மாணவர் சேர்க்கைக்கான தகுதி சதவீதத்திலிருந்து பெர்செண்டைல் முறைக்கு மாற்றப்பட்டது ஏன் என்பதை மருத்துவ கவுன்சிலின் முக்கியக் கோப்பு உணர்த்துகிறது. இந்தக் கோப்பைக் காணவில்லை.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அனுமதிக்கான அளவுகோலைச் சதவீதத்திலிருந்து, பெர்சண்டைல் முறைக்கு மாற்றும் நரேந்திர மோடி அரசின் முடிவு, தகுதி குறைந்தவர்கள் தேர்வாக வழி செய்தது. தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்ட பணக்கார மாணவர்கள் கிடைத்த இடங்களை வாங்கிக்கொண்டதால், தனியார் மருத்துவ கல்லூரிகளும் இதனால் லாபமடைந்தன.
இந்நிலையில், இந்த முடிவு தொடர்பான கோப்பு காணாமல் போயிருக்கிறது.
‘கோப்பைக் கண்டறிய முடியவில்லை’
இந்த முக்கிய முடிவு தொடர்பான கோப்பைக் கண்டறிய முடியவில்லை என, இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட கேள்விக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளித்துள்ளது. 2018 டிசம்பரில் இதற்கான மனுவை வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான தேவ் ஆசிஷ் பட்டாசார்யா தாக்கல் செய்தார்.
இந்த மனு மூலம் அவர், மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய, சதவீத முறையை பெர்சண்டைல் முறைக்கு மாற்றும் முடிவு தொடர்பான, ஆரம்பம் முதல் இறுதி வரையான கோப்புக் குறிப்புகள், குறிப்புக் காகிதங்கள், தொடர்பு விவரங்கள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
சதவீதத்திலிருந்து பெர்சண்டைல் முறைக்கு மாற்ற, மருத்துவ கவுன்சில் சட்டத்தில் ஏதேனும் மற்றம் செய்யப்பட்டதா என்றும் மனுதாரர் கேட்டிருந்தார்.
டிசம்பர் 19 தேதியிட்ட பதிலில், சதவீத முறையிலிருந்து பெர்சண்டைல் முறைக்கு மாற்றுவது தொடர்பான கோப்பைக் கண்டறிய முடியவில்லை என்பதால், இந்தத் தகவல்கள் / ஆவணங்களை அளிக்க முடியவில்லை என இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குனர்கள் குழு தெரிவித்துள்ளது.
காவல் துறையில் புகார்
ஜனவரி 14ஆம் தேதி, இது தேச நலனுக்கு மிகவும் முக்கியமானது என்பதால், இந்திய மருத்துவ கவுன்சில் அலுவலகத்தில் கண்டறியப்பட முடியாத அரசுக் கோப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவற்றைக் கண்டறிவதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என தில்லி காவல் துறை கமிஷனருக்கு பட்டாசார்யா கடிதம் எழுதினார்.
மருத்துவ கவுன்சிலில் தாக்கல் செய்த, ஆர்.டி.ஐ. மனு மற்றும் அதற்கான பதிலைக் குறிப்பிட்டு, ‘நீட் மூலம் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவச் சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிக்க நடைபெற்ற பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை மனுதாரருக்கு வழங்காமல் தடுக்கவே தொடர்புடைய கோப்புகள் வேண்டும் என்றே தேட முடியாமல் வைக்கப்பட்டுள்ளது’ என்று வழக்கறிஞர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய கோப்புகள் அரசுக்குச் சொந்தமானவை என்பதால், இதை தேச நலன் சார்ந்ததாகக் கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சட்டப்படி குற்றவாளிகளைத் தண்டிக்க தில்லி காவல் துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியவர், கோப்புகளுக்குப் பொறுப்பானவர் கண்டறியப்பட்டு, தொடர்புடைய துறைகளின் ஆவணங்களிலிருந்து கோப்புகள் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
`தகுதி இல்லாத மாணவர்களுக்கு அனுமதி’
தகுதி இல்லாத மாணவர்களை விலக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட பெர்சண்டைல் முறை, அவர்கள் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் நுழைய வழி செய்ததாகக் குற்றம்சாட்டப்படுவதால், இந்த மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
நீட் தேர்வு மூலமான மாணவர் சேர்க்கையில் இது பிரதிபலித்தது. 2015 சேர்க்கை ஆண்டுவரை, அனுமதிக்கான கட் ஆஃப் மதிப்பெண் பொதுப் பிரிவில் 50 சதவீதமாகவும், இடஒதுக்கீடு பிரிவில் 40 சதவீதமாகவும் இருந்தது.
2016இல் நீட் கொண்டு வரப்பட்டபோது, பொது மற்றும் இட ஒதுக்கீடு பிரிவில் பெர்செண்டைல் 50 மற்றும் 40 சதவீதமாக மாற்றப்பட்டது. பொதுப் பிரிவில் முன்னிலை இடத்தில் உள்ள அனைத்து 50 சதவீத பொதுப் பிரிவு மாணவர்கள் மற்றும் 40 சதவீத அனைத்து இடஒதுக்கீடு பிரிவினர், அவர்கள் மதிப்பெண் 50 சதவீதம் மற்றும் 40 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தாலும், சேர்க்கைக்குத் தகுதி பெறுவார்கள்.
நீட்டுக்குப் பிறகு
ஆக, 2015 வரை, பொதுப் பிரிவு மாணவர்கள் அனுமதி பெற 720 மதிப்பெண்களில் குறைந்தது 360 மதிப்பெண் பெற வேண்டும். 2016 முதல் இது குறையத் துவங்கியது.
2016இல், 50ஆவது பெர்செண்டைல் கட் ஆஃப் மதிப்பெண் 148ஆகக் குறைந்தது. 720 மதிப்பெண்ணுக்கு 20.8 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட அனுமதி பெற்றனர். இட ஒதுக்கீடு பிரிவில், 40ஆவது பெர்செண்டைல் மதிப்பெண் 118ஆக (மொத்த மதிப்பெண்ணில் 16.3 சதவீதம்) மட்டுமே இருந்தது.
2017இல், தகுதி மதிப்பெண்கள் பொதுப் பிரிவில் 131ஆக அல்லது 18.2 சதவீதமாக, இட ஒதுக்கீடு பிரிவில் 107ஆக அல்லது 14.8 சதவீதமாகக் குறைந்தது.
2018இல், தகுதி மதிப்பெண்கள் பொதுப் பிரிவில் 119ஆக அல்லது 16.6 சதவீதமாக, இட ஒதுக்கீடு பிரிவில் 96ஆக அல்லது 13.33 சதவீதமாகக் குறைந்தது.
தனியார் கல்லூரிக்குச் சாதகம்
பெர்செண்டைல் முறைக்கு மாறியதைக் கல்வியாளர்கள் கடுமையான விமர்சித்தனர். எதிர்காலத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் வகையில், தகுதி இல்லாத மாணவர்கள் மருத்துவ கல்வி பயில இந்த முறை வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்கள் 60,000 எனும் நிலையில், சேர்க்கைக்குத் தகுதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு இருக்கும் நிலையில், அதிக வசதி படைத்த மாணவர்கள் தனியார் கல்லூரி இடங்களை வாங்க இது வழி செய்தது. எனவே இந்த முறை, பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு உதவவில்லை.
கவுரவ் விவேக் பட்னாகர்
நன்றி: பிசினஸ் ஸ்டாண்டர்ட்
https://www.business-standard.com/article/education/crucial-file-on-new-neet-norms-which-enrich-private-colleges-goes-missing-119012000108_1.html