கடந்த வெள்ளியன்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், வரும் மக்களவைத் தேர்தல்களில் இவ்வளவு பெரிய செலவானது பெரும்பாலும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2019 மக்களவைத் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற்றுத் தரக்கூடிய பல நடவடிக்கைகளை அறிவிக்கலாம். இந்த நடவடிக்கைகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகலாம் எனத் தெரிகிறது.
இந்த அறிவிப்புகள் தேர்தலுக்கு முன்னதாக அரசின் வெற்றி வாய்ப்புகளை ஊக்குவிக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான செலவானது நாட்டின் நிதி அம்சங்களை எதிர்மறையாக பாதிக்கும் என ராய்ட்டர் செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதனால் ஏற்படும் வருமான இழப்பை அல்லது மிகையான செலவழிப்பை அடுத்து அமையவிருக்கும் அரசுதான் தாங்க வேண்டியிருக்கும் என்பதுதான் இதில் மோசமான அம்சம். பற்றாக்குறை பட்ஜெட்டைக் குறைப்பதற்காகப் போடப்படும் அரசின் திட்டங்களை இந்த 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கும் திட்டமானது தாமதப்படுத்தும் எனவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்புகள் பெரும்பாலும் விவசாயிகளைக் குறிவைத்து வெளியிடப்பட உள்ளன. அவை பிப்ரவரி 1ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் ராய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை எனினும், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் போடப்படுவது, அவர்களுக்கு வட்டி இல்லாக் கடன்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளும் இந்தத் திட்டங்களில் உள்ளடங்கும் எனத் தெரிகிறது.
வரிச் சலுகைகள், வேலைகளில் இட ஒதுக்கீடுகள் மற்றும் உள்ளுர் வணிகத்திற்குச் சாதகமான கொள்கைகள் ஆகியன ஏற்கனவே வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுவிட்டன. தேர்தல் ஆணையம் இறுதி செய்ய உள்ள தேர்தல் தேதிகளுக்கு முன்னதாக அந்த அறிவிப்புகள் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகலாம். அதற்குப் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதற்கு முன்னதாகப் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக, நிதி அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவரின் கருத்தைக் கேட்டு ராய்ட்டர் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் கிடைக்கவில்லை.
பாஜகவின் பொருளாதார விவகாரங்களின் பிரதிநிதி கோபால் கிருஷ்ணா அகர்வால் ராய்ட்டரிடம் கூறுகையில், பணவீக்கமானது தாழ்வான நிலையில் தொடர்ந்து இருப்பதால் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில், விரிவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையைக் கட்சி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவைப் பொறுத்தவரை நடப்பு ஏப்ரல் – மார்ச் நிதி ஆண்டில், நிதி அமைச்சகத்தின் திட்டமான நிதிப் பற்றாக்குறையை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.3 விழுக்காடு வரை வைத்திருக்க வேண்டும் என்பதை அதிமுக்கியமானதாகக் கருதவில்லை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.3 விழுக்காடு நிதிப் பற்றாக்குறை என்பது பங்கு பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை உயர்த்தி, ரூபாய் மதிப்பைப் பாதித்துள்ளது.
தற்போது, விவசாயிகளின் துயர் தீர்ப்பதுதான் மிக முக்கியமானது என்று அகர்வால் ராய்ட்டரிடம் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “நமக்கு விரிவாக்கக் கொள்கை தேவையாக உள்ளது, வளர்ச்சியை நாம் விரட்டிச் செல்கிறோம். நிதிப் பற்றாக்குறைக்கான அளவுகோல்களைத் துரத்துவதில்லை” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையானது 5.9 லட்சம் கோடியாக இருந்தது (உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.5 விழுக்காடு).
பீதியில் உறைந்த நிலை
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பல சிறிய வணிகங்களுக்கு வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதையும் தனி நபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதையும் மோடி அரசு பரிசீலித்துவருகிறது.
அனைத்து மதங்களையும் சேர்ந்த ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அறிவிப்பை அரசு அண்மையில் வெளியிட்டது. இதற்காகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கூடுதல் இடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காகப் பெருமளவில் செலவுசெய்யத் திட்டமிட்டுவருகிறது.
பீதியினால் பாதிக்கப்பட்ட நிர்வாகம் என்று காங்கிரஸ் இதை விமர்சித்துள்ளது. தேர்தலில் வரவிருக்கும் தோல்வியை எண்ணி அஞ்சி அரசு வட்டியில்லாக் கடன்களையும் வருமானம் ஈட்டுவதற்கான ஆதரவுத் திட்டங்களையும் அளித்துச் சமாளிக்கப் பார்க்கிறது என்று கூறுகிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப். மற்ற எல்லாத் திட்டங்களைப் போலவே இதுவும் பீதியடைந்த மோடி அரசினால் அவசர கதியில் தயாரிக்கப்பட்ட திட்டமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
2017இல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பினாலும் குழப்பமான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியினாலும் கிராமப்புறங்கள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான விவசாய நெருக்கடியில் தவித்துவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநில வங்கிகளினால் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் வட்டியில்லாக் கடன்கள் அரசினால் இழப்பீடு செய்யப்படும். அதற்கு ஓராண்டுக்கு 12,000 கோடி ரூபாய் ஆகும் என அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத அரசு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.
ஆனால், இது மட்டும் போதுமானதில்லை என அரசு வட்டாரங்களில் ஒருவர் தெரிவிக்கிறார், அவர் கூறுகையில், பல்வேறு திட்டங்களுக்கு எங்களுக்கு இன்னும் 40,000 கோடி ரூபாய் தேவையாக உள்ளது எனத் தெரிவித்தார்.
தனி நபர் வரி மற்றும் வணிக வரிகளில் சலுகைகள் அளிப்பதால் 25,000 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். சிமெண்ட்டுக்கு 18 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடு வரை ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும் திட்டமானது ஆண்டுக்கு 13,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒரு ’ஹெக்டேருக்கு 2000 – 4000 வரை அளிப்பது இன்னொரு திட்டம். அதற்கு அதிக செலவானாலும் சிறப்பான முறையில் செயல்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்த அந்த வட்டாரங்கள், அது அமல்படுத்தப்பட்டால் மற்ற திட்டங்களான வட்டியில்லாக் கடன்கள் போன்றவற்றை அரசு அமல்படுத்த வேண்டியதில்லை என்று கூறின.
ராய்ட்டர் நிறுவனம் இம்மாதத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட செய்தியில், இந்திய ரிசர்வ் வங்கியானது அரசுக்கு ஈவுத் தொகையாக 40,000 கோடி ரூபாயை வரும் மார்ச்சில் அளிக்க உள்ளது எனத் தெரிவித்திருந்தது, ஆனால் அதனால் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியாது.
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்யும் இலக்கானது நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 விழுக்காடு வரை சரியக்கூடும் என மூடி முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் கூறியிருக்கிறது. ஜிஎஸ்டி வசூல்கள் குறைந்ததாலும், குறைவான சுங்க வரியினாலும், இலக்கிற்கும் குறைவான அரசு சொத்துகள் விற்பனையானதாலும் வருவாய் குறைந்துள்ளது எனத் தெரிவித்திருந்தது.
பல இந்திய மாநிலங்கள் தங்களது நிதி ஒழுங்குமுறையை, குறிப்பாக தேர்தல் சமயங்களில், தவற விட்டுவிட்டன எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மத்திய மற்றும் மாநில அரசின் நிதிப் பற்றாக்குறையானது கடந்த நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 விழுக்காடாக இருந்தது என மூடி நிறுவனமானது தெரிவிக்கிறது.
வருமானங்களை மாற்றுவதும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதும் அல்லது மற்ற மான்யங்களை அளிப்பதும் அரசின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என மூடி நிறுவனத்தின் துணைத் தலைவர் வில்லியம் ஃபோஸ்டர் தெரிவிக்கிறார். வரும் 2020 மார்ச் இறுதிக்குள் நிதிப் பற்றாக்குறையை 3.1 விழுக்காடாகவும் 2021 மார்ச் இறுதிக்குள் 3 விழுக்காடாகவும் குறைக்க அரசு உறுதுபூண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இலக்குகள் தற்போது தாமதமாகலாம் என அந்தச் செய்தி வட்டாரங்கள் ராய்ட்டரிடம் தெரிவித்துள்ளன.
இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து 71 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் நாட்டை ஆண்டிருக்கிறது, காங்கிரஸ் கட்சி, மானியங்களுக்காகவும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்களுக்காகவும் மலிவான உணவு விநியோகத் திட்டத்திற்காகவும் பெயர் பெற்றது.
கடந்த ஆண்டில், நாட்டின் முக்கிய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் பாஜகவைத் தோற்கடித்த பிறகு காங்கிரஸ் அந்த மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடிகளை அறிவித்தது. மக்களவைத் தேர்தலில் வென்று மத்தியில் அதிகாரத்திற்கு வந்தால் அதே போன்று நாடு முழுவதும் செய்வதாக வாக்களித்தது. அத்துடன், இந்த மாநிலங்களில் இலவச வீடு கட்டுவது, ஏழைகளுக்கு இலவச உணவுப் படிகள் அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அறிவித்தது.
அரசு வட்டாரங்களைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் மத்திய அரசின் திட்டமான மிகையாக செலவழிப்பதனால் ஏற்படும் பெரிய நிதி பாதிப்பானது அடுத்த நிதி ஆண்டில் மதிப்பிடப்படும் என்றார். இதன் பொருள், வரும் 2021ற்குள் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்யும் குறைந்த கால இலக்கானது தவறவிடப்படும் என்பதாகும். ஆனால், நிதி ஒழுங்கானது கடந்த 5 ஆண்டுகளில் மிகச் சிறப்பாகவே உள்ளது என்பதால் அப்படித் தவறவிடுவது குறித்து அரசு தேவையற்ற கவலை கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான ரிசர்வ் வங்கிக் வங்கியின் குழுவானது அவசரத் தேவைக்கான இருப்பைக் குறைத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கும். இதன் விளைவாக, அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2-3 ஆண்டுகளில் பல டிரில்லியன்கள் அரசின் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். எனினும், தனது குழுவின் பரிந்துரைகள் குறித்துக் கருத்து தெரிவிக்க ஜலான் மறுத்துவிட்டார்.
நடுத்தர கால நிதி இலக்குகளைத் தாமதப்படுத்தலாம் என்று அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார். ஏனெனில் நாம் அந்த இலக்கை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் அடைய முடியும் என்ற நம்பகத்தன்மையை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, சந்தைகள் இதை மோசமாகப் பார்க்கும் என நான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: இந்தியா டுடே
https://www.indiatoday.in/elections/story/rs-1-00-000-00-00-000-what-modi-govt-may-spend-for-2019-lok-sabha-elections-1434025-2019-01-18