்வுக் குழுக்களை தலைமை நீதிபதி அமைக்கலாம்.இவ்வாறுதான் தற்போதைய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் மூன்று நீதிபதிகள் குழு 2018 செப்டம்பர் 27 மேற்கண்ட தீர்ப்பிலும் ஆணையிலும் வரையறுத்துள்ளதற்கு முரணாக அமையவில்லை.”
நீதிபதிகளுக்குப் பொறுப்பளிக்கும் தனது அதிகாரத்தை கோகோய் பயன்படுத்தி ஒரு விரிவான அமர்வுக் குழுவை கோகோய் அமைத்திருக்கிறார்.அதற்கான தேவை என்ன வந்தது என்பது தொடர்பாக அரசமைப்பு சாசன விளக்கம் எதுவும் இல்லை.தற்போதை அமர்வுக்குழுவில் முந்தைய குழுவில் இருந்த பூஷன், நஸீர் ஆகிய இரண்டு நீதிபதிகள் இடம்பெறவில்லை. நீதிபதி மிஸ்ரா பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
ஜனவரி 10 நடைமுறைகளின்போது, நீதிபதி லலித் முன்பு 1997இல் அயோத்தி சர்ச்சை வழக்கில் ஒரு வழக்குரைஞராக வாதாடினார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.அதைத் தொடர்ந்து அவர் அமர்வுக்குழுவிலிருந்து விலகினார். எதிர்காலத்தில் தலைமை நீதிபதிகளாகக் கூடியவர்களைக் கொண்டதாக இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கிறபோது, ஜனவரி 29இல் இந்த வழக்கு விசாரணை வருகிறபோது, நீதிபதி லலித்தின் இடத்தில் நீதிபதி கன்னா இருப்பார் என்பதற்கான வாய்ப்பு வலுவாக இருக்கிறது.
வரலாறு திரும்புகிறது
சென்ற ஆண்டின் செய்தியாளர் சந்திப்பில், தலைமை நீதிபதி மிஸ்ராவின் செயல்பாடுகள் பற்றிக் கேள்வி எழுப்பினார் கோகோய்.மிஸ்ராவின் அதே சில தவறுகளைத்தானே இவரும் செய்கிறார் என்ற விவாதம் வரக்கூடும்தான்.முதலாவதாக, அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதி அமர்வு அமைக்கப்பட வேண்டிய தேவையே ஏற்படவில்லை.1994ல் நீதிபதி இஸ்மாயில் ஃபரூக்கி அளித்த தீர்ப்பில், இஸ்லாம் மார்க்கத்திற்கு மசூதிகள் முக்கியத்தேவையல்ல என்று கூறினார்.அதை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இல்லை என்று சென்ற செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. அதன் பின், விரிவான அமர்வு தேவை என்று யாரும் கோரவில்லை.
நீதிபதிகளுக்குப் பொறுப்பளிக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருக்கிறது என்ற நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தியதன் மூலம் கோகோய் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறார். 2017 நவம்பரில், வேறொரு அமர்வுக்குழுவின் ஆணையைச் செல்லாததாக்குவதற்காக ஐந்து நீதிபதிகள் கொண்டதொரு அமர்வுக்குழுவை மிஸ்ரா அவசரமாக அமைத்தார்.அப்போது அவர் தலைமை நீதிபதியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கும் இந்த வழக்கும் ஒன்றல்ல என்றாலும், தலைமை நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி அமர்வுக்குழுக்களை மாற்றியமைக்கிறார்கள் என்பது ஒரு பிரச்சினையாகத் தொடர்கிறது. அயோத்தி வழக்கில் முந்தைய மூன்று நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் நஸீர், தற்போதைய விரிவான ஐந்து நீதிபதிகள் குழுவில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கும் காரணம் சொல்லப்படவில்லை. மிஸ்ரா பதவிக்காலத்தின்போது எழுந்த சர்ச்சைகளின் பின்னணியில் சிந்திக்கிறபோது, அமர்வுக் குழுக்களை அமைப்பது தலைமை நீதிபதிகளின் தனியதிகாரம் என்ற பதில் திருப்திகரமானதாக இல்லை.
நீதிபதி கன்னாவை உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்துவதற்காக 30 நீதிபதிகள் பின்னுக்குத் தள்ளிய முடிவைப் பொறுத்தமட்டில், கொலீஜிய செயல்பாட்டின் மர்மம் நீடிக்கச் செய்திருக்கிறார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
ஸ்ருதிசாகர் யமுனன்
நன்றி: ஸ்க்ரால்.இன் (https://scroll.in/article/909825/ranjan-gogoi-objected-to-how-dipak-misra-ran-supreme-court-as-cji-now-he-is-acting-similarly?fbclid=IwAR3VYGJMUsaGPMDqtNDMjhMuD_yEYkuRGDkQKYVeb_rFrlDI-6mfz1l_0C0)
தமிழில்: அ.குமரேசன்
புனிதம் என்று எதுவும் இல்லை. மக்களுக்கு மேலான பதவிகள் என்றோ அதிகாரம் என்றோ ஏதுமில்லை.. புனித தன்மையை உடைப்பதன் வழியே இந்தியா நீதித்துறை இன் விடுதலை சாத்தியம்
Punitham endru eduvum illai …makaluku melana pathavigal endro athikaram endro ethuvum illai…punitha thanmaiyai udaipathin vazhiye india needi thuraiyin viduthalai saathiyam….the hindu tamil news …samas article writter