சிபிஐயில் ஏற்பட்ட குழப்பம், பாராளுமன்றத்தை அலட்சியம் செய்தல், நீதித்துறைக்கு மிரட்டல் விடுத்தது முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரை மோடியின் ஆட்சிக் காலம் பல்வேறு கொந்தளிப்பான காலகட்டங்களைக் கண்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டி வந்த பாஜக, வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியா, ராகுல் காந்தியா என்ற ஒரே ஒரு தேர்வுதான் இருப்பதாகக் கூறிவந்தது. ஆனால் ‘இந்தி பெல்ட்’ எனப்படும் முக்கிய மூன்று வட இந்திய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கடந்த ஆண்டு இறுதியில் கிடைத்த தோல்விக்குப்பின், பாஜக வேறு ராகத்தைப் பாடுகிறது. மோடியா, அழிவா என்ற தேர்வுதான் மக்கள் முன் இந்த ஆண்டு இருக்கும் என்று கடந்த வாரம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறினார். இதை மீண்டும் உறுதிசெய்யும் விதமாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த திங்களன்று ’மோடி Vs பெருங்குழப்பம்’ என்று இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒரு சுவாரசியமான வியூகம்தான். மோடிக்கு மாற்று பெருங்குழப்பம்தான் என்று பாஜக நினைத்தால், அக்கட்சியின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியை மக்கள் எப்படி வகைப்படுத்துவார்கள்?
முதலில் சொல்லப்போனால் குழப்பங்களைக் களையும் பல அமைப்புக்களின் மதிப்புகளை மோடி மிகத் திறமையாகக் குறைத்துவிட்டார். பாராளுமன்றத்தின் நெறிமுறைகளை பாஜக அரசு தாக்கியது, மக்களவை விவாதத்தைத் தவிர்த்தது, மாநிலங்களவையைத் தவிர்த்து மசோதாவை இயற்ற ‘மணி பில்’ எனப்படும் மசோதாவைக் கையிலெடுத்தது. குடியரசுத் தலைவரின் ஆட்சியைத் தேவையில்லாமல் அமல்படுத்தி, நீதித் துறை தானாகவே ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிக் கேள்வி கேட்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது.
நீதித் துறையையும் விட்டு வைக்கவில்லை. தலைமை நீதிபதிகள் நியமனத்தில் தலையிட்டு நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையை நாட்டில் குறைக்கும்படியான அறிக்கைகளை பாஜக தலைவர் திரும்பத் திரும்ப வெளியிட அனுமதித்தார்.
’56 அங்குல மார்பு’ பற்றி பீற்றிக்கொள்வது முதல் கல்லூரி வளாகத்தில் ராணுவ டாங்கிகளை வைப்பது வரை ராணுவத்தையும் அரசியல் களமாக மாற்றவே மோடி அரசு விரும்புவதாகத் தெரிகிறது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி அமைந்திருந்த தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்கி அழித்த 2016ஆம் ஆண்டின் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்’ சமயத்தில் வடக்குப் படைப் பிரிவு ராணுவத் தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தளபதி ஜெனரல் டி.எஸ். ஹூடாவும் ராணுவ நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசுவது பற்றிப் புகார் கூறியுள்ளார். ஆனால் இதெல்லாம் பாஜகவின் போக்கைத் தடுத்து நிறுத்திவிடும் என்று தோன்றவில்லை.
பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் முடிவு பற்றிய தகவல்கள் வந்துகொண்டிருக்கையில் “பேரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றே வைத்துக்கொண்டாலும் மோடி அரசின் கஞ்சத்தனமும் திறமையற்ற அணுகுமுறையும் நாட்டின் ராணுவ நவீனமயமாக்கலுக்குப் பேரிடியைக் கொடுத்துவிட்டன” என்கிறார் மூத்த பாதுகாப்புத் துறை வல்லுநர் ஒருவர்.
மோடியும் அவரது கட்சியும் ஹார்வர்டில் படித்து முந்தைய அரசிடம் பணிபுரிந்த பொருளாதார வல்லுநர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்த, பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார மாற்றத்தை ‘கண்காணிப்பதற்கென’ இருந்த பொருளாதார ‘மேதைகள்’ அனைவரும் நாட்டை விட்டே சென்றுவிட்டனர். மோடியின் ஆட்சியில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான உறவுமுறை இதற்கு முன் இல்லாத அளவு மோசமாகிவிட்டது; இதன் விளைவாக 1957க்குப் பின் இப்போதுதான் பதவிக் காலம் முடியும் முன்பே ரிசர்வ் வங்கி கவர்னர் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டார்.
சிபிஐ அமைப்பை அரசியல் காரணங்களுக்கு காங்கிரஸ் பயன்படுத்தி வருவதாக மோடி பதவிக்கு வரும் முன்பு பாஜக அடிக்கடி புகார் செய்தது. ஆனால், மோடி ஆட்சியிலும் சிபிஐ தொடர்ந்து இப்படிப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் அவர் நியமனம் செய்த அதிகாரிகளுக்கிடையே மூளும் சண்டை காரணமாக சிபிஐ தனது அலுவலகங்களிலேயே ரெய்டு நடத்தும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் மிக ‘உறுதியான’ தலைமையில் மைய அரசு இறுதியாக இப்பிரசினையில் தலையிட்டு எடுத்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் பின்னர் ‘சட்ட விரோதமானது’ என்று குட்டு வைத்ததால் அந்நடவடிக்கையை அரசு வாபஸ் பெற நேர்ந்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வாயிலாக நாடெங்கும் குழப்பமான நிலையை மோடி ஏற்படுத்தினார்; இதனால் லாபம் என்று காட்ட எதுவுமே இல்லை. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொன்னது இப்போது அடங்கிவிட்டாலும், மேலும் மேலும் பல குரல்கள் இம்முடிவின் தேவை பற்றி எழும்பத் தொடங்கியுள்ளன. “மாபெரும், சர்வாதிகார, பணரீதியான அதிர்ச்சி’ என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்த மோடியின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியனின் குரலும் இந்த அதிருப்திக் குரல்களில் அடங்கும். இதற்கிடையே ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும் ஜிஎஸ்டியாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிறு / குறு தொழில் நடத்துபவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிய மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருக்கின்றனர்.
பசு அரசியல்
இப்பட்டியல் மிக நீளமாக போய்க்கொண்டே இருக்கக்கூடும். பசுவைப் பாதுகாக்க அரசு வகுத்த கொள்கைகளால் உத்வேகம் பெற்ற கொலைவெறி கொண்ட கும்பல்கள் பசு வியாபாரிகளையும் பசுக்கறி சாப்பிடுகின்றனர் என சந்தேகப்படுபவர்களையும் அடித்துக் கொல்ல ஆரம்பித்துவிட்டன. அரசின் பசுப் பாதுகாப்புக் கொள்கைகளால் மிகவும் அதிகரித்துவிட்ட பசுக் கூட்டங்களால் விவசாயிகளும் நாடெங்கிலும் கடுந்துயரை அனுபவித்து வருகின்றனர்.
பாஜக அரசு ஏழைகள், விவசாயிகளின் நலனுக்காக நிச்சயம் பணிபுரியும் என்ற வாக்குறுதிகள் தரப்பட்டது. மோடி பதவிக்கு வந்தபோது ஓரளவு சீரான பொருளாதார நிலை இருந்தபோதிலும், கிராமப்புற வறுமையும் துயரமும் இன்னும் அகற்றப்படவில்லை.
2014 முதல் சிறுபான்மையினர் கொஞ்சம் கொஞ்சமாகத் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது மோடி அரசு நாடாளுமன்றத்தில் இயற்ற முயற்சிக்கும் குடியுரிமை மசோதாவானது நாட்டின் மதசார்பற்ற தன்மையின் அஸ்திவாரத்தின் மீது நடத்தப்படும் பெரும் தாக்குதலாகும். ‘பாகிஸ்தான் மற்றும் விரிவான அண்டை நாடுகள்’ குறித்த மோடியின் கொள்கை ஆட்டம் கண்டது. காஷ்மீர் போன்ற முக்கிய எல்லை மாநிலத்திலும் அவரது அணுகுமுறை நடுநிலைத்தன்மையைச் சிதைத்துவிட்டது.
மோடிக்கு மாற்றாக வருபவர் மோட்யைவிடவும் சிறப்பாகச் செயல்படுவார் என்றோ மோடி வெற்றிகள் எதையும் பெறவில்லை என்றோ இங்கு கூற வரவில்லை. எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாமல் மத்தியில் கூட்டணி அமைந்த தொண்ணூறுகளில் நாம் கண்ட கூட்டணி ஆட்சி அனுபவங்கள் பல தரப்பட்டவை. சில ஆட்சிகள் குழப்பமாக இருந்தன. சில ஆட்சிகள் கூட்டணிக்குள் இருந்த அதிருப்தியையும் மீறிப் பல பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தின. எனவே, மோடிக்கு மாற்று குழப்பம்தான் எனச் சொல்வதற்கில்லை.
உறுதியான தலைமையை வழங்குவோம் என வாக்குறுதி தந்து கடந்த 30 ஆண்டுகளில் அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்த மோடிக்கு மாற்று பெருங்குழப்பம் மட்டுமே என்று சொல்வது, இந்தியா 2014ஆம் ஆண்டு முதல் கண்டுவரும் பெருங்குழப்பங்களை மறைப்பதற்கான முயற்சிதான். கூட்டணிக் குழப்பம், மோடிக் குழப்பத்தைவிடவா மோசமானதாக இருக்கும்?
ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
****