உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, அதிலும் முக்கியமாக கேரளாவின் முற்போக்குப் பெண்களின் விருப்பத்தை மறுப்பவர்களை, பிரதமர் வெளிப்படையாக ஆதரிக்கிறார்.
சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முயற்சிப்பதற்காக கேரள அரசைப் பிரதமர் தாக்கியபோது அவர் தான் வகிக்கும் பதவியை மலினப்படுத்திவிட்டார்.
கோயிலுக்குள் நுழைந்ததன் மூலம் ஆணாதிக்கத் தடைகளை தகர்த்த கனகதுர்கா, பிந்து ஹரிஹரன் ஆகியோருக்குச் சரியான பிரதமராக அவர் இருக்கவில்லை. இந்தப் பெண்களில் ஒருவர், தனது விருப்பதை நிறைவேற்றிக்கொண்டதற்காக மாமியாரின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறார். இந்த செய்தி வெளியானபோது பிரதமர் அந்த மாநிலத்தில் இருந்தார். அவர் அந்தப் பெண்ணுக்குத் தனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, சபரிமலை பிரச்சினையில் கேரள மாநில அரசு நடந்துகொண்ட விதம் அவமானகரமானது எனக் கூறினார்.
இந்தப் பிற்போக்குத்தனமான அறிக்கை அனைவராலும் கண்டிக்கப்பட்டது. அரசியல் சாசன ரீதியிலான பதவி வகிப்பவர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால், பெண்களின் ஆன்மிக உரிமைக்கு ஆதரவாக நிற்பதற்கு பதிலாக பிரதமர் பிற்போக்குத்தனமாகப் பேசியிருக்கிறார். இந்துப் பெண்களுக்கு ஆதரவாக நிற்க அவர் மறுத்தது, முத்தாலக் பிரச்சினையில் முஸ்லிம் பெண்கள் உரிமையைப் பாதுகாப்பது பற்றிப் பேசிய அவரது ஏமாற்றை அம்பலமாக்கியுள்ளது.
நாட்டில் அதிகரிக்கும் துவேஷம், வன்முறை ஆகியவை தொடர்பாக மவுனம் காப்பதன் மூலம், அவற்றை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் ஒருவரிடம் நாகரீகத்தை எதிர்பார்ப்பது வீண் செயல் என சிலர் கூறலாம். கனகதுர்காவும் பிந்து ஹரிஹரனும் கோயிலுக்குள் நுழைந்து திரும்பியதும், கேரளாவில் வெடித்த கும்பல் வன்முறையின் தலைமைத் தளபதியே அவர்தானே. ஜே.தேவிகா தான் நேரில் கண்டதை கஃபிலா என்னும் ஊடகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
“இரண்டு பெண்களும் சபரிமலை கோயிலில் நுழைந்த சில மணி நேரங்கள் கழித்து, இந்துத்துவத் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டத் துவங்கினர். பெண்கள் உள்ளிட்ட ஆவேச கும்பல், தெருக்களில் வலம் வந்து, வன்முறையைத் தூண்டிவிட்டுக் கலவரத்தை உண்டாக்கும் வேட்கையில் வழிப்போக்கர்களைத் தாக்கத் துவங்கியது. கருநாகப்பள்ளியில், முஸ்லிம் கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற சபரிமலை நடவடிக்கைக் குழு, வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, மக்களை அச்சுறுத்தும் வகையில் எல்லாவற்றையும் செய்தது.
பாசிச பாணியில் பாலக்காட்டில் ஒரு நூலகம் கொளுத்தப்பட்டது. அமைப்பு எதையும் சாராத பெண்ணியவாதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஏற்பாடு செய்த கூட்டங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. கோழிக்கோட்டில் செயற்பாட்டாளர்கள் காயமடைந்தனர். கொச்சியில் துணிச்சல் மிக்க தலித் பெண்ணியவாதிகள், தங்கள் கூட்டத்தைத் தடுக்க முயன்ற 3 இந்துத்துவப் பெண்களுக்கு எதிராக ஜெய் பீம் கோஷங்களை எழுப்பி பதிலடி கொடுத்தனர். லட்சக்கணக்கான இந்துக் கடவுள்களில் ஒரு கடவுளுக்காக, பக்கத்தில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தக் கும்பல், கேரள மக்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைக்கு எதிராக உறுதியாக நிற்பதை மாநில அரசு உணர்த்தியது.”
இந்த வன்முறை மத்திய அரசால் கண்டிக்கப்பட்டதா? பாலினச் சமத்துவத்தை உண்டாக்கும் உறுதி எங்கே போனது? ஆனால், இந்துக்கள் மத்தியில் உள்ள பிற்போக்கானவர்களின் உணர்வுகளை ஈர்த்து ஆட்சிக்கு வந்தவர்களிடம் இதை எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லைதான். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான துவேஷம் ஒரு தொகுப்பாக வருவதையும் இது உணர்த்துகிறது. இத்தகைய துவேஷம் பெண்களுக்கும் தலித்களுக்கும் எதிராகத்தான் இருக்கும்.
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் கேரள முதல்வர் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார். இதற்காக அவர் பாஜக தலைவர்களின் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகிறார். அர்ப்போ அர்தவம் எனும் பெண் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உத்தேசித்துள்ளதற்கு எதிராக பாஜக மாநிலத் தலைவரின் மோசமான தாக்குதல் இதற்கான சமீபத்திய உதாரணம்.
நிகழ்ச்சியின் பிரதான நுழைவுவாயிலின் புகைப்படங்களை – பெண் உறுப்பு போல் இருந்தது- சமூக ஊடகங்களில் பதிவிட்டு, கேரள முதல்வர் பினராரி விஜயனுக்காக, நுழைவு வாயில் “ஓட்டை” போல அமைக்கப்பட்டுள்ளதாக எழுதியிருந்தார்.
“மாநில முதல்வர் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான நுழைவு ஓட்டை. உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்களை மக்கள் நிராகரித்ததில் வியப்பில்லை’ என அவர் எழுதியிருந்தார்.
இந்தியாவின் கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் மதிக்கவில்லை எனக் கம்யூனிஸ்ட்களைத் தாக்கும்போது பிரதமரும் இதே மொழியில்தான் பேசுகிறார். இங்கு பிரச்சினை என்னவெனில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் குண்டர்களுக்கு, அதைவிட முக்கியமாக கேரள முற்போக்குப் பெண்களின் விருப்பத்தை புறக்கணிக்கும் குண்டர்களுக்கு நாட்டின் பிரதமர் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதுதான்.
கேரளாவைப் பற்றி எரியச்செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவு இந்தக் குண்டர்களுக்கு இருக்கும் நிலையில், மாநில முதல்வர் நிலைமையை சரியாகக் கையாண்டதாலேயே வன்முறை குறைந்திருக்கிறது.
பினரயி விஜயன், ஒரு தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதோடு, சபரிமலைக்குச் செல்ல விரும்பும் பெண்களின் ஆன்மிக உரிமை குறித்து அவர் மக்களுக்கு எடுத்துரைத்துவருகிறார்.
காங்கிரஸ் கட்சி அவரை ஆதரிக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இடதுசாரி அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கிலான திட்டத்தோடு அக்கட்சி செயல்படுகிறது. பெண்களின் உரிமைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதில் பாரம்பரியத்தைக் காப்பது என்னும் திரைக்குப் பின் ஒளிந்துகொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜக ஆகிய அமைப்புகள் உருவாக்கியுள்ள ‘இந்துக்களுக்கு அவமானம்’ எனும் வாதத்திற்கே இது வலு சேர்க்கும். இந்தப் போக்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த வகையிலும் உதவாது.
இவ்விஷயத்தில் பிரதமர்தான் மிகப் பெரிய குற்றவாளி. முன்னதாக அவர், சபரிமலையில் இந்துப் பெண்கள் பிரச்சினையில் பாரம்பரியத்தின் உரிமைக்கும், முத்தாலக் பிரச்சினையில் முஸ்லிம் பெண்களின் உரிமைக்கும் நுட்பமான வேறுபாடு இருப்பதுபோலத் தோற்றம் தர வைக்க அவர் புத்திசாலித்தனமான முயற்சியை மேற்கொண்டார். ஆனால் களத்தில் அந்த நாகரீகப் போர்வையைக் கைவிட்டுவிட்டார்.
இந்துக்கள் தங்கள் குடிமைப் பண்பு உணர்வை மீட்டெடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தால், இந்த மாயையை முதல் வாய்ப்பிலேயே களைந்தெறிய வேண்டும் என்பதை உணர வேண்டும். அந்த வாய்ப்பு மூன்று மாதங்கள் தொலைவில் உள்ளது.
(அபூர்வானந்த் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்)
நன்றி; தி வயர்
https://thewire.in/politics/narendra-modi-bjp-sabarimala-kerala
just because some purambok women want to do, we cannot support just because they are puramboke
இன்னுமா நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுகிறதுனு நம்புறீக
இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி Rule of Law இப்போது இல்லை. வலுத்தவன் வகுத்ததே நடைமுறை. நீதிமன்ற உத்தரவு வெறுமனே காகிதத்தில் இருக்கும் நிலைக்கு காரணம் நீதி துறையில் இருக்கும் நீதிபதிகள் & வழக்கறிஞர் மற்றும் நான்காவது தூண் என கூறப்படும் பத்திரிகை ஊடக துறையும் காரணம். மார்ட்டின் லூதர் கிங் கூறிய படி “நமக்கு முன்பு அட்டூழியம் அராஜகம் நடக்கும் போது அதை செய்தவனை விட அதை மெளனமாக வேடிக்கை பார்க்கும் நல்லவன்தான் கொடூரமான மனிதன்.”.
வழக்கறிஞர். சம்பத்.