வெறுப்பரசியல் மையம் கொண்டுவிட்டது. இது எப்போது மாறும்? ஜனநாயகமும் பெரும்பான்மைவாதமும் ஒன்றல்ல என்று புரிகிறபோதுதான் இது மாறும்.
ஜனவரி 22 அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜே” என்ற முழக்கங்கள் ஒலிக்கவில்லை என்று கூறினார். எதிர்க்கட்சிகளுக்குத் தேசபக்தி இல்லை என்று சொல்வதே அவர் நோக்கம். பிரச்சினை என்னவென்றால், அவர் சொன்னது பொய்த் தகவல் என்பதுதான். எப்படியோ, பொதுத் தேர்தலுக்காக சங்கு ஊதுவது தொடங்கிவிட்டது.
மையமான வெறுப்பரசியல்
கடந்த டிசம்பரில் மூன்று மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதிலிருந்தே சமூக ஊடகங்களில் சங் பரிவாரத்தினர் தூவும் மதவெறி ஊறிய போலிச் செய்திகள் பரவி வருகின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியைக் கொண்டாடிய முஸ்லிம்கள் பாகிஸ்தான் தேசியக் கொடியைத் தூக்கி வந்தார்கள் என்பது அப்படிப்பட்டதொரு போலிச் செய்திதான். மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு மூலாதாரமாக இருந்ததே இஸ்லாம்தான் என்று ராகுல் காந்தி புகழ்ந்தார் என்பது இன்னொரு போலிச் செய்தி. மற்றொரு போலிச் செய்தி என்னவென்றால், ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடத்திய ராகுல் காந்தி இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி உருவாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் என்பதாகும். இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்ட தகவல்களே என்பதை ‘ஆல்ட் நியூஸ்’ செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.
ஒரு பக்கம் வெறுப்பை மையமாகக் கொண்ட அரசியல் படிப்படியாகக் கட்டப்படுகிறது, இன்னொரு பக்கம் தேர்தல் களம், பொதுவெளியில் என்ன பேசலாம் என்ற வரம்புகளைத் தாண்ட வைக்கிறது. சர்வசாதாரணமானதாகி வரும் வெறுப்பரசியல் வெறும் வார்த்தைகளோடு நிற்பதில்லை. ‘ஃபேக்ட்செக்கர்.இன்’ என்ற இணையதளம் பல்வேறு அமைப்புகளோடு இணைந்து மேற்கொண்ட ‘ஹேட் கிரைம் வாட்ச்’ (வெறுப்புக் குற்றங்கள் கண்காணிப்பு) என்ற ஆய்வு, கடந்த பத்தாண்டு காலத்தில் மதவாத அடிப்படையில் தூண்டிவிடப்பட்ட குற்றங்கள் மிக அதிகமாக நடந்தது சென்ற ஆண்டுதான் என்று தெரிவிக்கிறது. அவற்றில் 75% சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினர்தான்.
அண்மையில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றிகளை, வகுப்புவாதத்திற்கு எதிரான மதச்சார்பின்மையின் வெற்றி என்று எடுத்துக்கொள்வதற்கில்லை. அதே போல் கிராமங்களின் அவலத்தால் அல்லது வளர்ச்சி தொடர்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் கோபத்தால் ஏற்பட்ட மாற்றம் என்றும் பார்ப்பதற்கில்லை. ஏனெனில், நம் கால்களுக்குக் கீழே இருக்கும் தரை தீவிரமான ஆணாதிக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு, தலித் மக்களுக்கு எதிரான பகைமை ஆகிய வலதுசாரி நிகழ்ச்சிநிரலுக்கு இடமளிப்பதாக, மீள முடியாத அளவுக்கு நகர்ந்துவிட்டது. உதாரணமாக, உ.பி. மாநிலம் புலந்த்சாகர் கிராமத்தில் ஒரு காவல்துறை அதிகாரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநில அரசு என்ன செய்திருக்கிறது என்றால், அந்தக் கிராமத்தில் இறைச்சிக்காகப் பசுமாடு வெட்டப்படுவதற்கு எதிராக உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறது! மேலும், அந்த ஊரில் பசுவைக் கொன்றதாகக் கூறப்படுவோர் மீதுதான் தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததே தவிர, காவல் துறை அதிகாரியைக் கொன்றவர்கள் மீது அல்ல.
கையாளப்படும் வார்த்தைகள் மாறியிருக்கின்றன. டிசம்பரில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் எனது பொதுக்கூட்டப் பேச்சுகளை ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டு ஆரம்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி எனக்கு ஃபத்வா போட்டிருக்கிறது” என்றார். ஒரு பிரதமரின் வாயிலிருந்து, ‘பாரத மாதா’ என்பதற்கு எதிராக, இஸ்லாமிய அடையாளம் சார்ந்த மிகக் கொடுமையானதொரு நடவடிக்கையைக் குறிக்கிற வார்த்தை வருகிறபோது அது ஏற்படுத்துகிற தாக்கம் ஆழமானது. ஆனால் அது நமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இன்று அனுமார் ஓவியங்கள் கோபமான முகத்துடன் காட்சியளிக்கின்றன. அதற்குக் காரணம் வெறுப்பின் நெடி எங்கும் படர்ந்திருப்பதுதான். அனுமார் இனி பகவான் ராமனின் பணிவுமிக்க பக்தரல்ல. அவர் கோபம் கொண்ட போராளி.
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மதவாதத்தில் தோய்த்தெடுத்த சொற்களால், “அலியை காங்கிரஸ் வைத்துக்கொள்ளட்டும், நமக்கு பஜ்ரங்பலி போதும்” என்பது போன்ற உணர்ச்சியைத் தூண்டும் கருத்துகளைத் தனது பிரச்சாரங்களில் கூச்சமின்றிப் பயன்படுத்துகிறார். அதற்குக் காரணம் அவரது இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் மிகச் சாதாரணமானதாகிவிட்டதுதான்.
இயல்பான நடப்பாகிக்கொண்டிருக்கிற இந்தப் புதிய நிலைமைகளின் கடும் வெப்பத்தைத் தாங்க வேண்டிய நிலைமைக்கு முஸ்லிம்கள்தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள் (ஒரு சாட்சி: குடிமக்கள் உரிமைச் சட்டத் திருத்த முன்வரைவில் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள கருத்துகள்). ஏற்கெனவே அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களை இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் மேலும் ஓரங்கட்டுகின்றன. இதனை முஸ்லிம் தலைவர்களும் விசிறிவிடுகிறார்கள். உதாரணமாக, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹத் முஸ்லிமின் அமைப்பின் தலைவர் அக்பருதின் ஓவாசி, யோகி ஆதித்யநாத்தின் நச்சுப் பேச்சுகளுக்கு அதே மதவாதம் ஊறிய தொனியில்தான் எதிர்வினையாற்றினார். அரசியல் கூட்டங்களில் ‘நாரா இ தக்பீர்’ (உரக்க முழங்குவோம் அல்லா மிகப் பெரியவர்) என்று முழங்கினார். அந்தக் கூட்டங்களில் முழுக்க முழுக்க ஆண்கள்தான் கலந்துகொண்டார்கள்.
இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரானதாக வைக்கப்படும் ஒற்றைப்படையான இந்து மதவாதம், ஒற்றைப்படையான முஸ்லிம் மதவாதம் ஆகிய இந்த இரண்டு வாதங்களுக்குள் சிக்கிக்கொள்கிறபோது, சாதி, வர்க்கம், பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒருமைப்பாட்டைக் கட்டுவது என்பது தள்ளிப்போகிறது. இதனால் உண்மையிலேயே பயனடைகிறவர்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட இந்துக்களோ மிகவும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களோ அல்ல. மாறாக, வாய்வீச்சு வல்லவர்கள்தான் பயனடைகிறார்கள். அவர்களைப் பற்றி 2,500 ஆண்டுகளுக்கு முன் (குழம்பிய நீரில்) “விலாங்கு பிடிக்கிறவர்கள்” என்று வர்ணித்தார் கிரேக்க நாடகாசிரியர் அரிஸ்டோபேன்ஸ்.
வேதனை மிக்க விவசாயிகளும், வேலை கிடைக்காத நகர்ப்புற இளைஞர்களும் காங்கிரஸ் கட்சிக்கு அல்லது மதச்சார்பற்ற வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால், உலக அளவிலான வலதுசாரிகளின் சித்தாந்தங்களோடு அவர்கள் முரண்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல. வெறுப்புணர்வுப் புற்றுநோயாலும் மலையெனக் குவியும் போலிச் செய்திகளாலும் உழுது தயார்ப்படுத்தப்பட்டுள்ள அதே வயலில்தான், மதச்சார்பின்மையின் வெற்றி எனப்படுவதும் விளைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் போலிச் செய்திகளைப் பரப்புவதில் வியப்பில்லை. அதில் மதவெறி இருக்காது என்பது மட்டுமே வேறுபாடு.
இது ஏதோ இந்தியாவில் மட்டும் உள்ள நிலைமை அல்ல. சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வெறுப்பில் ஊறிய தகவல்கள்தான், பிரேசில் நாட்டில் தீவிர வலதுசாரி வேட்பாளர் ஜெய்ர் போல்சோனாரோ வெற்றியை உறுதிப்படுத்தின. மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான எண்ணத்தைப் பரப்ப ராணுவம் இதே வழியைத்தான் பயன்படுத்தியது. பிரிட்டனில் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகவும் ஜெர்மனியில் அகதிகளாக வந்தவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு இட்டுச்சென்றதும் இதே வழிமுறைதான். போதை மயக்கத்தில் இருக்கும் பொதுவெளியிலிருந்தும் சமூக ஊடகங்களிலிருந்தும் மாற்றத்திற்கான ஜனநாயக ஒருமைப்பாடு எளிதில் தழைத்துவிட முடியாது. இந்தியாவில் அரசு அதிகாரத் துணையோடு மிகப் பரவலாக, ஈடுகொடுப்பாரின்றி இந்துத்துவக் கேடு வளர்க்கப்பட்டிருப்பது தெளிவாகப் புலப்படுகிறது. தேசத்தைக் கட்டுவோம் என்ற அறைகூவல்களின் பின்னணியில் உண்மைகள் திரிக்கப்படுகின்றன, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் போலிச் செய்திகளைக் கிளப்புகிற ஏற்பாடுகள் விஞ்சியிருக்கின்றன என்று பிபிசி ஊடகத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
14 மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகத் தளமான ‘ஷேர்சாட்’ (ShareChat), தனது தளத்தில் வெறுப்புப் பேச்சுகள் மேலும் மேலும் அதிகரிக்கப்போவதைக் கணித்தது போல இவ்வாறு கூறியிருக்கிறது: “அரசியல்வாதிகள் தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு நாள் இரவும் இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறபோது (எங்களால்) பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது… எது வெறுப்புப் பேச்சு எது அப்படிப்பட்டதல்ல என்று விசாரித்துக்கொண்டிருக்க முடியாது.” சமூக ஊடகங்கள் குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்கிற பணியைச் செய்ய முடியும். ஆனால் அந்த விவாத வெளியை அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளைச் சேர்ந்தோரும், அவர்களைப் பின்பற்றுகிற மக்களும் கடத்திப்போய்விட்டார்கள்.
வெறுப்பரசியலை வேரறுக்க
இயல்பான ஒன்றாக மாறிவிட்ட ஒன்றை விலக்கிவைப்பது கடினம். சமூக ஊடகங்களிலும் விரிந்த மக்கள் தளங்களிலும் வெறுப்பரசியலை “நீக்குவது” என்பதை, வெறும் தேர்தல் வெற்றிகளாலோ, வலுவான சட்டங்களாலோ – அவை முக்கியம்தான் என்ற போதிலும் – சாதித்துவிட முடியாது. பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது போன்ற தேர்தல் கூட்டணிகள் இந்துத்துவத்தால் மூட்டிவிடப்படும் வெறுப்பு நெருப்பைத் தணிக்கக் கூடும், ஆனால் அதை அணைத்துவிட முடியாது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மைவாதம் அல்ல, மாறாக அதன் மைய அச்சாக இருப்பவை சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவையே என்றும், அவற்றால் மட்டுமே வெறுப்பரசியலையும் வாய்வீச்சுகளையும் எதிர்கொள்ள முடியும் என்றும் நிலைநாட்டப்பட்டாக வேண்டும். பன்முகத்தன்மை வாய்ந்த பண்பாட்டுப் போராட்டங்களாலும் அரசியல் போராட்டங்களாலும்தான் அவ்வாறு நிலைநாட்ட முடியும். பேச்சில் அறம் இல்லையென்றால், உண்மையைப் பேசுவதற்கு நாட்டம் இல்லையென்றால் ஜனநாயகம் இருக்க முடியாது.
நிசிம் மன்னத்துகரேன்
(கட்டுரையாளர் கனடா நாட்டின் டல்ஹௌஸ் பல்கலைக்கழக பன்னாட்டு மேம்பாட்டு ஆய்வுகள் துறையின் தலைவர்.)
நன்றி: தி ஹிந்து (https://www.thehindu.com/opinion/op-ed/the-ground-beneath-our-feet-has-moved-to-the-right/article26082559.ece)
தமிழில்: அ. குமரேசன்