விந்திய மலைகளுக்குத் தெற்கே பாஜகவின் அரசியல் ஆதாரத்திற்கு, கர்நாடகம் அதிமுக்கியமானது. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக் கட்சியின் ஆயுளை பாதிக்கும் அளவிற்கு பல இடங்களிலிருந்தும் அழுத்தம் வரத் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வாள்களை உருவித் தயாராக வைத்துக்கொண்டிருக்கின்றன.
2014ஆம் ஆண்டில் பிடித்த 17 இடங்களை மட்டும் பிடிப்பது பாஜகவின் இலக்கல்ல. அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தல் களத்தில் அதன் பயணம் எளிதானதாக இருக்கப்போவதில்லை. பெல்லாரி இடைத்தேர்தலில் சந்தித்த சமீபத்திய தோல்வி பெரும் பின்னடைவாக இருக்கிறது. பாஜக பெறக்கூடிய முன்னேற்றம் என்பது, அழுத்தங்களைத் தாங்குவதில் காங்கிரஸ் – ஜனதா கூட்டணிக்கு உள்ள திறனைப் பொறுத்ததாக இருக்கும்.
கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான சண்டை தொடர்ந்து, தேர்தலின்போது அது ஆழமாகுமாறு பார்த்துக்கொள்வது பாஜகவிற்கு இருக்கும் ஒரு வாய்ப்பு. கர்நாடக இடைத் தேர்தல் தோல்வி என்பது இனி வரப்போகும் கடினமான காலத்தின் ஒரு அறிகுறி. காங்கிரஸ் – ஜனதா கூட்டணியை பலனில்லாதது என்றும் இயற்கைக்கு மாறானது என்றும் பாஜக ஒதுக்குவது அதற்கு எவ்வகையிலும் உதவப் போவது கிடையாது.
முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஏற்பட்ட பின்னடைவு கட்சியின் பிரச்சினைகளைக் கூட்டியிருக்கிறது. குமாரசுவாமிக்கும் ரெட்டிக்கும் இடையிலான மோதல் 2006இல் இருந்து நடக்கிறது. 2018 மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலிலிருந்து, பாஜக திட்டமிட்டே ரெட்டி சகோதரர்களிடமிருந்து ஒதுங்கி நிற்கிறது. ஜாமீனில் வெளியானதிலிருந்து ரெட்டியும் அமைதியாகவே இருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில், பெல்லாரியில் ஆறு தொகுதிகள் காங்கிரஸ் வசம் சென்றன. ஸ்ரீராமுலுவின் சகோதரியை, வி.எஸ்.உருகப்பா என்ற புதிய நபர் இடைத்தேர்தலில் தோற்கடித்தது, பாஜகவைப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது. பாஜக, காங்கிரஸ் – ஜனதா கூட்டணியைச் சமாளிக்கும் உத்திகளை மாற்றியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தெற்கு பெங்களூரைச் சேர்ந்த நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான அனந்த் குமாரின் மரணமும் மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் பாஜக தக்கவைத்துக்கொண்டிருந்த தொகுதி அது. அது மதிப்புக்குரியதொரு தொகுதியாகவே இருந்துவந்தது, பெரிய ஆளுமைகளான கெங்கல் ஹனுமந்தையா (1967, 1971), குண்டு ராவ் (1989), பேராசிரியர் வெங்கடகிரி கௌடா (1991) ஆகியோருக்குப் பிறகு அனந்த் குமார் வசம் இருந்த தொகுதி அது. 2014 தேர்தலில், மோடி அலையில் நந்தன் நீலகேனி இந்தத் தொகுதியில் 2.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தூக்கி வீசப்பட்டது சாதனை.
காங்கிரஸ் கட்சி, தனது அரசியல் கணக்கில் மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவத்தையும் பங்கையும் உணர்ந்துவிட்டது. ஒருவேளை கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்னாலேயே கூட்டணி அமைத்திருந்தால், தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கக்கூடும். நாடாளுமன்றத் தேர்தலில் அப்படிச் செய்வதைத் தவிர அக்கட்சிக்கு வேறு வழி இல்லை.
பொதுத் தேர்தலுக்கான உத்திகளின் ஒரு பகுதியாக, நிலம், மது, வீடுகள் கட்டும் திட்டம் ஆகியவற்றில் உள்ள மோசடியை பாஜக முன்னிறுத்துகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட்டில் நிலவும் ஊழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் விளையாட்டை பாஜகவும் விளையாடியாக வேண்டும். காங்கிரஸ் நிதர்சனத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் – ஜனதா கூட்டணி அவசர அவசரமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இப்போது அது அரசியல் கட்டாயமாப் படுகிறது. காங்கிரஸின் பழைய செயலற்ற தன்மையை இது மாற்றியிருக்கிறது.
பிராந்திய உணர்வுகள்
நாடு முழுவதும் பிராந்திய உணர்வுகள் அதிகரித்துள்ளன. பாஜக மாநிலப் பிரிவு மத்தியத் தலமையால் முழுதாகக் கட்டுப்படுத்தப்படுகிறது எனும் பிம்பத்தைக் குறைத்துக்கொண்டு, பிராந்திய உணர்வுகளை மூலதனமாக்க வேண்டும். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இடங்களில் தங்கள் வலுவை அதிகரிக்கவும், எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைக்கிறதோ, அங்கெல்லாம் தன்னுடைய கொத்தளங்களைப் பாதுகாக்க வேண்டும். இதைச் செய்ய, தேவையான இடங்களில் கூட்டாளிகள் தேவைப்படும், இதைத் தந்திரமாகக் கையாள வேண்டும்.
தேர்தல் கணக்கு என்பது எல்லாக் கட்சிகளுக்கும் சிக்கலானதாகவே இருக்கும். ‘அச்சே தின்’ (நல்ல நாள்) என்னும் சொலை 2014இல் பாஜக முன்வைத்தபோது அது விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினர், வணிகர்கள் என எல்லாத் தரப்பினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்றோ அது எட்டாக் கனவாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் தான் செய்த சத்தியங்களை நிறைவேற்றியதாக வாக்காளர்களை பாஜக நம்பவைக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் நிலவும் ஏமாற்ற உணர்வையும் குழப்பத்தையும் அது சமாளிக்க வேண்டும், குறிப்பாக பெங்களூரு பகுதியில். 2018 மே மாதம் நடந்த தேர்தலும் அண்மையில் நடந்த இடைத்தேர்தலும் நகர்ப்புறத்தில் நிலவும் ஆற்றாமையைக் காட்டுகின்றன. காங்கிரஸ் பெங்களூருவில் 17 இடங்களை வென்றுள்ளது, பாஜகவோ 11 இடங்கள். இது பாஜகவிற்குக் கவலை ஏற்படுத்தும் சூழல். காரணம் பெங்களூரு நகர்ப்புற நடுத்தர மக்களே பாஜகவின் பாரம்பரியமான கோட்டை.
‘மஹாகட்பந்தன்’ உருவாவதற்கும் செயல்படுவதற்கும் எந்த ஒரு மந்திரக் கோலோ சூத்திரமோ இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கும் சவால்களையும் நிச்சயமற்றத்தன்மையும் பார்க்கும்போது, தேர்தலுக்கு முன்பும் பின்பும், எந்தப் பக்கமும் பல வழிகளில் திருப்பங்கள் ஏற்படக்கூடும். எதிர்க் கட்சி அணியில் இருக்கும் கட்சிகள் பாஜகவை எதிர்கொள்ளும் முன், தங்கள் பக்கம் வாக்குகள் விழும் வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
பாஜகவிற்கு, மக்களைத் திரட்டியாக வேண்டியது மிகவும் முக்கியம். இந்துத்துவச் செயல்திட்டம் பாஜ்கவுக்கு முக்கியமானதுதான். ஆனால், கர்நாடகத்தில் வாக்குகளையும் இடங்களையும் பெறுவதற்கு அது மட்டும் போதாது. காங்கிரஸ் – ஜனதா கூட்டணியை இயற்கைக்கு மாறானது என்றும், பயனற்றது என்றும் சொல்வதற்கும் பாஜகவிற்கு இந்துத்துவச் செயல்திட்டம் மட்டும் போதாது. போர்க்கலத்தில் நிலவும் கள யதார்த்தங்கள் தெளிவாக உள்ளன.
பல சவால்களைக் கொண்ட தேர்தல் நாளை எதிர்பார்த்து பாஜக தன்னுடைய அணுகுமுறை, பார்வை, உத்திகள் ஆகியவற்றை மாற்றிவருவதாகப் படுகிறது. பாஜகவிடம் மக்கள் மிகவும் நடைமுறை சார்ந்த விஷயங்களையே எதிர்பார்க்கிறார்கள். இன்னமும் மிச்சமிருக்கும் ‘மோடி’ அலை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப் போதுமானதல்ல.
கர்நாடக மாநிலம் தென்னகத்திற்கான தங்களுடைய நுழைவாயிலாக இருக்கும் என்பதை பாஜக உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுதான் கட்சியின் முன் இருக்கும் சவால்,
எம்.ஜே. வினோத்
நன்றி: டெக்கான் ஹெரால்ட்
https://www.deccanherald.com/opinion/main-article/slip-between-cup-and-lip-714243.html
தமிழில்: ஆஸிஃபா