சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களை, நகர்புற மாவோயிஸ்ட்கள் என அழைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள், நாட்டின் மீதான தங்கள் பிடியை தக்கவைத்துக்கொள்ள மோசமான வன்முறையை தூண்டிவிடுகிறது.
சமூகச் செயற்பாட்டாளர்கள் வன்முறையைத் தூண்ட சதி செய்கின்றனர் என்று நம்பும் அளவுக்கு மக்கள் ஏமாளிகளாக இருப்பதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் தலித்கள் போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பாடுபடும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் நகர்புற மாவோயிஸ்ட்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக துவேஷத்தையும் வன்முறையையும் தூண்டிவிடும் அரசின் முயற்சியாகவே இதைப் பார்க்க முடிகிறது.
மீண்டு வருவது கடினம் என்னும்படியான அபாயமான சூழலில் நாம் சிக்கிக்கொள்ளத் துவங்கியிருக்கிறோம். தன்னைக் கைதுசெய்யக்கூடிய நடவடிகைக்கு எதிராகப் பொதுமக்கள் பாதுகாப்பைக் கோரும் நிலைக்கு ஆனந்த டெல்டும்பே தள்ளப்பட்டிருக்கிறார்.
நன்கறியப்பட்ட எழுத்தாளரும் ஆசிரியருமான அவர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, தனது சுதந்திரத்தை காப்பாற்ற பொதுமக்கள் ஆதரவைக் கோரும் நிலை உண்டாவது எந்த சுதந்திரமான சமூகத்திற்கும் அவமானகரமானதாகும். தனக்கு எதிரான, மகாராஷ்டிரா காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனும் ஆனந்த் டெல்டும்பேவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது முதலே எச்சரிக்கை மணி ஒலிக்கத் துவங்கிவிட்டது.
முன்னதாக, காவல் துறை அவர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் சோதனை நடத்தியது, கடந்த ஆண்டு பீமா கோரேகானில் தலித்களுக்கு எதிரான மாவோயிஸ்ட்கள் வன்முறைச் சதியில் அவர் முக்கியப் புள்ளி என குற்றம் சாட்டியது.
டெல்டும்ப்டே போன்ற எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் தலித்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுகின்றனர் என நம்மையும், நீதிமன்றங்களையும் நம்ப வைக்கக் காவல் துறை விரும்புகிறது. அரசு, நகர்புற மாவோயிச சதி என்னும் கருத்தாக்கத்தைப் பொதுமக்கள் மீது திணிக்க விரும்புகிறது. பிரதமரைக் கொலை செய்ய முயற்சிப்பதற்கான பெரிய சதியின் அங்கம் டெல்டும்ப்டே என்றும் அது நம்ப வைக்க நினைக்கிறது.
நீதிமன்றம் தெரிவிக்கும் சில கருத்துகளைப் பார்த்தால், காவல் துறை திரித்து உருவாக்கிய இந்த கட்டுக்கதையை அது தீவிரமாகப் பரிசீலிப்பது போல தெரிகிறது. இது மிகவும் கவலைக்குரியது.
டெல்டும்டே மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், விசாரணை விரிவடைந்து வருவதால், முதல் தகவல் அறிக்கையைத் தள்ளுபடி செய்யக் காரணம் இருப்பதாகக் கருதவில்லை என தெரிவித்துள்ளது. கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவருக்கு 4 வார அவகாசம் அளித்துள்ளது.
தலைகீழாக மாற்றப்பட்டுள்ள, பீமா கோரேகான் வன்முறை விசாரணை தொடர்பாக நிறைய எழுதப்பட்டுவிட்டன. முதலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இப்போது சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்கின்றனர். அது மட்டும் அல்ல, உள்ளூர் நீதிமன்றம் அவர்கள் பொதுக்குட்டங்கள் நடத்தவும், மிகுந்த கருணையோடு, அவர்கள் நீதிமன்ற விசாரணையில் ஆஜராக தேவையில்லை என்றும் அனுமதி அளித்துள்ளன.
சாம்பாஜி பைடே மற்றும் மிலிந்த் ஏக்போட்டே வன்முறையை தூண்ட சதி செய்ததாக தலித்கள் குற்றம்சாட்டினர். இருவருமே சங்பரிவாரத்திற்கு நெருக்கமானவர்கள். மும்பை மிரர் செய்திபடி, இருவருக்கும் வன்முறையைத் தூண்டிவிட்டதில் பங்கு இருக்கிறது. அவர்கள் பங்கு பற்றி விசாரிப்பதற்கு பதிலாக காவல் துறை நாடு முழுவதும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்திவருகிறது.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவரது கம்ப்யூட்டரிலிருந்து, பிரதமரைக் கொலை செய்யும் முயற்சிக்கான சதி தொடர்பான தகவலை கைப்பற்றியதாகவும் காவல் துறை கூறுகிறது. இது போன்ற ஒரு கடிதத்தை சதிகாரர்கள் பாதுகாக்காமல் விட்டிருப்பார்கள் என நாம் நம்ம வேண்டும் என காவல் துறை விரும்புகிறது. தி வயர் இதழில் எழுதிய கட்டுரையில், பிரேம் சங்கர் ஜா, இந்தக் கருத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார். ஆதாரங்களை ஜோடிக்கும் காவல் துறையின் பழக்கத்தை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார் அவர்.
மேலும், நாட்டின் பிரதமரைக் கொல்ல முயற்சி சதி போன்ற மிகத் தீவிரமான வழக்கை, பெரிய, திறன் வாய்ந்த தேசிய புலனாய்வு அமைப்புகள் வசம் ஒப்படைக்காமல் மகாராஷ்டிரா காவல் துறை தனியே விசாரிக்க விடப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, முன்வைக்கப்பட்ட அவரைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் பற்றிய குற்றச்சாட்டை இது நினைவுபடுத்துகிறது அல்லவா? அந்தக் குற்றச்சாட்டின் விளைவாக என்கவுண்டரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நீதிபதி பேடி அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற எழுத்தாளர் மற்றும் அறிவுஜீவியைக் கைது செய்வதற்கான நடவடிக்கை அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகரிக்கும் ஆணவத்தை உண்ர்த்துகிறது. டெல்டும்ப்டே, சுதா பரத்வாஜ், ஸ்டான் ஸ்வாமி, சோமா சென் போன்றவர்கள் வன்முறையைத் தூண்டக்கூடியவர்கள் என நம்பும் அளவுக்கு நம்மை ஏமாளிகளாக நினைத்துவிட்டனரா? இவர்கள் அனைவரும் தினமும், நம்முடைய ஒடுக்கப்பட்ட சக மனிதர்களின் உரிமைகள் மற்றும் நியாத்திற்காகப் பாடுப்பட்டுக்கொண்டிருப்பவர்கள்.
இவர்களை நகர்ப்புற மாவோயிஸ்ட்கள் என அழைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள், நாட்டின் மீதான தங்கள் பிடியைத் தக்கவைத்துக்கொள்ள மோசமான வன்முறையை தூண்டிவிடுகிறார்கள்.
டெல்டும்ப்டே தனக்காகக் குரல் கொடுக்க வேண்டியிருக்கும் நிலை நமக்கெல்லாம் அவமானகரமாது. எழுதவும், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கு, அறிவுஜீவியாக அவரது சாதனைகளையும், எழுதிய புத்தகங்களையும், வர்த்தக உலகில் அவர் பணியாற்றிய நீண்ட ஆண்டுகளையும், எண்ணற்ற முறை உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் அவர் உரையாற்ற அழைக்கப்பட்டதையோ பட்டியலிட வேண்டும் என்றில்லை.
நாட்டில் உள்ள அச்சமில்லாத நன்கறியப்பட்ட அறிவுஜீவிகளில் அவரும் ஒருவர். முக்கியமாக அவர் தலைசிறந்த தலித் அறிவுஜீவி.
டெல்டெம்ப்டே தனது பணியை மேற்கொள்ள அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. ஜோடிக்கப்பட்ட பொய்யைக் கொண்டு அவரது இந்த உரிமையைப் பறிக்கக் கூடாது.
இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்கள், பல்கலைக்கழங்கள், ஆய்வு அமைப்புகள், பருவ இதழ்கள், நாளிதழிகள், இதர ஊடகங்கள் ஆகியவற்றுக்கு இது உண்மையை உணரும் தருணம். அவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து டெல்டும்ப்டேவுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்களா? அல்லது அவரது குரல் அமுங்கிப்போக அனுமதிப்பார்களா? ஜனநாயகம் என்பது, நியாயத்திற்கான எந்த விதக் கருத்தும் இல்லாமல், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது மட்டும்தானா? நாம் இறந்த சடலம் அல்ல, உயிர்ப்புள்ள சமூகம் என நிருபிக்க வேண்டிய காலம் இது.
அபூர்வானந்த்
(அபூர்வானந்த், தில்லி பல்கலை பேராசிரியர்)
நன்றி: தி வயர்
https://thewire.in/rights/police-action-against-anand-teltumbde-yet-another-proof-of-modi-govts-arrogance
நீதி துறையும் இந்த நாட்டில் நம்பக தன்மையை judicial credibility இழந்து விட்ட பிறகு அரச பயங்கரவாதம் தலையெடுத்து ஜனநாயகத்தை படுகொலை செய்யும் காலம்நெருங்கி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் நிலை விரைவில் இங்கும் வரும்.