ஆர்டிஐ தகவல்கள் லோக்பால் விஷயத்தில் பிரதமர் செய்த கால தாமதத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
மத்தியில் மோடி அரசு பதவியேற்று 45 மாதங்கள் வரை லோக்பால் தேர்வுக் குழுவின் ஒரு கூட்டத்திற்குக்கூட அவர் தலைமை வகிக்கவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தந்துள்ள பதில்களில் இக்காலகட்டத்தில் ஒருமுறைகூடத் தேர்வுக் குழுவின் கூட்டம் நடத்தப்படவில்லை என பதில் தரப்பட்டுள்ளது.
ஊழல் வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான, அதிக அதிகாரமுள்ள ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில்தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டமானது 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஊழலை எதிர்க்கும் வாக்குறுதி தந்துதான் மத்தியில் பாஜக பதவிக்கு வந்தது என்றாலும், பாஜக அரசானது இதுவரை ஒரு லோக்பாலைக்கூட நியமிக்கவில்லை என்கிறார் ஆர்டிஐ கேள்வியைத் தாக்கல் செய்த ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ்.
மக்களுக்கான தகவல் பெறும் உரிமைக்கான தேசிய அமைப்பின் (NCPRI) உறுப்பினராகவும் பணியாற்றிவரும் அஞ்சலி, லோக்பாலை நியமனம் செய்யத் தேவையான தேர்வுமுறை, தேர்வுக்குழுக்களின் நிலவரம் பற்றித் தெரிந்து கொள்ளவே மேற்குறிப்பிட்ட ஆர்டிஐ கேள்வியை தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடிக்கு ஜனவரியில் எழுதிய கடிதத்தில் லோக்பால் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் ‘ஊழலுக்கெதிரான பயனுள்ள நிறுவனக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த உங்களது அரசுக்கு விருப்பமில்லை’ என்ற வலுவான கருத்து உருவாகியுள்ளது என்று NCPRI குறிப்பிட்டது.
2013 டிசம்பரில் இச்சட்டம் இயற்றப்பட்டு இதற்கான அரசாணை ஜனவரி 01, 2014இல் வெளியிடப்பட்டபோதிலும் இன்றுவரை ஒரு லோக்பால்கூட நியமனம் செய்யப்படவில்லை என்ற வருத்தத்தை இக்கடிதம் வெளியிட்டது. “அரசு ஊழியர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான அதிகாரமுள்ள ஒரு அமைப்பு தேவை என்பதற்காகவே லோக்பால் சட்டம் இயற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர்,” என்று கடிதத்தில் கூறப்பட்டது.
பரத்வாஜின் விண்ணப்பத்தில் 2013ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களின் கீழ் தேர்வுக் குழு அமைக்கப்படுவது பற்றிய விவரங்கள் கோரப்பட்டன. குறிப்பாக, ஜனவரி 01, 2014 முதல் தேர்வுக்குழு எத்தனை முறை கூடியுள்ளது என்று அவர் கேட்டிருந்தார்: கூட்ட நாட்கள் (தேதிகள்), விவாதிக்கப்பட்ட விவரங்கள், கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் பெயர்கள், பதவிகள் போன்ற விவரங்களையும் அவர் கோரியிருந்தார்.
டிசம்பர் 13 அன்று பதிலளித்த பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 03, 21 ஆகிய தேதிகளில் அப்போதையை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேர்வுக் குழு கூடியதாகத் தெரிவித்தது. மக்களவை சபாநாயகர் மீராகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெச்.எல். தத்து ஆகியோர் இக்கூட்டங்களில் பங்கேற்றனர். நீதித் துறை வல்லுநர் பி.ஆர். ராவ் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அதன் பின் 2018இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேர்வுக் குழு ஆறு முறை கூடியுள்ளது. முதல் இரண்டு கூட்டங்களும் மார்ச் 01, ஏப்ரல் 10 தேதிகளில் நடைபெற்றன. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் இக்கூட்டங்களில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியின் தலைமையில் ஜூலை 19, ஆகஸ்ட் 21, செப்டம்பர் 04, 19 ஆகிய தேதிகளில் நான்கு கூட்டங்கள் நடைபெற்றன. மஜாஜன், நீதிபதி மிஸ்ரா ஆகியோர் தவிர, நீதித் துறை வல்லுநர் முகுல் ரோஹட்கியும் இக்கூட்டங்களில் பங்கேற்றார்.
இடைப்பட்ட 45 மாதகாலங்களில் ஒரு கூட்டம்கூடக் கூட்டப்படவில்லை.
கூட்ட நிகழ்வு ‘ரகசிய ஆவணமாக’ பகிரப்பட்டது
பரத்வாஜின் ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த பணியாளர் மற்றும் தேர்வுத் துறை, கூட்டத்தில் 3-5 உயர்மட்ட விஐபி-க்கள் மட்டும் பங்கேற்றதால் கூட்ட நிகழ்வு பற்றிய தகவல்களை வெளியிடத் தனக்கு அதிகாரமில்லை என்றது. கூட்ட நிகழ்வு ‘ரகசிய’ ஆவணங்களாகப் பகிரப்பட்டுள்ளதால்’ அவற்றின் நகல்களை சம்பந்தப்பட்ட மத்தியப் பொதுத் தகவல் அதிகாரியாலும் தர முடியாது என்று இத்துறை மேலும் கூறியது.
இரண்டாவது கூட்டத்தின்போது ‘8 நபர்கள் அடங்கிய தேடும் குழுவை அமைக்கத் தேர்வுக் குழு பரிந்துரைத்ததாகவும். அதில் இருவர் அவ்வாய்ப்பை நிராகரித்ததாகவும் இதன் மீது அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனளிக்கவில்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்வுக் குழு உறுப்பினர் பி.ஆர். ராவின் மறைவினால் ஏற்பட்ட ‘பிரதான நீதித் துறை வல்லுநர்’ என்ற காலியிடத்தை நிரப்ப முன்னாள் இந்திய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கியை குடியரசுத் தலைவர் பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேடும் குழுவை அமைப்பதற்கான ஆணை 2018 செப்டம்பரில் வெளியானது.
அடுத்த கூட்டத்தில் தேர்வுக் குழு லோக்பாலின் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப் பொருத்தமான நபர்களின் பெயர்களைப் பரிந்துரைப்பதற்காகத் தேடும் குழு ஒன்றை அமைத்தது. இதற்கான அரசாணை செப்டம்பர் 27 அன்று வெளியானது.
பதில் பற்றி விமர்சித்த பரத்வாஜ் பாஜக ஆட்சிக்கு வந்து 45 மாதங்கள் கழித்துத்தான் லோக்பால் தேர்வுக் குழு முதன்முறையாகக் கூடியது என்றும் அதுவரை அக்கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். “லோக்பால் அமைப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்நடவடிக்கை பொய்யாக்கி விட்டது,” என்றார்.
‘தகவல் தர மறுப்பது சட்ட விரோதம்’
‘ரகசிய ஆவணங்கள்’ என்ற போர்வையில் கூட்ட நிகழ்வு பற்றிய விவரங்கள் தரப்படாதது பற்றிப் பேசிய பரத்வஜ் தகவல் தர மறுப்பது சட்ட விரோதமான செயலாகும் என்றார். தகவலைத் தர மறுக்கும்போது பொதுத் தகவல் அதிகாரி ஆர்டிஐ சட்டத்தின் எந்த விதிவிலக்குப் பிரிவையும் மேற்கோள் காட்டாமல் இருந்தது பற்றியும் பரத்வாஜ் குறிப்பிட்டார்.
“இவ்வளவு கால தாமதம், நியமனம் பற்றிய அரசின் மறைவான செயல்பாடு ஆகியவை லோக்பால் உருவாவதற்கு முன்னரே மக்களின் நம்பிக்கையைக் குறைத்துவிடக்கூடும்,” என எச்சரிக்கிறார் அஞ்சலி.
பெரும் பணக்காரர்களைக் காக்கும் முயற்சி – ராகுல் காந்தி தாக்கு
லோக்பால் நியமனத்தில் மோடி அரசின் மெத்தனம் மோடியின் அரசியல் எதிரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் நீரவ் மோடி – மேகுல் சொக்ஸி ஊழல் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளிவந்தபோது லோக்பால் நியமனத் தாமதத்திற்காக மோடி அரசு தாக்குதலுக்கு உள்ளானது. கர்நாடகாவில் பேரணி ஒன்றில் இது பற்றிப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பெரும் பணக்காரர்க்ளுக்கு’ சாதகமாக நடந்துகொள்வதாகவும், இதனால்தான் ஊழலை ஒழிக்கும் லோக்பால் அமைப்பை உருவாக்க மோடி ஆர்வம் காட்டவில்லை என்றும் கடுமையாகத் தாக்கினார்.
“குஜராத்தில் லோக் ஆயுக்தாவை மோடிஜி அமல்படுத்தவில்லை. பிரதமராகி நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் தில்லியில் லோக்பாலைக்கூட அவரால் அமைக்க முடியவில்லை,” என்றார் ராகுல் காந்தி.
மத்திய அரசின் அணுகுமுறை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
கடந்த ஜூலை மாதம் ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2017 ஏப்ரலில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு இதுவரை லோக்பாலை அமைக்காதது பற்றி வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதாடியதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் லோக்பால் நியமனத்தில் தன் நிலைப்பாட்டை வெளியிடும்படி மத்திய அரசிடம் கூறியது.
தனது கோரிக்கையில் “அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக உள்ளது. லோக்பாலுக்கான தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செய்முறையை நீதிமன்றம் ஆரம்பிக்க வேண்டும்,” என்றார் பூஷண்.
குடிமக்களை ஊழலிலிருந்து காப்பதற்கான கண்காணிப்பாளரை நியமிக்கும் செயல்முறையில் அரசின் நிலைப்பாடு ‘முழுவதும் அதிருப்திகரமாக’ இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
கௌரவ் விவேக் பட்நாகர்
இது போன்ற கட்டுரைகள் நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளின் நம்பகதன்மையை அம்பல படுத்துகிறது. சவுக்கு ,தி வயர் போன்ற வெகு சில ஊடகங்கள் மட்டுமே வெளியிடுகின்றன. ஜனங்களிடம் இது போன்ற தகவல்கள் முழுமையாக சென்றடைந்தால் அரசியல் விழிப்புணர்வு ஏற்படலாம். இல்லையெனில் நக்சல் புரட்சி மூலமாக தான் ரத்த கிளரி ஏற்பட்டு மாற்றம் உருவாகும்.