விரிவாக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் இதற்கு தேவையான உள்கட்டமைப்பிற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி நிதி அளிக்கும் எனத் தெரியவில்லை.
இம்மாதத் துவக்கத்தில், நரேந்திர மோடி அரசு, கல்வி நிறுவனங்கள், அரசுப் பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு, முன்னேறிய சாதியினரில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. இத முடிவு திடீரென எடுக்கப்பட்டது. அரசியல் சாசனத் திருத்தம் தேவைப்படும் இந்த முடிவுக்காக மாநில அரசுகள் கலந்தாலோசிக்கப்படவில்லை. எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக அரசு, அடுத்து வரும் கல்வி ஆண்டிலேயே பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த இட இதுக்கீட்டை அமல் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறது.
ஆனால், இது எப்படி செயல்படுத்தப்படும் என்பது மெல்ல வெளிப்பட்டு வருகிறது. புதிய ஒதுக்கீட்டில் எந்தப் பிரிவும் விலக்கப்படாமல் இருக்க, கல்வி நிறுவனங்களில் 25 சதவீத கூடுதல் இடங்களை உருவாக்க மத்திய அரசு விரும்புவதாகக் கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்தக் கூடுதல் இடங்கள், வகுப்பறைகள், ஆசிரியர்கள், விடுதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க அரசு நிர்பந்திக்கும். இட ஒதுக்கீட்டை நிறைவேற்றப் பல்கலைக்கழகங்களுக்குக் கூடுதல் நிதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது. இருப்பினும், இந்த நிதி கூடுதல் செலவை ஈடு செய்யுமா என்று தெரியவில்லை. அப்படியே ஈடு செய்தாலும், சில மாதங்களில் இத்தகைய உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக முடியுமா என்பது விவாதத்திற்கு உரியது.
இந்த முடிவு பல்கலைகழங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஒதுக்கீட்டை நிறைவேற்ற ரூ.500 கோடி தேவை என பஞ்சாப் பல்கலைக்கழகம் கடந்த வாரம் தெரிவித்தது. இந்த நெருக்கடி, இத்தனை ஆண்டுகள் இடஒதுக்கீட்டைக் கண்டுகொள்ளாத தனியார் நிறுவனங்களில் இன்னும் அதிகமாக இருக்கும்.
தனியார் பல்கலைக்கழகங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. முதலில், இடஒதுக்கீடு முறையில் வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை யார் செலுத்துவார்கள்? தனியார் கல்லூரிகளின் அதிகக் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை எனில், இட ஒதுக்கீடு மூலம் பொருளாதார நலிந்த பிரிவினர் அனுமதி பெறுவார்கள் என எதிர்பார்ப்பதில் பயனில்லை.
தனியார் துறைக்கு அரசு ஆதரவு பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. தாங்கள் கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டியிருப்பதாகவும், கட்டணம் வசூலிப்பதில் எந்த விதக் கட்டுப்பாடும் தங்கள் நிதிநிலையை நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனவும் கடந்த வாரம் தி ஸ்க்ராலிடம் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அரசு கட்டணத்தை நிர்ணயித்தாலும்கூட, தனியார் கல்லூரிகள் மறைமுகமாகக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கலாம்.
புதிய இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதாள், இந்த ஆண்டு ஆசிரியர்களைப் பணியமர்த்தும் செயல்முறையும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, இந்த ஒதுக்கீடானது 2019-20 கல்வி ஆண்டில் அமல் செய்யப்பட வேண்டும் எனில் இது மாநில அரசுகளுக்குக் கூடுதல் சுமையாக மாறும். மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு ஓரளவு நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டிருந்தாலும்கூட, மாநில அரசுகளிடமிருந்து நிதியுதவி பெறும் மாநில அளவிலான கல்வி நிறுவனங்களில்தான் பெரும்பாலான இந்தியர்கள் உயர் கல்வி பெறுகின்றனர். கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற பொதுக்கல்வி அமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களின் பட்ஜெட்டிக்கு இது சுமையாகும்.
இந்தச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த முடிவால் ஆளும் கட்சி வாக்குகளை அறுவடை செய்ய முயற்சிக்கும் அதே நேரத்தில், எதிர்வரும் கல்வி ஆண்டில் குழப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்ருதிசாகர் யமுனன்
நன்றி : தி ஸ்க்ரால்
https://scroll.in/article/910207/the-daily-fix-without-proper-planning-10-reservation-could-cause-chaos-in-the-new-academic-year
வருசம் பூரா மோடி பதிவுதானா சார்..படிச்சு படிச்சு மோடியை விட இந்த தளத்து மேலே வெறுப்பு வந்துருமோன்னு பயமா இருக்கு…
தமிழக அரசியலையும் பேசுங்க சார்..:-(