JAM (Jan Dhan-Aadhaar-Mobile), SCAM (Samajwadi Party, Congress, Akhilesh Yadav and Mayawati), YOGI (Youthful Organised Governed India), AMIT (Amazing Massive India Transformation)…
இப்படியெல்லாம் புதுப் புதுச் சுருக்கெழுத்துகளை உருவாக்கி உலவவிடுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் அலாதிப் பிரியம் உண்டு. NDA – National Democratic Alliance என்பதை National Development Alliance என்று மாற்றிக் குறிப்பிட்டுப் புளகாங்கிதம் அடைந்த கட்சி அது. ஆனால், பிரதமர் மோடி சில காலமாக அரசியல் ரீதியான புதிய சுருக்கெழுத்து எதையும் உருவாக்கவில்லை. மாறாக, ஓசை நயம் கொண்ட சொற்களை உருவாக்குவதாக அவரது பாணி மாறியிருக்கிறது. எம் எனும் ஆங்கில எழுத்தை வைத்துக்கொண்டு, மஸ்பூத் Vs மஜ்பூர் என்றும் காம்தார் Vs நாம்தார் என்றும் வார்த்தை விளையாட்டில் ஈடுபடுகிறார். மஸ்பூத் என்றால் வலுவான, செயல்படக்கூடிய (அதாவது மோடி) என்று பொருள். மஜ்பூர் என்றால் பலவீனமான, வரம்புகள் கொண்ட (அதாவது காங்கிரஸ் தலைமை) என்று பொருள். காம்தார் என்றால் மண்ணின் மைந்தன், துடிப்பான செயல்வீரர், அதாவது மோடி. நாம்தார் என்றால் மேட்டுக்குடி மைந்தன், செல்வச் சீமான், அதாவது ராகுல் காந்தி.
ஆனால் சொல்லப்படாத இன்னொரு எம் இருக்கிறது. அதாவது மக்ரூர். இதற்கு ஆணவம் மிக்க, ஆதிக்கப் பார்வை கொண்ட எனப் பொருள். மோடியின் அபிமான தொலைக்காட்சி சேனல்களில் இதுதான் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சேனல்களில் செய்தியாளர்களும் பாஜக செய்தித் தொடர்பாளர்களும் கத்துவதற்கும், கூச்சலிடுவதற்கும், சவால் விடுவதற்கும் போட்டியிடுகின்றனர்.
இப்படித்தான் அண்மையில், பெரிய டிவி சேனல்கள் இரண்டு, அமேதியில் ஸ்ம்ருதி இரானி போட்டியிட இருப்பதால் ராகுல் காந்தி, மூன்று மக்களைவைத் தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக முழங்கியது. செய்திகளையும் தகவல்களையும் சரிபார்த்தல் என்பதெல்லாம் அவர்களுக்குச் சின்ன விஷயங்களாகிவிட்டன. ஏனெனில், ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்று மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1951, சொல்கிறது. அதுபற்றி அங்கே யாருக்கும் கவலையில்லை. அதோடு மனசாட்சி போன்ற இன்னும் சின்ன விஷயங்கள் பற்றியும் கவலைப்படவில்லை. அதனால்தான் தங்களுடைய பெருந்தவறுகளுக்குக்கூட மன்னிப்புக் கேட்காமல் கடந்து சென்றனர்.
இப்போது கடந்த வாரம், பிரியங்கா காந்தி எனும் பெண்மணி, இந்த 3 எம் சொற்களின் உலகில் நுழைந்திருக்கிறார்.
வலுவான காங்கிரஸ்
திடீரெனப் பார்த்தால், மஸ்பூர் (பலவீனமான) காங்கிரஸ் கட்சி மஸ்பூத் (வலுவான)கட்சியாக ஆகியுள்ளது. 2009 தேர்தல் வெற்றியை அது மீண்டும் பெற விரும்புகிறது. அப்போது அது உத்தரப் பிரதேசத்தில் 20 சதவீத வாக்குகள் பெற்று 21 இடங்களை வென்றது. இவற்றில் 15 இடங்கள் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி இப்போது தீவிரம் காட்டுவதோடு, நம்பிக்கையோடு இருக்கிறது.
அது மட்டுமல்ல, கருத்துக் கணிப்புகள், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக 6 சதவீத வாக்கு உயர்வை உணர்த்துகின்றன. ஆக 12 சதவீதம் இருக்கலாம். பிரியங்கா காந்தியால் கூடுதல் 8 புள்ளிகளைப் பெற முடியும் எனில், 2009இல் இருந்த நிலையை எட்டிப்பிடிக்கலாம். இங்கு ஒரு சுவாரஸ்யமான யோசனை. பிரியங்கா காந்தி, லக்னோவில், ஜோஷ் (உற்சாகம்) எப்படி இருக்கு என கேட்டு, யூரி திரைப்படத்தின் தாக்கத்தில் மோடி உருவாக்கிய பஞ்ச் வசனத்தைப் பேசினால் எப்படி இருக்கும்? ’ரொம்ப அதிகம் மேடம்’ என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பதில் குரல் கொடுத்தால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். அப்போது, காங்கிரஸ் வலுவான தளத்திற்கு மாறிவிடாது?
பாஜக மஸ்பூராக (பலவீனமாக) மாறிவிட்டது!
மக்களவை சபாநாயகரான சுமித்ரா மகாஜன், பாஜக பீதியின் அடையாளமாக விளங்குகிறார். அவர் வகிக்கும் பதவிக்கேற்ப அவர் நடுநிலையாக இருக்க வேண்டும். எனவே, அவர் வெளிப்படையான அரசியலில் ஈடுபட முடியாது; ஈடுபடக் கூடாது. ஆகவே, “தனியாக அரசியல் செய்ய முடியவில்லை என்பதை ராகுல் காந்தி ஒப்புக்கொண்டிருக்கிறார், பிரியங்காவின் உதவியை நாடியிருக்கிறார். தனியாகப் பொறுப்பை நிறைவேற்ற முடியவில்லை என ராகுல் ஒப்புக்கொண்டிருப்பது எனக்குப் பெரிய விஷயமாகப் படுகிறது” என அவர் கருத்து கூறியது அவரது பதவிக்குப் பொருத்தமில்லாதது.
சுமித்ரா மகாஜனின் கருத்துக்கள் நம்ப முடியாத அளவுக்குப் பொருத்தமற்ற செயலாகும். மேலும் தற்போதைய சூழல்படி, யோகி ஆதித்யநாத்தான், ராகுல் + பிரியங்கா = பூஜ்ஜியம்+ பூஜ்ஜியம் என்று கருத்து கூறினார். பூஜ்ஜியம் இந்தியாவின் பங்களிப்பு எனக் கருதப்படுவதால் அவர் வேத கணிதத்தில் தனது பால பாடத்தை மறந்துவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கும். அதோடு அவர் தவறாகக் கூட்டல் குறியை பயன்படுத்தியிருக்கிறார். பிரியங்கா காந்தி, பாஜகவின் பலத்தை வகுக்க அல்லவா வந்திருகிறார். பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும் எனத் தெரியுமா? யோகி அவர்களே. முடிவிலி கிடைக்கும். அதாவது எல்லையில்லா பலம்.
ஆளுங்கட்சியிலிருந்து எழும் வேறு சில பதற்றமான குரல்களையும் சேர்த்துக்கொண்டால், காங்கிரஸ் கட்சிக்காகத் தீவிர பிரச்சாரம் செய்பவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டது முதல் ஆளும் கட்சி தரப்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் புரிந்துகொள்ளலாம். இப்போது பலவீனமாக இருப்பது யார்?
குழப்பம், கவலை, பீதியில் சிக்கிக்கொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர்கள், தங்கள் குரலை உயர்த்தி, பதற்றமான தாக்குதலையே பதிலடியாகக் கொண்டுள்ளனர்.
அவர்கள் ஆதரவு டிவி சானல்களும், செய்தித் தொகுப்பாளர்களும் இதில் வெட்கம் இல்லாமல் இணைந்துள்ளனர். அன்றைய தினம், பிரதான நேரத்தில் அவர்கள் காண்பித்த மேற்கோள்களையும், செய்தித் தலைப்புகளையும் பாருங்கள் புரியும்.
“ராகுல் காந்தி ஒவ்வொரு முனையிலும் தோல்வி அடைந்திருக்கிறார். ராகுல், பிரியங்காவின் பங்கைக் கிழக்கு உத்தரப் பிரதேசத்திற்கு மட்டும் கட்டுப்படுத்த விரும்பியிருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் பலரும் அவரைச் சகோதரரைவிடச் சிறந்தவராகப் பார்க்கின்றனர். பிரியங்காவை முக்கியப் பொறுப்பில் அமர்த்தும் யோசனையை ராகுலே சில ஆண்டுகளுக்கு முன் நிராகரித்தார். ஆனால் இப்போது பிரியங்காவைக் கொண்டுவருவதற்கான நெருக்கடியும், விரக்தியான நிலையும் இருக்கிறது. யாரும் காங்கிரசுடன் சேர விரும்பவில்லை என காங்கிரஸ் உணர்ந்துள்ளது”.
“பிரியங்கா தனது கணவரின் ஊழல் செயல்களுக்குத் துணை நிற்பதால், அவரைத் தியாகி என்றெல்லாம் கூற முடியாது. பிரியங்காவின் ஆற்றலை பிரயோகிக்க காங்கிரஸ் ஏன் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? 2019இல் ராகுலால் மட்டுமே வெற்றியை அளிக்க முடியாது என இப்போது உணர்ந்திருப்பதால்தான் காங்கிரஸ் பிரியங்காவைக் கொண்டுவருகிறதா?”
- “பிரியங்காவைக் கொண்டு வருவதன் மூலம், ராகுலின் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொள்கிறதா?”
- “மோடியால் வீழ்த்தப்பட காங்கிரஸ், பிழைத்திருக்க பிரியங்காவை நாடுகிறதா?”
- “ஒரு காலத்தில் மகத்தான காங்கிரஸ் இப்போது பிரியங்காவாகச் சுருங்கிவிட்டதா?”
- “பிரியங்காவை விட்டால் காங்கிரசுக்கு வேறு வழியில்லை.”
- “பிரியங்காவின் அரசியில் வருகையை காங்கிரஸ் அடக்கி வாசிப்பது ஏன்? பிரியங்கா நாட்டிற்கு வெளியே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.”
எல்லாமே மிகை
மேலே சொன்ன பொன்மொழிகள் எல்லாம், பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் உதிர்த்தவை அல்ல, நட்சத்திர இதழாளர்கள் என அழைக்கப்படுபவர்களால் சொல்லப்பட்டவை. தகவல்கள் ஒரு பொருட்டல்ல. இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அலசி ஆராய்வதற்கான முயற்சி இல்லை. கட்டுப்படுத்தப்படாத பொய் முழக்கங்கள் மற்றும் வார்த்தை தாக்குதலாக மட்டுமே இருந்தன.
ராகுல் காந்தி இப்போதுதான் பாஜகவின் வலுவான கோட்டைகளில் 3-0 எனும் வெற்றியை அளித்திருக்கிறார். ஆனாலும் அவர் தோல்வியாளராகத் தொடர்ந்து சொல்லப்படுகிறார். ஒவ்வொரு கருத்துக் கணிப்பும் காங்கிரஸ் கட்சிக்கு தன்னுடைய இரண்டு இலக்க எண்ணைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இருப்பதாகச் சொல்கின்றனர். மோடி ஆட்சியின் ஐந்து ஆண்டுக் காலத்தில் பிரியங்காவின் கணவர் மீது ஒரு எப்.ஐ.ஆர்.கூடப் போடப்படவில்லை. ஆனால் அவர் ஊழல் செய்தார் என்கின்றனர்.
என்னுடைய சக டிவி தொகுப்பாளர்கள் நிர்ணயித்திருக்கும் மோசமான அளவுகோலின்படி பார்த்தால்கூட, நமது டிவி நிகழ்ச்சிகளின் தரம் மிக மிகத் தாழ்வாக இறங்கியிருக்கிறது.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள் …
ஜனதா கட்சியின் ஷா கமிஷன், இந்திரா காந்தியைப் புத்துயிர் பெற வைத்தது. வாஜ்பாயியின் இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரம் 2004இல் சோனியா காந்தியை புத்துயிர் பெற வைத்தது. இப்போது, மோடி அரசின் நாகரிகமில்லாத டிவி செய்தித் தொகுப்பாளர்கள், ராகுல் காந்தியின் காங்கிரசை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டுவருவார்கள். என் வார்த்தையைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் குறைந்த பட்சம் புத்திசாலிதனமாகப் பிரச்சாரம் செய்பவர்களைத் தேர்வு செய்யலாம்.
ராகவ் பால்
பிகு: குடியரசு தினத்தன்று இதை எழுதி முடித்தபோது, அன்றைய தினத்தின் ப்ரைம் டைம் டிவி செய்திகளுக்குத் தயாரானேன். மோடியால் தேர்வு செய்யப்பட்ட செய்தித் தொகுப்பாளர்கள், “2015 ஜனவரி 26இல் துவங்கிய இந்த அட்டகாசமான அணிவகுப்பு” என்று முழங்கலாம். ஏனெனில் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகுதானே இந்த அற்புதமான சிப்பாய்கள், துப்பாக்கிகள், விமானங்கள், பீரங்கிகள் எல்லாம் உருவாக்கப்பட்டன! அதுவரை குடியரசு தின ஊர்வலமானது மிக மோசமான ஒரு ஊரில், புழுதிச் சாலையில் மாட்டு வண்டிகளில்தானே நடைபெற்றுவந்தது!).
நன்றி: https://www.thequint.com/voices/opinion/pm-modi-your-tv-friends-messed-up-priyanka-gandhi-political-ascension?fbclid=IwAR3Coow37IoCwBZJfP3yC2Stt0xqhdJzJIzqUH6OQd9OyEC2MwyrVa-zdIA