பொதுவாக, எல்லாச் சர்வாதிகார அரசுகளுமே வேறு எந்த மாற்றும் இல்லை எனும் கட்டுக்கதையைப் பரப்புகின்றன. என்ன நிலவுகிறதோ, அது சொல்லப்படுவது போல் உண்மையானது, முழுமையானது. எனவே, அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும், குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தும்.
தேர்தல் ஆண்டில் நரேந்திர மோடியே இப்போது சாத்தியமாகக்கூடிய சிறந்த பிராண்ட் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. சந்தையால் இயக்கப்படும் இந்தக் காலத்தில், அரசியல் நுகர்வோராக ஒருவருடைய புத்திசாலித்தனம் என்பது, அதிகம் மிகைப்படுத்தப்பட்ட இந்த பிராண்டைத் தேர்வு செய்து பாதுகாப்பாக உணர்வதுதான் என ஆளும் கட்சியால் தொடர்ந்து சொல்லப்படுகிறது.
இந்த கருத்து மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது நம்முடைய சிந்திக்கும் திறனைப் பறித்துவிடும். மாற்று என்பது வெளிப்புற அமைப்பால் வழங்கப்படக்கூடிய முழு ஆரோக்கியமான பண்டம் அல்ல என்பதையும், நம்முடைய செயல்முறை, சோதனைகள், முரண்கள் மற்றும் தோல்விகளாலேயே அது உருவாகக்கூடியது என்பதையும் மறக்கச் செய்கிறது. இந்த செயல்முறையை மறுப்பது என்பது ஜனநாயகத்தை நிராகரிப்பதாகும். அரசியல் என்பது தளைகளிலிருந்து விடுவிக்கும் செயலுக்கான வழிமுறை என்பதை மறுப்பதாகும்.
வேண்டாம் மதவாத தேசியம்
முதலில், ஜனநாயகம் என்பதை, இரண்டு ஆளுமைகள்- உதாரணமாக, “ஆண்மை மிகுந்த, ஓய்வறியாத, மேக் இன் இந்தியா புகழ் நரேந்திர மோடி Vs அனுபவம் இல்லாத, ஆற்றல் இல்லாத, பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி” – இடையிலான தேர்வாக ஜனநாயகத்தைச் சுருக்கிக்கொள்வதன் அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கலாச்சாரம், செய்தி மற்றும் அரசியல் என எல்லாவற்றையும் பேக் செய்யப்பட்ட பண்டமாக நம்மிடம் விற்பனை செய்யும் ஊடக நிறுவனங்கள், பலவீனமான பலரது உள்ளங்களில் ஆளுமை சார்ந்த கலாச்சாரத்தைவிட முக்கியமானது வேறில்லை எனும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. வலுப்படுத்துகின்றன.
இந்தத் தோற்ற உருவாக்கம் இரண்டு இடங்களிலிருந்து உருவாகிறது: (அ) வாழ்க்கை உலகைச் சந்தையின் காலனியாக்குவது. (ஆ) சுய மோகம் கொண்ட நார்சிச கலாச்சாரத்தின் தோற்றம். எனவேதான், அனைத்து விதமான நாயக குணங்களும் கொண்டதொரு பிராண்டாகத் தங்கள் தலைவரை முன்நிறுத்த அரசியல் கட்சிகளால் பகட்டான, தவறாக வழிநடத்தப்பட்ட எம்பிஏ பட்டதாரிகள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அதனால்தான், 2014 முதல் நாம் பார்த்துக்கொண்டிருப்பது போல, நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஊடகப் பிரச்சாரம் மற்றும் அவருடைய ஒவ்வொரு செயலையும் படம் பிடிக்கும் காமிராவின் மாயத்தால், மோடி, இந்தியா இதுவரை கண்ட சிறந்த பிரதமராக முன்னிறுத்தப்படுகிறார். மேற்கத்தியமான, நெறி மீறிய நேரு, அவரது அரசியல் வாரிசான இந்திரா, தற்செயலாகப் பிரதமரான மன்மோகன் சிங் ஆகியோரிலிருந்து புத்துணர்ச்சி தரும் வேறுபட்ட பிரதமராக முன்வைக்கப்படுகிறார்.
மேலும், சுய மோகக் கலாச்சாரம் – சமூக டார்வினியம் அல்லது, வலிமை மிக்கது தாக்குப்பிடிக்கும் என்னும் கோட்பாட்டினால் உருவானது – நம்மைக் கவர்ந்திழுக்க முனைகிறது. அனாமதேய உலகில், நம்மில் பலர் சக்தியற்று, அந்நியமாக உணரும் நிலையில், சாதனைகளை நோக்கமாகக் கொண்ட, சக்தி வாய்ந்த தேசியவாதி போன்ற படிமங்களைக் கொண்ட மனிதர் நம்மை ஈர்க்கிறார். காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவிலான தீவிரவாதம், அசாமில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் பிரச்சனை, உத்தரப் பிரதேசத்தில் பசுவின் புனிதத்தைப் பார்க்க மறுக்கும் நாட்டுப்பற்று இல்லாத முஸ்லிம்கள் உள்ளிட்ட எதிரிகளிடமிருந்து நம்மை காப்பாற்றும் வாக்குறுதியோடு அவர் நம்மை ஈர்க்கிறார்.
பாலிவுட் படமான தீவாரில் கோபக்கார இளைஞனான விஜய் (அமிதாப் பச்சன்), மும்பை தாராவி குடிசைப் பகுதி இளைஞர்களை ஈர்க்க பயன்படுத்திய பாணியிலிருந்து இது மாறுபட்டதல்ல. அரசியலை வசீகரமான பேக்கேஜாக முன்வைப்பது என்பது வெகுஜன நுகர்வுக்கானது.
வெகுமக்களை வசியப்படுத்த முனையும் இந்த உளவியல் போரை எதிர்கொள்வதற்காகவே நாம் மாற்றைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும். ஆளுமை கலாச்சாரம் சார்ந்த அரசியலை நாம் மறுக்க வேண்டும். ஊடகத்தால் இயக்கப்படும், அதை ஒரு நுகர்பொருளாக விற்க முயலும் சந்தை உண்டாக்கிய தூண்டுதலுக்கு நாம் மறுப்பு சொல்லி, அதிகாரத்துடனான உரையாடலுக்கான அரசியலை நாம் பார்க்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு, பொருளாதார அதிகாரப்பரவல், நிலச் சீர்திருத்தம், பரவலாக்கப்பட்ட நீதி, ஆணாதிக்க, சாதியப் படிநிலைகளை எதிர்க்கும் உளவியல் – கலாச்சார இயக்கம் ஆகிய இலக்குகளுடன் நாம் அரசியலை அணுக வேண்டும். இதற்கு நமது பங்கேற்பும் குரலும் தேவை.
நாம் உருவாக்குபவர்கள், நுகர்வோர் அல்ல. தலைவர்கள் முக்கியமல்ல எனச் சொல்லவில்லை. ஊதிப் பெரிதாக்கப்பட்ட தன்முனைப்பு கொண்ட சுய மோகத் தலைவர்கள் நமக்கு வேண்டாம். நமக்கு மாயாவியோ அல்லது சர்வாதிகார ஆளுமையோ தேவையில்லை. மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும், ஆண்டோனியோ கிரம்சி குறிப்பிடுவது போன்ற இயற்கையான அறிவுஜீவிகளாக விளங்கும் பணிவு மிக்க தலைவர்கள் நமக்குத் தேவை. சமூகவியல் வல்லுனரான மேக்ஸ் வெப்பர் குறிப்பிட்ட வசீகரத்தை ஒரு தலைவர் பெறுவது சாத்தியம்தான், ஆனால் அந்த வசீகரம், ஊடகத்தின் மிகை யதார்த்த உருவாக்கமாக அல்லாமல், மக்களுடனான இயற்கையான தொடர்பு மூலம் உண்டானதாக இருக்கட்டும். அதாவது காந்தியின் வசீகரம் போல.
ஆளும் கட்சி தேசியத்தைப் புனிதமாக்குகிறது. இது குறித்த சொல்லாடல்களில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. ஆளும் கட்சியைப் பொறுத்தவரை எந்த வகையான எதிர்ப்பும் தேச விரோதமானதாகும். தேசப்பற்றை ஏகபோகமாக்குவது போன்றது இது. ஆம், வரலாற்றுப் புரிதல் மற்றும் நம்முடையதைப் போன்ற பழமையான நாகரிகத்தின் பாய்ந்தோடும் தன்மையைப் புரிந்துகொண்டு, நாம் ஒரு மாற்றை தேட வேண்டும். இந்துத்துவம் அல்லது மதவாத தேசியத்திற்கு மறுப்பு சொல்ல வேண்டும். மோடி பிராண்ட் முன்நிறுத்தும் தேசிய பாணி, அறிவார்ந்த நோக்கில் மங்கி, கலாச்சார நோக்கில் ஏழ்மையுற்று, ஆன்மிக வறட்சி கொண்டதாக இருக்கிறது.
தளர்ந்த உடலை வைத்துக்கொண்டு காந்தி ஏன் நவகாளியில் யாத்திரை மேற்கொண்டார் என்று இந்த மதவாத தேசியத்தால் புரிந்துகொள்ள முடியாது. பிரிவினை பயங்கரத்தின்போது, உருது எழுத்தாளர் சதத் உசேன் மண்ட்டோ அற்புதமாகச் சித்தரித்த உணர்வுகளை, பிளவின் செயற்கையான கோட்டின் பயனற்ற தன்மையை விவரிக்க முயலும் டோபா சிங் டேக்கின் பிறழ்வு நிலையை இந்த தேசியத்தால் புரிந்துகொள்ள முடியாது: தாகூர் தனது அற்புதமான ஒரு கவிதையில், பல மதங்கள், இனங்கள் சங்கமிக்கும் சமுத்திரமாக இந்தியாவைப் பார்ப்பதையும் மோடி பிராண்ட் தேசியத்தால் புரிந்துகொள்ள முடியாது.
தேசியவாத்தின் அதீத மோகம் நமக்கு வேண்டாம். எல்லோரையும் தாயன்புடன் ஏற்றுக்கொள்ளும் தாகூர் நாவலான கோராவின் ஆனந்தமயி போன்ற தேசமாக நாம் இருக்க வேண்டும். விலக்கி வைப்பது அல்ல, அனைவரையும் உள்ளடக்குவதே முக்கியம். உரை நிகழ்த்துதல் அல்ல உரையாடலே நமக்குத் தேவை, ஒற்றைப்படைத்தன்மை அல்ல பன்முகத்தன்மை தேவை. ராணுவ ஆக்ரோஷத்தின் காட்சி அல்ல, மக்கள் அதிகாரமே நமக்குத் தேவை. மாற்று தேசியவாதத்தின் புதிய மொழியாக அது இருக்கட்டும்.
மாற்றுகள் முழுமையானவை அல்ல
ஆனால், இந்த மாற்றுகள் திடீரெனத் தோன்றாது. சோதனைகள்,. முரண்கள் ஏன் தோல்விகளுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதுதான் துவக்கம். இத்தகைய சவால்களை நோக்கிச் செல்வது எதிர்கட்சிகளுக்கு சாத்தியமா?
ஆம், இரண்டு காரணங்களுக்காக நாம் இந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டும்: முதலில், பண பலமும் ஆள் பலமும் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய அரசியல் செயல்முறை நேர்மையானவர்கள் அரசியல் அமைப்பில் பங்கேற்பதைத் தடுக்கிறது. எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற பாகுபடு இல்லாமல், எம்.எல்.ஏ.க்கள், தொங்கு சட்டமன்றச் சூழல்களில் பாதுகாக்கப்பட்ட ரிசார்ட்களுக்கு அழைத்துசெல்லப்பட்டு, வாங்கி, விற்கப்படுவதை நாம் அடிக்கடி பார்க்க நேர்வதில் எந்த வியப்பும் இல்லை. இது மக்கள் தேர்வை அவமானப்படுத்துவது.
இரண்டாவதாக, எப்படியேனும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை சமரசங்களுக்கு வித்திடுகிறது. அவர்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்கள், ரியல் எஸ்டேட் மாபியா, உள்ளூர் தாதா அல்லது அமைச்சரின் மருமகள். அவர்கள் நாம் விரும்புகிறவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உண்மையில் நாம் அரசியல் கட்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். முரண் என்னவெனில், வாக்களிப்பது என்பது சிறந்தவர்களைத் தேர்வுசெய்வதாக அல்லாமல், குறைந்த தீங்கு கொண்டவர்களைத் தேர்வு செய்வதாக மாறிவிட்டது. அடிப்படை பிரச்சினைகள் மறக்கப்படுகின்றன. பரபரப்பான நாளிதழ்களின் நச்சுத் தலையங்கத்திற்கு உகந்த சுவாரஸ்யமான புதிர்களில் நாம் மூழ்கிவிடுகிறோம். அதிகமாகச் சாதிக்க விரும்பும் மாயாவதியின் காய் நகர்த்தல், யோகி ஆதித்யநாத்தின் மதவாத அரசியலை முறியடிக்குமா? அமித் ஷாவின் சாதுரியத்திற்கு மம்தா பானர்ஜியின் ஆவேசம் சரியான பதிலா?… இதுபோன்ற புதிர்கள் நம்மை மூழ்கடிக்கின்றன.
இருப்பினும், கட்சிகள் சார்ந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வரம்புகளை மனதில் கொண்டு, நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பங்கேற்க வேண்டும். முழுமையாக அமையாவிட்டாலும் ஒரு மாற்றைத் தேட நாம் விழைய வேண்டும். ஏனெனில் இப்போதுள்ளது போன்ற நிலையை நாம் ஏற்றுக்கொண்டால், அற்புதமான பன்முகத்தன்மைக்காக அறியப்படும் நாகரிகம் மேலும் அழிக்கப்பட்டு, அம்பானிகள் மற்றும் அதானிகள் எழுச்சிக்கு மத்தியில், இந்தியா எனும் பூகோளப் பரப்பின் மக்கள், கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வெகுமக்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோர், வேலையின்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை, கலாச்சார விளிம்பு நிலையாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளத் தள்ளப்படுவார்கள்.
இருப்பினும், முற்போக்கான மாற்றுக்கான தேடல் தேர்தலுடன் முடிவடைவதில்லை. இதை நாம் உறுதி ஏற்போம்.
அவிஜித் பதக்
(அவிஜித் பதக், ஜே.என்.யூ. சமூகவியல் பேராசிரியர்)
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/republic-day-politics-bjp-congress)