தேர்தல் கருத்துக் கணிப்பு என்பதையெல்லாம் தாண்டி சில சமயங்களில் உடல் மொழி நமக்குப் பல விஷயங்களைக் கூறிவிடுகிறது.
பிரதமர் மோடியின் 2014 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களையும் தற்போதைய 2019 பொதுக் கூட்டங்களையும் நன்கு கவனித்திப் பார்த்தாலே நமக்கு இது புரிய வரும்.
அந்த வீறாப்புப் பேச்செல்லாம் காணாமல் போய்விட்டது. நடையில் முன்பிருந்த மிடுக்கும் வேகமும் குறைந்துவிட்டது. கஷ்டப்பட்டு வருவித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னம்பிக்கை பளிச்சிடும் கண்களில் தற்போது சோர்வும் அலுப்பும் தட்டத் தொடங்கியுள்ளன.
எதிர்காலம் அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை என்பதை மோடி உணர ஆரம்பித்து விட்டார்.
2019, மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமித் ஷா வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல என்பது மோடிக்குத் தெரியும்.
கூட்டணி பற்றிய கணக்கு தப்புக் கணக்காகிவிடும்போது அரசியல்வாதி தன் வியூகத்தை மாற்றிக்கொள்ள நேர்கிறது. வாக்காளர்களில் பெருவாரியானவர்களிடையே இன்னமும் மோடியே பிரபலமான வேட்பாளராகக் காணப்படுகிறார். ஆனால், 68 வயதில் அவர் துடிப்பு மிக்க புதிய தலைமுறை வாக்காளர்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. 2014இல் மோடி தனது அதிர்வூட்டுகிற வகையிலான பிரச்சாரத்தை மேற்கொண்ட போது அவர்களில் பலர் 13 வயதினராக இருந்திருப்பார்கள். 2014ஆம் ஆண்டில் 13இலிருந்து 17 வயதினராக இருந்த அந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் தற்போது கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் உள்ளனர்.
அவர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது ஊகிக்க முடியாததாகவும் ஆவலைத் தூண்டும் விதமாகவும் உள்ளது. அது பற்றிய புள்ளிவிவரங்களை இனிமேல்தான் எடுக்க வேண்டும்.
இத்தகைய இளைய தலைமுறையினரின் இயல்பான தேர்வாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே இருக்க முடியும். ஆயினும் சமீபத்தில் நடந்த இளைஞர்களுக்கான தனிப்பட்ட கூட்டத்தில் 20 + வயதினரிடையே ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலாக கனத்த மெளனமே அந்த அறையில் நிலவியது.
மீண்டும் மோடி விஷயத்திற்கு வருவோம். மோடி அலை ஏன் தொய்வடைந்தது? அதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் ஐந்து காரணங்கள் முதன்மையாக உள்ளன.
கூட்டணிக் கட்சிகளின் விலகல்
பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படும் என்பதற்கான முதல் காரணம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சிகளை வேண்டுமென்றே உதாசீனப்படுத்தியது.
கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியபோதே எச்சரிக்கை மணி அடிப்பதை உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். ஒருவேளை மோடி, ஷாவுக்கு அறிவுரை கூறும் அரசியல் வல்லுநர்கள் சந்திரபாபுவின் பயன்பாடு முடிந்துவிட்டது. இனி அவர் தயவு தேவை இல்லை. இனிமேல் ஜகன்மோகன் ரெட்டியுடனான கூட்டணி அதைவிட அதிகப் பலன் தரக்கூடும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் நாயுடு கூட்டணியில் இருந்து விலகியது பலத்த சேதத்தை உண்டாக்கியது முக்கியமான ஒரு சமிக்ஞை .
பிகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்த சிறு சிறு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை இழந்தது, சிவசேனாவுடனான நட்பை முறித்துக்கொண்டது. மற்ற மாநிலங்களில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளவு ஏற்பட்டுக்கொண்டிருப்பது ஆகியவை பாஜக தலைமையிலான கூட்டணியைச் சுருங்கச் செய்துவிடும். அதுவும் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய இவ்வேளையில் அதற்கு எதிரான ஒரு பலமான கூட்டணியை உருவாக்குவது மிகவும் கடினமான விஷயமாக மாறியுள்ளது.
தனது கட்சியுடன் கூட்டணி அமைக்க வருமாறு அரசியல் கட்சிகளுக்கு தாமதமாக சென்ற வாரம் அழைப்பு விடுத்தபோது தமிழகத்தின் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே அந்த அழைப்பை நிராகரித்தன. கடந்த நான்கரை ஆண்டு காலமாக தேஜகூவின் கூட்டங்கள் எதையும் நடத்தாத நிலையில் திடீரென்று சுதாரித்துக்கொண்டு அவர்களைத் தன்பக்கம் ஈர்ப்பதற்குச் செய்யும் முயற்சிகள் கூட்டணி நண்பர்களைச் சமாதனப்படுத்துவதாயில்லை.
வடகிழக்கில் ஒலிக்கும் அபாய மணி
வடகிழக்கு மாநிலங்களில் கட்சிக்கு எதிரான அலை உருவாவதைக் கண்டுகொள்ளத் தவறியது பாஜகவின் சிக்கலுக்கான இரண்டாவது காரணம்.
2019இல் பாஜகவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலத்திலிருந்து அடுத்த புயல் உருவாகிக்கொண்டிருப்பது இரண்டாவது ஆபத்துக்கான எச்சரிக்கை சமிக்ஞை.
குடியுரிமை (திருத்தம்) மசோதா காரணமாக ஏற்கனவே அஸ்ஸாம் அரசில் பங்கு வகித்த தேஜகூ கூட்டணிக் கட்சியான அஸ்ஸாம் கணபரிஷத் (ஏஜிபி) விலகிவிட்டது.
மற்ற வடகிழக்கு மாநிலங்களும் கொந்தளிப்பான மனநிலையில்தான் உள்ளன. என்னதான் முழு பலத்தையும் காட்டிப் போராடினாலும் பாஜகவின் முயற்சிகள் பலிக்காததோடு வடகிழக்கு மாநிலங்களின் 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் சிலவற்றையாவது கைப்பற்றிவிட முடியும் என்கிற அதன் கனவும் கலைந்துபோக வாய்ப்புள்ளது.
சாதனைகளைச் சொல்வதில் தேக்கம்
சாதனைகளைப் பிரச்சாரம் செய்யும் விஷயத்தில் பின்தங்கியிருப்பது மோடி செய்த மூன்றாவது தவறு.
தன் ஆட்சியின் சாதனைகளைப் பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டுசெல்வதிலும் கட்சி தோல்வியுற்றது. தேர்தல் கண்ணோட்டத்தில் மோடி அரசு செய்த மூன்றாவது தவறான முடிவு இது.
இந்தியாவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மோடி கடுமையாக உழைத்துள்ளார். சுகாதாரம், கிராமங்களில் மின் இணைப்பு, அடிப்படைக் கட்டமைப்பு, மருத்துவக் காப்பீடு, திவால் குறியீடு, மானியங்கள், பணப் பட்டுவாடாக்கள் மின்னணுப் பரிமாற்றம் மூலம் நேரடியாகச் செலுத்தப்பட்டது போன்ற பல புதுமையான நடவடிக்கைகள் மோடி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. இவையெல்லாம் உண்மையிலேயே சாதனைகள்தான் என்றாலும் அவை போதுமான அளவில் முன்னிறுத்தப்படவில்லை.
பாஜகவின் தகவல் தொடர்பு சாதனங்கள் விமர்சனங்களிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாகவும், விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றுவதாகவுமே உள்ளத். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் பாஜகவின் தகவல் தொடர்புப் பிரிவு தள்ளாடுவதாகிறது.
எளிதில் அணுக முடியாத தன்மை
எளிதில் அணுக முடியாத மனிதராக இருப்பது மோடி செய்த நான்காவது தவறு.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மோடி, மேடிசன் ஸ்கொயர் கார்டன் பாணியிலான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டும் தன்னைப் பிறர் புகழ்வதைக் கேட்டுத் திளைத்துக்கொண்டும் இருந்தார்.
ஆனால் தற்போது அத்தகைய கொண்டாட்டங்கள் மறைந்துவிட்டன. வெம்ப்ளேயில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மோடி உற்சாகமாக முஷ்டியை உயர்த்திக் காட்டியபோது அப்போது உடனிருந்த முன்னால் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் சற்றே குழம்பிப் போனது, ஜப்பானில் டிரம்ஸ் வாசித்த மோடி, அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீன அதிபரின் கவர்ச்சி மிக்க பாடகரும், மனைவியுமான பெங்க் லியுவான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க சீன அதிபரின் அருகில் ஊஞ்சலில் அமர்ந்திருந்த மோடி என்பன போன்ற காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நமது நினைவுகளிலிருந்து மங்கத் தொடங்கிவிட்டன.
தற்போது இறுகிய முகத்துடன் கூடிய மோடியையே பார்க்க முடிகிறது. தன்னுடைய உண்மை விசுவாசிகளின் பின்னால் அவர் தனிமைப்பட்டுக் கிடக்கிறார்.
ஐமுகூ சகாப்தத்தில் சோனியா காந்தி தர்பார் சிதறிப் போயிருக்கலாம். ஆனாலும் முடிவெடுக்கும் ஒற்றை அதிகாரம் இன்றைக்கும் அவரிடமே மாறாமல் இருக்கிறது.
திறமைப் பஞ்சம்
திறமை மிக்க நபர்களைக் கல்வி நிலையங்களில், நிறுவனங்களில், ஏன் அமைச்சரவையில்கூட ஊக்குவித்து முன்னுக்குக் கொண்டுவராதது மோடி செய்த ஐந்தாவது தவறு.
இத்தகைய திறமைப் பஞ்சம் ஆட்சியிலும் பிரதிபலிக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்டமைப்பதில் காணப்படும் குறைகள், பெருகிவரும் இளைஞர்களின் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் திறன்படச் செயல்பட இயலாத போக்கு ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
பத்தாண்டு கால ஐமுகூ ஆட்சியின் தொடர் ஊழல் வழக்குகளை முடித்து வைப்பதில் மோடி அரசு தோல்வியுற்றது. பாஜகவின் அடிப்படைத் தொண்டர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி, கட்சியிடமிருண்டு அவர்கள் விலகுமாறு செய்துவிட்டார் மோடி. தேர்தல் நேரத்தில் இது பாஜகவை வெகுவாக பாதிக்கக்கூடும்.
இவையெல்லாம் தொங்கு நாடாளுமன்றத்தை நோக்கித்தான் நம்மை இட்டுச் செல்கின்றன.
ஜனதா தளம் (யு) தவிர குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தக் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தராத நிலையில் ஒற்றுமையான எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியின் மீதான எதிர்ப்பு அலை என்னும் பயங்கரமான சேர்க்கையை பாஜக் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு நினைத்ததை விட அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடும். அங்கு எஸ்பி. பிஎஸ்பி, ஆர்எல்டி கூட்டணியை ஆளுங்கட்சியான பாஜகா நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறது. இம்மாநிலத்தில் 2014இல் 71 தொகுதிகளைப் பிடித்த பாஜக தற்போது அதில் பாதி இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுபோன்ற இழப்புகள் உத்தரப் பிரதேசத்தைத் தாண்டியும் அதிகரிக்கக்கூடும். 2014 தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் 65 மக்களவைத் தொகுதிகளில் 62ஐ பாஜக கைப்பற்றியது. பாஜகவின் இந்த வலுவான கோட்டைகளும் தற்போது எதிர்க்கட்சிகளின் ஆளுகையின் கீழ் உள்ளன.
ஒருவேளை 2019 தேர்தலில் BJP 180க்கும் குறைவான இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில் மோடி எதிர்க்கட்சி வரிசையில் அமரவே விரும்புவார். எனெனில் பெரும்பான்மை அரசை அமைப்பதற்குத் தேவைப்படும் அளவு கூட்டணிக் கட்சிகளின் பலம் அவரிடம் இல்லை.
தனிப் பெரும்பான்மைக் கட்சி என்ற அளவில் ஆட்சி அமைக்குமாறு ராம்நாத் கோவிந்த் பாஜகவுக்கு முதலில் அழைப்பு விடுப்பாரா? தேர்தலுக்கு முன்பே இணைந்த எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி அதிக இடங்களைத் தன் வசம் வைத்திருக்குமானால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை மோடிக்கு மாற்றாக ஆர்எஸ்எஸ்ஸுக்கு நெருக்கமான நிதின் கட்கரி போன்ற தலைவர் பாஜகவின் சார்பாக முன் நிறுத்தப்பட்டால் அது புதிய கூட்டணியை அவர்கள் வசம் ஈர்க்குமா என்றால் அதற்கான வாய்ப்பு எள்ளளவும் இல்லை என்பதே நிதர்சனம்.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2004 அல்லது 1991 தேர்தல் முடிவுகளை ஒத்திருக்கப் போவதில்லை. (2004இல் வெறும் 145 இடங்களை மட்டுமே பிடித்த காங்கிரஸ் இடதுசாரிகளின் துணையோடு ஆட்சி அமைத்தது). (1991இல் 250 இடங்களுக்குச் சற்றுக் கூடுதலாக பெற்ற நரசிம்மராவ் அரசு மைனாரிட்டி அரசாகவே ஐந்து வருடங்களையும் கடத்திவிட்டது).
ஆனால் வரப்போகும் 2019 தேர்தல் முடிவானது 1996 தேர்தல் முடிவுகளைப் போலவே அமைந்து வரலாறு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. (அப்போது காங்கிரஸ் தேவகவுடா தலைமையிலான முற்போக்குக் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து ஆட்சியமைக்க உதவியது). தேவகவுடா 11 மாதங்களும், பின்னர் ஐ.கே.குஜ்ரால் 10 மாதங்களும் பிரதமராக இருந்தனர்.
மோடியின் நம்பிக்கை எதிர்க்கட்சிகளின் இரண்டு பலவீனங்களிலிருந்து பிறக்கிறது.
ராகுல் காந்தி மோடியைத் தாக்குவதை மட்டுமே தீவிரமாகச் செய்துவருவதால் மாற்று சமூக, பொருளாதாரக் கொள்கைகளை வாக்காளர் முன் வைக்க வேண்டும் என்பது பற்றி அவர் சிந்திப்பதில்லை.
காங்கிரஸ் 100 இடங்களுக்கு மேல் பெற முடியாத பட்சத்தில் 2004இல் நடந்தது போல் மீண்டும் ஆட்சியமைப்பது அசாத்தியமான காரியம். முப்பெரும் சக்திகளான மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோர் அடங்கிய கூட்டணிக் கட்சிகள் கிட்டத்தட்ட காங்கிரஸுக்குச் சமமான இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில் அவர்கள் ராகுல் காந்தியின் தலைமையை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே, வேறுவழியில்லாமல் ராகுல் காந்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு முன்பு தேவகவுடாவுக்கு ஆதரவு அளித்தது போல் மாயாவதியையோ, மம்தாவையோ பிரதமராக ஏற்றுக்கொள்ள நேரிடும்.
இந்த ஏற்பாடு ராகுல் காந்திக்கும் உகந்ததாகவே இருக்கும். ஏனெனில் ராகுல் காந்தியின் முக்கியக் குறிக்கோள் மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதுதான். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் நேஷனல் ஹெரால்ட் (இதில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார்) போன்ற வழக்குகளில் சிக்கியுள்ள ராகுல் காந்திக்கு மோடி மீண்டும் பிரதமராக வரும் பட்சத்தில் மிகப் பெரிய சிக்கல் காத்திருக்கிறது.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மோடிக்கு டில்லி வட்டாரங்களில் நிலவக்கூடிய இந்தக் குழப்பமான சூழலை எப்படித் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது என்று ஆழ்ந்து யோசனை செய்ய ஏராளமான நேரம் கிடைக்கும்.
நன்றி: டெய்லிஓ இணையதளம்
https://www.dailyo.in/politics/narendra-modi-2019-general-elections-rahul-gandhi-bjp-tdp-mahagathbandhan/story/1/29011.html
வாய்ப்பே இல்ல ராஜா. இவர்களுக்கு மோடியே மேல்
மாயாவதி இந்த நாட்டின் பிரதமர் !
கேட்கவே அச்சமாக உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஆம்ஸ்ட்ராங் தமிழக தாதா.