மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அமைப்புக்குள் நடைபெற்றுவரும் மோதலின் இறுதிக் கட்டம், அரசியல் திரைப்படத்தின் அனைத்துப் பரபரப்பு அமசங்களையும் கொண்டதாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக அமர்த்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 10ஆம் தேதி, அவர் மீண்டும் நீக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் மிகப்பெரிய எதிர்கட்சியின் தலைவரான மல்லிகார்ஜினா கார்கே, தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதியான ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய உயர் அதிகாரம் கொண்ட குழுவால் (எச்.பி.சி), 2-1 எனும் பெரும்பான்மை முடிவின் விளைவாக நீக்கப்பட்டார். கார்கே இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், முரண்பாடு காரணமாக, குழுவிலிருந்து விலகிக்கொண்ட பிறகு, நீதிபதி சிக்ரி குழுவில் அமர்த்தப்பட்டார். சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அடங்கிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஜனவரி 8 அன்று, அலோக் வர்மாவை மீண்டும் இயக்குனராக அமர்த்தியது. எனினும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) அவர் மீது அறிக்கை அளித்த பின்னணியில், அவரது பதவி குறித்து தீர்மானிக்க எச்பிசி கூட்டம் ஒரு வாரத்தில் நடைபெற இருந்த நிலையில், அவர் கொள்கை முடிவு எதுவும் எடுக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சிவிசி உத்தரவு மற்றும் அலோக் வர்மா அதிகாரத்தை பறித்து, சிபிஐ இணை இயக்குனர் நாகேஸ்வர் ராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்தியப் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சக உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது. வர்மா இடத்தில் அடுத்த தேர்வைக் குழு அறிவிக்கும் வரை, நாகேஸ்வர் ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராகியிருக்கிறார்.
எச்பிசி குழு முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை ஜனவரி 11 அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாசிரி வழங்கிய மற்றொரு தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான மொயின் குரேஷி லஞ்ச புகார் வழக்கில் முதல் தகவல் அறிக்கையைத் தள்ளுபடி செய்ய அவர் மறுத்துவிட்டார். அஸ்தானாவின் உறுதி செய்யப்படாத புகாரே, வர்மா மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது. அஸ்தானா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் ஆகிய இருவர் குறித்து 10 வாரங்களுக்குள் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி வாசிரி கூறினார். மேலும் முக்கியமாக, அலோக் வர்மா மீதான புகார்களுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் தகவல் அளித்தவரான சதிஷ் பாபு சானா என்பவர், இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி தொடர்பான வழக்கு விசாரணையில் தனக்குச் சாதகமாகத் தகவல் அளிக்க, ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி கேட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். சானாவின் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் சிபிஐ அஸ்தானாவுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. முரண் என்னவெனில், சானா, அலோக் வர்மாவிற்கு லஞ்சம் கொடுத்தார் எனும் அஸ்தானாவின் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அலோக் வர்மாவை, சிபிஐயிலிருந்து மாற்ற எச்பிசி தீர்மானித்தது.
கார்கே தனது ஆறு பக்க எதிர்ப்புக் குறிப்பில், அலோக் வர்மா தனது 2 ஆண்டுப் பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், 2018 அக்டோபர் 23 தேதியிட்ட, சிவிசி மற்றும் பணியாளர் பயிற்சித் துறையின் சட்ட விரோதமான ஆணைகளால் அவர் இழந்த 77 பணி நாட்களை அவருக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிவிசி அறிக்கையில் போதுமான ஆதாரம் இல்லாத ஆறு இடங்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேற்கொண்டு விசாரணை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தவர், அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள், ராகேஷ் அஸ்தானா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு நிகரானவை அல்ல கூறியிருந்தவர், இயற்கை நீதி அடிப்படையில், அலோக் வர்மா தரப்பைக் கேட்காமல் குழு ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
எச்பிசி, அலோக் வர்மாவுக்கு, இயக்குனர் ஜெனரல் (தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு& ஊர்க்காவல் படை) என்னும் மிகச் சாதாரணமான பொறுப்பை வழங்கியது. அவர் மீது கூறப்பட்ட லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஆதாரம் இருக்குமாயின், அவரால் அரசு ஊழியராகப் பதவி வகிக்க முடியாது.
லஞ்சம் வாங்கியது தொடர்பாக இரு அதிகாரிகளுக்கும் இடையே வெடித்த மோதலை அடுத்து, இரண்டு சிபிஐ அதிகாரிகளையும் விடுப்பில் அனுப்ப அக்டோபரில் அரசு தீர்மானித்ததை அடுத்து இந்த நிலை உண்டானது. சிபிஐயில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் விலக்கி வைக்கும் அரசின் அசாதரண தலையீட்டை உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இந்த மோதல் கில்கெனி பூனைகள் அடித்துக்கொள்வது போன்றது எனக் கூறினார். (There once were two cats of Kilkenny என்னும் கவிதையை அவர் மேற்கோள் காட்டியிருந்தார். இரண்டு பூனைகள் ஒன்றை மற்றொன்று உபரி என நினைத்துச் சண்டையிடத் தொடங்கிக் கடைசியில் இரண்டு பூனைகளும் இறந்துபோவதைச் சித்தரிக்கும் கவிதை இது. அயர்லாந்து நாட்டில் புழங்கும் குழந்தைகளுக்கான பாடல் இது. – மொழிபெயர்ப்பாளர்)
ஆனால் அலோக் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது மூலம், வினீத் நாராயண் வழக்கில் (1997) சிபிஐ இயக்குனருக்கு அரசியல் தலையீட்டில் இருந்து உச்ச நீதிமன்றம் அளித்த பாதுகாப்பை அலட்சியம் செய்துள்ளது. சிபிஐ இயக்குனருகான அதிகபட்ச பதவிக்காலமாக 2 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டது.
ஜனவரி 8 தீர்ப்பில், உச்ச நீதிமன்றம், வினீத் நாராயணன் வழக்கை மேற்கோள் காட்டியதோடு, சிபிஐ இயக்குனர் அலுவலத்திற்கு வெளிப்புற தாக்கங்களில் இருந்து முழு பாதுகாப்பு அளித்து, தன்னாட்சி மிக்க அமைப்பாக சிபிஐயின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும், சிவிசி சட்டம் 2003ஐயும் கவனத்தில் கொண்டிருந்தது.
தில்லி சிறப்பு காவல் துறை அமைப்பு (டி.எஸ்.பி.இ ) சட்டத்தின் 4 பி (2) பிரிவு எச்.பி.சி.யின் முன் அனுமதி இல்லாமல் சிபிஐ இயக்குனர் பணிமாற்றம் செய்யப்பட முடியாது எனத் தெரிவிக்கிறது. டி.எஸ்.பி.இ. சட்டத்தின் 4 பி பிரிவு மற்றும் துணைப் பிரிவு (2), சிவிசி சட்டத்தால் கொண்டுவரப்பட்டது. ஜனவரி 8 தீர்ப்பில், மாநிலத்தின் ஏதேனும் ஒரு அமைப்புக்கு, சிபிஐ இயக்குனர் மீது, அவரது செயல்பாட்டைப் பாதிக்கும் வகையில் இடைக்கால நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வழங்குவது சட்ட நோக்கம் எனில், நிச்சயமாக சட்டம் அதற்கு வழி செய்யும் அம்சத்தைக் கொண்டிருக்கும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
பணிமாற்றம் எனும் வார்த்தை, அதன் சாதாரண பயன்பாட்டில் புரிந்துகொள்ளப்பட்டிருந்து, ஒரு பதவியில் இருந்து இன்னொரு பதவிக்கான மாற்றத்தை குறிப்பதாக இருந்தால மற்றும் அதனடிப்படையில் குழுவின் முந்தைய அனுமதியின் தேவை என்பது, பணிமாற்றம் என்பதை மட்டும் குறிக்கும் நிலையில் மட்டும் என புரிந்து கொள்ளப்படும். இத்தகைய விளக்கம் தானாகவே தோல்வி அளிக்கக்கூடியதாகும்; சட்ட நோக்கத்தை வீழ்த்துவதாகும் என அமர்வு தெரிவித்தது.
“இது போன்ற நேரங்களில், சிபிஐ இயக்குனர் செயலபட விடாமல் செய்ய, தெரிந்த அல்லது தெரியாத பலவித வழிகளை மேற்கொள்ள, இது பணிமாற்றமாக இல்லாவிட்டாலும், ஒரு பணியில் இருந்து இன்னொரு பணிக்கு மாற்றுவதால் உண்டாகும் அதே விளைவை பெறக்கூடிய வகையில், அதாவது முந்தைய பதவியின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகளை செய்ய முடியாமல் இருக்கும் வகையில் மாநில அமைப்பு செயல்பட வாய்ப்புள்ளது. நிச்சயம் சட்டத்தின் நோக்கம் இதுவாக இருந்திருக்க முடியாது. நீண்ட பரிணாம வரலாறு, எந்தவித அச்சமும் சார்பும் இல்லாமல், பொது நலன் நோக்கில் நாட்டின் முதன்மையான் புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்பாக சிபிஐ செயல்பட வேண்டுமானால், அது அனைத்து விதமான வெளிப்புறத் தாக்கங்களிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என அமர்வு குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர், அதாவது இயக்குனர், சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம் உத்தேசித்தது தவிர, வேறு விதமான கட்டுப்பாடு மற்றும் தலையீடுகளிலிருந்து விடுப்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
“இத்தகைய தலையீடு தேவை என கருதக்கூடிய நேரத்தில், அந்த தேவையின் பின் பொது நலன் பெரிதாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய தவிர்க்க இயலாத தேவைக்கான பொருத்தம் மற்றும் காரணங்கள், நாடாளுமன்றத்தால், இயக்குனரை நியமிக்கப் பரிந்துரை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள டி.எஸ்.பி.இ சட்டத்தில் 4 ஏ(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் கருத்தால் மட்டுமே சோதிக்கப்பட முடியும்” என்று உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.
“இது மட்டுமே, நாங்கள் கண்டறிந்து, முன்வைப்பது போல, சட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த பதவியின் சுதந்திரத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்க கூடியதாகும். இந்த சூழலில், லோக்பால் மற்றும் லோக் அயூக்தா, 2013 சட்டத்தின் மூலமான திருத்தங்கள் வாயிலாக குழு மேம்பட்ட தன்மை பெற்றுள்ள நிலையில், இயக்குனர் பதவியை எந்த விதமான வெளிப்புறத் தாக்கங்களில் இருந்தும் காப்பது, தடுக்கும் சட்ட நோக்கமே நாடாளுமன்றத்தின் மனதில் பிரதானமாக இருந்திருக்கும் எனக் கூறுவதில் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
சிபிஐக்கு தற்காலிக இயக்குனர் நியமிப்பது உள்ளிட்ட, தண்டனை நடவடிக்கைக்கான உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும், பொது ஷரத்துகள் சட்டம் 1897இன், 14, 15, 16 ஆகிய பிரிவுகளின் பொருத்தம் குறித்து கருத்து தெரிவித்தபோது, டிஎஸ்.பி.ஈ. சட்டத்தின் ஷரத்துகளிலிருந்து இதற்கு மாறான நோக்கம் தெளிவாக இருப்பதால் தற்போதைய நிலையில் இது எவ்விதத்திலும் பொருந்தாது என நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
அலோக் வர்மாவுக்கு எதிரான சிவிசி அறிக்கையை நீதிமன்றம் சீலிடப்பட்ட உறையில் வைத்துள்ளது. தவிர்க்க இயலாத சூழலில் அதிலும், நீதிமன்ற கேள்வி தொடர்பான எதிர்மறையான முடிவில் மட்டுமே இது பொதுவெளியில் வைக்கப்படும் என கருத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்துள்ளது.
“இது மேற்கொள்ளப்பட்டால், இது போன்ற செயல்களில் உள்ள வரையறை, இன்னொரு கட்டுப்பாட்டு அம்சமாகும். எப்படி இருந்தாலும், நிதிமன்ற விஷயத்தால், இது போன்ற செயல் தேவையில்லாமல் ஆகிவிட்டது என நீதிமன்றம் தெரிவித்தது. மூடப்பட்ட கவரின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த அவசியமில்லாத முடிவை விளக்கி இவ்வாறு கூறியது. எனவே போதிய நியாயம் இல்லாத உத்தரவு இல்லாமல், அலோக் வர்மாவைப் பணிமாற்றம் செய்யும் எச்பிசி உத்தரவு, அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளளது. இது அவர் மீதான நம்பகத்தன்மையையும் தன் சார்பாக அவர் விளக்கம் அளிப்பதையும் பாதிக்கும். இயற்கை நீதிக்கு ஏற்ப, அவர் எச்பிசியால் விசாரிக்கப்பட்டாரா எனும் கேள்வியும் எழுகிறது.
அரசியல் தாக்கம்
சிபிஐ இயக்குனராக அலோக் வர்மாவை நீக்குவதில் மத்திய அரசு வெற்றி பெற்றாலும், மக்கள் பார்வையில் அரசு இவ்விஷயத்தில் தோற்றுவிட்டது. அலோக் வர்மாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான அவசரத்தைப் பார்க்கும்போது, அரசு எதையோ மறைக்கிறது என்பது எதிர்கட்சிகளின் வாதமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் செல்லாது என கூறிய சிவிசி அறிக்கையின் அடிப்படையில் அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பது, அவரை எப்படியாவது அகற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி துடிப்பதைக் காட்டுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
2018, அக்டோபர் 23 அன்று நள்ளிரவில் அலோக் வர்மா அவசரமாக நீக்கப்பட்டதில் இது முதலில் வெளிப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்ய சில மணி நேரங்களில் எல்லாம் அவசரமாக எச்பிசி கூட்டத்தை கூட்டி, அவரை மீண்டும் நீக்கிய அவசரத்தில் இது மீண்டும் வெளிப்படுகிறது. முதல் முறை சட்ட செயல்முறைகளை அரசு மீறியது எனில் இரண்டாவது முறை, அலோக் வர்மா விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல் இயற்கை நீதியை மீறியிருக்கிறது.
ரபேல் வழக்கில் முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டதே அலோக் வர்மா அவசரமாக நீக்கப்பட காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. பிரதமர் தான் , திருடனாக மாறிய காவலர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருவதை இந்த சந்தேகம் உறுதிப்படுத்துகிறது.
2019 பொதுதேர்தல்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக இடையிலான அரசியல் போட்டியில், ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சிக்கு இது தார்மீக வெற்றியாகும். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், இதுவே இயற்கை நீதியாக இருக்கும் எனும் நிலையில் அலோக் வர்மா தரப்பை ஏன் எச்பிசி கேட்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். “அவர் பதவியில் எஞ்சியிருந்த 20 நாட்களில் அவரால் என்ன செய்திருக்க முடியும் என்பதே இப்போது முக்கியக் கேள்வி என்கிறார் அவர்.
“எதையும் மறப்பதற்கான அவசரம் இல்லை எனில், செலக்ட் குழுவுக்கு அனுப்பு அதன் பரிந்துரைக்கு காத்திருக்கும் வழக்கமான வழியைப் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அது சிவிசியை அறிக்கை அளிக்க நிர்பந்திததோடு, நள்ளிரவில் சிபிஐ இயக்குனரை நீக்கியுள்ளது. அரசு காலை வரை காத்திருக்க அஞ்சியது ஏன்? அது விசாரிக்கப்படாமல் இருக்க விரும்புவது என்ன? என்று முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஷகீல் அகமது கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து நடந்தவை தங்கள் கட்சியின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார். மோடி அரசு தனது அரசியல் நலனுக்கான சட்டச் செயல்முறைகளை மீறுவதாக காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா தாக்கல் செய்த பிரமான பத்திரம் இந்த சூழலில் முக்கியத்துவம் பெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தான அரசியல் நெருக்கடிக்கு இலக்கானதாகவும், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். “சிபிஐ இயக்குனர் இந்த முறையில் நீக்கப்படுவது இதுவே முதல் முறை. உச்ச நீதிமன்ற உத்தரவு அரசின் முகத்தில் அறைந்தது போன்ற செயலாகும். தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்பதற்கான உறுதியான நினைவூட்டாலும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி கூறினார்.
சிவிசி நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டாரா, உச்ச நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்திருப்பதால் இவர் நிக்கப்பட வேண்டுமா எனும் கேள்வியை மையமாக கொண்டு, அரசியல் உரையாடல் நடைபெற வேண்டும். இந்த விஷயத்தை மேற்பார்வை செய்ததாக சொல்லப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தனது அதிகாரத்தை மீறியதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்ப வேண்டும் என்கிறார் அவர். பிரதமரின் கீழ் இயக்கும், டி.ஓ.பி.டி. துறையின் கீழ் சிபிஐ வருவதால், இந்த விவகாரத்தில் பிரதமரின் பொறுப்பை அலட்சியம் செய்ய முடியாது என காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
ரஃபேல் விவகாரத்தில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துடிப்பான விளக்கத்தை மீறி, உச்ச நீதிமன்றத்தின் ஜனவரி 8 தீர்ப்பால் ராகுல் காந்தி உற்சாகமாகக் காணப்பட்டார். இந்த ஊழல் வழக்கில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டுள்ளார் என்றும், அதன் காரணமாகவே சிபிஐயின் செயல்பாட்டில் தலையிடுவதன் மூலம், ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையைத் தடுக்க முயன்றுள்ளார் என்றும் தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார். எச்பிசியால் அலோக் வர்மா நீக்கப்பட்ட பிறகு இது எல்லாவற்றுக்கும் ரபேல்தான் காரணம் என அவர் கூறினார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில், டசால்ட் நிறுவனத்தின் ஆப்செட் பங்குதாராராக எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு பதில் அனில் அம்பானி நிறுவனத்தைத் தேர்வு செய்ய அனைத்து நடைமுறைகளையும் பிரதமர் மீறினார் என்பதே அவரது முக்கியக் குற்றச்சாட்டாகும். இவற்றை நிருபிக்க ஆவணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இவற்றை சிபிஐ விசாரிக்க இருந்தபோதுதான் நள்ளிரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
வி.வெங்கடேசன், பூர்ணிமா திர்பாதி, திவ்யா திரிவேதி
நன்றி: தி ஃப்ரன்ட்லைன் (https://frontline.thehindu.com/the-nation/article26004542.ece)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இப்போது தடம் மாறுகிறாரா?