ஐசிஐசிஐ வழக்கில் சிபிஐ விசாரணையை மட்டுப்படுத்தும் வகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொதுவெளியில் நேரடியாக வெளியிட்ட கருத்துகள் மோடி அரசுக்கு மற்றுமோர் பின்னடைவாகச் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி முறைகேடு ஒன்றின் மீது நடைபெற்றுவரும் விசாரணை குறித்து மத்திய நிதியமைச்சர் இயல்பான சூழலில் கருத்து தெரிவிப்பதே மிகுந்த கவனத்தை ஈர்க்கவல்லது. அதற்கும் மேலாக, அந்த அமைச்சர் ஒன்றரை மாதமாகச் செயல்படாத நிலையில் இருந்துகொண்டு, நாட்டின் முதன்மை விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப் பேசுவது அரசியல் ரீதியில் சர்ச்சைப் புயலைக் கிளப்பும் என்பது தெளிவு.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இப்போது அமெரிக்காவில் திசுப் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் தனது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தற்போது நிதியமைச்சகத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார். எதிர்வரும் மத்திய பட்ஜெட்டையும் அளிக்க இயலாத நிலைதான் ஜேட்லிக்கு.
தன் உடல்நிலை குறித்து ரகசியம் காக்கப்படுவதுடன், பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகியிருக்கும் இந்தச் சூழலிலும், ஐசிஐசிஐ – வீடியோகான் வங்கி முறைகேடு வழக்கு விவகாரத்தில் அவர் தன் மெளனத்தைக் கலைத்திருப்பது கவனத்துக்குரியது.
அருண் ஜேட்லி தனது சமீபத்திய சமூக வலைதளப் பதிவு ஒன்றில், ‘புலனாய்வு சாகசம்’ என்று குறிப்பிட்டு சிபிஐக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலனாய்வு சாகசகத்துக்கும் தொழில்முறை விசாரணைக்கும் இடையே அடிப்படையில் வித்தியாசம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் ஐசிஐசிஐ வழக்கு குறித்து மேலும் கூறும்போது, “ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமர்ந்திருக்கிறேன். ஐசிஐசிஐ வழக்கில் சாத்தியமான இலக்குகள் பட்டியலைப் படிக்கும்போது, என் மனதில் மீண்டும் ஒரே எண்ணம்தான் கடந்து போகிறது.
முதன்மையான இலக்குகள் மீது கவனம் செலுத்தாமல், திக்குத் தெரியாமலோ அல்லது எல்லா இடங்களுக்குமோ பயணம் மேற்கொள்ளப்படுகிறதா என்று எண்ணுகிறேன். நாம் வங்கித் துறையிலுள்ள ஒவ்வொருவரையும் ஆதாரத்துடனோ அல்லது ஆதாரமின்றியோ ஒட்டுமொத்தமாக சேர்த்தோமானால், நாம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறோம் அல்லது உண்மையில் யாரையெல்லாம் காயப்படுத்துகிறோம் என்பதும் இங்கே முக்கியக் கேள்வியாகிறது” என்று விவரித்திருக்கிறார்.
இந்திய வங்கித் துறையில் உள்ள அனைவரையுமே சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த முனைகிறது என்கிற ரீதியில் ஜேட்லி தனது கவலையை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி
ஐசிஐசிஐயின் முன்னாள் தலைமை சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ பதிந்த வழக்கை முன்வைத்தே அருண் ஜெட்லி தனது கருத்தை துரிதகதியில் வெளியிட்டுள்ளார்.
2012இல் ஐசிஐசிஐயிடமிருந்து வீடியோகான் குழுமம் ரூ.3,250 கோடி கடனைப் பெற்றது. இந்தத் தொகையில் பெரும்பகுதியை, தீபக் கோச்சார் மற்றும் அவருடைய உறவினர்கள் இருவருக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு வேணுகோபால் தூத் அப்படியே மாற்றிவிட்டார் என்பதே குற்றச்சாட்டு.
முதன்மையான மூவர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய சிபிஐ, இந்த முறைகேடு தொடர்பாக வங்கித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் மேலும் சிலரையும் விசாரிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐயின் தற்போதைய சி.இ.ஓ.வும் மேலாண் இயக்குநருமான சந்தீப் பாக்ஷி, பிரிக்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்ட நியூ டெவலப்மென்ட் வங்கியின் தலைவர் கே.வி.காமத், கோல்ட்மென் சாச்ஸின் தலைவர் சஞ்சய் சேட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கே.ராம்குமார், ஐசிஐசிஐ ப்ருடன்ஷியல் லைஃபின் சி.இ.ஓ.வும் மேலாண் இயக்குநருமான என்.எஸ்.கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டடு பேங்க் இந்தியாவின் சி.இ.ஓ. ஜாரின் தருவாலா, டாடா கேபிடலின் சி.இ.ஓ.வும் மேலாண் இயக்குநருமான ராஜீவ் சபர்வால் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குஸ்ரோகான் ஆகியோரும் சிபிஐ குறிப்பிட்டுள்ளவர்களின் விசாரணை வளையப் பட்டியலுக்குள் அடங்குவர்.
இதுதான் நிதியமைச்சரைக் கவலையுற்றுப் பேசவைத்திருக்கிறது. இந்த விசாரணையின் தாக்கத்தால், முதலீட்டாளர்கள் மனப்போக்கும், சிபிஐ குறிப்பிட்ட சிலரது நற்பெயரும் பாதிக்கப்படும் என்பதே அவரது கவலையாக இருக்கிறது.
எனவேதான், “ஊடகக் கசிவுகள், நற்பெயர் கெடுதல் போன்றவற்றுக்கே சாசகப் போக்கு வழிவகுக்குமே தவிர, குற்றவாளிகளைக் கண்டறியப் பயன்படாது. இத்தகைய விசாரணை முறையால், இலக்குகளுக்கு உள்ளாவோர் துன்புறுத்தலுக்கு ஆளாவதுடன், அவர்களது நற்பெயருக்கும், நிதிநிலைமைக்கும் மோசமான விளைவுகள் நேரிடும்” என்று ஜேட்லி தனது பதிவில் அழுத்தமாகக் கூறியதுடன், “மகாபாரதத்தில் அர்ஜுனனின் அறிவுரைகளைப் பின்பற்றுக – காளையின் கண் மீது மட்டுமே கவனம் செலுத்துக” என்று சிபிஐக்கு அறிவுறுத்தல் வழங்கிடவும் தவறவில்லை.
சிபிஐயின் தன்னாட்சி அதிகாரத்துக்கு அச்சுறுத்தல்
தனது கட்டுப்பாட்டின் கீழ் வராத ஓர் அமைப்புக்கு, மத்திய அமைச்சர் ஒருவர் அறிவுரை வழங்குகிறார் என்பது இங்கே கவனத்துக்குரியது. சிபிஐ தனது தன்னாட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்குப் போராடிவரும் சூழலில், ஜேட்லியின் கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மோடியின் தொடர்ச்சியான தலையீட்டின் காரணமாகவே சிபிஐ அமைப்பு சமீப காலமாகப் படுதோல்விகளைச் சந்தித்து வருவதாக நம்பப்படுகிறது.
இத்தனைக்கும், கார்ப்பரேட் பெருந்தலைகளை விசாரிக்க வேண்டும் என்றுதான் சிபிஐ சொன்னதே தவிர, அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவதற்கான அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை. ஆனால், இதையே பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அமைச்சர் உடனடியாக எதிர்வினையாற்றுகிறார். அதிகாரம் மிக்க ஒரு அமைச்சரிடமிருந்து சிபிஐக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கப்படுவது, ஒரு வழக்கை நேர்மையான முறையில் விசாரிப்பதற்கு எந்த வகையிலும் உறுதுணை புரியாது.
இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ வழக்குகளில் பணியாற்றிய வழக்கறிஞர்கள் சிலர் வெளியிட்ட கருத்துகள்:
“விசாரணை நடந்து வரும்போது, சிபிஐ வழக்கு குறித்து மத்திய நிதியமைச்சர் கருத்து கூறுவது சரியான முறை அல்ல. சிபிஐ மேலும் சிலரை விசாரிக்க வேண்டிய நிலையில், சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்” என்கிறார் வழக்கறிஞரும் அரசியல் ஆர்வலருமான பிரசாந்த் பூஷண்.
“சுதந்திரமான விசாரணை அமைப்பு எப்படி செயல்பட வேண்டும் என்று எந்த நிர்வாகமும் சொல்வதற்கே இடமில்லை. கண்காணிப்பு என்று எடுத்துக்கொண்டால்கூட, வாரியக் குழு மூலமே கண்காணிக்கப்பட வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட வழக்கை முன்வைத்துப் பேசுவது கூடாது. வழக்கு விசாரணை குறித்து அரசியல்வாதிகள் போகிறபோக்கில் கருத்து சொல்வது என்பது வேறு; மத்திய அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு கருத்து சொல்வது என்பது மிகவும் முறையற்ற ஒன்று” என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ஆவேசத்துடன் கூறுகிறார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில், மோடி அரசின் அமைப்பு ரீதியிலான மீறல்கள் ஏராளம். அதில் ஒன்றுதான், இப்போது நடந்துகொண்டிருக்கும் சிபிஐ வழக்கில் வெளிப்படையாக தாக்கத்தை ஏற்படுத்தும் நிதியமைச்சரின் முயற்சி.
முதலீட்டாளர்கள் மீது உணர்வுபூர்வமாக ஜேட்லி கவலைப்படுகிறார் எனச் சிலர் நம்பலாம். ஆனால், இந்த விவகாரத்தில் இவ்வளவு துரித கதியில் பதற்றத்துடன் எதிர்வினையாற்றியிருப்பது, கார்ப்பரேட் துறையினரை இதமாக வைத்துக்கொள்ளும் முனைப்புதானே அன்றி வேறென்ன. பொதுத்துறையில் இதுபோன்ற விவகாரங்கள் வரும்போது, தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பொது அமைப்புகளைத் தன் போக்கில் வளைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட மத்திய அரசு தயங்கியதில்லை என்பதை மத்திய அரசின் ஆவணங்களே காட்டுகின்றன.
முறைகேடுகளில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபடுவது என்பது, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில் அரசியல் ரீதியிலும் உகந்தது அல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
ஜேட்லியின் கருத்துகள் குறித்து சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் கடுமையாகக் கொட்டப்பட்டன. அவற்றில் ஸ்வாதி சதுர்வேதி என்பவரது பதிவுகள்:
“அருண் ஜேட்லி சமூக வலைதளம் வாயிலாக சந்தா கோச்சாரைக் காப்பது ஏன்? தான் ஒரு அமைச்சர் என்பதையே அவர் மறந்துவிட்டாரா? நிமிடம்தோறும் வினோதங்களை அரங்கேற்றுகிறது இந்த அரசு.
சிபிஐக்கு அருண் ஜேட்லி விடுத்த எச்சரிக்கையே மோடி அரசின் உண்மை மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது.
அருண் ஜேட்லி இப்போது சமூக வலைதளத்தில் சந்தா கோச்சாருக்காகச் செய்திருப்பது போலவே 2ஜி வழக்கில் சிபிஐ விசாரணை மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் பாஜகவின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் எனக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.”
அஜய் ஆசீர்வாத் மஹாப்ரஷஸ்தா
நன்றி: தி வயர் (https://www.thewire.in/politics/arun-jaitley-cbi-icici-videocon-loan-case)