டெல்டும்டேவின் எழுத்துக்கள் தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளின் போலித்தனத்தையும், சாதி இல்லை என்பவர்களையும், இந்த்துத்துவ வெற்றி பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களையும் அடையாளம் காட்டுகின்றன. இவர்கள்தான் இன்று ஆனந்த் மௌனமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.
“வரலாற்றுக் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசும்போது எப்போதும் நம் நாட்டில் செய்வது போல் நாயக வழிபாட்டுப் போக்கிலிருந்து மாறி அதீதமான தைரியத்தை டாக்டர் ஆனந்த் டெல்டும்டே வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஆராய்ந்த விஷயங்களுக்குத் தேவையான கவனமும் தீவிரப் பார்வையும் கிடைக்கும் என்பது நம் எதிர்பார்ப்பாகும். அவர் நிலைப்பாட்டை விரிவான, முக்கியமான விவாதத்துக்குள்ளாக்க வேண்டும்… புரட்சிகரமான கருத்துக்களை உருவாக்கும்போது ஒப்புக்கொள்ளாத நிலையும் சர்ச்சைகளும் எழுவது இயல்பே. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். டாக்டர் டெல்டும்டேவை அவரது தற்போதைய திட்டத்துக்காக இதனால் நாம் பாராட்டியாக வேண்டும். வருங்காலத்தில் அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.”
‘அம்பேத்கரின் தலித் இயக்கத்திலும் அதற்குப் பின்னும் அம்பேத்கர்’ (‘Ambedkar’ In and Of the Post-Ambedkar Dalit Movement) என்னும் டெல்டும்டேயின் 1990களில் எழுதப்பட்ட அபாரமான குறும்புத்தகத்தை அறிமுகப்படுத்திய மறைந்த மராத்தி எழுத்தாளர், அரசியல் அறிஞர், பலரால் போற்றப்பட்ட மாமேதை பேராசிரியர் ராம் பப்பட் கூறிய வார்த்தைகள்தான் இவை.
தீர்க்கதரிசனம் நிறைந்த வார்த்தைகள் இவை. புத்தகம் எழுதப்பட்டு 2 தலைமுறைகளுக்கு மேல் பொது விஷயங்களில் பொதுவான நிலைப்பாட்டைத் தத்துவார்த்தமாக எடுத்து ‘எகனாமிக் & பொலிடிகல் வீக்லி’யில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி, பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டு, பிற புத்தகங்கள் / பத்திரிகைகளில் கருத்தாய்வு மிக்க அறிவுசார் விஷயங்களைப் பகிர்ந்து, நாட்டில் நடக்கும் வன்கொடுமைகள் பற்றி உண்மை கண்டறியும் அறிக்கைகள் வெளியிட்டுவரும் டெல்டும்டேயின் அந்தஸ்து தற்போது வளர்ந்து, நாட்டில் மதிக்கப்படும் தத்துவவாதிகளுள் ஒருவராக ஆகிவிட்டார்.
உலகமயமாக்கல் பற்றிய அரசியல் – பொருளாதார ஆய்வுகள், சாதி அடையாளம் மற்றும் சாதி – வகுப்பு பேச்சுவழக்குகள் அல்லது தொழில் சார்ந்த வியூகக் கொள்கைகளை வர்த்தகப் பத்திரிகைகளுக்காக உருவாக்கும் ஞானம் ஆகியவற்றுடன் சான்றோராக இன்று வளர்ந்துள்ளார் ஆனந்த் டெல்டும்டே.
ஆனந்தைப் புரிந்துகொள்கையில் இந்திய ஜனநாயகம் பற்றி ஆக்கபூர்வமான, அடிப்படை விமரிசனம் செய்து அதன் மூலம் உண்மையான விடுதலை என்கிற உண்மை நிலையை உருவாக்கும் ஈடுபாட்டை வாழ்நாள் முழுதும் வைத்திருப்பதை வெளியிடும் அவரது வலிமை படைத்த கருத்துக்களையும் புரிந்துகொள்ள முடியும்.
தனது பள்ளிப் பருவத்து நாயகனும் காலனி ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்த சர்வதேசவாதியுமான பகத் சிங்கின் கொள்கைகளுக்கேற்ப ஆனந்தின் நடத்தை இன்றைய இந்தியாவைப் பற்றிய முக்கியமான விவாதத்தில் அவரது பங்கு எவ்வளவு முக்கியம் என்று விளக்குகிறது. ஏனெனில் அவரது ஒவ்வொரு எழுத்தும் விவாதத்துக்கான கருத்துக்களைத் தரும் (அ) ஒரு விவாதத்தை அடியோடு நசுக்கும்படி இருக்கும். எப்படிப் பார்த்தாலும், கருத்துக்களை அதன் உண்மைத்தன்மையுடன் பார்க்கும் வாசகர்களும் பிறரும் நிச்சயம் வருந்த மாட்டார்கள். இன்றைய இந்தியாவை பற்றிய விவாதத்துக்கு டெல்டும்டேயின் கருத்துக்கள் எப்படி முக்கியமானவை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்களை இப்போது கீழே பார்க்கலாம்.
உலகமயமாக்கல் பற்றிய விவாதம்
1991 முதல் பொருளாதார தாராளமயமாக்கல் பற்றி விவாதிக்கப்பட்டது போல் வேறெந்த விஷயமும் இந்தியாவில் விவாதிக்கப்படவில்லை. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1996ஆம் ஆண்டு உரையாகத் தரப்பட்ட கட்டுரையில் (பின்னர் அச்சில் வந்தது), ஏழைகள், தலித்துகள் உட்படப் பெரும்பான்மையான இந்திய மக்களின் மீது ‘நவதாராளவத உலகமயமாக்கல்’ கொள்கைகளின் தாக்கங்களை விளக்கிக் கூறுகிறார்.
காலம் கடந்து நிற்கும் இக்கட்டுரை அதன் செய்முறை, உணவுப் பாதுகாப்பு, பணவீக்கம், வேலைவாய்ப்பு, வறுமை பற்றிய கருத்தாழம், திரட்டிய சான்று, வாதத்தின் விளக்கும் வலிமை ஆகியவற்றல் இன்றளவும் பொருந்துகிறது. உலகமயமாக்கல் பற்றிய தற்போதைய விவாதம் எதுவும் இரு விஷயங்களைத் தொடாமல் இருக்கவே முடியாது: ஆட்சியில் எந்தக்கட்சி இருந்தாலும் அதன் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ‘பணக்காரப் பாரபட்சத்துடன்’ இருப்பது, மற்றும் அவை ‘வியூகம் சார்ந்ததாக’ இல்லாமல் ‘பிரச்சினை சார்ந்ததாக’ இருப்பது. தொண்ணூறுகளின் இறுதியில் நடந்ததை முன்பே கூறிய அரிய சான்று இது:
“சீர்திருத்தங்கள் தொடர்பான பொருளாதாரத் துயரங்களின் சமூக விளைவுகள் தலித்துகளை மிகவும் பாதிப்பவை. ஒருபுறம் அவர்களது வறுமை அதிகரிக்க, மறுபுறம் வேலைவாய்ப்பு சந்தையில் பிறருடன் போட்டிபோட்டாக வேண்டிய பெரும் நிர்ப்பந்தம். தனியார்மயமாக்கல் மூலம் இடஒதுக்கீட்டைக் குறைக்க (அ) முற்றிலும் ஒழிக்கும் ஆட்சியாளர்களின் மனப்போக்கு, தொழில்துறையை வளைக்கும் / முறைசாரா விதமாக ஆக்கும் வியூகம் ஆகியவற்றால் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போதுள்ள சாதி அடிப்படையான பாரபட்சங்கள் இச்சூழலில் தலித்துகளின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.”
(தலித்துகளும் உலகமயமாக்கலும் – ‘Globalization and the Dalits’, 2001)
விவசாயிகளின் தீவிரப் போராட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாதது, நாடெங்கிலும் ஆட்சி புரிவோரை தலித்துகள் எதிர்ப்பது ஆகியவற்றை இன்று பார்க்கும்போது, ‘நல்லது நடக்கப்போகிறது’ என்ற சிலரது செயற்கையான வார்த்தைகளுக்குச் சவாலாக டெல்டும்டேயின் எழுத்துக்கள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
சாதித்துவம் பற்றிய விவாதம்
இந்தியாவில் எக்கதையுமே சாதி, சாதித்துவம் பற்றிய விசாரணையிலிருந்து தப்புவதில்லை. சாதிப் பாரபட்சம் இப்போது இல்லை எனச் சொல்லப்பட்டாலும், வரலாற்றில் மாறிவரும் சமூக – பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட சாதி தன் தீய சக்தியையும் வைத்துள்ளது என ஆனந்த் டெல்டும்டேயின் எழுத்துக்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன.
சாதியின் புதிய வடிவங்களிலும் ‘பழைமை நீடிக்கும்’ (பலம்பெறும்) என்பது பற்றி நீண்ட காலம் நிலைத்துள்ள கதையாடலை இவர் போல சுவாரசியமாக யாரும் சொல்லவில்லை. சாதிக் கொலைகளில் இந்தியாவில் சமீபத்தில் 2006இல் மகாராஷ்டிரம் பண்டாரா மாவட்டத்தின் கைர்லாஞ்சி கிராமத்தில் நடந்த வன்கொடுமை பற்றிய இவரது ஆய்வு சாதி இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதன் ஆபத்தைப் பற்றி விளக்கியதுடன் நில்லாமல் இந்தியா நிலைப்பதற்கு சாதியும் ஒரு காரணமே என்பதை பின்வரும் வார்த்தைகளில் டெல்டும்டே சிறப்பாக விளக்குகிறார்:
“இந்தியாவில் சாதி என்னும் பிரச்சினை பல விதமான மாயைகளால் சூழப்பட்டுள்ளது. கைர்லாஞ்சி சம்பவம் இவற்றுள் பலவற்றை உறுதியாக அழிக்கிறது. முதலாவதாக, உலகமயமாக்கலால் சாதி அழியும் என்பது நவதாராளவாதப் பார்வையின் மாயை… தாராளமயமாதலால் தலித்துகளின் பொருளாதார / கலாசார மேம்பாடு ஏற்பட்டு, சாதி சார்ந்த சுரண்டல்கள் காலப்போக்கில் உதிர்ந்துவிடும் என்பது நமது பொருளாதார வல்லுநர்கள் பலர் முன்வைக்கும் மாயை. ஆறு தசாப்தங்களில் நாம் கண்ட வளர்ச்சியால் தலித்துகளல்லாத, சாதியை எதிர்க்கும் நாகரிக சமூகம் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது… பிறகு பிரதிநிதித்துவம் பற்றிய மாயை… அரசு நிர்வாகத்திலும் பிற துறையிலும் தலித்துகளின் பிரதிநிதித்துவம் இருந்தால் அவர்கள் சாதியை ஒழித்து எல்லாருக்கும் நீதி தருவார்கள்… இந்த மாயைகள் அனைத்தும் கைர்லாஞ்சி சம்பவத்தாலும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளாலும் தவிடுபொடியாகிவிட்டன.
(அழியாத சாதி: கைர்லாஞ்சி கொலைகளும் இந்தியாவின் மறைக்கப்பட்ட நிற வெறியும், 2010, பக்கம் 173-174 – Teltumbde, The Persistence of Caste: The Khairlanji Murders and India’s Hidden Apartheid, 2010, p. 173-4).
சாதி பற்றிய பாரம்பரிய நிலைகளை டெட்டும்டே விட்டு வைக்கவில்லை என்பதைக் கவனிக்கவும்: சாதியை வகுப்பிலிருந்து மாறுபடுத்திப் பார்க்க சிரமப்பட்ட இடதுசாரிகளையும், அரசுப் பதவிகளை வகித்து இந்தியாவின் நடைமுறையை மாற்றிவிட முடியுமென நம்பும் உயர்நிலை தலித்துகள், சாதியில்லாத நவீன சமூகம் உருவாகும் என்ற நம்பிக்கையில் சாதியை எதிர்க்கும் தலித்தல்லாதவர்கள் என யாரையும் அவர் விட்டு வைக்கவில்லை.
ஆயினும் இவையெல்லாம் டெல்டும்டேவின் தலித்துகளின் மீதான பரிவினால் விளைந்த விமர்சனம் என வைத்துக்கொண்டாலும், இந்தியா அரசு, அதன் தலைநகர் பற்றி அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்: அரசின் மிக தாராளமான இந்துத்துவ நிலைப்ப்பாடைப் பற்றித் தன் புத்தகத்தில் சொல்லும்போது முற்போக்கு தலித் இயக்கங்களை நசுக்கிய வரலாற்றுச் சான்றுகளையும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்துத்துவம் பற்றிய விவாதம்
இன்றைய இந்தியாவில் கருத்துப் பரிமாற்றம் நடக்கும் மூன்றாவது விவாதம் இந்துத்துவத்தின் முக்கியத்துவம் பற்றித்தான். இந்துத்துவ இயக்கத்தின் பெருகிவரும் முரட்டுத்தனம், தத்துவார்த்த இறுக்கம் ஆகியவற்றை இன்று யாராலும் மறுக்க முடியாது. இந்துத்துவ அமைப்புகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதும் வெடிகுண்டுகள் செயலிழக்கப்படுவதும் ஊடகங்களில் இப்போது அன்றாடம் வரும் செய்தியாகிவிட்டன.
ஆயினும் இந்துத்துவம் ஒரு சித்தாந்த்தமாக (அ) நல்ல விஷயமாக நடுத்தர மக்களிடையே இருந்துகொண்டுதான் வருகிறது. பல கட்டுரைகள் மூலமும் ‘இந்துத்துவமும் தலித்துகளும்: மதவாதப் பயிற்சியைப் புரிந்துகொள்ள உதவும் பார்வைகள்’ ((Hindutva and Dalits: Perspectives for Understanding Communal Praxis, 2005) என்ற புத்தகத்தின் மூலமும் டெல்டும்டே இந்தியாவின் இந்த மூத்த அரசியல் இயக்கம் பற்றியும், நீண்ட காலமாக கவனித்துவரும் அவரது அனுபவங்கள் பற்றியும் தலித்துகளை அது எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பது பற்றியும், அம்பேத்கருக்குக் ‘காவி’ வண்ணம் பூச முயன்றவர்களின் தோல்வி பற்றியும் இந்துத்துவத்தின் ஆபத்தைப் பற்றி தலித்துகளிடையே நிலவும் விழிப்புணர்வு பற்றியும் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் பலருக்கு மேற்கோள் புத்தகமாக விளங்கப் போகும் அவரது மிகச் சமீபத்திய புத்தகமானது (இதற்கு வேறொரு இடத்தில் நான் மதிப்புரை எழுதியுள்ளேன்) இதுவரை யாரும் செய்திராத விதத்தில் இந்துத்துவத்தைக் கருணையில்லாமல் விமர்சிக்கிறது.
அம்பேத்தரைத் தம் பக்கம் இழுக்கக் காவிப் படையினர் மேற்கொண்ட எல்லா வியூகங்களையும் தனது அற்புதமான ஆய்வின் மூலம் கண்டறிந்து பின்வருமாறு வெளிக்கொணர்கிறார் ஆனந்த்:
“பாஜகவும் சங் பரிவார் குழுக்களும் திரும்பக் கொண்டுவரப் பார்க்கும் பார்ப்பன ஆதிக்கத்தினால்தான் முகம்மது அக்லக், ரோஹித் வெமுலா ஆகியோரின் மரணங்கள் நிகழ்ந்தன. மேல்தட்டு வர்க்க ரீதியான அவர்களது தத்துவங்கள் ஒடுக்கப்பட்டோரைத் திட்டமிட்டு அழிக்க உதவுகின்றன. இதை மறைக்கவே அம்பேத்கரைச் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர். முஸ்லிம்களும் தலித்துக்களும் இணைவதைத் தடுப்பதே சங் பரிவாரின் முதல் முன்னுரிமைப் பணியாகும். இத்தத்துவவாதிகள் அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் எனச் சொல்லிவருகின்றனர். அம்பேத்கர் பற்றிய பரிவாரின் பொய்கள் மீதான என் ஆய்வை நிரூபிக்க இதைச் சொல்கிறேன். அம்பேத்கரே இதை மறுத்ததைக் கண்டுபிடிக்க என் நான்கு நாள் ஆய்வே போதுமானதாக இருந்தது. இதை நான் எனது ‘முஸ்லிம்கள் பற்றி அம்பேத்கர்: கற்பனைகளும் உண்மைகளும்’ (2003) என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளேன்.”
(சாதியக் குடியரசு: நவதாராளவாத இந்துத்துவக் காலத்தில் சமத்துவம் பற்றிச் சிந்தித்தல், பக்கம் 280-282. – Teltumbde, Republic of Caste: Thinking equality in the Time of Neoliberal Hindutva, 2018, pp. 280-2).
அற்புதமாக விளக்கப்பட்ட கோட்பாடுகளின் வெளிச்சத்தில் ஆனந்த் டெல்டும்டே இந்த நாட்டை ஆள்பவர்களின் நிஜ உருவத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். இந்திய ஜனநாயகத்தை வாட்டும் விஷயங்களைக் காட்ட மேற்சொன்ன மூன்று விவாதங்களையும் ஒருங்கிணைத்து பாசிச முகத்தின் உண்மையான சாத்தியக்கூறைக் காட்டியாக வேண்டும் என்று இவர் காட்டியுள்ளார்.
டாக்டர் டெல்டும்டேவைப் பார்த்து யாருக்கு பயம்?
‘பொய்ச் செய்திகள்’ நிறைந்த, மத நெறிகளைப் புதுமையான எண்ணங்கள் என ஏமாற்றி, உண்மையை அதிகாரத்தால் நசுக்கி, வரலாற்றுப் பொய்களை ஞானம் என்ற பெயரில் ஏமாறும் இவ்வுலகில் உரிய தர்க்கங்கள் நிறைந்த ஒரு குரலை நசுக்க யார் விரும்புவார்? ஆனந்த் டெல்டும்டேவின் கூரான ஏவுகணைகளால் துளைக்கப்பட்ட சித்தாந்தங்கள் யாருடையவை? அவரது எழுத்துக்களால் அதிகம் கோபப்படுபவர்(கள்) யார்? டெல்டும்டேவின் அறிவார்ந்த எழுத்துக்கள் யாருடைய உண்மை என்னும் பிம்பத்தைச் சவாலிட்டு அழிக்க முனைகின்றன?
டெல்டும்டேவால் யார் பயந்திருந்தாலும், சமூக நீதிக்காகப் போராடும் இவரை அங்கீகரித்த மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், ஒருமைப்பாடை விரும்புவோர், தலித்துக்கள் முஸ்லிம்கள், சாதியை எதிர்க்கும் இந்துக்கள், அவருக்கு எப்போதாவது ஏதாவது காரணத்தினால் நெருக்கமாக இருப்பவர்கள், இக்கால எழுத்தாளர்கள், அவரது நிறுவன சகாக்கள், பெருநகர / நகர்ப்புறத் தொண்டர்கள் ஆகியோர் நிச்சயமாக இவரை எதிர்ப்ப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் இன்று அவர் நடத்தப்படும் விதத்தைப் பற்றிக் கோபப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்தமாக அவருக்கு ஆதரவளிக்க வெளிவருகின்றனர். அறிவுஜீவிகள் / அரசியல் உலகில் அவரைத் தீவிர விமர்சனம் செய்பவர்கள் போராட்டத்தின் வியூகம் பற்றி அவருடன் சண்டையிட்டாலும் நடமுறை உண்மைகள் பற்றிய அவரது கருத்துக்களை மறுக்க மிகவும் கஷ்டப்படுவர். அதாவது, அறிவுஜீவிப் போராட்டத்தில் இதை இப்படித்தான் கூறுவர்: தனிநபரைத் தாக்க்காமல் தேவைக்கென கருத்துக்களுடன் மோதுதல்.
எல்லையற்ற தாராளமய முதலாளித்துவத்தைத் தாங்களாகவே முன்வந்து ஆதரிப்பவர்களும், நவீன இந்தியாவில் சாதிக்கிடமில்லை என்பவர்களும், உலகின் மாபெரும் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டே இந்துத்துவத் தேரானது பல சடலங்கள் இருக்கும் ரத்தப் பாதையைக் கடக்கும்போது சும்மா இருப்பவர்களும்தான் இவர்களா?
வெளிவேஷம் காரணமாகத் தோலுரிக்கப்பபட்டு, அவர்கள் வார்த்தைகளால் அவர்களது கோட்டையே நடுங்கி, இந்தியா பற்றிய உண்மையை எப்போதும் மறைக்க முயற்சி செய்து வருபவர்களுக்குத்தான் இந்த உண்மை கசக்கும்: இந்தச் சாபக்கேடு அவர்களது மனசாட்சிக்குத் தெரிந்திருந்தாலும் வரலாற்றைத் திரும்ப எழுத அவர்கள் இதைவிட்டு வெளிவந்தாக வேண்டும்.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த புத்தகத்தைக் கவிஞரும் தீர்க்கதரிசியுமான விலாஸ் கோக்ரேவுக்கு டெல்டும்டே அர்ப்பணித்தது இவற்றின் பின்னணியில் ஆச்சரியமானதல்ல; ‘சிவப்பு வணக்கம்’, ‘ஜெய் பீம்’ இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர மறுத்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்ற வாசகத்தை தலித்துக்களின் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் புத்த விஹாரங்களிலிருந்து கேட்கவே கோக்ரே விரும்பினார்!
என். பாலமுரளி
[என். பாலமுரளி, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள வில்லியம் பேட்டர்சன் பல்கலைகழகத்தில் சமூக அறிவியல் அறிஞராகப் பணிபுரிந்துவருகிறார்)
நன்றி: https://thewire.in/rights/whos-afraid-of-anand-teltumbde