மக்களவைத் தேர்தலில் மதவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மதவாதப் பிரசாரத்தைக் கையிலெடுத்தால், அது இந்திய இஸ்லாமியர்களிடையே விரோதப் போக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிகுக்கும் என்றும் அமெரிக்க உளவு அமைப்பு ஆய்வுபூர்வமாக எச்சரித்துள்ளது.
இது, அமெரிக்க செனட் சபையின் உளவுப் பிரிவு குழுவிடம் ‘அமெரிக்க உளவு அமைப்பின் மதிப்பீட்டில் உலகளாவிய அச்சுறுத்தல்’ என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் கவனத்துக்குரிய முடிவுகளில் ஒன்று. 2006இல் தொடங்கப்பட்டு, அமெரிக்க உளவு அமைப்பால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு மதிப்பீட்டுக் குழுவில் எஃப்பிஐ, சிஐஏ, கடற்படை உளவுப் பிரிவு உள்ளிட்ட 17 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையில், ஆசியாவில் அமைதியையும் உறுதித்தன்மையையும் சீர்குலைக்கக்கூடிய வகையில் மூன்று அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தாக்குதல்கள், பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் குறைபாடுகள் ஆகியவற்றுடன், இந்தியாவில் மக்களவைத் தேர்தலையொட்டிய மதவாத வன்முறை ஆபத்தும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபைக் குழுவிடம் அந்நாட்டின் தேசிய உளவு அமைப்பு இயக்குநர் டான் கோட்ஸ் அளித்த 42 பக்க ஆய்வறிக்கையில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி இந்து தேசியவாதத்தை அழுத்தமாக வலியுறுத்தினால், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மதவாத வன்முறை அதிகரிக்கும் சாத்தியம் உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “நரேந்திர மோடியின் நான்கரை ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், பாஜக ஆளும் சில மாநிலங்களில் மதவாதப் பதற்றங்கள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. இந்து தேசியவாத மாநிலத் தலைவர்கள் இந்து தேசியவாதப் பிரச்சாரத்தைத் தங்களது ஆதரவாளர்களுக்கு உத்வேகமூட்டும் வகையில் குறைந்த அளவிலான வன்முறையைத் தூண்டுவதற்கான சமிக்ஞையாகப் பார்க்கக்கூடும்” என்று அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
எந்த விதமான மதவாத வன்முறைகளும் பயங்கரவாதக் குழுக்களுக்கு இடமளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, “மதவாத வன்முறைகள் அதிகரித்தால் இந்திய இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்படுவர்; அதுவே இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த வகை செய்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளது.
பாஜகவின் சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மோடி தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரிதாக மதவாத வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தரவுகளிலேயே 2017 வரையிலான நான்கு ஆண்டுகளில் 2,920 ‘மதவாதச் சம்பவங்கள்’ நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 389 பேர் கொல்லப்பட்டதாகவும், 8,890 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் கடந்த டிசம்பரில் மக்களவையில் விவரிக்கும்போது, 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2017இல் மதவாத வன்முறை 32% அளவில் அதிகரித்துள்ளது என்றும், அத்தகைய சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 என்றும் தெரிவித்தார். 2015ஐ எடுத்துக்கொண்டால், அந்த ஆண்டில் மதவாத வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆட்சியில் மதவாத வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே இல்லை என்று ட்வீட்டில் பதிவிடுகிறார். அதே வேளையில், 2017இல் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த 195 மதவாத வன்முறைச் சம்பவங்களில் 44 பேர் கொல்லப்பட்டதாக அரசின் தரவுகள் காட்டுகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் உறவு
இந்தியா – பாகிஸ்தான் உறவு விவகாரமும் இந்திய மக்களவைத் தேர்தலில் கொந்தளிப்பூட்டும் ஒன்றாக இருக்கும் என்றும் அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர்கள் கூறுகின்றனர்.
“எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு, பிரிவினையைத் தூண்டும் தேசியத் தேர்தல்கள் மற்றும் பாகிஸ்தானின் பார்வையில் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு ஆகியவை மே 2019 வரையோ அல்லது அதற்குப் பிறகுமோகூட இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு விவகாரத்தில் சிக்கல்களைக் கூட்டும் சாத்தியம் உள்ளது” என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும், இரு நாடுகளும், இணக்கமான அணுமுறைக்கான அரசியல் விருப்பத்தைச் செயல்படுத்த முடியாத அளவுக்குத் தங்களது நிலையைக் கடுமையாக்கியுள்ளன என்றும், நாடாளுமன்றத் தேர்தல் உத்திகளின் விளைவால் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதில் சிக்கல்கள் மேலும் கடுமையாகும் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகள் கடுமையாகும் அபாயமும் உண்டு.
இதைத்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 2018இல் இஸ்லாமாபாத்தில் இந்திய ஊடகத்திடம் பேசும்போது, “பாகிஸ்தானுக்கு எதிரான செயல்பாடுகளும் வாக்குவங்கி அம்சமாக உள்ளன. இந்தியாவில் ஏப்ரலில் நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் காத்திருக்கிறோம். அதன் பின்னரே அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவுகளை எடுப்போம்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானைப் பாதுகாப்பான புகலிடமாகக் கொண்டு தொடர்ந்து செயல்படக்கூடிய தீவிரவாத இயக்கங்கள், அங்கிருக்கும் சாதகமானச் சூழலைப் பயன்படுத்தி இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தங்களது கொள்கைகளுக்கான ஆயுதமாகச் சில பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பதும், தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற குழுக்களை எதிர்ப்பதுமான குறுகிய கண்ணோட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. இது, தாலிபான்களுக்கு எதிரான அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு தலைவலியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018, 2017ஆன் ஆண்டுகளின் ஆய்வு முடிவுகளிலும் ஏறக்குறைய இதே வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டிருப்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.
பயங்கரவாதக் குழுக்களுக்குப் பாதுகாப்பான சொர்க்கமாகப் புகலிடம் கொடுக்கும் பாகிஸ்தானை ‘தண்டிக்கும்’ வகையிலான புதிய தெற்காசிய வியூகத்தை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டார். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கழித்து, ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபானை அணுகும் வியூகத்துக்கு, பாகிஸ்தானிடமிருந்தும் மேலும் வலுவான ஒத்துழைப்பைப் பெறும் நோக்கத்தால், அந்நாட்டுக்கு எதிரான வியூகம் நீர்த்துப்போனது.
மேலும், பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத திட்டங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து இந்த ஆண்டு ஆய்வறிக்கையில் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, “இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது அணு ஆயுதத் திட்டங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து தீவிரம் காட்டுவது, தெற்கு ஆசியாவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். புதிய வகை அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்துவதும் அப்பகுதியில் வெவ்வேறு வடிவிலான ஆபத்துகளை அதிகரிக்கச் செய்யும்” என்று தெரிவித்துள்ளது.
இருண்ட மதிப்பீடு
சர்வதேச அளவிலான பொருளாதாரக் கண்ணோட்டத்தில், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உடனான உறவே இந்தியாவுக்கு கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கும் என்று முந்தைய ஆய்வறிக்கையில் அமெரிக்க உளவு அமைப்பு குறிப்பிட்டிருந்தது. தற்போதைய ஆய்வறிக்கையில், இந்தியா – சீனா இடையிலான உறவு நடப்பு ஆண்டிலும் அதே ‘பதற்றம்’ மாறாது நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2018இல் நடந்த அலுவல்பூர்வமற்ற பேச்சுவார்த்தையால் இரு நாடுகளின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீனப் பிரதமர் ஷி ஜின்பிங்கும் வாகா உச்சி மாநாட்டில் சந்தித்துக்கொண்டபோது, இரு தலைவர்களும், நம்பிக்கையைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுமாறு தங்களது நாட்டின் ராணுவத்திடம் உத்தரவிட்டதாக இந்தியத் தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. எனினும், எல்லைகளில் அமைதி நிலவிவருகிறது என்ற கருத்தை அமெரிக்க உளவு அமைப்பு ஏற்க மறுக்கிறது. தற்போதைய ஆய்வறிக்கையில் இது குறித்துக் குறிப்பிடும்போது, “எல்லைப் பகுதிகளில் ராணுவ நடமாட்டமும், இரு தரப்பின் தவறான புரிந்துணர்வும் ஆயுத மோதலுக்கே வித்திட்டுப் பதற்றத்தைக் கூட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்ட 2018 ஆய்வறிக்கையும் இருண்ட மதிப்பீட்டையே அளித்த நிலையில், “எல்லையில் மூன்று மாதங்களாக நீடித்துவந்த இரு நாட்டு ராணுவத்தின் மோதல் போக்கும் கைவிடப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான ஒப்பந்தம் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் மேற்கோள்ளப்பட்டது. எனினும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவும் என்றும், அது மேலும் மோசமடைவதற்கான சாத்தியமே அதிகம் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் தற்போதைய ஆய்வறிக்கையில் அமெரிக்க உளவு அமைப்புத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளையில், ஆசியாவின் இருபெரும் சக்திகளான இந்தியாவும் சீனாவும் முக்கியப் பிரச்சினைகளிலும், எல்லைச் சம்பவங்களிலும் கூடுதல் இணக்கமான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது, ஊடகச் செய்திகளில் உரிய கவனம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: தி வயர்
https://thewire.in/security/us-intel-chiefs-communal-campaign-bjp-islamist-terror-groups