இப்படி நடக்கும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இருந்த நாட்டின் மீது 124ஆவது அரசமைப்பு சாசன சட்டத் திருத்த முன்வரைவைத் தூக்கிப்போட்ட மத்திய அரசாங்கம், இரண்டே நாட்களில் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிட்டத்தட்ட ஏகமனதாக, நிறைவேற்றச் செய்திருக்கிறது. ஓரிரு நாட்களில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட, அது அரசமைப்பு சாசனத்தில் ஒரு சட்டமாகிவிட்டது.
“முன்னேறிய சாதிகளுக்கான 10% ஒதுக்கீடு” (இப்படித்தான் அரசாங்கமும் ஊடகங்களும் ஒரே மாதிரியாக இந்தச் சட்டத்தை வர்ணிக்கின்றன) நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் 2019 ஜூன் மாதம் தொடங்குகிற கல்வியாண்டிலிருந்தே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அறிவித்தார்.
அவசரநிலை ஆட்சிக்குப் பிறகு இந்த நாடு சந்தித்த மிக மோசமான நயவஞ்சகங்களில் ஒன்றாக இந்தச் சட்டம் இப்படித்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
தேர்தல் கணக்குகளோடுதான் அரசாங்கம் இதைக் கொண்டுவந்தது என்பது அப்பட்டமாகத் தெரிகிற அதே நேரத்தில், இதில் உள்ள சூழ்ச்சியை நன்றாகத் தெரிந்துகொண்ட நிலையிலும்கூட, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், தங்கள் மீது ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அதற்கு ஒத்துப்போனதைக் கண்டோம். பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கிறவர்களின் ஒரே நம்பிக்கை, ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ள இந்தச் சட்டத் திருத்தத்தை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிடும் என்பதுதான்.
சட்டத் திருத்தம் செய்வதென்ன?
அரசமைப்பு சாசன (124ஆவது திருத்தம்) சட்டம், 2019 தற்போது 15, 16 ஆகிய சட்ட உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள “வர்க்கங்கள் அல்லாத” அதாவது அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள் அல்லாத ”குடிமக்களில் பொருளாதாரரீதியாக நலிவுற்ற பிரிவுகள்” என்பதான ஒரு வகைப்பாடு பற்றிப் பேசுகிறது.
இந்தச் சட்டத்தின் துணையோடு இப்போது அரசு இத்தகைய பிரிவினருக்காக எந்தவொரு சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதற்கு வழி கிடைத்திருக்கிறது. குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இவர்களைச் சேர்ப்பது தொடர்பாக எந்த ஏற்பாட்டையும் செய்ய முடியும். தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுடன் கூடுதலாக, எந்தவொரு துறையிலும் அதிகபட்சம் 10% என்ற வரம்புக்கு உட்பட்டுப் பணி நியமனங்களில் அல்லது பணியிடங்களில் இவர்களுக்குச் சாதகமாக இட ஒதுக்கீடு செய்ய முடியும்.
“பொருளாதாரத்தில் நலிந்த பிரிவுகள்” என்ற சொற்றொடருக்கு, குடும்ப வருமானம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலைமையைக் காட்டக்கூடிய இதர அம்சங்கள் பற்றி அவ்வப்போது அரசால் அறிவிக்கப்படுவதற்கேற்ப என்று சட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 15, 16 ஆகிய சட்ட விதிகளின் கீழ், இட ஒதுக்கீடுகள் வேலைவாய்ப்புகளில் அல்லது கல்வி நிறுவனங்களில், இன்னமும் பழைய காலனியாதிக்கக் கால மொழியில் ‘வர்க்கங்கள்’ என்றே குறிப்பிடப்படுகிற சமூகங்களுக்குத்தான் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது, வரலாற்றில் நெடுங்காலமாகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதன் காரணமாக, சமூக அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அனைத்து சாதிக் குழுக்களையும் சேர்ந்தவர்களுக்குக் கூட்டாகவோ குழுவாகவோ உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளே அவை.
இந்த “வர்க்கங்களின்” பட்டியலில் (அல்லது அட்டவணையில்) புதிய பெயர்கள் சேர்க்கப்படும்போது, உதாரணமாக 1989க்குப் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது போல, பொதுவாக அரசாங்கம் என்ன நடைமுறையைக் கடைப்பிடிக்கும் என்றால், ஒரு சுயேச்சையான வல்லுநர் குழுவை அல்லது முகமையை அமைத்து, ஆய்வு மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளும். அந்த ஆய்வில் கண்டறியப்படுகிற நிலைமைகளைச் சார்ந்தே அரசாங்கம் முடிவெடுக்கும். அந்தக் குழு அல்லது முகமை தனது ஆய்வில் சம்பந்தப்படுகிற பிரிவுகள் அனுபவிக்கும் சமூக / பண்பாட்டுப் பின்னடைவு நிலைமைகள் பற்றிய விசாரணையை நடத்தி வாழ்வியல் சார்ந்த உண்மை நிலவரங்களை நிறுவும். அந்த நிலவரங்கள் சம்பந்தப்பட்ட அந்தச் சமூகப் பிரிவின் கூட்டு அனுபவமாக இருக்கும்.
குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்களின் நிலைமைகள் தனிப்பட்ட முறையில் மாறுபடலாம். ஆனால் அந்தச் சமூகத்திற்கு உரியதாக அறிவிக்கப்படும் இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற அந்த மக்கள் அனைவரும் தகுதிபெற்றவர்களாவர். இது வரையில் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மைய நியாயமாக இருந்து வந்திருப்பது இதுதான். இந்தக் கொள்கையை நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளின் மூலம் உறுதிப்படுத்தி வந்துள்ளன.பொருளாதாரப் பின்னடைவு நிலைமை போன்ற மற்ற மற்ற காரணங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை நீதிமன்றங்கள் அனுமதித்ததில்லை. இந்திரா சாவ்னே எதிர் இந்திய ஒன்றியம் (1992) என்ற வழக்கின் தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். முற்றிலும் பொருளாதார அடிப்படையைச் சார்ந்து எந்த வகைப்பாட்டையும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் அறிவித்தது.
தற்போதைய சட்டத் திருத்தம் பொருளாதாரப் பின்னடைவு என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வதற்கான அரசமைப்பு சாசனபூர்வ அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிற ஏற்பாடாகும். இதைக் குறைந்தது இரண்டு வழிகளில் செய்யக்கூடும்.
முதலில், தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளுக்குள் வராத குறிப்பான சாதிப் பிரிவுகளை, பொருளாதாரப் பின்னடைவைக் காட்டும் சில வகைப்பாடுகளின் அடிப்படையில் புதிய 10% இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதிக்குள் கொண்டுவர முடியும். சட்ட முன்வரைவு மீது நடந்த விவாதங்கள் இந்த சாத்தியப்பாட்டை முன்னுக்குக் கொண்டுவரவில்லை என்றாலும்கூட, குறிப்பிட்ட பிரிவுகளை இச்சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்கள் என்று அறிவிப்பதைத் தடுக்கக்கூடிய விதி எதுவும் சட்டத்தில் இல்லை. உதாரணமாக, பட்டிடார், ஜாட், மராத்தா ஆகிய “பிரிவுகள்” இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்களாக அறிவிக்க முடியும்.
இந்தச் சட்டத்தின் அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேற்கிலும் வடக்கிலும் உள்ள பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் நடத்திய தீவிரமான போராட்டங்கள் அத்தகையதொரு பின்னணிதான். ஆயினும், பொருளாதாரப் பின்னடைவைக் காட்டும் கணக்குகள் ஒட்டுமொத்த சமூகத்திற்கே பொருந்துவதாக இருக்க வேண்டும். வேறு சொற்களில் சொல்வதானால், குறிப்பிட்ட சமூகம் மொத்தத்தையும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக வகைப்படுத்துவதற்கு, பொருளாதாரப் பின்னடைவுக்கான சில சராசரிக் கணக்குகளைப் பயன்படுத்தியாக வேண்டும்.
கேள்வி என்னவென்றால் – குறிப்பிட்ட ஒரு சாதிக்கு உள்ளே பெரிய அளவில் பொருளாதார வேறுபாடுகள் இருக்கும் என்றால், ஆனால் அந்தச் சாதியினர் சமூக அடிப்படையில் பாகுபடுத்தப்பட்ட வரலாறோ, ஒதுக்கப்பட்ட வரலாறோ இல்லை என்கிறபோது அந்தச் சாதியினர் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்கள் என்று அறிவிப்பது நம்பகமானதுதானா? அந்தச் சாதிப் பிரிவின் ‘க்ரீமி லேயர்’ எனப்படுகிற பொருளாதார உயர்நிலையில் இருப்பவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம் – இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான மத்திய விதிகளில் இது கடைப்பிடிக்கப்படுகிறது – இப்படிப்பட்ட தனிப்பட்ட முன்னேறிய சாதிகள் தங்களுடைய சமூகம் முழுவதற்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதை எப்படி நியாயப்படுத்துவது?
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், அதைத் தொடர்ந்து வந்த அறிவிப்புகள், அதிகாரபூர்வ வட்டத்திலிருநது கசிந்து வந்த தகவல்கள் ஆகியவற்றை அலசுகிறபோது, அரசாங்கம் எந்தத் திசையில் செல்லும் என்று, குறைந்தது தற்போதைக்கு எந்தத் திசையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அந்தத் திசையில் செல்லப்போவதில்லை என்று தெரியவருகிறது. மாறாக, தற்போது இட ஒதுக்கீட்டிற்கு உரிய ‘வர்க்கத்தினர்’ என்பதற்குள் வராத “பொது” வகைப்பாட்டைச் சேர்ந்த குடிமக்கள் அனைவருக்குமே, பொருளாதார அடிப்படையிலான மேல் நிலை என்பது விலக்கிக்கொள்ளப்படும். அந்த இடத்தில் “பொருளாதாரரீதியில் நலிந்த பிரிவுகள்” என்ற சொற்றொடர் சேர்க்கப்படும்.
இந்தச் சொற்றொடர், அரசமைப்பு சாசன வழிகாட்டும் கோட்பாடுகள் பிரிவில் உள்ள 46ஆவது சட்ட உரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த 46ஆவது சட்ட உரை, “மக்களின் நலிவுற்ற பிரிவுகளது கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்புக் கவனத்துடன்” முன்னேற்றுவது பற்றிப் பேசுகிறது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தமோ, “குடிமக்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள்” என்று அதை மாற்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல.
அது மட்டுமல்ல, அட்டவணை சாதிகள், அட்டவணை பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த ஒவ்வொரு சாதியும் குறிப்பாகப் பெயர் குறிப்பிட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கிற எந்தப் பிரிவையும் பெயர் குறிப்பிடவும் முடியாது, பட்டியலில் சேர்க்கவும் முடியாது. ஏனென்றால், மேற்படி சாதிப் பிரிவுகள் போல அல்லாமல், பொருளாதாரத்தில் நலிந்த “பிரிவு” எதற்குமே வரலாற்றுபூர்வமாக நிறுவப்பட்ட சமூக அடையாளம் கிடையாது.
ஆகவே, சமூகரீதியாகப் பாகுபடுத்தப்பட்ட “வர்க்கங்கள்”, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய “பிரிவுகள்” ஆகிய இரு சாராருக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சி தவறானது, போலித்தனமானது. ஏனென்றால் இரு சாராரும் இரண்டு வேறுபட்ட உயிரிகள். இது எப்படிப்போனாலும், சட்டத்தை ஆதரிக்கிறவர்கள், நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர்கள் உட்பட, குடிமக்களின் பொதுப் பிரிவினரிடையே வசதியானவர்களை விலக்கிவைப்பதற்கான பொருளாதார வரம்பாக 8 லட்சம் ரூபாய் குடும்ப வருமானம், 5 ஏக்கருக்கு மேல் நிலவுடைமை என்பன போன்ற தகுதி நிலைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கான நியாயமாக, பிற்படுத்தப்பட்ட சமூகங்ளைச் சேர்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டில், மத்திய அரசாங்க விதிகளின்படி, அந்த இட ஒதுக்கீட்டிற்கு உரிமையற்றவர்களான ‘க்ரீமி லேயர்’ நிலையில் இருப்பவர்களைக் கண்டறிய இந்த வரம்புதான் பயன்படுத்தப்படுகிறது, அதே கணக்கீடு பொதுப் பிரிவினருக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு “வர்க்கங்களும்” ஒப்பிட இயலாதவை. பிற்படுத்தப்பட்ட ஒரு சாதிப் பிரிவு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டிற்கு உரியது. அதில் வசதியுள்ள தனி மனிதர்கள் அந்தக் கூட்டு உரிமையிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி அல்லாத மற்ற பிரிவுகளில் எந்தவொரு சாதியும் ஒட்டுமொத்தத்தில் இட ஒதுக்கீட்டிற்கு உரியதாக அறிவிக்கப்படவில்லை. ஆகவே அவர்களில் ‘க்ரீமி லேயர்’ நிலையில் இருப்பவர்களை அடையாளப்படுத்துவது அர்த்தமற்றதாகிறது.
முன்னனுபவமாகக் கல்வி உரிமைச் சட்டம்
2009ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்ட ஏற்பாடுகளின் மூலமாக “பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள்” என்ற வகைப்பாடு ஏற்கெனவே சட்டத்தில் நிறுவப்பட்டுவிட்டது என்ற வாதம் முன்வைக்கப்படலாம். அந்தச் சட்டத்தின்படி, அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இரண்டிலுமே, அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களில் குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், கூர்ந்து ஆராய்ந்தால், கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்படும் “நலிவுற்ற பிரிவினர் அல்லது பின்தங்கிய குழு” என்பது, இந்த 124ஆவது சட்டத் திருத்தத்தில் கூறப்படும் “பொருளாதாரரீதியாக நலிவுற்ற பிரிவுகள்” என்பதிலிருந்து மிகவும் மாறுபட்டது என்பது புரியவரும்.
முந்தைய வகைப்பாட்டில் “பின்தங்கிய குழு” என்று “சமூகம், பண்பாடு, பொருளாதாரம், புவியமைப்பு, மொழி, பாலினம் அல்லது உரிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் இத்தகைய இதர காரணங்களால் பின்தங்கிய நிலைமையில் உள்ள அட்டவணை சாதி, அட்டவணை பழங்குடி, சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்பட்ட வர்க்கம் அல்லது குழு” என்று வரையறுக்கப்படுகிறது. “நலிவுற்ற பிரிவு” என்று “உரிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிற குறைந்தபட்ச வருமான வரம்புக்குக் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலரின் குழந்தை” என்று வரையறுக்கப்படுகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தில் “நலிவுற்ற பிரிவு” என்பது, வறுமை நிலையைக் காட்டுகிற ஒரு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே இருக்கக்கூடிய, சாதி அல்லது வேறு சமூக அடையாளம் பற்றி எதுவும் குறிப்பிடப்படாத, ஒரு தனிநபருக்கான பலனோடு தொடர்புடையது என்பது தெளிவு. இதற்காக ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பல்வேறு வருமான வரம்புகளை நிர்ணயித்துள்ளன.
ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் இவ்வாறு வருமான வரம்பை நிர்ணயித்ததற்கான நியாயம் இருக்கும் என்பது ஊகிக்கத்தக்கதே.இட ஒதுக்கீடு உரிமையை ஒட்டுமொத்தமாகப் பெறத் தகுதியுள்ள ஒரு சமூகத்திற்கு உள்ளேயே பொருளாதார மேல்நிலையில் இருப்பவர்களைக் கண்டறிவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் இந்தக் குடும்ப வருமான வரம்பு, ரூ.60,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தில்லியில் அது ஒரு லட்சம் ரூபாய்.தற்போதைய இட ஒதுக்கீட்டிற்கான வரம்பாகப் கூறப்படும் 8 லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு எங்குமே நிர்ணயிக்கப்படவில்லை.
கல்வி உரிமைச் சட்டத்தின் மீதான விவாதங்களில் ‘நலிவுற்ற பிரிவு’, ‘பின்தங்கிய குழு’ என்ற இரண்டு மாறுபட்ட வகைப்பாடுகளும் EWS (பொநபி -பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு) என்ற சுருக்கமான ஒற்றைச் சொல்லில் குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களில் இதே சொல் பயன்படுத்தப்படுகிறது.அவற்றில் EWS என்பதற்கான வரையறைகள் மாறுபடுகின்றன.
கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டமாக்கல்தான்.அது, தற்போதைய 124வது திருத்தம் போல, அரசமைப்பு சாசனத்தின் 15, 16 சட்ட உரைகளின் ஏற்பாடுகள் மேல் சவாரி செய்யவில்லை.அதன் பலனாக, ஒரே சட்டத்திற்குள் இருவேறு பயனாளிகளுக்குப் பொருந்துகிற வகையில், குழு உரிமை, தனி நபர் உரிமை ஆகிய இரண்டு மாறுபட்ட கொள்கைகளையும் இணைக்க முடிந்தது.அதனால், ஒரு கடுமையான சட்டக் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாகக் குற்றச்சாட்டு எழவில்லை.124வது சட்டத்திருத்தமோ அப்படிப்பட்ட குற்றச்சாட்டிற்கு இலக்காகிறது.
பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இந்தச் சட்டத்தின் பின்னால் உள்ள அரசியல் நோக்கம், 50% வரம்புக்கு மேல் இட ஒதுக்கீடு கொண்டுவருவதற்கு நீதிமன்றங்கள் போட்ட தடங்கல்களைத் தாண்டி, உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குகிற சட்டத்தை பாஜக கொண்டுவந்தது என்று காட்டிக்கொள்வதுதான் என்பது வெளிப்படை. அதற்கேற்ப, புதிய சட்டம் தற்போதைய எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளின் வரிசையில்தான் வருகிறது, ஆகவே 15, 16 சட்ட உரைகளில் இதுவும் சேர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டத்தின் உள்ளார்ந்த தெளிவின்மையும், அரசியல் வாதங்களின் ஏற்ற இறக்கங்களுமாகச் சேர்ந்து, பொதுப் பிரிவுகளிலிருந்து (உயர்சாதி இந்துக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை) வரக்கூடிய சில தனிநபர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை, தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இருப்பது போல, முன்னேறிய சாதிகளுக்கான குழு உரிமைதான் என்று பேசுவதற்கு இட்டுச் செல்லக்கூடும்.
ஏன் தனிநபர் உரிமைச் சட்டமாக்கக் கூடாது?
கல்வி உரிமைச் சட்டம் போலவே, பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீட்டை ஒரு தனி நபர் உரிமைச் சட்டமாக அடையாளப்படுத்தவில்லை? அதற்கு வழிசெய்யும் ஒரு விதியை, அரசமைப்பு சாசனத்தில் ஒரு பொருத்தமான இடத்தில் சேர்க்க முடியயும். அந்த விதியில், குடிமக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி அல்லாதவர்களான, பொருளாதாரத்தில் நலிவுற்ற தனி மனிதர்கள் வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதிலும் இட ஒதுக்கீடு பெறத் தகுதியுள்ளவர்களாவர் என்று அறிவிக்க முடியும்.
அவ்வாறு செய்த பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய தனிமனிதர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான அளவீடுகளை அறிவிக்க முடியும்.இட ஒதுக்கீட்டிற்கு உரிமை உள்ள சாதிகளில் ‘க்ரீமி லேயர்’ யார் யார் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லாமலே அந்த அளவீடுகளை அறிவிக்க முடியும்.ஏனென்றால் இந்த இட ஒதுக்கீட்டுப் பலன் கூட்டு உரிமையல்ல.
ஆயினும், அப்படியொரு வருமான வரம்பை வெளிப்படையாக நியாயப்படுத்துவதற்கு பொதுப்பிரிவினருக்கிடையே வறுமை நிலைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தேவை.அத்தகைய புள்ளிவிவரங்கள் எதுவும் பொதுத்தளத்தில் இல்லை.சில ஆண்டுகளுக்கு முன் சாதிகளின் சமூகப் பொருளாதாரம் பற்றிய ஒரு விரிவான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இன்னமும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.அந்த விவரங்கள் அரசியலாக மிகவும் நுட்பமானவையாக இருக்கக்கூடும். அத்தகைய புள்ளிவிவர ஆதாரங்கள் இல்லாத நிலையில், தான்தோன்றித்தனமாக ஒரு வருமான வரம்பை நிர்ணயிப்பது பெரும் சர்ச்சைகளைத்தான் ஏற்படுத்தக்கூடும்.ஏனென்றால், இப்போது இந்தப் பொருளாதார வரம்பைத் தாண்டியவர்களாக விலக்கப்படுகிறவர்கள், அந்த வரம்பை உயர்த்துவதற்கு வற்புறுத்தத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால், தனி நபர் இட ஒதுக்கீடு என்று அறிவிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கலென்றால், அது இந்தப் புதிய சட்டத்தை உயர்சாதியினர் அனைவருக்குமான கூட்டு ஆதாயம் என்று விளம்பரப்படுத்துவதற்கான அரசியல் வாய்ப்பு அடிபட்டுப்போய்விடும். ஓபிசி இட ஒதுக்கீடு கொண்டுவந்ததால் கடும் அதிருப்தியில் இருக்கிற உயர்சாதியினரைக் குளுமைப்படுத்துகிற ஒரு ஈடுகட்டும் நடவடிக்கையாக இது தெரிய வேண்டும்.ஆகவேதான், 15, 16 சட்ட உரைகளோடு இது சேர்க்கப்பட்டிருக்கிறது, ஓபிசி இட ஒதுக்கீட்டைப் போன்றதுதான் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு என்று பேசப்படுகிறது.
இதன் விளைவாக, பொதுப் பிரிவைச் சேர்ந்த 85% முதல் 90% வரையிலானவர்கள் “பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்” என்றும், அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு உரியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள அபத்தத்தை நாம் சந்திக்கிறோம். உலகில் கடும் வறுமைக்கும் சமூகக் கொடுமைக்கும் மிகப் பயங்கரமான சான்றுகளை இப்போதும் சந்தித்துக்கொண்டிருக்கிற ஒரு நாட்டில், வருமான வரி செலுத்துகிறவர்களையும், வளமான விவசாயிகளையும் வேலைவாய்ப்புகளிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு பெறத் தகுதியுள்ளவர்களாக அங்கீகரிப்பதில் நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கூச்சத்தின் அறிகுறிகூட வெளிப்படவில்லை.
இனி என்ன நடக்கும்?
மேற்குலக ஜனநாயக நாடுகளில் சுதந்திரமான அரசமைப்பு சாசனம் தொடர்பான விவாதங்களில் தனிநபர் உரிமை, குழு உரிமை இரண்டுக்கும் இடையேயான கருத்தியல் சார்ந்த வேறுபாடு வெகுவாக இடம் பெறுகிறது. அண்மை ஆண்டுகளில் அமெரிக்காவில் இனச் சிறுபான்மையினருக்கான நேர்முக உறுதிப்பாடு, கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் நியூஜிலாந்திலும் பூர்வகுடி உரிமைகள், ஐரோப்பாவில் பன்முகப்பண்பாட்டு அங்கீகாரம் முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது அவை வாத எதிர்வாதங்களுக்கு உள்ளாகின.
இந்தியாவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தன் ஆயுள் முழுக்க அறிவார்த்தமாகவும் அரசியலாகவும் நடத்திய போராட்டங்களை அடித்தளமாகக் கொண்டு, சாதியப் பாகுபாட்டுக்கு இலக்காக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஓரளவுக்கு ஒத்திசைவான கூட்டு உரிமைகள் என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. அது இப்போது நமது சுதந்திர அரசமைப்பு சாசனத்தில் சிறப்பாக நிறுவப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் கிடைக்கும் இடங்களில் பாதியளவைத் தாண்டாமல், சமூக ஒதுக்கலால் பாதிக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கு இட ஒதுக்கீடு என்ற கருங்ததாக்கத்தை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் அரசமைப்பு சாசன அதிகாரத்தின் ஒரு சாதனையே இது.
124ஆவது சட்டத் திருத்தத்தில் உள்ள சிக்கல் என்னவெனில், சமூகக் குழுக்களின் கூட்டு உரிமையை உறுதிப்படுத்துகிற ஒரு அரசமைப்பு சாசன ஏற்பாட்டிற்குள் தனிநபர் இட ஒதுக்கீட்டு உரிமை என்ற கொள்கையைத் திறம்படச் செருகுகிறது என்பதுதான். இது மேலும் மேலும் குழப்பங்களையும் வன்மங்களையும் சமூக மோதல்களுக்கும் இட்டுச்செல்லக்கூடும்.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், நீதிமன்றங்களால் வரையறுக்கப்பட்ட 50% இட ஒதுக்கீடு என்ற உச்சவரம்பு, அரசமைப்பு சாசனத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு திட்டவட்டமான ஏற்பாட்டின் மூலம் இப்போது மீறப்பட்டிருக்கிறது. இனி ஜாட், பட்டிடார் போன்ற முன்னேறிய சாதியினர் தங்களுக்குப் பொருளாதார அடிப்படையில் குழுவாக இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்துவார்கள் என்பதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பிட்ட சாதிக்கான இட ஒதுக்கீடு மொத்த மக்கள்தொகையில் அந்தச் சாதியினரின் உண்மையான பங்கிற்கு ஏற்ப வரையறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழக்கூடும். அனைத்துச் சாதிகளின் சமூக-பொருளாதார நிலை பற்றிய ஒரு புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதனால் புத்துயிர் பெறும்.
மேலும், 50% என்ற வரம்பு காலியாகிறபோது, வரலாற்றுப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட ஒரு சிறுபான்மைப் பிரிவுக்கான சமூகநீதியை வழங்குவதற்கான ஒரு அடிப்படையே இடஒதுக்கீடு என்பது (அம்பேத்கர் முன்வைத்த வாதத்தின் மையமே இதுதான்) கைவிடப்படுகிறது. மாறாக, பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரப் பின்னடைவைப் போக்குவதற்கான ஒரு நடவடிக்கையே இட ஒதுக்கீடு என்றாகிறது. இந்த வாதம் ஏற்கப்பட்டு வலுப்பெறுமானால், சில சாதிக் குழுக்கள் சந்தித்த கூட்டுச் சமூகப் பாகுபாட்டைப் போக்குவதற்கான ஒரு வழிமுறைதான் இட ஒதுக்கீடு என்ற மூலக் கோட்பாட்டிற்கே குழிபறிக்கப்படலாம். சொல்லப்போனால், தனிநபர் உரிமை என்ற கொள்கையை வீசி, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடே ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படலாம்.தனிமனிதப் பொருளாதார நிலையை மதிப்பிடுகிற ஒரு பொது விதி கூட உருவாக்கப்படலாம்.
இதே காரணத்திற்காகத்தானோ என்னவோ, இட ஒதுக்கீடு என்ற கொள்கையையே எப்போதும் எதிர்த்து வந்தவர்கள், தனிநபர்த் தகுதிக்கே முன்னுரிமை தரப்பட வேண்டுமென வாதிட்டு வந்தவர்கள், தற்போதைய சட்டத்தை விமர்சிக்கவில்லை என்பதோடு, சில இடங்களில் இதை வரவேற்கவும் செய்துள்ளனர்.
புதிய இட ஒதுக்கீட்டின்படி வேலை தருவதற்கு அரசாங்கத் துறைகளில் வேலையே இல்லை என்பதும் உண்மைதான்.உயர் கல்வியில் கூடுதல் ஒதுக்கீடு என அரசாங்கம் வலியுறுத்துவதற்குஙககூட இது காரணமாக இருக்கக்கூடும்.ஒப்பீட்டளவில் அது சுமையில்லாத ஒரு கவர்ச்சித் திட்டமாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள் போலும்.புதிய இட ஒதுக்கீட்டின் படி மாணவர்களைச் சேர்க்கக் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும் என்ற பேச்சு அடிபடுகிறது.
இதன் காரணமாக, கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடுகளில் நிர்ப்பந்தங்கள் ஏற்படக்கூடும். முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை இணைப்பதற்குக் கூடுதல் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருக்கும். அதற்கான செலவுகளை ஈடுகட்ட, சமூகரீதியாக ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய கல்வி உதவி நிதி, எளிதான கல்விக் கடன் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.
புதிய சட்டங்களை உருவாக்குகிறபோது அதன் பல்வேறு நுணுக்கமான, முக்கியமான கூறுகள் குறித்து நம் பிரதிநிதிகள் தீவிரத்தோடு, ஆழமாகச் சிந்தித்து, நன்கு ஆராய்ந்ததன் அடிப்படையில் வாதிட்ட காலம் ஒன்று இருந்தது. அரசமைப்பு சாசன சபையின் விவாதங்கள் இதில் ஒரு தனித்துவத்தோடு இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவற்றால் அமைக்கப்படும் குழுக்களும் அண்மைக் காலத்தில்கூடச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளன.
இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில், தேர்தல் எதிரலை என்ற கற்பனையான அபாயநிலைக்குப் பரிதாபகரமான முறையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்துபோய்விட்டதைக் காண்பதற்கு வருத்தமாக இருக்கிறது. நீதிபதிகள் சிறந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள் என்றபோதிலும் கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளிடம் சரணடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு இது நல்ல அறிகுறியல்ல.
பார்த்தா சாட்டர்ஜீ
(கட்டுரையாளர் ஒரு அரசியல் கோட்பாட்டு ஆய்வாளர். கொல்கத்தா, நியூயார்க் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் நடத்தி வருகிறார்)
நன்றி: தி ஒயர்
https://thewire.in/government/the-10-reservation-is-a-cynical-fraud-on-the-constitution
தமிழில்: அ. குமரேசன்
inraikku endha oru arasu aluvalakathai eduthukondaalum SC/ST samoogathai serndhavardhan uyarndha idathil irukirarkal. appadi irukka innum ida odhukeedu othukapattavarkalnu oru maaya thotrathai kanpipathai niruthavendum.
,,,பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுபோகுமோ மியாவ் மியாவ் ,,,
10% for general category not for Upper castes
..
Hence General category includes OBC SC ST also