ஆர்டர்கள் குறைவானதாலும் ரிசர்வ் பணம் கிடைக்கப்பெறாததாலும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமாகிய எச்ஏஎல் மோசமான ஒரு எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்துக்கு வாய்ப்பு தர வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தந்திரமான விற்பனை வழியைக் கண்டுபிடித்து லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமான BEMLஐ நரேந்திர மோடி அரசு கிட்டத்தட்ட முடக்கிவிட்டது. ஆயினும் இம்முயற்சியில் அது தோற்றுவிட்டது. விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டையும் (எச்ஏஎல்) மூட இப்போது அரசு முயற்சி மேற்கொள்ளுமோ?
பாதுகாப்புத் துறை வல்லுநர்களும் அரசின் அரசியல் எதிரிகளும் இப்படி நடக்குமென்றே நினைக்கின்றனர். எச்ஏஎல்லின் உயர்மட்ட அதிகாரிகளும் தொழிற்சங்கத் தலைவர்களும் வெளிப்படையாக இதுபற்றிப் பேசாவிட்டாலும் அரசின் சாதுர்யம் பற்றியும் 2017-18ஆம் ஆண்டு இதுவரை கண்டிராத அளவு ரூ.18,283 கோடி லாபம் ஈட்டிய, விமானபாகங்கள் துறையில் உலகளாவிய நிறுவனமாக மாற வேண்டும் என்ற இலக்குடன் இயங்கிவரும் நிறுவனம் பற்றிய அரசின் சமீபகால முடிவுகள் பற்றியும் சந்தேகத்துடன் பேசுகின்றனர்.
இவையெல்லாம் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு நல்ல அறிகுறிகளே அல்ல. மோடி அரசு எடுத்த காரணமற்ற, சுவாரசியமான பல முடிவுகள் விமானபாகங்கள் உற்பத்தி செய்யும் நாட்டின் முன்னணி நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்த உதவாமல் பொதுத்துறை நிறுவனங்களில் தன் பங்கைக் குறைத்து நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்யும் விருப்பத்தை ஈடேற்றிக் கொள்ளவே உதவின.
நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் தரப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறிய பின்னரும் எச்ஏஎல்லின் ஆர்டர் புத்தகம் காலியாகவே இருக்கிறது. 2 சீட்டுகள் கொண்டு பல வேலைகள் புரிந்து நீண்ட தூரம் பயணிக்கும் சுகோய் Su-30 MKI ரக விமானங்களைத் தன் நாசிக் ஆலையில் கட்டுமானம் செய்வதற்கான நீண்டகாலத் திட்டம் இப்போது கடைசி 23 விமானங்கள் மட்டுமே இருக்கும் நிலையை அடைந்துவிட்டது; 73 ‘துருவ்’ இலகு ரக ஹெலிகாப்டர்களை (ALHs) உற்பத்தி செய்யும் ஆர்டரும் முடிவுக்கு வரப்போகிறது.
எச்ஏஎல்லின் ஆர்டர்கள் பற்றி அரசு பொய் கூறுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டிய பின், இதைத் தெளிவுபடுத்த நிர்மலா சீதாராமன் ட்வீட் போட்டிருந்தார். ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர்களில் எச்ஏஎல் இதுவரை ரூ.26,570 கோடி மதிப்புள்ள ஆர்டர்களில் மட்டுமே இதுவரை கையெழுத்து போட்டுள்ளது. இதில் 19 டோர்னியர் 228 ரக விமானங்கள் (ரூ.3,400 கோடி மதிப்பு), துருவ், சீதல் மற்றும் சேதக் ரக ஹெலிகாப்டர்களும் (ரூ.15000 கோடி மதிப்பு) ரூ.8400 கோடி மதிப்புள்ள விமான இஞ்ஜின்களும அடங்கும்.
200 காமோவ் 226T ரக ஹெலிகாப்டர்கள், 83 தேஜஸ் இலகு ரக சண்டை விமானம் (Mk1A அமைப்பு) மற்றும் 15 இலகு ரக சண்டை விமானங்களும் (LCHs) மொத்தமாக சுமார் மீதி ரூ.73,000 கோடி மதிப்புள்ள ஆர்டரானது இப்போதுதான் தீர்மான கோரிக்கை (RFP) நிலையில் அல்லது தேவை ஒப்புதல் நிலையில் (acceptance of necesity) உள்ளது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்திடமிருந்து முறையே 10 மற்றும் 5 இலகு ரக விமானங்கள் தேவை என்ற ஆர்டர் எச்ஏஎல்லுக்குக் கிடைத்துள்ளது. மேற்சொன்ன நிலைகளில் இருக்கும் திட்டங்கள் அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம்; சில சமயம் இவை அமலாகாமலும் போகலாம். மேலும், ரூ.20,000 கோடி மதிப்பிலான காமோவ் 226T ரக ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தத்தில் எச்ஏஎல்க்கு முழு ஆர்டரும் கிடைக்காது. ரூ.30 கோடி முதலீடு கொண்ட இந்திய-ரஷ்ய நிறுவனம் (தனியார்) ஒன்று இதற்காக அமைக்கப்பட்டுள்ளது; இதில் எச்ஏஎல்ன் பங்கு 50.5%, ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸின் பங்கு 42.5% மற்றும் ரோஸோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் பங்கு 7% ஆக இருக்கும். காமோவ் பற்றிய எந்த ஆர்டரும் புதிய நிறுவனத்துக்குத்தான் கிடைக்கும்; மேற்சொன்ன இரண்டு நிறுவனங்கள் போல எச்ஏஎல்லின் பங்கு டிவிடெண்டுகளைப் பெறுவதுடன் முடியும்.
பாதுகாப்பு அமைச்சர் தன் முடிவை மாற்றியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கேள்வி கேட்டனர். “அரசின் வியூகமானது எச்ஏஎல்ஐ பலவீனமாக்குவதாக உள்ளதே தவிர, அதற்கு நிதியுதவி தருவதாக இல்லை; இந்தியாவின் வியூகரீதியான திறனை அழித்து அனில் அம்பானிக்குப் பரிசு தர அரசு நினைக்கிறது,” என்று சாடினார் ராகுல் காந்தி. எச்ஏஎல்லைச் சேர்ந்த பலரும் இதை ஒப்புக்கொள்கின்றனர். உலகில் விமான பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு நிறுவனமும் எச்ஏஎல் நிறுவனத்தால் பயிற்சி தரப்பட்ட டிசைனர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கில் பெங்களூருவில் டிசைன் மையங்களை அமைத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டிவிடெண்டு தொகை
2003-04 முதல் 2017-18 வரை ரூ.8996 கோடியை டிவிடெண்டாகத் தரும்படி காங்கிரஸ், பாஜக தலைமையிலான மத்திய அரசுகள் எச்ஏஎல் நிறுவனத்தை வற்புறுத்தின; இத்தொகையில் 50%க்கு மேல் தற்போதைய பாஜக அரசின் காலத்தில்தான் எச்ஏஎல் நிறுவனத்தால் தரப்பட்டது.
2002-03 முதல் 2012-13 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் அரசுக்கு எச்ஏஎல் ரூ.4366 கோடியை டிவிடெண்டாகத் தந்தது. 2013-14 முதல் 2017-18 வரையிலான அதற்கடுத்த 5 நிதியாண்டுகளில் ரூ.4630 கோடியைத் தந்தது.
பாஜக அரசு 2015-16இல் நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக ‘ஈக்விட்டி பைபேக்’ திட்டத்தில் கலந்துகொள்ளுமாறும், அரசுக்கு இரண்டு தவணைகளில் ரூ.6393 கோடிகள் தந்து தனது பங்குகளைத் தானே வாங்கிக்கொள்ளுமாறும் எச்ஏஎல்லைப் பணித்தது. இந்த பைபேக்குகள் மூன்றாண்டுக்குள் – 2015-16இல் ரூ.5265 கோடியாகவும் 2017-18இல் ரூ.1128 கோடியாகவும் – திரும்பி வந்ததால் நிறுவனத்தின் நிதிச்சுமை அதிகரித்தது.
2013-14இல் ரூ.1041 கோடி, 2014-15இல் ரூ.576 கோடி, 2015-16இல் ரூ.755 கோடி, 2016-17இல் ரூ.963 கோடி மற்றும் 2017-18இல் ரூ.1295 கோடி என கடந்த 5 ஆண்டுகளில் எச்ஏஎல் ரூ.4631 கோடிகளை டிவிடெண்டுகளாகவும் வரியாகவும் அரசுக்குத் தந்துள்ளது.
ஈக்விட்டி பைபேக்குகளைச் சேர்த்தால் இத்தொகை ரூ.11024 கோடியாக உயர்ந்துவிடும். பங்குச்சந்தையில் எச்ஏஎல்ன் பங்கானது கடந்த சில மாதங்களில் 30% குறைந்துவிட்டது; ரூ.1184ஆக ஓராண்டு இருந்த பங்கின் விலை இப்போது ரூ.814ஆக ஆகிவிட்டது.
எப்போதும் பணப் புழக்கம் இருக்கும் எச்ஏஎல் ரிசர்வ் நிதியில் ரூ.20000 கோடிகளை 2011இலும், ரூ.17671 கோடிகளை 2015இலும் வைத்திருந்தது. தற்போதைய நிதியாண்டின் மூன்றாவது கால் பகுதியில் இத்தொகை ரூ.700 கோடியாகக் குறைந்ததால் நிறுவனம் (தன் வரலாற்றில் இரண்டாவது முறையாக) கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு முன் 1990ஆம் ஆண்டு Su-30 ஆர்டர் கிடைக்கும் முன்னரும் நிறுவனம் கடன் வாங்க நேரிட்டது.
2018இல் எச்ஏஎல் தன் சொத்துக்கெதிராக கிட்டத்தட்ட ரூ.1000 கோடியை உதிரி பாகங்கள் வாங்கவும், உற்பத்திக் கூடங்களை நடத்தவும், வியாபாரிகளுக்குத் தரவும், கட்டுமானப் பணிக்காகவும், ஆலை/இயந்திரங்களுக்காகவும், வருவாய் செலவுக்காகவும், தன் 29,000 நிரந்தர மற்றும் 10,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் தரவும் (மாதம் ரூ.358 கோடி தேவைப்படும்) கடனாகப் பெற்றது.
‘ஃப்ரண்ட்லைன்’ இதழுக்குப் பேட்டியளித்த எச்ஏஎல் போர்டு உறுப்பினர் ஒருவர் பங்கைக் குறைப்பது, டிவிடெண்ட் பற்றி முடிவெடுப்பது அரசின் உரிமை என்றார். “எச்ஏஎல்ஆல் சம்பளம் தரவே முடியாத நிலை இருக்கும்போது அதனிடம் ஏன் டிவிடெண்ட் கேட்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசு மட்டும்தான் பதில் கூற முடியும். அரசு எச்ஏஎல்லின் தோலை உரித்து நசுக்க நினைக்கிறது போல்தான் தெரிகிறது,” என்ற அவர் நிறுவனத்தின் தற்போதைய (குறைவான) ஆர்டர்கள் அது நீண்ட காலம் நிலைத்து நிற்க நிச்சயம் உதவாது என்றார்.
“பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் கிடைக்கும் அதீதமான பணத்தால் எச்ஏஎல் வெறும் உரிமம் தயாரிக்கும் நிறுவனமாக மட்டும் இருந்து தன் சொந்த விமானத்தைத் தயாரிக்காமல் இருப்பது நல்லது என்றுதான் அந்நிய உற்பத்தியாளர்கள் (OEMs) விரும்புவர். Su-30 (MKI அமைப்பு) ரக விமானம் இதற்கு ஒரு உதாரணம். ரஷ்யாவிலிருந்து தருவிக்கபட்ட 272 சுகோய் ரக விமானங்களின் பெரும்பகுதியை நாம் உற்பத்தி செய்திருந்தாலும், அவற்றை நாம் இங்கு இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளால் அசெம்பிளி மட்டும்தான் செய்தோம். ஆனால், அரசு எச்ஏஎல்லுக்கு உதவுவதற்கு பதிலாக அதை நசுக்குகிறது,” என்கிறார் நிறுவனத்தின் முன்னாள் நிதி இயக்குநர் ஒருவர்.
வாராக் கடன்கள்
நிலையான / சுழலும் இறக்கை கொண்ட விமானம் மற்றும் இந்திய விமானப் படையின் விமானங்களின் பராமரிப்பு / பழுதுபார்த்தலுக்கான வேலைக்கான ஆர்டர்படி வேலையை எச்ஏஎல் முழுவதும் முடித்தபோதிலும் அதற்கான தொகை தரப்படாததால் கடந்த நிதியாண்டில் ரசீதுகள் கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. கொடுமை என்னவென்றால், எச்ஏஎல்லின் மாபெரும் வாடிக்கையாளரான இந்திய விமானப்படையே நிறுவனத்துக்கு ரூ.15,400 கோடி தொகையைச் செலுத்தாமல் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறது.
சில Su-30 MKIs வகை விமானங்கள், 5 தேஜஸ் இலகு ரக சண்டை விமானங்கள், மிராஜ் 2000 ரகம் மற்றும் ஜாகுவார் மேம்பாடு மற்றும் துருவி, ருத்ரா வகை ஹெலிகாப்டர்களை விமானப் படைக்கு சப்ளை செய்ய வேண்டியுள்ளதால் எச்ஏஎல் சேர்மன் ஆர். மாதவனின் கூற்றின்படி இந்த ஆண்டு மார்ச் வரை இத்தொகை நிச்சயம் ரூ.20000 கோடியைத் தாண்டிவிடும். 2017-18 நிதியாண்டின் முடிவில் விமானப் படை எச்ஏஎல்லுக்குத் தர வேண்டிய தொகை ரூ.7000 கோடியாக இருந்தது.
2018-19ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்திய விமானப் படைதான் பிரதானமான பயனாளராக (நவீனப்படுத்துதலில்) இருந்து ரூ.33085 கோடிகளைப் பெற்றது; ராணுவத்துக்கு ரூ.21211 கோடிகளும், கடற்படைக்கு ரூ.19927 கோடிகளும் கிடைத்தன. நம்பத்தகுந்த தகவல்களின்படி விமானப் படையிடம் வருவாய்ச் செலவிற்கோ எச்ஏஎல்லுக்குத் தருவதற்கோ போதுமான நிதி வசதி இல்லை எனத் தெரிகிறது. ஒதுக்கப்பட்ட தொகையில் பெரும்பங்கு அந்நிய வியாபாரிகளுக்கு – குறிப்பாக, 2016 செப்டம்பரில் ஆர்டர் செய்யப்பட்டு, இதுவரை டெலிவரி செய்யப்படாத 36 ரஃபேல் ரக சண்டை விமானங்கள் ஒப்பந்தத்துக்காக ஃபிரெஞ்சு நிறுவனம் டஸால்ட் ஏவியேஷனுக்கு ரூ.20000 கோடிகளும் 2015ஆம் ஆண்டு கையெழுத்தான அபாச்சி, சினூக் ரக ஹெலிகாப்டர்கள் சப்ளைக்காக போயிங் நிறுவனத்துக்கும் தரப்பட்டதாம்.
அந்நிய OEMகளுக்குத் தர வேண்டிய தொகைகளை விமானப் படை தவறாமல் செலுத்திவிட்டது; ஆனால் உள்ளூர் அரசு நிறுவனத்துக்குத் தராமல் பாக்கி வைத்துள்ளது. இவ்வுண்மை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அரசுக்கு அந்நிய OEM நிறுவனங்கள்தான் முன்னுரிமையான விஷயம் என்பதும் பொதுத்துறை நிறுவனங்கள் இரண்டாம் பட்சம்தான் என்பதும் தெரிந்து விட்டது. தற்போதையை நிதியாண்டின் முடிவில் எச்ஏஎல்லின் பணப் பற்றாக்குறை ரூ.6000 கோடியாக இருக்குமென்று நம்பப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் 15% தொகையும் அவ்வப்போது சிறுசிறு தொகையாக மீதமும் செலுத்துவதுதான் நடைமுறை என்கின்றனர் விமானப் படை அதிகாரிகள். இவ்விஷயத்தில் சிறுசிறு தொகையாக ஏன் செலுத்தவில்லை என்பதுதான் இப்போதைய கேள்வி. விமானங்களைப் பராமரிக்கும் தன் கட்டமைப்பு வசதிகளை நடத்தவும் எச்ஏஎல்லிடம் பணமில்லாததால் இது அதன் எதிர்காலத் திட்டங்களையும் பாதிக்கலாம்.
அச்சுறுத்தலில் இருக்கும் திட்டங்கள்
நிதிப் பற்றாக்குறையால் தடைபடும் திட்டங்களுள் தேஜஸ் விமானத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு 8 முதல் 16 விமானங்கள் தயாரிக்கும் திட்டமும் அடங்கும். ஆரம்பத் திட்டத்தின்படி எச்ஏஎல்லும் விமானப் படையும் ரூ.1381 கோடி மதிப்புள்ள இத்திட்டத்திற்குச் சம பங்கு நிதியுதவி தருவதாக இருந்தது.
ரூ.500 கோடி செலவில் எச்ஏஎல் உருவாக்கிவரும் அடிப்படை ட்ரெயினர் எனும் ஹிந்துஸ்தான் டர்போ ட்ரெயினர் (HTT-40) வேலையும் (கிட்டத்தட்ட முடிந்துவிட்டது) இதனால் இன்னும் தாமதமாகலாம். எச்ஏஎல் நிதியுதவி தர ஒப்புக்கொண்ட பிற திட்டங்களில் இலகு ரக ஹெலிகாப்டர் உற்பத்தி (ரூ.376 கோடி மதிப்பு) திட்டமும் இலகு ரக பல்நோக்கு ஹெலிகாப்டர் (LUH) திட்டமும் (ரூ.200 கோடி மதிப்பு) அடங்கும்.
தேஜஸ் திட்டத்தைப் பொறுத்தவரை டிசைன் இறுதிசெய்யப்படாததால்தான் தாமதமாகிறது என்கின்றன எச்ஏஎல் வட்டாரங்கள். “தேஜஸ் டிசைன் செய்யும் வேலையை ஏரோனாடிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA) செய்கிறது. இது உள்ளூரில் செய்யப்படுவதல்ல. ADA தொடர்ந்து நேரம் கேட்டுவருவதால் தேஜஸின் டிசைனும் தொடர்ச்சியாக மாற்றத்துக்குள்ளாகி வருகிறது. சமீப காலத்தில் மட்டும் 300 முறை இப்படி ஆகிவிட்டது. இதற்கு எச்ஏஎல் எப்படிப் பொறுப்பேற்க முடியும? வெளியிலிருக்கும் ஒரு ஏஜென்சியிடம் டிசைன் செய்யச் சொன்னதுதான் மிகப் பெரிய தவறு. எச்ஏஎல்லின் ARDC-யில் (விமான ஆய்வு & டிசைன் மையம்) 5000க்கும் மேற்பட்ட டிசைனர்கள் இருக்கின்றனர். இலகு ரக விமான டிசைன் வேலை அவர்களிடம் ஏன் தரப்படவில்லை? எச்ஏஎல்லின் மனித ஆற்றல் தேவையற்ற பாதுகாப்புத் துறை பொருட்காட்சிகளிலும் விமானப் பொருட்காட்சிகளிலும்தான் செலவாகிறது” என்று புலம்புகிறார் மூத்த எச்ஏஎல் அதிகாரி ஒருவர்.
ஆனாலும் உண்மையை வெளிப்படையாகச் சொல்ல முடியாத எச்ஏஎல்லின் நிலைமையால் நிறுவனத்துக்கு நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது: ஜெட் டிரெய்னர் விஷயம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தவறான டிசைனின் காரணமாக இந்த விமானத்தை சீரமைக்க முடியாது என்று உச்சபட்ச நிர்வாகத்தினருக்குத் தெரிந்திருந்தபோதும், காலம், பணம் / ஆள்பலத்தை வீணடித்து நிறுவனம் இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தது.
“தவறு எங்கு நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை ஒப்புக்கொண்டு இதை நிறுத்த ஒருவரும் முன்வரவில்லை. அதனால் பண விரயம் தொடர்ந்தது. பல்நோக்குப் போக்குவரத்து விமான உற்பத்தியில் ரூ.125 கோடியை ரஷ்யர்களுடன் சேர்ந்து நாங்கள் கூட்டாக முதலீடு செய்தோம். ரஷ்யத் திட்டம் தொடங்கிவிட, நமது திட்டம் தோல்வியுற்றது. 30 பில்லியன் அமெரிக்க டாலர் 5-ஆம் தலைமுறை சண்டை விமான உற்பத்தி திட்டத்தில் எச்ஏஎல் தன் கையைச் சுட்டுக்கொண்டது. என்கிறார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர். இவ்வளவு நஷ்டப்பட்ட பின் நாம் அதிலிருந்து வெளிவந்தே ஆக வேண்டும். பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கு முன்னர் 2010இல் ஆரம்ப டிசைன் ஒப்பந்தத்துக்கே எச்ஏஎல் 295 மில்லியன் வரை செலவழித்தது” என்கிறார் இன்னொரு முன்னாள் எச்ஏஎல் இயக்குநர்.
தயாராக இருந்த 18 விமானங்கள் மற்றும் எச்ஏஎல் உரிமத்துடன் அசெம்பிளி செய்யப்படுவதாக இருந்த 108 விமானங்கள் உள்ளிட்ட டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடனான 126 நடுத்தர ரகப் பல்நோக்குச் சண்டை விமானங்கள் (MMRCA) வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி அரசின் முடிவு எச்ஏஎல்ஐக் கடுமையாக பாதித்தது என்பது உண்மையே. 2014ஆம் ஆண்டின் நடுப் பகுதி வரை 108 ரஃபேல் விமானங்களை உரிமத்துடன் டஸால்ட் ஏவியேஷனுடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைக்கும் என்றுதான் எச்ஏஎல் நினைத்தது. கிட்டத்தட்ட முடியும் நிலையிலிருந்த பேச்சுவார்த்தை அப்படியே நின்றுபோனது. 2015இல் இந்த ஒப்பந்தம் அடியோடு காணமால் போயிற்று. 2015 ஏப்ரலில் பிரான்சுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, 126 நடுத்தர ரகப் பல்நோக்குச் சண்டை விமானங்கள் (MMRCA) வாங்கும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து இரு அரசுகள் கையெழுத்திடும் ஒப்பந்தம் மூலம் இந்தியா 36 ரஃபேல் விமானங்களை நேரடியாக ஃபிரான்சிடமிருந்து வாங்கும் என்று அறிவித்தார்.
36 ரஃபேல் விமானங்களை ஃபிரான்சிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆஃப்செட் தொகையான ரூ.30,000 கோடி சர்ச்சைக்குள்ளானது. அனில் அம்பானியும் டஸால்ட்டும் கூட்டாக ஆரம்பித்த நிறுவனத்துக்கு ஒப்ப்பந்தம் கிடைக்கத்தான் 36 ரஃபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாக சில நாட்களே இருக்கும்போது வேண்டுமென்றே மோடி இப்படிச் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
எச்ஏஎல் மீதான விமர்சனம்
“பல ஆண்டுகள் விமானப் படைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் அரசுக்கே திரும்பச் சென்றுகொண்டிருந்தது. ஆனால், எச்ஏஎல்லைப் பொறுத்தவரை இது வேறு. எச்ஏஎல் விமானப் படையின் வாங்கும் திட்டத் தொகையிலிருந்து பணத்தை விமான உற்பத்தி / சர்வீசுக்கான முன்தொகையாக எடுத்துக்கொள்ளும்; ஆனால் வேலையைச் செய்யாது. சில சமயம் டெலிவரி தேதியிலிருந்து 5-6 ஆண்டுகள் வரை தாமதமாகச் செய்யும். பணம் எங்கள் கணக்கிலிருந்து எச்ஏஎல்லின் கணக்குக்குச் சென்றுவிடும். இப்பணத்தை வங்கியில் போட்டு, அதிலிருந்து வட்டியை எச்ஏஎல் சம்பாதிக்கும். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஒன்று, ஒப்பந்தம் போட்டுப் பணம் செலுத்திய பொருட்கள் எங்களுக்குக் கிடைக்காது; இரண்டு, இப்பணத்தை வைத்து வேறெதையும் எங்களால் வாங்கவும் முடியாது. எச்ஏஎல் இப்பணத்தை அரசிடம் திருப்பித் தராது; ஆண்டுக்குச் சில ஆயிரம் கோடிகள் வரை அது வட்டியைச் சம்பாதித்தது. இவ்வட்டித் தொகை அரசுக்குத் தரப்படவில்லை. முந்தைய அரசு இவ்விஷயத்தில் முழித்துக்கொண்டதால் பாதுகாப்பு அமைச்சகம் இதைச் சுருக்கிவிட்டது,” என்கிறார் முன்னாள் விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் எஸ். கிருஷ்ணஸ்வாமி.
“Su-30 MKI வகை விமானங்களை எடுத்துக்கொள்ளுங்கள். விமானப் படை 12 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து எச்ஏஎல் உபகரணங்கள் வாங்க ஆரம்பித்த நாள் முதல் தொகையைத் தர ஆரம்பிக்கும். 10 விமானங்களை மட்டும் எச்ஏஎல் தந்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வங்கியில் போட்டு வைத்துக்கொள்ளும்” என்கிறார் இன்னொரு ஏர் மார்ஷல்.
எச்ஏஎல் உருவாக்க விரும்பும் கட்டமைப்பு வசதிக்கு விமானப் படை ஏன் பணம் தர வேண்டும் என்று ஓய்வுபெற்ற, பணியிலிருக்கும் மூத்த விமானப்படை அதிகாரிகள் கேட்கின்றனர். “இலகு ரக ஹெலிகாப்டர் (ALH) திட்டத்தில் வெறும் விமான பார்க்கிங் இடத்துக்காக நாங்கள் பணம் செலுத்தவில்லை,” என்கிறார் கிருஷ்ணஸ்வாமி.
எச்ஏஎல் இலாபகரமாக இயங்க வேண்டுமானால் அது ஏற்றுமதி செய்வதைப் பற்றி யோசித்தே ஆக வேண்டும் என்பதே பலரது கருத்து.
ரவி சர்மா
நன்றி: ஃப்ரன்ட்லைன் (https://frontline.thehindu.com/economy/article26004646.ece?fbclid=IwAR12Qy-OYYOWi5wkWlaVRuTDxrxpO5eenvq5W6Mm3ddRynQSDfiWMQ1lF2w)