வெகு விரைவிலேயே ஒருநாள் யாராவது ஒருவர் 2019இல் இந்தியாவின் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராகக் கருதப்படுகிறவர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தத்தான் போகிறார். அதில் கிடைக்கப்போகிற பதில் என்னவாக இருக்கும் என்பது புதிரானதோ ஊகிக்க முடியாததோ அல்ல. 2013ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் நடத்தப்பட்ட இதே போன்ற கணிப்புகளில் முன்னணியில் வந்தவர் யாரோ அவரேதான் இந்த முறையும் வரப்போகிறார் – நரேந்திர தாமோதரதாஸ் மோடி. அவருக்குச் சரியான போட்டியாக உருவெடுத்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கணக்கில் இந்த முறை கூடுதல் மதிப்பெண்கள் சேரக்கூடும். ஆனாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அவர் முன்னணிக்கு வருவதற்கான வாய்ப்பு பின்தங்கியதாகவே இருக்கிறது.
பல முக்கியமான தகுதிகளில் மோடிக்கு நிகராக நிற்கக்கூடிய இன்னொரு அரசியல்வாதி யாரும் களத்தில் தெரியவில்லை. மக்களைச் சென்றடைவது, அதற்கான பின்புல வாய்ப்புகள், ஆற்றல், முனைப்பு, தாக்கம், தலையிடுவதற்கும் தடைபோடுவதற்குமான திறமை, அவ்வப்போது அரசியல் ஆதாயத்துக்காகத் தரம் தாழ்ந்தும் அபாயகரமாகவும் சீர்குலைவுகளை ஏற்படுத்தும் வல்லமை ஆகிய தகுதிகளில் அவரை மிஞ்ச ஆளில்லை. சில விஷயங்களைப் பேசியும், சில விஷயங்களைப் பேசாமல் விட்டும் தனது ஆதரவுத் தளத்தோடு எளிதாகத் தொடர்பில் இருப்பது, தனது ஆளுமைப் பிடியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான பசியோடு, சில நேரங்களில் பயங்கரமாக உறுதிபூண்டிருப்பது இவையும் அவரது தனித் தகுதிகள்தான். முழுமையான, உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதோர் அதிகார உயிரிதான் மோடி. வேறு யாரையும் அவ்வாறு சித்தரிக்க முடியாது. சென்ற மாதத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியால் அவர் பதுங்கிவிடவில்லை. மாறாக, இன்னமும் கிழித்துத் தொங்கவிடுகிற, அவருடைய செல்வாக்கைக் கேள்விக்கு உட்படுத்துகிற விமர்சனங்களைத் தள்ளிவிட்டு அந்த முடிவுகளை அவர் தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால், இப்படிப்பட்ட செல்வாக்குகளிலும், பொதுமக்களின் ஆதரவுகளிலும் ஒரு சுவையான புதிர் இருக்கிறது. திடுதிப்பென்று இவை இரண்டுமே எதிர்ப்புணர்வாக மாறிப்போகின்றன. பல நேரங்களில், சம்பந்தப்பட்டவருக்கு வீழ்ச்சிக் காலம் நெருங்கிவிட்டது பற்றி முன்கூட்டி உணர்த்தாமலே அந்த எதிர்ப்புணர்வுகள் வெளிப்படுகின்றன. 2004இல் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அப்படித்தான் நடந்தது. அந்த நாட்களின் மிகப் பெரும் ஆளுமை அவர்தான் எனலாம். ஆனால், ஒளிரும் இந்தியாவை அவர் உருவாக்கிவிட்டதாகக் கிளப்பிவிடப்பட்ட பிரச்சாரத்தை அவரே நம்பத் தொடங்கிய நேரத்தில் கதை மாறிவிட்டது. 1977இல் இந்திரா காந்திக்கும் அவருடைய அவசரநிலை ஆட்சிக்கும் பதிலடியாக ஆரவாரத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதா கட்சிக்கு இதுதான் நடந்தது. ஜனதா கொண்டாட்டம் மிக விரைவிலேயே, ஒட்டுமொத்தமாகவே அடங்கிப்போனது. பரவலாக வெறுக்கப்பட்டுப் பதவியிறக்கம் செய்யப்பட்ட இந்திரா காந்தியிடம் மறுபடியும் 1980இல் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. அவருடைய புதல்வரும், அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்தவருமான ராஜீவ் காந்திக்கும் இதுவேதான் நடந்தது. 1984 தேர்தலில், அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் வேறு யாரும் இத்தனை மக்களவை உறுப்பினர் பலம் கிடைத்ததில்லை என்ற சாதனையை நிகழ்த்திய அவருடைய செல்வாக்கு, முழுப் பதவிக் காலம் முடிவதற்குள்ளாகவே சரிந்தது. முதல்முறையாக ஒரு வசீகரத் தோற்றத்துடன் பிரதமரானவர் 1989 தேர்தலில் அந்த வசீகரத்தை இழந்தார். காலுக்குக் கீழே தரை தகரும்போது, முதலில் விழுகிறவர்கள் அதன் மேல் நிமிர்ந்துகொண்டிருப்பவர்கள்தான்.
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக அரசாங்கங்கள் அகற்றப்பட்டது மோடி மீதான விமர்சனத்தைப் பிரதிபலிக்க்கிறதா, ஆம் என்றால் எந்த அளவுக்கு என்பவை குறித்த நியாயமான வாதம் வரத்தான் செய்யும். கள நிலவரங்கள் பற்றிய செய்திகள், அந்த மாநிலங்களின் ஆட்சியில் இருந்தவர்களுக்கு எதிராக மக்கள் உணர்வு திரும்பியிருந்தாலும் அதனால் மோடி எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றன. அந்தந்த மாநிலம் சார்ந்த காரணிகளின் தாக்கத்தில் நடந்த அந்தந்த மாநில மட்டத்திலான தேர்தல் தீர்ப்புதான் அது என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. மோடியை மையப்படுத்தி நடக்கவுள்ள 2019 தேர்தலின் தன்மை வேறு வகையாக இருக்கும் என்று அச்செய்திகள் காட்டுகின்றன. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் நாட்டின் ‘தலைமை’ மோடி அல்ல என்றால் வேறு யார்?
2019 தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. முதலாவதாக வருவது – இந்தியாவின் மைய மாநிலங்களில் பெரும்பகுதி இப்போது காங்கிரஸ் ஆட்சிக்குள் வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் வருகிறபோது இந்த மாநிலங்களில் காங்கிரஸ்தான் அதிகாரத்தில் இருக்கும். அதிகாரம் உங்களிடம் முக்கிய நெம்புகோல்களைத் தருகிறது. பாஜக தோல்வியடைந்த மூன்று மாநிலங்களில் அந்த நெம்புகோல்கள் இப்போது காங்கிரஸ் கையில் இருக்கின்றன. 2014இலிருந்து ஊக்கமிழந்து போயிருந்த தொண்டர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் போன்றதொரு கட்சிக்கு, அந்த நெம்புகோல்கள் வேறு வகையிலும் பயன்படும். அமைப்புக்கு உள்ளே புதிய தெம்பையும் தன்னம்பிக்கையையும் புகட்ட முடியும். தலைமையைப் பொறுத்தவரையில், ‘பப்பு’, தனக்கு அப்படியொரு பட்டப்பெயர் சூட்டியவர்களைத் திணறவைக்கத் தொடங்கிவிட்டார். ‘பிடி’ சும்மா விளையாட்டுக் காட்டிக்கொண்டோ குரைத்துக்கொண்டோ இருக்கவில்லை, கடிக்கவும் தொடங்கிவிட்டது, ஒரு முறை அல்ல மூன்று முறை கடித்துவிட்டது (பிடி என்பது ராகுல் காந்தியின் செல்ல நாய். அது விளையாடுகிற காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். “பிடி இப்படி விளையாடிக்கொண்டும் குரைத்துக்கொண்டும்தான் இருக்கும், காவலுக்கு ஆகாது” என்று கிண்டலான பதிவுகளும் தொடர்ந்தன. கட்டுரையாளர் அதைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். –மொழிபெயர்ப்பாளர்). தேர்தல் வெற்றிகளை அவரால் ஈட்டித்தர முடியாது என்று சொல்லிவந்தவர்களை வாயடைக்க வைத்து அவர் வெற்றிகளை ஈட்டத் தொடங்கியிருக்கிறார். ‘‘காங்கிரஸிடமிருந்து விடுதலை பெற்ற சுதந்திர பாரதம்’’ என்று மோடியும், “இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சிதான்” என்று பாஜக தலைவர் அமித் ஷாவும் முழங்கிக்கொண்டிருந்தார்கள். அப்படி இந்திய அரசியல் ஒரு தரப்பாகத்தான் போய்க்கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை அந்த வெற்றிகள் துடைத்தெறிந்துகொண்டிருக்கின்றன. “மாற்றே கிடையாது” என்ற கூச்சலை அந்த வெற்றிகள் “மாற்றே கிடையாதா” என்ற கேள்வியாக மாற்றியுள்ளன.
இதற்கு முன்பும் மோடி-ஷா இரட்டையருக்கு தில்லி, பிஹார், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சறுக்கல் ஏற்பட்டதுண்டுதான். ஆயினும் இந்த மூன்று மாநிலங்களின் முடிவுகள் மாறுபட்டவை. தனக்கு மட்டுமே ஏகபோக உரிமை உள்ள ரியல் எஸ்டேட் மனை போல பாஜக நினைத்திருந்த மாநிலங்கள் இவை. இந்தி பேசுகிற, பசு பக்தி நிறைந்த ஆகப் பெரிய இந்து வட்டாரமாக உள்ள அடிப்படையான களம் என்று இந்த மாநிலங்களை பாஜக நம்பிக்கொண்டிருந்தது. அந்தக் களத்தில், 2019இன் மக்களவைத் தேர்தல் மிக நெருக்கத்தில் இருக்கிறபோது, இந்தத் தோல்வி எழுதப்பட்டிருக்கிறது.
விவாதத்திற்குரிய வேறு விவகாரங்களும் இருக்கின்றன. மோடி பதவிக் காலம் முடிவை நெருங்கும் கட்டத்தில், கிராமப்புற / வேளாண் மக்களின் கோபம் பாஜகவின் ஆதரவுத் தளத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அசைத்திருக்கிறது. அதற்கான காரணம் மாநில ஆட்சிகளிடம் இல்லை, நிச்சயமாக மத்திய ஆட்சியிடம்தான் இருக்கிறது. பாஜக தோல்வியடைந்த மாநிலங்களின் மக்களில் 70 அல்லது அதற்குக் கூடுதலானவர்கள் கிராமங்களில் வாழ்கிறவர்கள்தான். நிலத்தையும் அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலையும், அதனால் ஏற்படுகிற அல்லது ஏற்படாத வாங்கும் சக்தியையும் சார்ந்திருப்பவர்கள்தான். கிராமப் பகுதிகளில் பாஜக சந்தித்துள்ள தோல்வி அதன் கன்னத்தில் விழுந்த அறைதான். சத்தீஸ்கர் மாநிலத் தொகுதிகளில் 34 சதவீத இழப்பு, மத்தியப் பிரதேதசத்தில் 30 சதவீதம், ராஜஸ்தானில் 49 சதவீதம் இழப்பு என ஏற்பட்டிருக்கிறது. தலித் / பழங்குடியினர் வாக்குகள் எந்தப் பக்கம் சென்றன என்று காட்டுகிற வரைபடத்தைத் தயாரித்தால், மேற்படி சதவீதக் கணக்குகளை அடர் கறுப்பில் தீட்ட வேண்டியிருக்கிறது. அந்த மூன்று மாநிலங்களில் மட்டுமே பாஜக 61 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட ஒரு கோடியே 25 லட்சம் வாக்குகள் ஆதாயமடைந்துள்ளது. அரசியலாக அல்லாமல் முற்றிலும் கணிதவியலாகக் கணக்கிடுகிறபோது, இந்த நிலப்பரப்பில் பாஜக கிட்டத்தட்ட 44 மக்களவை இடங்களை இழக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது எனலாம்.
களம் பாதகமாக, கோபாவேசமாக இருக்கிறது. இது, பலராலும் எதிர்வாதம் செய்யவியலாத மற்றொரு பிரச்சினையை முன்னுக்குக் கொண்டுவருகிறது. நிலைமைகளைச் சாதகமாக மாற்றக்கூடியவராக இப்போது மோடி இல்லை என்ற பிரச்சினைதான் அது. கடும் சண்டையின் நடுவே குதித்து, தோல்வியின் பிடியிலிருந்து மீட்டு வெற்றியை நிலைநாட்டக்கூடிய, தனியொரு மனிதராக எதையும் சமாளிக்கக்கூடிய, தனது வாய்வீச்சால் பொதுமக்களின் மனநிலையை மாற்றக்கூடிய, வேறு யாராலும் முடியாத அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய அவரது சாமர்த்தியத்தில்தான் பாஜக தனது நம்பிக்கையைப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. இப்போதும் அவர் முழக்கங்களோடும் மூர்க்கத்தோடும்தான் புயலாகக் களம் இறங்கினார். ஆனால் இம்முறை அவரால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் சன்னமான வேறுபாட்டில்தான் பாஜக தோல்வியடைந்தது என்பதற்கு வேண்டுமானால் மோடியால் தனது பொதுக்கூட்ட உரைகளின் மூலம் ஆதரவைத் திரட்ட முடிந்தது என்பது காரணமாக இருக்கலாம். சிவராஜ் சௌஹான் போன்ற மாநிலத் தலைவர்களால் எந்த அளவுக்கு மக்களின் ஆதரவைப் பெற முடிந்திருக்கிறது என்பது அந்தக் கட்சிக்குள் விவாதிக்கப்படலாம். எப்படியானாலும், வெளியேயிருந்து பார்க்கிறபோது மோடியால் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்ட முடியவில்லை என்பது திட்டவட்டமான உண்மை.
வரவிருக்கும் மாதங்களில் தீர்மானகரமான முறையில் தாக்கம் செலுத்தும் வகையில், கடந்த காலத்தில் செய்ததுபோல, அவர் என்ன செய்யப்போகிறார்? பெருமையடித்துக்கொள்வதற்கு அவரிடம் ஏதாவது இருக்கிறதா? தனது கவர்ச்சிகரத் தலைப்பாகைகளில் செருகிக்கொள்வதற்கான சிறகுகளை வைத்திருக்கிறாரா?
அந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம், தனது சாதனைகளாகச் சொல்லிக்கொள்வதற்கு ஆக்கபூர்வமான விசயங்கள் பற்றாக்குறையாக இருந்ததைக் காட்டியது. நம்பகமான சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிராளிகளைத் தாக்குவதில்தான் கவனம் செலுத்தினார். குறிப்பாக நேரு, இந்திரா காந்தி குடும்பத்தைத் தாக்கினார். அவர்கள் இன்னமும் ஆட்சியதிகாரத்தில் இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு தாக்குவதுபோல இருந்தது அவருடைய பேச்சு. பணமதிப்பு ஒழிப்பு நடவடிக்கையாலும் ஜிஎஸ்டி வரியாலும் மக்களுக்கு எவ்வளவு நன்மை என்றெல்லாம் அவர் முழங்கவில்லை. காரணம், மக்களின் தீர்ப்பு அந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவே இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. 2013-14ஆம் ஆண்டுகளில் அவரால் ஒரு எதிர்ப்பை ஏற்படுத்த முடிந்தது. இப்போது, அவர் செய்வதெல்லாம் அரசாங்கக் கருவூலத்திலிருந்து செலவு செய்யப்பட்ட பீற்றல்களாகவே இருந்தன. அவர் தொடங்கிய தடபுடல் திட்டங்கள் வெற்று வாக்குறுதிகளையும் முழக்கங்களையும் தாண்டிப் போகவில்லை. வேலையின்மைப் பிரச்சினை அதிரித்துக்கொண்டே போகிறது. நாடு முழுவதும் மக்களின் மணி பர்ஸ்கள் வற்றிப்போயின (வேண்டுமானால் விவசாயிகள் மணி பர்ஸ் வைத்துக்கொள்வதில்லை என்று வாதிட்டுக்கொள்ளலாம்).
தனது ஆட்சிக் காலத்தில் முக்கிய நிறுவன அமைப்புகள் பலவற்றையும் அவர் உருக்குலைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதித்துறையில் அரசின் அத்துமீறிய தலையீடுகள் பற்றி எச்சரிப்பதற்காக இதுவரை இல்லாத வகையில் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. ரிசர்வ் வங்கி நிலைகுலைந்து போயிருக்கிறது. சிபிஐ தலைமையற்ற அமைப்பாகக் குழப்பங்களும் முரண்பாடுகளும் நிரம்பிக் கிடக்கிறது. அத்துமீறல்கள் பற்றி மத்தியத் தகவல் ஆணையம் புகார் செய்திருக்கிறது. ராணுவ உயரதிகாரிகள் இன்று மிகையான தேசியவாத அரசியல் பேசுகிறார்கள். இது போல் முன்பு எப்போதுமே அனுமதிக்கப்பட்டதில்லை.
மோடி எப்போதும் தயாராக வைத்திருக்கிற அஸ்திரத்தையும் ஏவினார் – இந்து உணர்வு கொண்ட பேரரசர் என்ற அஸ்திரம்தான் அது. விஎச்பி, பஜ்ரங் தள் தலைவர்கள், உ.பி. முதலமைச்சர் ‘யோகி’ அஜய் சிங் பிஷ்த் ‘ஆதித்யநாத்’ ஆகியோரைத் தனக்காகப் போரிடக் களமிறக்கினார். விஎச்பி, பஜ்ரங் தள் கூட்டத்தினர் “அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம்” என்ற பழைய சபதத்தை மறுபடியும் செய்தார்கள். அதை ஆதரித்து பாஜக தலைவர் அமித் ஷா, பொதுச் செயலாளர் ராம் மாதவ் இருவரும் ஆர்ப்பரித்தார்கள். உ.பி. முதலமைச்சர் 74 பொதுக்கூட்டங்களில் வாள் சுழற்றினார். பகட்டான தசரா பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கையோடு அவர் இந்தப் பேரணிகளுக்கு வந்திருந்தார். பைசாபாத் நகரை அயோத்தியா என்று பெயர்மாற்றம் செய்த கையோடு வந்திருந்தார். மிகப் பெரிய ராமர் சிலை நிறுவப்படும் என்ற ஆரவார அறிவிப்புகளை வெளியிட்ட கையோடு வந்திருந்தார். அனுமான் ஒரு தலித் என்ற அரிய கருத்து முத்துகளை அவர் உதிர்த்தார். அனுமான் என்ன நினைத்தார் என்று நமக்குத் தெரியாது, ஆனால் தலித் மக்கள் புண்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்கள். அனுமனின் இன்னொரு பெயராகிய பஜ்ரங்பலி என்னும் சொல்லை வைத்து வார்த்தை விளையாட்டில் இறங்கினார் (“அலிக்கு பதில் பஜ்ரங்பலி”) யோகி ஆதித்யநாத். ஹைதராபாத் நகருக்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றார், அந்த ஊர் மக்கள் கேள்விப்பட்டிராத பெயர் அது. அவர் போன இடங்களிலெல்லாம் பாஜக தோல்வியடைந்தது.
மக்கள் உணர்வு எதிர்ப்பு நிலைக்கு மாறுகிறபோது கடவுளாலும் காப்பாற்ற முடியாது. ஷா நிறுத்திய தேர்தல் பிரச்சாரகர்களால், பிரச்சார உத்திகளால் என்ன செய்துவிட முடியும்? ஜனநாயகம் உயிரோடு இருப்பது வேறொரு கடவுளால் – அந்தக் கடவுளின் பெயர் வாக்காளர்.
பின்குறிப்பு: இந்தக் கூடுதல் கட்டுரையின் நோக்கத்திற்குப் பயன்படக்கூடும் – இந்தியாவிலேயே முதல் முறையாக பசு நல அமைச்சராக நியமிக்கப்பட்டவரான ஒட்டாராம் தேவாசி, ராஜஸ்தானின் சிரோஹி தொகுதியில், காங்கிரசிலிருந்து வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.
சங்கர்ஷன் தாகுர்
நன்றி: தி டெலிகிராப்
தமிழில்: அ. குமரேசன்
https://www.telegraphindia.com/opinion/what-do-recent-reverses-tell-us-about-narendra-modi-s-political-health/cid/1678939?ref=also-read_story-page