இன்று முத்துராமன் என்ற வாசகர், ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சலில், விகடன் குழுமத்தின் பங்கு உரிமம் தொடர்பான செய்திகளில் இருந்த அடிப்படைத் தவறை சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கான ஆதாரத்தையும் அவர் இணைத்திருந்தார். அந்த ஆதாரங்களின் படி, விகடனில் உள்ள மொத்த பங்குகளில் 53.85 சதவிகிதம், திரு.சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும், மீதம் உள்ள 46 சதவிகித பங்குகள், சரி பாதியாக, விகடனின் துணை நிறுவனமான, வாசன் ப்ரின்ட் ப்ராடக்ட்ஸ் மற்றும், விகடன் டெலிவிஸ்டா ஆகிய நிறுவனங்கள் வசம் உள்ளது. இந்த துணை நிறுவனங்களின் முழுமையான உரிமையாளர்களும், சீனிவாசன் குடும்பத்தாரே…
நேற்றைய கட்டுரைக்குப் பிறகு, விகடன் குழுமத்திலிருந்து மறுப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால், இது வரை மறுப்பு ஏதும் வரவில்லை.
விகடன் குழுமத்தின் உரிமையாளர்கள் யார் என்ற ஆராய்ச்சியில் சவுக்கு இறங்கியதற்கான காரணமே, கடந்த இரண்டு இதழ்களாக தயாநிதி மாறன் குறித்த செய்திகளை வெளியிடாமல் இருந்தது மட்டுமல்ல… தயாநிதி மாறனுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதும் தான். இந்த விபரங்கள் குறித்து, சவுக்கு சேகரித்த தகவல்கள் அடிப்படையிலும், மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் வழங்கிய தகவல்கள் அடிப்படையிலுமே, கேடி சகோதரர்களின் நாடித்துடிப்பு என்ற கட்டுரை எழுதப் பட்டது.
இந்தக் கட்டுரை எழுதிய பிறகு, வந்த பல்வேறு தகவல்கள், மாறன் சகோதரர்களை இப்போது மட்டுமல்ல, விகடன் குழுமம் தொடர்ந்து பாதுகாத்து வந்திருப்பது, பல்வேறு வாசகர்களின் கருத்து மூலமாக தெரிய வருகிறது. குறிப்பாக சொல்லப் போனால், ஹன்ஸ்ராஜ் சக்சேனா, செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய விவகாரமும், கேபிள் டிவியில் மாறன் சகோதரர்களின் ஏகபோகமும், மற்ற டிவி சேனல்களை இருட்டடிப்புச் செய்த விவகாரம் பற்றிய செய்திகளும் துளி கூட வரவில்லை. இது மட்டுமல்லாமல், மாறன் சகோதரர்களைப் பற்றி விகடன் டாட் காம் தளத்தில் இடப்படும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப் படுவதில்லை என்பதும், ராசா மற்றும் கனிமொழி பற்றி பிரசுரிக்கப் படும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிப்பிக்கப் படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கவை.
ஆனால், ஆ.ராசாவைப் பற்றி மட்டும், ஆறு மாத காலத்துக்கும் மேலாக, ஸ்பெக்ட்ரம் பக்கம் என்று தனியாக ஒரு பகுதியை உருவாக்கி, கடுமையாக எழுதி வந்தனர்.
ராசா மீதான இந்த விமர்சனம், இந்த இதழ் வரை தொடர்கிறது. சிபிஐ சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள் என்று, அட்டைப் பட செய்தி வெளியிட்டு விட்டு, அதற்கான அட்டைப் படத்தில் அந்தத் தொழில் அதிபர்களின் பெயரைப் போடாமல், ஆ.ராசாவின் படத்தைப் போட்டிருக்கிறது. அந்த தொழில் அதிபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.
இந்தத் தொழில் அதிபர்கள் குறித்த விபரங்களை சவுக்கு, கடந்த மார்ச் 15 அன்று Ceremonious burial to spectrum probe ? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
ராசா ஊழல் செய்தார், அவர் விமர்சிக்கப் பட வேண்டியவர், அவர் துகிலுரியப் பட வேண்டியவர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாறன் சகோதரர்களோடு ஒப்பிடுகையில் ராசா அவ்வளவு பெரிய குற்றத்தை செய்து விடவில்லை. ராசா மீது, ஊடகங்களின் கழுத்தை நெறித்தார் என்ற குற்றச் சாட்டு இல்லை. ராசா மீது, மற்ற டிவி சேனல்களை அழித்தார் என்ற குற்றச் சாட்டு இல்லை. ராசா மீது, திரைப்படத் துறையினரை மிரட்டினார் என்று குற்றச் சாட்டு இல்லை. அப்படி இருக்கையில், இந்த குற்றங்களையெல்லாம் செய்த, மாறன் சகோதரர்களை விகடன் குழுமம் காப்பாற்ற முற்படுவது ஏன் என்ற கேள்வி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
மாறன் சகோதரர்கள் விகடன் குழுமத்தில் பங்குதாரர்கள் இல்லையென்றால், அவர்களைப் பற்றி விகடன் குழுமம் எழுதுவதை தடுப்பது எது… ?
சன் டிவியில் ஒளிபரப்பாகும், திருமதி.செல்வம் மற்றும் தென்றலா ? இதுதான் காரணம் என்றால், விகடன் குழுமத்தின் செயல்பாடுகள், நினைத்ததை விட இன்னும் மோசம். இரண்டு தொலைக் காட்சித் தொடர்களை சன் டிவியினர் நிறுத்தி விடுவார்கள் என்ற காரணத்துக்காக, ஒரு இமாலய ஊழலை மறைத்து, அதற்கு வக்காலத்து வாங்குவதென்பது, 9 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் துரோகம் அல்லவா ? நீங்கள் எழுதுவதை உண்மை என்று நம்பும் லட்சக்கணக்கானோருக்கு செய்யும் அநியாயம் அல்லவா ?
சவுக்கை அதன் வாசகர்கள் இலவசமாக படித்தாலும், அவர்களிடத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தானே சவுக்கு நடத்தப் பட்டு வருகிறது ? விகடன் குழுமத்திடம் இருந்து எந்த விதமான மறுப்பும் வராத பட்சத்திலும், ஒரு வாசகர் சுட்டிக் காட்டியதும், அதை அப்படியே பிரசுரிப்பதற்கான காரணம், வாசகர்களிடம் உண்மையை மறைக்கக் கூடாது என்ற உறுதி தானே ? இந்த உறுதியைத் தானே நாம் ஜுனியர் விகடனிடம் எதிர்ப்பார்க்கிறோம்.
ஒரு வேளை பத்திரிக்கை தொழிலில் கிடைக்கும் லாபத்தை விட, தொலைக் காட்சித் தொடர் அதிக லாபம் ஈட்டித் தரும் என்றால், வாசகர்களை ஏமாற்றாமல், பத்திரிக்கையை மூடி விட்டு, முழு நேரத் தொலைக் காட்சித் தொடர் தயாரிப்பு நிறுவனமாக விகடன் நிறுவனம் மாறி விடலாமே… ?
அந்தக் கட்டுரையை எழுதியதால், அரசல் புரசலாக பேசப் பட்டு வந்த, விகடன் குழுமத்தில் மாறன் சகோதரர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற விவகாரம் தற்காலிகமாக முற்று பெறுகிறது. அது அந்தக் கட்டுரை எழுதியதால் தான். ஆனால், மாறன் சகோதரர்களைப் பற்றிய ஜுனியர் விகடனின் மௌனம் எதற்காக என்பது குறித்த கேள்விகளுக்கான விடை, இன்னும் வரவில்லை….
ஜுனியர் விகடன் என்ற பத்திரிக்கை 25 ஆண்டுகளை கடந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பத்திரிக்கை மேலும், பல்வேறு ஊழல்களை நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே சவுக்கின் விருப்பம். ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழல் செய்தால், சட்டவிரோதமாக நடந்தால், நமக்கு எதிராக செய்திகள் வரும் என்பதை உணர்ந்து அஞ்ச வேண்டும் என்பதே நமது விருப்பம். முரசொலியிலோ, தினகரனிலோ, நமது எம்ஜிஆரிலோ, நடுநிலை செய்திகளை வாசகர்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனால் விகடனில் எதிர்ப்பார்க்கிறார்கள்.
ஆனால், தொடர்ந்து பல சமரசங்களை விகடன் குழுமம் செய்து வந்ததை தமிழகம் கண்டு வந்திருக்கிறது. பல்வேறு சமரசங்களை செய்து வந்த விகடன் குழுமம், எந்த அளவுக்கு சென்று விட்டது என்றால், பொட்டு சுரேஷ் போன்ற ரவுடியிடம் மண்டியிடும் அளவுக்கு சென்று விட்டது. விகடன் போன்ற பலம் வாய்ந்த நிறுவனம், பொட்டு சுரேஷை ஓட ஓட விரட்டியிருக்க வேண்டாம் ? இதுவா விகடனின் பாரம்பரியம் ? சாதாரண நகைச்சுவை துணுக்கை வெளியிட்டதற்காக சிறை சென்றவர் விகடனின் முன்னாள் எம்டி, பாலசுப்ரமணியம் என்பதை மறவாதீர்கள்.
வரும் வாரங்களில், ஜுனியர் விகடனில், மாறன் சகோதரர்களின் ஊழல் பற்றி மட்டுமல்லாமல், பாரபட்சமில்லாமல் செய்திகளை வெளியிட வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். உங்கள் வாசகர்களின் விருப்பமும் கூட. அதை நீங்கள் செய்யும் பட்சத்தில், சவுக்கு உங்கள் நடுநிலையை சந்தேகிக்காது. இல்லையென்றால், யாராக இருந்தாலும் சாட்டையை சுழற்ற சவுக்கு தயங்காது.