சமீபத்தில் #GoBackModi எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்கள் முழுவதும் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது, தென்னிந்திய மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிப்பு வலுத்துள்ளதையே காட்டுகிறது. குறிப்பாக, இந்த இணைய எதிர்ப்பலையில் தமிழகம் முன்னிலை வகித்துள்ளது. இதற்கு, பாஜகவுக்குக் குறுகிய அளவிலேயே செல்வாக்கு உள்ள தென்மாநிலங்களின் பிரச்சினைகளில் மோடி மேற்கொண்ட சமீபத்திய முடிவுகள் பலவுமே முக்கியக் காரணிகள்.
தென்மாநிலங்களையொட்டிய பிரதமரின் கேள்விக்குரிய சில அரசியல் முடிவுகளும், அதனால் அவரது புகழ் வெளிச்சத்தை மக்கள் மங்கச் செய்ததன் பின்னணியையும் இங்கே பார்ப்போம்.
‘கஜா’ புயல் பாதிப்பைப் பார்வையிடாததது எத்தகைய அணுகுமுறை?
‘கஜா’ புயல் தாக்கியதில் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இத்தகைய கடுமையான பாதிப்புக்குப் பிறகும், பிரதமர் மோடி உடனடியாகப் பார்வையிட நேரில் வராதது ஆச்சரியமான முடிவுதான்.
பாஜகவின் வாக்கு வங்கி மிகக் குறைவாக உள்ளதே தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராததற்குக் காரணம் என்பது மோடி எதிர்ப்பாளர்களின் பார்வை. அவரது செல்வாக்கு கூடுவதற்கான சாத்தியம் இங்கு இல்லை என்பதும் ஓட்டரசியல் சார்ந்த கருத்து. எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமரின் அணுகுமுறை மீதான மோசமான கண்ணோட்டத்துக்கே இந்த விவகாரம் வகை செய்யும்.
“தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்குத் தலைமை தாங்குபவர் என்ற அடிப்படையிலாவது, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் பார்வையிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவேயில்லை” என்று அப்போது திமுக தலைவர் ஸ்டாலினின் வெளியிட்ட கருத்து இப்போது நினைவுகூரத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கவனிக்க வைத்த ‘மெளனம்’
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் கவனத்துக்குரிய வகையில் பிரதமர் மோடி மெளனம் காத்ததை தமிழக மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அச்சம்பவம் நிகழ்ந்தபோது, ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ குறித்த ட்வீட்களை உலாவ விட்டது, அவர் மீதான கொந்தளிப்பைக் கூட்டவே செய்தது. ‘தூத்துக்குடி குறித்த நிலைப்பாடு என்ன?’ என்று மோடியை மேற்கோள்காட்டி நெட்டிசன்கள் ட்வீட்களைக் கொட்டித் தீர்த்ததும் ட்ரெண்ட் ஆனது.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு?
காவிரிப் பிரச்சினையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகத் தமிழகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, தமிழக விவசாயிகளுக்குத் தரப்பட வேண்டிய காவிரி நீர்ப் பங்கீடு மறுக்கப்பட்டு, மேகதாது அணைத் திட்டத்துக்கும் பாஜக அரசு பச்சைக்கொடி காட்டுகிறது என்பதும் முக்கியக் குற்றச்சாட்டு.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார். மத்திய அரசின் முடிவை மேற்கோள் காட்டும் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு மோடி துரோகம் இழைப்பதாகச் சரமாரியாகத் தாக்குகிறார்.
கர்நாடகாவில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகம் என்பதால், 2019 மக்களவைத் தேர்தலில் சாதகமான சூழலைப் பெறுவதற்காகவே, மோடி அம்மாநிலத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்பது மிகத் தெளிவான குற்றச்சாட்டு. காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்குச் சாதகமாக அரசியல் ஆட்டத்தில் மோடியின் நிர்வாகம் ஈடுபடுவது, இணையத்தில் #GoBackModi என்றெல்லாம் அவருக்கு எதிரான விமர்சனங்களை அள்ளிவீசும் போக்குக்கு வலுசேர்ப்பதாகவே அமையும்.
தமிழகத்தில் ‘நீட்’ விவகாரத்தில் எடுபடாத இரட்டை வேடம்?
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நடைமுறைப்படுத்துவதிலும் தமிழகத்தில் மத்திய அரசு தனது கட்டைவிரலில் சூடுபோட்டுக் கொண்டது. ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்குத் தேர்வு செய்யும் முறையை ரத்து செய்தது என்னவோ உச்ச நீதிமன்றம்தான். ஆயினும், தமிழகத்தை இந்த விவகாரத்திலும் ஆதரிக்கவில்லை என்ற அடிப்படையில், பெரும் பழிக்கு ஆளானது மத்திய அரசு. நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி அணுகினால் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார். ஆனால், அதுபோன்ற அணுகுமுறையை ஆதரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கைவிரித்துவிட்டார்.
கேரள வெள்ள நிவாரணம்: வேண்டியதைச் செய்ததா மத்திய அரசு?
கேரள மாநிலத்தை 2018இல் வெள்ளம் புரட்டிப் போட்டது. அம்மாநிலத்தின் இடதுசாரி அரசு கோரிய நிவாரணத் தொகையுடன் ஒப்பிடும்போது, துவக்க நிலையில் மோடி அரசு வழங்கிய தொகை மிகவும் சொற்பம். இதனால் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இயற்கைப் பேரிடருக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற வேண்டாம் என்பது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சியின்போது எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கை முடிவு. அதை மேற்கோள்காட்டி, கேரள வெள்ளத்துக்கு வெளிநாடுகளிலிருந்து நிவாரண நிதி பெறக் கூடாது என்று மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டது அதிருப்தியை மேலும் கூட்டியது.
கேரள வெள்ள நிவாரணத்திற்காக, ஆகஸ்டில் ரூ.600 கோடியை மத்திய அரசு வழங்கியது. அதன்பின் நவம்பர் வரை எந்த உதவியும் செய்யவில்லை. பின்னர், ரூ.2,500 கோடி ஒதுக்கிடு செய்தது.
கேரளாவின் வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு நிதியுதவி அளிக்க முன்வந்ததும், அதை மத்திய அரசு அனுமதிக்க மறுத்துவிட்டதுமாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. ஒரு மாநில மக்கள் இயற்கைப் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில்கூட அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவது முறையல்ல என்கிற ரீதியில் விமர்சனக் கணைகள் பாய்ந்தன. இதுபோன்ற விவகாரங்களை மோடி சரியாகக் கையாளவில்லை என்பது தெளிவுபடத் தெரிந்தது.
அந்தச் சூழலில், இது தொடர்பாகக் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாங்கள் ரூ.2,200 கோடி நிதியுதவி அளிக்குமாறு மத்திய அரசைக் கேட்டிருந்தோம்; அவர்கள் அளித்ததோ ரூ.600 கோடி மட்டுமே. நாங்கள் வெளிநாடுகளிடம் எந்த உதவியையும் கோரவில்லை. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் தாமாக முன்வந்து ரூ.700 கோடி அளிப்பதாகக் கூறியது. வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவது நமது கண்ணியத்தைக் குலைத்துவிடும் என்று மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இது ஒரு ‘நாயிடம் கிடைத்த வைக்கோல் போர்’ கதைபோல என்று கூறியிருந்தார். (நாய் தானும் வைக்கோலைத் தின்னாது; வைக்கோலைத் தின்ன வரும் பசுவையும் தின்னவிடாமல் குரைக்கும்.)
சோமாலியாவுடன் கேரளாவை ஒப்பிட்டதால் பாதக விளைவு
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, “கேரளாவில் பழங்குடி மக்கள் சமூகத்தினரிடையே நிலவும் குழந்தை இறப்பு விகிதமானது, சோமாலியாவை விட மோசமான நிலை” என்று பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சுக்கு, மலையாள நெட்டிசன்கள் #PoMoneModi என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் கடுமையான பதிலடி தந்தனர்.
ஒரே நாளில் #PoMoneModi என்ற ஹேஷ்டேகை தாங்கிக்கொண்டு 40,000 ட்வீட்டுகள் தெறித்ததாக ‘கீஹோல்’ எனும் வலைதளம் ஆய்வுத் தகவல் வெளியிட்டது. மோகன்லால் நடித்த பிரபலமான படங்களுள் ஒன்று ‘நரசிம்மன்’. அந்தப் படத்தில், அவர் பேசும் வசனம் ‘நீ போ மோனே தினேஷா’ பயங்கர ஹிட். வில்லனைப் பார்த்து ‘நீ கிளம்பு’ எனும் ரீதியில் ஹீரோ சொல்வதாக அமைந்த வசனம் அது.
ஆந்திராவில் ‘இமேஜை’ இறக்கிய ‘சிறப்பு அந்தஸ்து’
“ஆந்திரப் பிரதேச மக்களுக்கு இன்று நான் ஓர் உறுதி அளிக்கிறேன். என்னை நீங்கள் டெல்லிக்கு அனுப்பினால், இந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமின்றி, அதை நீட்டிக்கவும் செய்வேன்.” – திருப்பதியில் 2014ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மோடி உதிர்த்த வாக்குறுதி இது.
ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று மோடி உறுதி அளித்திருந்தது தொடர்பாக, 2014இல் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு முன்னரும் பின்னரும் மோடி பேசிய வீடியோ காட்சிகளை 2018 மார்ச் மாதம் போட்டுக் காண்பித்தார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
அவ்வளவுதான். கருத்து முரண்பாடுகளால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி விரிசல் ஏற்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவு. அதன் தொடர்ச்சியாக, சில மாதங்களிலேயே காங்கிரஸும் தெலுங்கு தேசம் கட்சியும் கைகோத்ததைப் பார்த்து பாஜக முகாம் புகை கக்கியது.
தெற்கில் தேயும் மோடியின் புகழ்: கருத்துக் கணிப்பு
ஃபர்ஸ்ட்போஸ்ட் – ஐபிஎஸ்ஓஎஸ் இணைந்து ‘தேசிய நம்பிக்கை கருத்துக் கணிப்பு’ ஒன்றை ஆந்திரப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடத்தியது. அதில், 2019 மக்களவைத் தேர்தல் போட்டியில் பிரதமர் பதவிக்கான தெரிவில் நரேந்திர மோடியை ராகுல் காந்தி முந்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கருத்துக் கணிப்பில், மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு ஆதரவாக தமிழகம் 10.6%, ஆந்திரா 14% மற்றும் கேரளா 19.4% வாக்குகளை அளித்துள்ளன. அதேவேளையில், ராகுல் காந்திக்கு தமிழகத்தில் அதிகபட்சமாக 69.7%, ஆந்திராவில் 68.8% மற்றும் கேரளாவில் 62.6% ஆதரவு கிடைத்துள்ளது.
தெலங்கானாவைப் பொறுத்தவரையில், மோடிக்கு 68.7% ஆதரவு கிடைத்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு வெறும் 15.2% ஆதரவே கிட்டியுள்ளது. கர்நாடகாவில் இருவருக்குமிடையே கடுமையாகப் போட்டி நிலவுகிறது. அங்கு மோடிக்கு 44.1% ஆதரவும், ராகுலுக்கு 38.8% ஆதரவும் கிடைத்துள்ளன.
ஜனவரி 2019இல் வெளியிடப்பட்ட ‘சி-வோட்டர்ஸ்’ கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய ஐந்து தென்மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் காட்டிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிக வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் தமிழகத்திலும் பாஜகவுக்கு மிகவும் குறைந்த வரவேற்பே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 31 வரையில், இந்தியா டுடே – ஆக்ஸிஸ் – மை இந்தியா ஆகியவை இணைந்து நடத்திய ஆய்விலும் தென்னிந்தியாவில் பிரதமர் மோடிக்குப் பெரும் பின்னடைவு நிலவுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தென்னிந்தியாவில் மோடி மிகுதியான வாக்குகளை இழப்பது தெளிவாகத் தெரிகிறது. தற்போதுள்ள காரணிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, தென்னிந்தியப் பிரச்சினைகள் தொடர்பாக மோடி சமீப காலத்தில் மேற்கொண்ட முடிவுகளே புகழின் வீழ்ச்சிக்குத் தள்ளியிருப்பது தெளிவு. ஒட்டுமொத்தமாக உற்றுநோக்கும்போது, தென்னிந்தியாவில் தேய்வு நிலையை எதிகொள்வதற்கு மோடி தன்னைத் தானே குறைபட்டுக்கொள்வதேத் தவிர வேறு சாக்குகளைத் தேட இயலாது.
மேக்நாத் போஸ்
நன்றி: தி க்வின்ட்
https://www.thequint.com/news/politics/narendra-modi-losing-popularity-in-south-india
This article explains the current situation exactly. Mr.PM will harvest soon.