”நரேந்திர மோடி இல்லையென்றால் வேறு யார் ராகுல் காந்தியா? அது பெருங்கேடாக ஆகிவிடும்”. இது போன்ற பேச்சுக்களை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி அடுத்து ஆட்சி அமைக்கும் என்பதாக இல்லாமல் யார் அடுத்த பிரதமராக வருவார் என்பதுதான் விவாதங்களின் மையப் புள்ளியாக உள்ளது. இதை மோடி தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட ஒரு மனிதருக்கும் ஆண்ட பரம்பரையில் சலுகைகளுடன் பிறந்த ராகுல் போன்ற ஒருவருக்குமான அதிபர் தேர்தல் மாடல் போல இருவருக்கிடையிலான போட்டி என்பது போல் வெற்றிகரமாக மாற்றிவிட்டார்.
இதில் அவலம் என்னவென்றால் தனி நபர்களைவிடக் கொள்கைகளே முக்கியம் என்று கருத்தியலை முன்னிறுத்தும் கட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜக அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடிக்கு முக்கியத்துவம் அளிப்பதுதான்.
இன்னும் ஆழமாகத் துருவிப் பார்த்தால் நிறைய சுவாரசியமான விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். மோடிக்கு ஆதரவாக உள்ளவர்கள்கூட – அவர் மீது கொண்ட திட நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது அவருக்கு மாற்றாக எவரும் இல்லாத காரணத்தால் அவரை ஆதரிப்பவர்கள் – மோடி நிர்வாகம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்படத் தவறிவிட்டது எனத் தனிப் பேச்சில் ஒப்புக்கொள்கிறார்கள்.
வெளிப்படையான மதிப்பீட்டைச் செய்யப் போனால் கடந்த நான்கு ஆண்டுகள் பல வகையிலும் பெருங்கேடாகவே இருந்தது என்றே சொல்ல வேண்டும். விவசாயிகள் தெருக்களில் இறங்கிப் போராடியது. சமூக நல்லிணக்கம் வேகமாகத் தேய்ந்துகொண்டேவருவது, கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துவது ஆகியவை இங்கு குறிப்படத்தக்கவை.
அரசின் மீதான கோபம் வெளிப்படையாக உணரக்கூடியதாகவே உள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்றவை பொருளாதாரத்தை மந்த கதியிலாக்கியதோடு முதலீட்டிலும் தொய்வை ஏற்படுத்தின, நிறுவனங்களையும் சிறு வணிகங்களையும் இவை பாதிப்புக்குள்ளாக்கின.
ஆனாலும் தனிப்பட்ட முறையில் மோடிக்கான ஆதரவு என்பது மிகவும் ஆவேசமாகவே உள்ளது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தோல்வியுற்றது, சமூகக் கட்டமைப்புகளில் செலவழிக்கத் தவறியது ஆகியவை மோடி ஆதரவாளர்களைத் திகைப்பிலாழ்த்தினாலும் இந்துத்துவம் உள்ளிட்ட ஏனைய விஷயங்களில் அவர்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை. இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும் காந்தி குடும்பத்தின் மீதான ஆழமான வெறுப்பும் சேர்ந்துகொள்வதால் அவர்கள் அடுத்த முறையும் பாஜகவுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்பது தெளிவு.
பாஜக சற்றுக் குறைவான இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்க சில கட்சிகளின் தயவை நாட வேண்டிவரும் சூழ்நிலையிலும் மோடியே கேள்விக்கு அப்பாற்பட்ட தலைவராக இருப்பார். மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுவான செயல்திட்டத்தை முன்னிறுத்துபவர்களாக இல்லாமல் மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் ஒழுங்கற்ற முறையில் ஒன்று சேர்ந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். மாயவதி? கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! மம்தா பானர்ஜி? ஹ்ம் இன்னும் மோசம். “கூட்டணி ஆட்சி என்பது பயனற்றது. இதுமாதிரி (கிச்சடி) கூட்டணி ஆட்சியை எல்லாம் அனுபவத்தில் பார்த்தாகிவிட்டது. அது மிக மோசமான தோல்வியில்தான் முடிந்துள்ளது” என்ற பல்லவிதான் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது.
கூட்டணி ஆட்சி பற்றிய இது போன்ற புரிதலின்மை இந்திய அரசியலை மட்டுமல்ல, இந்தியாவைப் பற்றிய அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது. கூட்டணி ஆட்சி என்பது நாட்டின் பன்முகத் தன்மையையும் இந்த மாபெரும் தேசத்தின் அனைத்துப் பிரிவினரின் பல தரப்பட்ட தேவைகளையும் மிகச் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சி மிக நீண்ட காலம் இந்திய அரசியலில் கோலோச்சியிருக்கலாம். 1977இல் பதவியிறங்கியதற்கு முன் மூன்று தசாப்தங்களும் மேலாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்ததற்கு வரலாற்றுபூர்வமான காரணங்களே அதிகம். காங்கிரஸேகூடப் பல கட்சிகளுடன் கடந்த காலங்களிலும் தற்போதும் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளது. பல தரப்பட்ட கட்சிகளையும், ஏன் தனக்கு எதிரான சமூக, பொருளாதாரக் கொள்கை உடையவர்களையும் உள்ளடக்கியதாகவும் அனைத்து இனங்களுக்கும், பிரதேசங்களுக்கும், சாதிகளுக்கும் இடமளிப்பதாகவும் அக்கூட்டணியானது உள்ளது.
கடந்த காலக் கூட்டணி
கூட்டணி ஆட்சி இந்தியாவுக்குப் பேரழிவை உண்டாக்கும் என்கிற எண்ணப் போக்கை ஆராய்ந்து பார்க்கையில் அது உண்மையில்லை என்றே தெரியவருகிறது. இதற்கு நரசிம்மராவ் அரசுதான் சிறந்த உதாரணம். அது மைனாரிட்டி அரசாக இருந்த போதிலும் 5 வருடங்களும் தாக்குப் பிடித்ததோடு, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தியது. வர்த்தக சமூகம் அதை நினைவில் கொள்ள வேண்டும். 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரும் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த பாஜக அரசுடன் அதை ஒப்பீடு செய்து பார்க்கவும் வேண்டும்.
வாஜ்பாய் கூட்டணி ஆட்சியையே வழி நடத்தினார். மேலும் இரண்டு ஐமுகூ அரசுகளுமே கூட்டணி ஆட்சிதான் அமைத்தன. இந்தத் தலைவர்கள் தங்களது சக கூட்டணித் தலைவர்களிடமிருந்து பல பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் அவர்கள் அவற்றைச் சுமூகமாகவும், இணக்கமாகவும் கையாண்டனர். தங்கள் அடிப்படைப் பண்புகளையும் கொள்கைகளையும் விட்டுத்தராமல் அதே சமயம் கூட்டணிக் கட்சிகளையும் சமாளித்து வழிநடத்திச் சென்றார்கள். ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்ற நிலையற்ற மனப்போக்கு கொண்ட அரசியல்வாதிகளை வாஜ்பாய் சமாளிக்க வேண்டியிருந்தது. மன்மோகன் சிங்கும் வலுவான சிபிஎம் கட்சியினருடன் போராட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அது மிகவும் சவாலாகிவிடவே அவர்கள் அந்தக் கட்சியினரை கூட்டணியிலிருந்து விலக விட்டுவிட்டார்கள்.
2004 தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு தோற்கடிக்கப்பட்டு, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்பது வெறும் வெற்றுக் கோஷம் என்பது வெளிப்பட்டது. இது பாஜகவின் நகர்ப்புற ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காங்கிரஸ் கட்சி அப்போது தனிப் பெரும் கட்சியாக உருவாகியிருந்தாலும் ஆட்சி அமைக்கத் தேவையான அந்தப் பெரும்பான்மை என்னும் மந்திர எண்ணைப் பெற மற்ற கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது. அந்தச் சூழலில் ஏற்பட்ட நிச்சயமற்ர நிலையால் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்தபட்ச குறியீட்டு எண்ணைக் காட்டிலும் வீழ்ச்சி அடைந்தது. ஐந்து வருடங்கள் கழித்து 2009இல் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ வென்றபோது, பங்குச் சந்தைகள் துவங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாகவே மூடப்பட்டது. காரணம், அதிகபட்சக் குறியீட்டு எண்ணைவிடக் கூடுதலாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியதால் உடனே மூடப்பட வேண்டியதாயிற்று.
பொருளாதரக் கொள்கைகள் குறித்த எதிர்பார்ப்புகளைப் பொறுத்தவரை மன்மோகன் சிங்குக்கு இருந்த ஆதரவைச் சுட்டிக் காட்டவே இந்த பங்குச் சந்தை உதாரணம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர் சமூகம் மிகுந்த ஆதரவை அளித்தது. அவர்கள் மட்டுமல்லாமல் மாநகர், நகர்ப்புறம் மற்றும் புறநகர் வாக்காளர்கள் கூட்டணியில் மற்ற கட்சியினரும் இருந்த போதிலும் ஐமுகூவின் முதல் ஆட்சிக் காலத்தில் NREGA போன்ற மிகவும் விமர்சிக்கப்பட்ட சமூக திட்டங்களில் முதலீடு செய்திருந்து மன்மோகன் சிங்குக்கு மிகப்பெரிய அளவிலான உணர்ச்சிமிகு ஆதரவை அளித்தது. மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் 2008க்குப் பின் ஏற்பட்ட பயங்கரமான பொருளாதார நெருக்கடிகளையும் லாவகமாகச் சமாளித்து பொருளாதாரத்தை ஏற்றமிகு பாதையிலும் இட்டுச் சென்றார்.
அதே சமயம் அவரது ஆட்சியின் இரண்டாம் கட்டத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்ட பல ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தன்னுடைய கூட்டணிக் கட்சியினரைக் கண்டிப்பதில் அவர் திறம்படச் செயல்படவில்லை என்பதும் உண்மையே. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய குரோனி முதலாளித்துவம் (அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான முதலாளிகள் மட்டுமே தழைத்தோங்க வகை செய்யும் முதலாளித்துவம்) என்பவை எல்லாம் இந்திய அரசாங்கங்களின் பொதுவான குணாம்சமாகவே உள்ளது. ஒரே கட்சி ஆட்சி, கூட்டணி ஆட்சி என எதுவும் இதற்கு விதிவிலக்கு அல்லம். ராஜீவ் காலத்தில் போஃபார்ஸ், தற்போது ரஃபேல், வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசின்போது சவப்பெட்டி ஊழல், ஐமுகூவின் 2G ஊழல் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆகவே, கூட்டணிக் கட்சி ஆட்சிகள் மோசம், ஒரு கட்சி ஆட்சி அதைவிட மேலானது என்னும் கூற்றுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. சமரசத்தின் அடிப்படையில் ஆச்சரியமூட்டும் விதத்தில் திடீர் பிரதமரான தேவகவுடா காலத்தில்தான் ப.சிதம்பரத்தால் ‘கனவு பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டது. விரைவிலேயே ஆட்சி கவிழ்ந்த காரணத்தினால் அது பலனளிக்காமல் போனது வேறு விஷயம். மோடி அரசினால் தாக்கல் செய்யப்பட்ட எந்த பட்ஜெட்டுமே தொழிலதிபர்களை உற்சாகமூட்டுவதாக இல்லை. மேலும் இந்த அரசு நலத்திட்டங்களுக்கு மட்டுமே செலவு செய்துகொண்டே போகிறது. குறைந்தபட்சம் நமது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் விதமாகக் கற்பனையான பொருளாதாரக் கொள்கைகளையோ, திட்டங்களையோகூட இது முன்வைக்கவில்லை.
மாறாக, பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானவரின் வாழ்வாதாரம் சிதைந்ததுதான் மிச்சம். அது, ஒரு வலிமையான மனிதர் எவ்வாறு தன்னுடைய சொந்தக் கட்சிக்காரர்களையும் அமைச்சரவை சகாக்களையும்கூடக் கலந்தாலோசிக்காமல் தான் நினைத்ததை தடாலடியாகச் சாதிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அவசரநிலை காலத்துடன் இதை ஒப்பிடுகையில் அப்போதும் இதுபோன்றே ஒரு சிறு குழுவைச் சார்ந்த ஒரு சிலரே முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை உணரலாம்.
ஒரே தலைவரைச் சுற்றியும் ஒரே கட்சி ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் அமையும் அரசுகளானது ஆணவத்துடனும், துடுக்காகவும் செயல்படக்கூடும் என்பதும் தன் மீதான சிறு விமர்சனங்களைக்கூடத் தாங்கிக் கொள்ளாமல் சிலிர்த்துக்கொள்ளும் என்பதும் கடந்த நான்கரை ஆண்டுக் கால அனுபவம் மூலம் நமக்குப் புரியவருகிறது. கட்டுப்படுத்தவோ, சமாளிக்கவோ எவரும் இல்லாததாலும், தடுக்கக்கூடிய அளவு சக்தி கொண்ட எதிர்க்கட்சிகள் இல்லாத காரணத்தாலும் குறைந்தபட்சம் மாற்றுக் கருத்தைக்கூட முன்வைக்க முடியாததாலும் அவர்கள் மேலும் மேலும் கள யதார்த்தத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளார்கள்.
கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் சில சந்தர்ப்பங்களில் பிளாக்மெயில் போக்கைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவினரின் குரலைப் பிரதிபலிக்கவும் செய்கிறார்கள். அதன் மூலம் மூர்க்கத்தனமான முடிவுகளை மட்டுப்படுத்தவும் செய்கிறார்கள். நரேந்திர மோடி தன் கட்சியைச் சார்ந்த தலைவர்களையே கண்டுகொள்வதில்லை. இந்த லட்சணத்தில் சிறு சிறு கூட்டணிக் கட்சிகளை அவர் கண்டுகொள்வாரா? இதன் காரணமாகவே கடந்த சில வருடங்களில் கூட்டணியை விட்டுச் சில கட்சிகள் விலகிவிட்டன.
2019, மே மாதத்துக்குப் பிறகு அமையப்போகும் அரசானது பலதரப்பட்ட தோழமைக் கட்சிகளும் தங்கள் குரலை வெளிப்படுத்தக்கூடிய நியாயமான கூட்டணியாக இருப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு தென்படுகிறது. அதை யார் தலைமை தாங்குவார் என்பதுதான் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படித் தலை தாங்குபவர், கூட்டு முடிவுகளுக்கு ஏற்பச் செயல்பட்டுப் பழக்கப்பட்டிராத நரேந்திர மோடி உள்பட எவராக இருந்தாலும் சரி, அவர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணி அரசுதான் இந்தியாவையும் அதன் மக்களையும் சிறந்த முறையில் பிரதிபலிக்கிறது; அது மதிக்கப்பட வேண்டும் என்பதை அந்தப் பிரதமர் உணர வேண்டும்.
சித்தார்த் பாட்டியா
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/narendra-modi-bjp-coalition