என்ன வாசகர்களே…. அதிர்ச்சியாக இருக்கிறதா ? ஜாபர் சேட், மீண்டும் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்தார். தற்போது, உளவுத்துறையின் டிஜிபியாக இருக்கும், ராமானுஜம், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக இருக்கும், கண்ணாயிரம், சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இப்படிப் பட்ட செய்திகளை செய்தித் தாளில் பார்த்தால் அதிர்ச்சியடையாதீர்கள். இதெல்லாம் இந்த அரசாங்கத்தில் நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.
அப்படித்தான் இந்த அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, சவுக்கு உட்பட, பல்வேறு பத்திரிக்கையாளர்கள், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர் என ஆயிரக்கணக்கானோர் உழைத்தனர். இவ்வாறு உழைத்தவர்களுக்கு, சென்னை மாநகர மேயராக வேண்டும் என்பதோ, விருப்புரிமை ஒதுக்கீட்டில் வீட்டு மனை பெற வேண்டும் என்பதோ விருப்பம் கிடையாது. அவர்கள் அனைவருக்கும், நாடு நன்றாக இருக்க வேண்டும், தீமை ஒழிக்கப் பட வேண்டும், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பது மட்டுமே விருப்பம். வேறு ஒன்றுமே கிடையாது.
ஆனால், இந்த ஆட்சியில் பெரும்பாலான விஷயங்கள் இது வரை நன்றாக நடந்தாலும், குடத்துப் பாலில் துளி விஷம் போல சில விஷயங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.
முதல் விஷயமாக, சவுக்கு பார்த்தது உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக கண்ணாயிரத்தை நியமித்தது. இது தொடர்பாக, கண்ணாயிரம், யார், அவரை நியமித்ததில் என்ன தவறு என்று சவுக்கு காதாயிரம் ஆன கண்ணாயிரம் என்ற கட்டுரையில் விரிவாகவே விளக்கியிருக்கிறது.
ஆட்சி மாறிவிட்டது என்பதற்காக, இந்த அதிகாரிகளைத் தான் நியமிக்க வேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லைதான். அது அரசின் உரிமை. ஆனால், கடந்த ஆட்சியில், செல்வாக்கோடு இருந்த அதிகாரிகளுக்கு நல்ல பதவி கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை. கடந்த ஆட்சியில் சட்டவிரோத செயல்களுக்கு துணை போன அதிகாரிகளுக்கு நல்ல பதவி கொடுப்பது எப்படி சரியாக இருக்கும் என்பதே நமது கேள்வி….
கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் பற்றி எழுதுகையில், அவர் பெயரோடு நாயுடு என்பதை சேர்த்து எழுதியதற்கு, சவுக்கின் வாசகர்கள் பலர் அன்போடு கடிந்து கொண்டிருந்தார்கள். வாசகர்கள் ஒரு விஷயத்தை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இந்த சமூகத்தில் சாதி என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இருக்கிறது. அதுவும், காவல்துறையில் நடக்கும் அரசியலில், இந்த சாதி ஒரு முக்கிய அம்சம். பல காவல்துறை அதிகாரிகளைப் பற்றி சவுக்கு எழுதினாலும், ஒரு சில குறிப்பிட்ட அதிகாரிகளைப் பற்றி எழுதுகையில் மட்டும் தான் சாதியை குறிப்பிடுகிறது என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். சரி, சாதியைப் பற்றி எழுதக் கூடாது என்றால், கண்ணாயிரத்துக்கு இந்தப் பதவியை பெற்றுத் தந்தது எது என்பதை யோசித்துப் பாருங்கள். ராதாகிருஷ்ணன் என்பவர், நாயுடு லாபியை பலமாக பயன்படுத்துபவர். இந்த லாபியை பயன்படுத்தி, தொழில் அதிபர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், என்று ஒரு பெரிய நெட்வொர்க்கையே வைத்திருக்கிறார் தெரியுமா ? அதனால் தான் அவர் பெயரோடு சாதிப் பெயர் சேர்க்கப் படுகிறது.
இந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச்சால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளார் என்று கண்டறியப்பட்டு, அந்த விசாரணையை சந்திக்க வேண்டியவர். உச்சநீதிமன்ற தடை உத்தரவால், இந்த வழக்கில் மேற்கொண்டு, முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது.
இது தவிரவும், கடந்த ஆட்சியின் ஆட்சியாளர்கள் சொன்னவற்றுக்கொல்லாம் தலையாட்டி, தேவையான காரியங்களை செய்து கொடுத்தவர். இந்த ஆட்சி வந்ததும், இவர், மின் வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். அப்போது உண்மையில் சவுக்கு மகிழ்ந்தது. ஏனென்றால், ராதாகிருஷ்ணனின் நடவடிக்கைகள் சவுக்குக்கு நன்கு தெரியும். அதிகாரமும், ஏவலாட்களும் இல்லாவிட்டால், ராதாகிருஷ்ணன் செத்து விடுவார். அதிகாரமும், வெட்டி பந்தாவும் தான் ராதாகிருஷ்ணனின் மூச்சு.
ஆனால் மின் வாரியத்தில் நியிமிக்கப் பட்ட ஒரே வாரத்திற்குள் ராதாகிருஷ்ணனை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமித்திருக்கிறது இந்த அரசு. இது மிக மிக வேதனையான ஒரு விஷயம்.
இதே போல மற்றொரு நியமனம், ஸ்நேக் பாபு என்று அழைக்கப் படும், சைலேந்திரபாபுவுக்கானது. செம்மொழி மாநாடு நடந்த சமயத்தில், கோவை மாநகர ஆணையாளராக இருந்த ஸ்நேக் பாபு, ஏறக்குறைய செம்மொழி சொம்பாகவே மாறிப் போனார்.
இந்த ஆட்சியில், வடக்கு மண்டல ஐஜி என்ற அதிகாரமிக்க பதவி அவருக்கு பரிசாக வழங்கப் பட்டிருக்கிறது.
இந்த நேரத்தில், கடந்த ஆட்சியால் பழிவாங்கப் பட்ட எஸ்.கே.உபாத்யாய் என்பவரை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கியவர். அவர் மீதான குற்றச் சாட்டு, தனக்கு வந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வைத்தார் என்பது. எந்த உரையாடலை அவர் பதிவு செய்து வைத்தார் ?
முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி என்பவர், இப்போது முதலமைச்சராக உள்ள செல்வி.ஜெயலலிதா மீது, கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக ஒரு புதிய ஊழல் வழக்கை பதியச் சொல்கிறார். உபாத்யாய், சார், அதற்கு ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஆனால், திரிபாதி, இல்லை, இல்லை, நீங்கள் நான் சொன்னது போல் செய்தீர்கள் என்றால் ஆதாரங்கள் கிடைக்கும். அதனால் அது போலச் செய்து வழக்கு பதிவு செய்யுங்கள் என்று கூறுகிறார்.
உபாத்யாய் என்பவரை சவுக்குக்கு 1991 முதல் தெரியும். அவர் எஸ்.பியாக இருந்த போது, அவர் கையால் தான் சவுக்கு வேலை நியமன ஆணையை பெற்றது. அப்போது உபாத்யாய், சவுக்கை அழைத்துச் சென்ற கண்காணிப்பாளரிடம் கேட்ட கேள்வி, “இந்த இளைஞனின் வாழ்வை ஒரு குமாஸ்தாவாக வீணடிக்கலாமா ?” என்று கேட்டார். அந்த கண்காணிப்பாளர், சார், இங்கிருந்து கொண்டே, தபால் மூலம் படிக்க இவருக்கு வாய்ப்பு இருக்கிறது, படித்து விட்டு, வேறு வேலைக்குச் செல்லலாம், ஆனால், இப்போது இவரது குடும்பம் இவர் வேலையை நம்பித்தான் இருக்கிறது என்று கூறினார். ஒரு 16 வயது இளைஞன், குமாஸ்தாவாக தனது வாழ்வை வீணடித்து விடக்கூடாது என்று அக்கறை கொண்டவர். உபாத்யாய் மிக மிக எளிமையான மனிதர். அரசின் ரகசிய நிதியிலிருந்து 10 ரூபாயை எடுக்க மாட்டார். 1991ல், அவர் எஸ்பியாக இருந்த போது, மதிய உணவாக, அண்ணா சாலையில் உள்ள மெக்ரென்னெட் பேக்கரியில் ஒரு சால்ட் ப்ரேட் வாங்கி வரச் சொல்வார். அந்த பத்து ரூபாயை தனது பாக்கெட்டிலிருந்து தான் எடுத்துக் கொடுப்பார். அவர் மட்டும் ரகசிய நிதியை தொடாமல் இருந்தது இல்லை. அவர் இருக்கும் வரை, மற்றவர்களையும், வீண் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வார்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு வழக்கம் உண்டு. நிதி ஆண்டு இறுதியில், மீதம் உள்ள ரகசிய நிதியை, மொத்தமாக எடுத்து, அனைவரும் பங்கு போட்டுக் கொள்வார்கள், அல்லது, அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுப்பார்கள். ஆனால் 2007ல் உபாத்யாய் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநராக வந்ததும், அந்த பிரியாணி விருந்து கொடுப்பதை ஒழித்தார். ஆண்டு இறுதியில் மீதமாகும் ரகசிய நிதியை, அரசிடம் ஒப்பளிப்புச் செய்வார்.
உபாத்யாயைப் பற்றி, ஒரு டிஎஸ்பி சொன்ன தகவல், உபாத்யாய் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியது. உபாத்யாய் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பு, மதுவிலக்குத் துறையின் கூடுதல் டிஜிபியாக இருந்தார். அப்போது இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், சென்னை அரசு மருத்துவமனையில், ஜெனரல் வார்டில் அட்மிட் ஆகி படுத்திருந்திருக்கிறார். வேறு ஒரு விசாரணைக்காக அங்கே சென்ற ஒரு டிஎஸ்பி, இவரை ஜெனரல் வார்டில் பார்த்து அதிர்ந்து போய், “சார் என்ன சார் இது ? உடனே அப்போல்லோவுக்கு போகலாம், ஆம்புலன்சை வரச் சொல்கிறேன்“ என்று கூறியிருக்கிறார். உபாத்யாய் அதற்கு மறுத்ததும், பிறகு, அந்த மருத்துவமனையின் டீனிடம் சொல்லி, அரசுப் பொது மருத்துவமனையிலேயே, விஐபி வார்டில் உபாத்யாயை அனுமதித்திருக்கிறார்கள்.
1991 முதல், 2008 வரை உபாத்யாய் துளி கூட நேர்மை தவறாமல், அப்படியே இருந்ததைப் பார்த்து சவுக்குக்கு வியப்பான வியப்பு.
அந்த அதிகாரியை கருணாநிதி அரசு, தொலைபேசி உரையாடலை பதிவு செய்து வைத்திருந்தார் என்ற குற்றத்தை சுமத்தி சஸ்பென்ட் செய்தது. பிறகு சில காலம் கழித்து போக்குவரத்துக் கழக விஜிலேன்ஸ் அதிகாரி என்ற உப்பு சப்பில்லாத பதவிக்கு நியமித்தது. இவர் மீது துறை நடவடிக்கை எடுக்கப் பட்டது. இவருக்கு டிஜிபி பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் லத்திக்கா சரணை விட பணியில் மூத்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவர் மீதான துறை நடவடிக்கை நடத்திய விசாரணை அதிகாரி, உபாத்யாய் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அறிக்கை அளித்தார். ஆனால் அப்போது உள்துறைச் செயலாளரகவும், தலைமைச் செயலாளராகவும் இருந்த மாலதி, இறுதி வரை உபாத்யாய்க்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கவில்லை.
கடந்த ஆட்சியில் தான் இப்படி என்றால், இந்த ஆட்சியிலும் உபாத்யாய் அவர்களுக்கு ஒரு மாதம் ஆகியும் பதவி உயர்வும் வழங்கவில்லை, வேறு நல்ல பதவிகளும் வழங்கப் படவில்லை.
திமுக அரசால், ராதாகிருஷ்ண நாயுடு மற்றும் மாலதியின் சதியால் பழிவாங்கப் பட்ட மற்றொரு அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன். இவருக்கு சிக்கல் உருவாகியதே, ராதாகிருஷ்ணனைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறியதால் தான். உயர்நீதிமற் வழக்கறிஞர் காவல்துறையினர் மோதல் விவகாரத்தில் அப்போது கூடுதல் ஆணையராக இருந்த விஸ்வநாதன், வேண்டாம் என்று தடுத்தும், ஆணையர் ராதாகிருஷ்ணன் தடியடி நடத்த உத்தரவிட்டார் என்று உயர்நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த காரணத்தாலேயே அவர் பழிவாங்கப் பட்டார்.
அவர் கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாடு நியூஸ் பிரின்ட் நிறுவனத்தின் விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். இவருக்கும் இன்று வரை நல்ல பதவி வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கண்ணாயிரம் போன்ற அதிகாரிகள் நல்ல பதவிக்கு வருவதன் ஆபத்து என்ன தெரியுமா ? கடந்த வாரம், பழைய டிஜிபி லத்திக்கா சரணிடம் தொலைபேசியில் பேசிய கண்ணாயிரம், மே 13 அன்று விடுப்பு முடித்து வந்து பணியில் சேருங்கள். உங்களுக்கு நல்ல பதவி வாங்கித் தருவது எனது பொறுப்பு என்று கூறியிருக்கிறார்.
இது மட்டும் அல்ல…. மகள் திருமணத்திற்காக, சிபிஐயின் குற்றவாளியிடமிருந்து சலுகை பெற்றார் என்று சவுக்கில் படித்தீர்கள் நினைவிருக்கிறதா ? டிஜிபி போலாநாத். அவரை தீயணைப்புத் துறையின் இயக்குநராக நியமித்தது அதிமுக அரசு. போலாநாத்துக்கு, அந்தப் பதவியில் உட்கார பிடிக்கவில்லையாம். அதை மிக கேவலமான பதவி என்று கருதுகிறாராம். அதனால், ஜெயலலிதா யார் சொன்னால் கேட்பார் என்று, ஜெயலலிதா கேட்கும் ஒரு நபரை பிடித்திருக்கிறார். இதையடுத்து, அடுத்த வாரம், போலாநாத் வேறு பதவிக்கு நியமிக்கப் படுவதற்கான சாத்தியங்கள் அதிகப் பட்டிருக்கின்றன.
கண்ணாயிரத்துக்கு நல்ல பதவி கிடைத்து விட்டது. நாயுடுவுக்கும் நல்ல பதவி கிடைத்து விட்டது. அடுத்து யார் ? ஜாபர் சேட் தானே… அவர் மட்டும் பாவம் ஏன் ராமநாதபுரத்தில் வாட வேண்டும். அவரையும் சென்னைக்கு கொண்டு வந்து உளவுத்துறையிலேயே, உளவுத்துறை ஏடிஜிபி 2 என்று போட்டு விடுங்கள். ஆனால், ராமானுஜம் இவர்கள் இருவருக்கும் இடைஞ்சலாக இருப்பார். உண்மையை பேசுவார். அதனால் அவரை மாற்றி விடுங்கள்.
மீண்டும் கருணாநிதி ஆட்சி வந்த ஒரு உணர்வு ஏற்படட்டும்.