பணமதிப்பழிப்புக் காலத்தில் நடந்த சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் குறித்த விசாரணை வளையத்தில் எஸ்ஸெல் நிறுவனம் சிக்கியுள்ளது.
முக்கியத் தகவல்கள்
- பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களில் (2016 நவம்பர், டிசம்பர்) நிட்யாங்க் இன்ஃப்ராபவர் என்ற நிறுவனத்தில் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. முன்பு டிரீம்லைன் மேன்பவர் என்ற பெயரில் இயங்கிய இந்த நிறுவனம் குறித்துத் தற்போது பண மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எப்ஐஓ) விசாரணை மேற்கொண்டுள்ளது.
- பொதுவெளியில் கிடைக்கிற ஆவணங்களை ஆராய்ந்ததில், 2015-2017 ஆண்டுகளுக்கிடையே நிட்யாங்க் நிறுவனமும் சில ‘கிளிஞ்சல்’ குழுமங்களும் செய்த நிதிப் பரிமாற்றங்களில் சுபாஷ் சந்திரா தலைமையிலான எஸ்ஸெல் குரூப் குழுமத்தோடு இணைந்த சில நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
- 2916 நவம்பரில் வீடியோகான், எஸ்ஸெல் குழுமங்களுக்கிடையே பெரும் வணிக ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அதிலும் நிட்யாங்க் ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
- நிட்யாங்க் சுயேச்சையான நிறுவனம் என்று எஸ்ஸெல் கூறிக்கொள்கிறது. ஆனால், எஸ்ஸெல் ஒப்புக்கொள்வதை விடவும் பல மடங்கு சம்பந்தம் இருப்பது தெரியவருகிறது.
- எஸ்எப்ஐஓ புலனாய்வு இன்னும் முடிவடையவில்லை. கடந்துபோன ஆண்டில் இடைக்கால நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அடுல் கிசான் ராவ் போசாலே வங்கிக் கணக்கு அறிக்கையின்படி, மிகக் குறைவான வருமானம் உள்ளவர்தான் அவர். 2016 ஜூன் மாதத்தில், கணக்குத் தணிக்கையாளர்களான அர்த் அன் அசோசியேட்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர் பெற்ற மாத ஊதியம் ரூ.6,500 மட்டுமே. அதே தணிக்கை நிறுவனத்துடன் தொடர்புள்ள ஹேமந்த் அஷோக் டாகல் என்பவரிடமிருந்து போசாலே பெற்றது ரூ.7,300.
அமோல் பாலாசாஹேப் லோஹாலே என்பவர் புனே பல்கலைக்கழக விடுதியின் 04/33 அறையில் தங்கியிருப்பவர் என்றும், வருமானமின்றித் தவிப்பவர் என்றும் அவருடைய வங்கிக் கணக்கு அறிக்கை கூறுகிறது. 2016 ஜூன் 3 நிலவரப்படி அவரது வங்கி இருப்புத் தொகை ரூ.261.சில நாட்கள் கழித்து, அதே ஆண்டு அதே மாதம் 30ம் தேதிய நிலவரப்படி அவருடைய இருப்புத் தொகை ரூ.1 மட்டுமே.
நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி இந்த இரண்டு ஏழைக் கனவான்களும் புனே நகரைச் சேர்ந்த அபால் இன்ஃப்ரா பவர் அன் மல்டி டிரேதடிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள். அவர்களுடைய நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது.இந்த நிறுவனம் 2016 ஜூலை 6ல்தான், ரூ.1 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது.இதில் போசாலே, லோஹாலே இருவருக்குமே 50க்கு 50 என்ற சமமான பங்கு இருக்கிறது.
அபால் இன்ஃப்ரா பவர் நிறுவனத்திற்கு 2016-17ல் வருவாய் எதுவும் இல்லை.ஆனால் ஒரு அடையாளம் தெரியாத கம்பெனியிலிருந்து அல்லது கம்பெனிகளிலிருந்து இதன் கணக்கிற்கு ரூ.543.35 கோடி கடன் வரவாக வந்துள்ளது.அதே ஆண்டில் இந்த நிறுவனம் மூன்று கம்பெனிகளில் ரூ.195.19 கோடி முதலீடு செய்தது.முன்பின் தெரியாத கம்பெனிகளுக்கு குறுகிய காலக் கடனாக ரூ.343.35 கோடி தரப்பட்டது.
அபால் இன்ஃப்ரா பவர் நிறுவனத்தின் செயல்பாடு சில வட்டாரங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.இதன் செயல்பாடுகளை வைத்துச் சில வல்லுநர்கள் இதை ‘கிளிஞ்சல் குழுமம்’ (ஷெல் கம்பெனி) என்று சித்தரிக்கிறார்கள். திரைமறைவுப் பணப்பரிமாற்றத்திற்காக என்றே ஏற்படுத்தப்படுவதுதான் கிளிஞ்சல் குழுமம் என்பதாகும் (கிளிஞ்சல் ஓடுவெளிப்புறம் அழகாகவும் உறுதியாகவும் இருக்கும், உள்ளே ஒன்றும் இருக்காது. -மொழிபெயர்ப்பாளர்)
பல்வேறு சட்டப்பூர்வப் பணப்பரிமாற்றங்களுக்கும் கிளிஞ்சல் குழுமங்கள் பயன்படும் என்றாலும் கூட, நரேந்திர மோடி அரசாங்கத்தின் கறுப்புப் பணத்தை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய அம்சம், இது போன்ற குழுமங்கள் மீது சாட்டை வீசுவதையும், இவ்வகைக் குழுமங்கள் நிதி மோசடிக்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த விதிகளைக் கடுமையாக்குவதையுமே மையமாகக் கொண்டிருந்தது.
குறிப்பாக, இந்தியாவின் நிதி சார்ந்த விசாரணை அமைப்புகள் 2016 நவம்பரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதல் இந்த மாதிரியான கம்பெனிகள் என்ன செய்தன என்பது பற்றிய புலன்விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்டுள்ளன. அந்த நடவடிக்கையால் உயர் மதிப்புள்ள இரண்டு ரூபாய் நோட்டுகள் கிட்டத்தட்ட 100% அளவுக்கு வங்கிகளுக்குத் திரும்பிவந்தன.
கறுப்பிலிருந்து வெள்ளை?
2018 மார்ச் மாதம், நாடாளுமன்ற மக்களவையில் வந்த ஒரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசாங்கம், மோசடிப் புகார்கள் தொடர்பாக 575 கம்பெனிகளின் செயல்பாடுகள் குறித்து எஸ்எப்ஐஓ மூலமாக விசாரணை செய்ய ஆணையிடப்பட்டிருப்பதாகக் கூறியது.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் பி.பி.சௌதாரி, எந்த ஆண்டில் எந்தக் கம்பெனிகள் எஸ்எப்ஐஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன என்ற பட்டியலைத் தாக்கல் செய்தார்.
அந்தப் பட்டியலில் அபால் இன்ஃப்ரா பவர் இல்லைதான். ஆனால், பட்டியலில் இடம் பெற்றிருக்கிற ‘டிரீம்லைன் மேன்பவர் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்துடன் அதற்கு மறைமுகத் தொடர்புகள் இருப்பது எஸ்எஃப்ஐஓ விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களின் அரசாங்கங்களுக்கும் 18 கம்பெனிகள் பட்டியல் ஒன்றையும் அனுப்பியிருக்கிறது.அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டிரீம்லைன் மேன்பவர்.
பணமதிப்பு ஒழிக்கப்பட்டிருந்தகாலகட்டம் ஒன்றில், அதாவது 2016 நவம்பர் 8க்கும் டிசம்பர் 31க்கும் இடைப்பட்ட நாட்களில் டிரீம்லைன் கம்பெனி ரொக்கமாக 3,177.96 கோடி ரூபாய் வைப்புநிதியாகச் செலுத்தியிருக்கிறது என்று அந்தப் பட்டியலுடன் இணைந்த குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக அந்த நாட்களில் வந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வழிமுறையில் அந்தப் பணம் விரைவாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்று தெரியவருகிறது.
2015 முதல் 2017 வரையில் டிரீம்லைன் நிறுவனத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பணப்பறிமாற்றம் செய்த பல கம்பெனிகள் பற்றி ‘தி வயர்’ குழுவினர் நடத்திய ஆய்வில், ரூ.5,000 கோடி அளவுக்குப் பரிமாற்றம் நடந்துள்ளது என தெரியவருகிறது. அதில், பங்குச் சந்தை அட்டவனையில் உள்ள குழுமங்களும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பணப் பரிமாற்றத்திற்கோ நிதி திரட்டுவதற்கோ கிளிஞ்சல் கம்பெனிகளைப் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானதல்ல. ஆனால், பணமதிப்பழிப்புப் பின்னணியில் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் உள்ள இந்தக் கம்பெனிகளின் கணக்குப் பதிவுகளும் இருப்புநிலை அறிக்கைகளும் (பாலன்ஸ் ஷீட்) எச்சரிக்கையோடு பார்க்கப்பட வேண்டியவையாகின்றன.
டிரீம்லைன் குழுமம் 2017ல் தனது பெயரை ‘நிட்யாங்க் இன்ஃப்ராபவர் அன் மல்டிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்று மாற்றிக்கொண்டது. சுபாஷ் சந்திரா தலைமையிலான எஸ்ஸெல் குரூப், வேணுகோபால் தூத் தலைமையிலான வீடியோகான் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான வணிகப் பரிமாற்றங்களில் பங்குவகித்திருக்கிறது. 2016ல் ஹரியானாவிலிருந்து மாநிலங்களவைக்கு பாஜக ஆதரவுடன் போட்டியிட்டவர் சுயேச்சை வேட்பாளரான சந்திரா.அவர்தான் ஜீ டெலிவிசன் உரிமையாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
2016-17ல் எஸ்ஸெல் நிறுவனத்தோடு அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களோடு நிதிப் பரிமாற்றம் செய்துகொண்ட கிளிஞ்சல் குழுமங்கள், வரம்புக்குட்பட்ட பொறுப்புக் கூட்டு (எல்எல்பி) குழுமங்களில் டிரீம்லைன் குழுமமும் இருப்பது, கணக்குப் பதிவுகளை ஆராய்கிறபோது தெரியவருகிறது.
2018ல் வீடியோகான் டீடிஎச்-டிஷ் டிவி நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.அதில் டிரீம்லைன் குழுமம் பங்காற்றியிருக்கிறது.இது, தற்போது எஸ்ஸெல், வீடியோ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே தற்போது நடந்துவரும் சட்டச் சண்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
எஸ்ஸெல், நிட்யாங்க் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே என்ன தொடர்பு என்று ‘தி வயர்’ செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு எஸ்ஸெல் நிர்வாகத்திடமிருந்து வந்த அதிகாரப்பூர்வ பதிலில், “மிக உயர்ந்த நிறுவன நிர்வாகத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். நிட்யாங்க் ஒரு சுயேச்சையான குழுமம்.அது எஸ்ஸெல் நிறுவனத்திற்குச் சொந்தமானதல்ல,” என்று கூறப்பட்டுள்ளது.
ஆயினும், பல்வேறு நிறுவனங்களுக்கு முதலீட்டு நிதி அளித்ததிலும், நிதி திரட்டுவதற்கான பணப்பரிமாற்றங்களிலும் டிரீம்லைன் அல்லது நிட்யாங்க் நிர்வாகங்களுக்கு இருந்த பங்கு பற்றிய விவரங்களை எஸ்ஸெல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
வீடியோகான் நிர்வாகத்தையும் நிட்யாங்க் பிரதிநிதிகளையும் தொடர்புகொண்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.
இந்த விவகாரங்களை நேரடியாக அறிந்த இரண்டு பேர் தெரிவித்த விவரங்களின்படி, நிட்யாங்க் பணப்பரிமாற்றங்கள் பற்றி எஸ்எஃப்ஐஓ, வருமான வரித்துறை ஆகிய இரண்டு அமைப்புகளுமே இப்போதும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றன. 2016ல் டிஷ் டிவி, வீடியோகான் டீ2எச் நிறுவனங்களின் எவ்வாறு இணைக்கப்பட்டன என்பதில் இதன் தாக்கங்கள் எப்படிப்பட்டவை என்றும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, டிரீம்லைன் மேன்பவர், எஸ்ஸெல் ஆகியவற்றின் கதை, ஒரு வரம்புக்கு உட்பட்ட கூட்டு (எல்எல்பி) நிறுவனத்திடமிருந்துதான் தொடங்குகிறது.அந்த நிறுவனத்தின் பெயர் லெமொனேட் கேபிடல் அட்வைசர்ஸ்.
இந்த லெமொனேட் கேபிடல் அட்வைசர்ஸ் எல்எல்பி 2014 நவம்பர் 3ல், தானே நகரில் தொடங்கப்பட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகும்.அந்த நிதியாண்டில் அது செயலற்ற நிலையிலேயே இருந்தது என்று கணக்கு ஆவணங்கள் காட்டுகின்றன.2014-15 நிதியாண்டில் அதன் கணக்கில் ஒரு கொடுக்கல் வாங்கலும் நடக்கவில்லை.
இது டிரீம்லைன் மேன்பவர், ஆயாட்டி மல்ட்டி டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட், டிரைடென்ட் டெஸ்டினி டெக்னோ இந்தியா பிரைவேட் லிமிட்டெட் ஆகிய மூன்று கூட்டாளிகளுடன் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில் அந்த மூன்று நிறுவனங்களின் மூலதனம் 33,333 ரூபாய்.பின்னர் அந்த மூன்று நிறுவனங்களும் இந்த எல்எல்பி நிறுவனத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருப்பதை வரவு செலவு அறிக்கை காட்டுகிறது.
தற்போது லெமொனேட் நிறுவனத்தில் ஆயாட்டியின் கணக்கில் உள்ள பணம் 458.67 கோடி ரூபாய்.டிரீம்லைன் கணக்கில் இருப்பது ரூ.478 கோடி.டிரைடென்ட் டெஸ்டினி கொடுத்திருப்பது ரூ.162.19 கோடி.மூன்று நிறுவனங்களுக்குமாக மொத்தம் 1098 கோடி ரூபாய் இருக்கிறது.
சரி, இந்த மூன்று கூட்டாளிகளும் யார்?எளிமையாகச் சொல்வதென்றால், வணிகச் செயல்பாட்டு வரலாறு எதுவும் இல்லாத, ஆனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பணமாற்றம் செய்துள்ள கம்பெனிகள் இவை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கிடையேயான பணவைப்புகள், மாற்றவியலாத கடன் பத்திரங்கள், குறுகிய காலக் கடன்கள் ஆகிய வழிகளில் இந்தக் கம்பெனிகள் பணப்பரிமாற்றங்களைச் செய்துவந்துள்ளன.
ஆயாட்டி மல்ட்டி டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட்
2011 பிப்ரவரி 21ல் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.2015-16 வரையில் இந்நிறுவனத்திற்கு வருவாய் எதுவும் கிடையாது.பின்னர் இந்த நிறுவனம் தங்கம் மொத்தவியாபாரத்தில் நுழைந்தது.அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இதன் விற்றுமுதல் (டர்ன்ஓவர்) 731 கோடி ரூபாயாகவும், 355 கோடி ரூபாயாகவும் பதிவானது.ஆனால் 2016, 2017 ஆகிய இரு நிதியாண்டுகளிலும் இந்நிறுவனத்திற்கு சுமார் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
2015-16, 2016-17 ஆகிய நிதியாண்டுகளில் இந்நிறுவனம் லெமொனேட் கேப்பிடல் அட்வைசர்ஸ் குழுமத்திற்கு முறையே 458 கோடி, 6.1 கோடி ரூபாய் நிதி வழங்கியது.2016 மார்ச் 31 அன்று இந்நிறுவனம் ஒன்றுக்கொன்று இணைப்புள்ள மூன்று குழுமங்களிலிருந்து 72 கோடி ரூபாய் பெற்றுள்ளது.அதைத் தவிர, லெமொனேட் கேப்பிடல் குழுமத்திற்குக் கொடுத்த தொகையை எங்கிருந்து பெற்றது என்பது தெரியவில்லை.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின், 2017 ஜனவரி 23 அன்று ஆயாட்டி நிறுவனத்திற்கு ஹடாரா மல்ட்டி டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட், அடிட் இன்ஃப்ராபவர் என்ற குழுமங்களிடமிருந்தும் ஏற்கெனவே குறிப்பிட்ட அபால் இன்ஃப்ராபவர் குழுமத்திடமிருந்தும் ரூ.309 கோடி கிடைத்தது (இந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குழுமங்களாகும்).
ஆனால், (பெயர் குறிப்பிடப்படாத) ஒரு “கார்ப்பரேட் அமைப்பு” அதே 2016-17 நிதியாண்டில் ஆயாட்டியிடமிருந்து கிட்டத்தட்ட 616 கோடி ரூபாய் கடனாக (இதர வரவினங்கள் உட்பட) வந்தது.
டிரைடென்ட் டெஸ்டினி டெக்னோ இன்ஃப்ரா பிரைவேட் லிமிட்டெட்
2014 ஜூலை 4 அன்று ஏற்படுத்தப்பட்ட டிரைடென்ட் டெஸ்டினி நிறுவனம் தற்போது லேன்சியம் டெக்னோ-இன்ஃப்ரா பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் செயல்படுகிறது.
எஸ்ஸெல் கார்ப்பரேட் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஒரு துணைக் குழுமமான டிரைடென்ட், 2015 வரையில் எந்த வணிகச் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஓசையின்றி இருந்தது.
2015-16 நிதியாண்டின் கடைசி நாளான 2016 மார்ச் 31 அன்று டிரைடென்ட் குழுமம் மாற்றவியலாத கடன் பத்திரங்களாக (என்சிடீ) ஹேம்லேட் மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் என்ற குழுமத்திற்கு 94 கோடி ரூபாய், புரோகால் டெலிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற குழுமத்திற்கு 66.99 கோடி ரூபாய், ஹடாரா மல்ட்டி டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் குழுமத்திற்கு 46.88 கோடி ரூபாய் என 208 கோடி ரூபாய் வழங்கியது.
எஸ்ஸெல் விஷன் புரொடக்சன் லிமிட்டெட் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாயும், டிரைமாக்ஸ் ஐடி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற குழுமத்திற்கு 90 கோடி ரூபாயும் டிரைடென்ட் வழங்கியுள்ளது. நார்ஃபோல்க் பில்டிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற குழுமம் (18.7 கோடி), என்டி கார்டன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் குழுமம் (62 கோடி) ஆகியவற்றின் விருப்பப்படி மாற்றத்தக்க கடன் பத்திரங்களை (ஓசிடீ) டிரைடென்ட் வாங்கியது.
லெமொனேட் கேப்பிடல் அட்வைசர்ஸ் எல்எல்பி குழுமத்திற்கு டிரைடென்ட் 2015-16ல் 162 கோடி ரூபாயும், 2016-17ல் 172 கோடி ரூபாயும் கொடுத்தது.
டெர்பான் கொடுக்கல் வாங்கல்
2015 முதல் 2017 வரையில் மூன்று லெமொனேட் கேப்பிடல் கூட்டாளிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு டஜன் கம்பெனிகள் பணம் கொடுத்துள்ளன.சுருக்கம் கருதி ஒவ்வொரு கம்பெனியின் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலை இங்கே பதிவு செய்யவில்லை. ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்புள்ள பங்கு உரிமை, பொதுவான இயக்குநர்கள், இடைநிலை வணிகச் செயல்பாடு, ஒரு லட்சம் ரூபாய் பங்கு முதலீடு, பல்வேறு கம்பெனிகளில் இயக்குநர்களாக இருக்கிறவர்கள் இந்த நிறுவனங்களின் பகுதிநேரப் பணியாளர்களாக ஊதியம் பெற்றது என்ற வழிமுறைகளை இந்த நிறுவனங்கள் அனைத்தும் கையாண்டுள்ளன.
ஒரு உதாரணம் – இந்தச் சங்கிலியில் ஒரு கண்ணிதான் டெர்பான் மல்ட்டி டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட்.2015-16ல் இந்தக் கம்பெனி 300 கோடி ரூபாய் திரட்டியது.நீண்டகால, குறுகியகாலக் கடன்களாக மேலும் 569 ரூபாய் திரட்டியது. இதில் 2015-16ம் ஆண்டில் ஆயாட்டி மல்ட்டி டிரேடிங்குக்கு 291 கோடி ரூபாயும், 2016-17ல் டிரீம்லைன் மேன்பவர் கம்பெனிக்கு 190 கோடி ரூபாயும் கொண்டுசெல்லப்பட்டன.
எல்லாச் சாலைகளும் ஒரு ‘கனவு’ (டிரீம்) நோக்கி
விசாரணை அதிகாரிகள், தற்போது தனது பெயரை ‘நிட்யாங்க் இன்ஃப்ராபவர் அன் மல்ட்டிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்று மாற்றிக்கொண்டுள்ள டீரிம்லைன் மேன்பவர் கம்பெனியை, மேற்படி பணப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்குவகித்தது தொடர்பாக, நெருங்கியுள்ளனர் என்று தெரியவருகிறது.
டிரீம்லைன் கம்பெனியின் சிஐஎன் (நிறுவன அடையாள எண்) பதிவில், அது ஹைதராபாத் நகரைச் சேர்ந்த நிறுவனமாகக் காட்டப்பட்டுள்ளது.ஆனால் ஒரு தவறான முகவரி தரப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில் அதன் உடைமை குறைந்தது ஒரு முறையாவது கைமாறியுள்ளது.
இந்தக் கம்பெனி 2012 பிப்ரவரி 10ல் தொடங்கப்பட்டது.அதுல் பிஷ்த், பாஸ்கர் பாண்டே, ஆங்குர் பிஷ்த் ஆகிய, செகந்திராபாத் நகரைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்கள் இதனைத் தொடங்கினார்கள்.
2013 டிசம்பர் 23 அன்று, இந்தக் கம்பெனியின் பங்கு முதலீடுகள் அனைத்தும் ஹிதேஷ் இங்கேல், சாவந்த் பிரகாஷ் துகாராம் என்ற வேறு இரண்டு தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டன.மும்பையைச் சேர்ந்த இந்த இருவரும் இக்கம்பெனியின் இயக்குநர்களாக இணைந்தனர்.
2013-14, 2014-15 ஆகிய நிதியாண்டுகளில் டிரீம்லைன் கம்பெனிக்கு அதன் வணிகச் செயல்பாடுகள் மூலம் கொஞ்சமும் வருவாய் வரவில்லை.2013-14ல் டிரீம்லைன் கம்பெனிக்கு அடையாளம் தெரியாத ஒரு கம்பெனியிலிருந்து 156.30 கோடி ரூபாய் கடனாக வந்தது.அடையாளம் தெரியாத மற்றொரு கம்பெனிக்கு டிரீம்லைனிலிருந்து 156.20 கோடி ரூபாய் கடனாகச் சென்றது.அதே நிதியாண்டில், உமாபதி டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற இன்னொரு கம்பெனி டிரிம்லைனுடன் இணைந்தது.
2014-15 நிதியாண்டில், இந்தக் கடன்கள் போரிஸ் மல்ட்டிடிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்கு விருப்பப்படி மாற்றத்தக்க கடன்பத்திரங்களை (ஓசிடீ) வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன என்று தெரிகிறது. ஆனால் டிரீம்லைன் இருப்புநிலை அறிக்கையில் அந்த 156.30 கோடி ரூபாய் எந்தக் கம்பெனியிடமிருந்து வந்தது என்ற தகவல் இல்லை.
பணமதிப்பழிப்புக்கு முந்தைய மாதங்களிலும் பிந்தைய மாதங்களிலும் டிரீம்லைன் கம்பெனியில் பல கோடி ரூபாய்க்குப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.
2015-16ல் போரிஸ் மல்ட்டிடிரேடிங் கம்பெனி, டெர்பான் மல்ட்டி டிரேடிங் கம்பெனியுடன் இணைந்தது.அப்போது, அவ்வாறு இணைந்துகொண்ட டெர்பான் நிறுவனத்திடமிருந்து 255 கோடி ரூபாயை டிரீம்லைன் மேன்பவர் பெற்றது.அடிட் இன்ஃப்ரா பவர் கம்பெனியிடமிருந்தும் 73 கோடி ரூபாயை டிரீம்லைன் பெற்றுள்ளது.
இந்தப் பணம் எங்கே போனது? மேலே கூறியது போல, டிரீம்லைன், டிரினிட்டி, ஆயாட்டி ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து லெமோனேட் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு 2015-16 நிதியாண்டில் 1098 கோடி ரூபாய் கிடைக்கச் செய்துள்ளன.
அதே ஆண்டில், லெமொனேட் கேப்பிட்டல் நிறுவனம், அப்போது வேறு பெரிய நிதியாதாரம் எதுவும் இல்லாத நிலையில், சுரு என்டர்பிரைசஸ் எல்எல்பி என்ற நிறுவத்திற்கு 1063.94 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
சுரு குழுமத்திற்குப் பின்னால் இருப்பது யார்?எஸ்ஸெல் குரூப்புடனோ, ஜீ குரூப்புடனோ தொடர்புள்ள கம்பெனிகளில் ஒன்றுதான் அது என்று ஆவணங்கள் காட்டுகின்றன.அந்தக் குழுமம் 2010 செப்டம்பர் 8ல் தொடங்கப்பட்டது.ஆனந்த் சால்வாடே, தினேஷ் குமார் ஷியாம்சுந்தர் கனோடியா ஆகிய இருவரும் அதன் அறிவிக்கப்பட்ட கூட்டாளிகள்.
அதற்கு அடுத்த ஆண்டிலேயே சால்வாடே, கனோடியா இருவருக்கும் சுரு எல்எல்பி-யில் இருந்த பங்குகள் ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாயாகச் சுருக்கப்பட்டன. ஆசியன் சாட்லைட் பிராட்காஸ்ட்டிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் ரூ.48,000 கட்டுப்படுத்தும் பங்காகப் பெற்றது (மொத்தப் பங்களிப்பு ரூ.50,000).
எஸ்ஸெல் குழுமத்தின் ஒரு முதலீட்டுக் கம்பெனிதான் ஆசியன் சாட்லைட்.எனினும், 2015 வரையில் சுரு என்டர்பிரைசஸ் செயலற்ற நிறுவனமாகவே இருந்தது.பின்னர் அது ஆடை வணிகத்தில் மிகவும் வரம்புக்கு உட்பட்ட முறையில் செயல்படத் தொடங்கியது. 2016 மார்ச் 31ல் முடிவடைந்த நிதியாண்டில், ரூ.10 கோடி வரவு என்றும், ரூ.42,030 நட்டம் என்றும் கணக்குக் காட்டியுள்ளது.
2016ல் தினேஷ் கனோடியா வெளியேறினார்.ஒரு பெரிய தொகை வந்து சேர்வதற்குச் சில நாள் முன்னதாக 11 புதிய கூட்டாளிகள் சேர்ந்தார்கள்.
புதிதாக முதலீடு செய்த அந்தப் புதிய கூட்டாளி நிறுவனங்கள் வருமாறு:
25 எப்பிஎஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்
ஆசியன் சாட்லைட் பிராட்காஸ்ட்டிங் பிரைவேட் லிமிட்டெட்
கான்டினெட்டல் டிரக்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிட்டெட்
சைகுவேட்டர் மீடியா சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட்
எடிசன்ஸ் யுட்டிலிட்டி ஒர்க்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
எஸ்ஸெல் கார்ப்பரேட் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிட்டெட்
ஐசிஎல் லயன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
ஜேனீர் கேப்பிட்டல் பிரைவேட் லிமிட்டெட்
திரு ஹிமான்ஷூ மோடி
பிரைம் பப்ளிஷிங் பிரைவேட் லிமிட்டெட்
ஸ்பிரிட் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
தபாஸ்வி மெர்க்கன்டைல் பிரைவேட் லிமிட்டெட்
ஒய்டர்செக்ரீன் ஹோல்டிங் பிரைவேட் லிமிட்டெட்
இதில் ஆசியன் சாட்லைட் பிராட்காஸ்டிங் 44,000 ரூபாயும், யுட்டிலிட்டி ஒர்க்ஸ் 45,000 ரூபாயும் வழங்கின. இந்த இரண்டு நிறுவனங்களும் சுபாஷ் சந்திராவின் நிறுவனத்தில் அங்கம் வகிக்கின்றன. எடிசன்ஸ் யுட்டிலிட்டி ஒர்க்ஸ் ஒரு பங்குதாரர் நிறுவனமாகவும், ஆசியன் சாட்லைட் பிராட்காஸ்ட்டிங் ஒரு முதலீட்டு நிறுவனமாகவும் உள்ளன.
மீதியுள்ள 11 நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் இதே குழுமத்தோடு நெருக்கமான தொடர்பு இருக்கிறது.அந்த நிறுவனங்களும் தனி நபர்களும் தலைக்கு 1,000 ரூபாய் அளித்துள்ளன.
2016 மார்ச் 31 நிலவரப்படி அனைத்துக் கூட்டாளிகளின் நடப்புக் கணக்குகளில் மொத்தம் ரூ.839 கோடி இழப்பு. அதே நியாண்டில், மேற்படி எல்எல்பி கம்பெனிக்கு லெமொனேட் கேப்பிட்டல் அட்வைசர்ஸ் எல்எல்பி கம்பெனியிலிருந்து வந்தது ரூ.1,063 கோடி.
2017 நிதியாண்டில் அதே கூட்டாளிகளின் நடபுக் கணக்கு வைப்புகள் அதிக இழப்பாக ரூ.949 கோடியைத் தொட்டன.2017 மார்ச் 31ல் முடிவடைந்த அதே நிதியாண்டில் லெமொனேட் கேப்பிட்டல் அட்வைசர்ஸ் கம்பெனியிலிருந்து வந்த பத்திர உறுதியற்ற கடன் 78 கோடி மட்டுமே.முந்தைய ஆண்டில் வந்த 1,063 கோடியை விட மிக மிகக் குறைவு.
சுரு என்டர்பிரைசஸ்சுக்குத் தரப்பட்ட இதர கடன்களில் ஒன்று டைரக்ட் மீடியா சொல்யூசன்ஸ் எல்எல்பி என்ற கம்பெனியிலிருந்து வந்த 643 கோடியும், பிரஜாத்மா என்டர்பிரைசஸ் எல்எல்பி என்ற கம்பெனியிலிருந்து வந்த 569 கோடியுமாகும். இந்த இரண்டு எல்எல்பி கம்பெனிகளுமே எஸ்ஸெல் குரூப்புடன் இணைந்தவை.
ஆகவே, டிரீம்லைன் கம்பெனியின் முதல் முதலீடு எஸ்ஸெல் குரூப்புக்குப் போய்ச்சேர்ந்துவிட்டது என்று தெரிகிறது.
‘தி வயர்’ செய்தியாளர்கள் எஸ்ஸெல் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, சுரு என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதன் பின்னணி பற்றி விசாரித்தனர். எஸ்ஸெல் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறிய பதில், நிட்யாங்க் ஒரு சுயேச்சையான கம்பெனி என்பதுதான்.“லெமொனேட் கேப்பிட்டலுக்கும் நிட்யாங்க்குக்கும் இடையே நடந்த நிதிப் போக்குவரத்துகள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது,” என்றும் அவர் கூறினார்.
டிரீம்லைன் மேன்பவர் சொல்யூசன்ஸ் குழுமமும் எஸ்ஸெல் நிறுவனமும் சம்பந்தப்பட்ட வலைப்பின்னல் போன்ற நிதிப் பரிமாற்றங்கள் குறித்து ‘தி வயர்’ குழுவினர் நடத்திய விசாரணையின் முதல் பகுதிதான் இது.
தற்போது, பணமதிப்பு ஒழிப்பைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வகையில் நடந்த பண வைப்புகள் குறித்து டிரீம்லைன் குழுமம் பண மோசடி விசாரணை அலுவலகம் புலனாய்வு மேற்கொண்டுள்ளது.
தொடர்ச்சி: இரண்டாம் பாகத்தில்
குலாம் ஷேக் பூடான், அனுஜ் ஸ்ரீவாஸ்
நன்றி: தி வயர்
தமிழில்: அ. குமரேசன்