புது தில்லி, ஜூன் 10: தில்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி மதிய உணவைப் புறக்கணித்தார்.
நீதிமன்றத்தில் மகளுடன் சிறிது நேரம் பேசியபோது அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் மதிய உணவு இடைவேளையின்போது, எல்லோரும் அழைத்தபோதும் ராஜாத்தி உணவு உண்ண மறுத்து விட்டார்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, அவர்கள் அனைவரும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி வருகின்றனர். அதன்படி கனிமொழி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கனிமொழி ஆஜர் ஆவதற்கு முன்பாகவே, அவரது தாயார் ராஜாத்தி, திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சனுடன் 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தார். ஆனால், கனிமொழி 11 மணிக்குத்தான் அழைத்து வரப்பட்டார். அப்போது ராஜாத்தியும், கனிமொழியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, அரவிந்தனின் தாயார், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஏ.கே.எஸ். விஜயன், தமிழக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும், ஆ. ராசாவைக் காண அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர்களும் சரத்குமாரைக் காண அவரது உறவினர்களும் வந்திருந்தனர். அனைவரிடமும் பேசிய கனிமொழி, தாயார் ராஜாத்தியுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏதோ முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதன் பின்னர், உணவு இடைவேளைக்காக நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. அப்போது, கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மதிய உணவுக்காக ராஜாத்தியை அங்கிருந்தவர்கள் அழைத்தபோது அவர் செல்ல மறுத்துவிட்டார். ஹெலன் டேவிட்சன், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், கட்சி மகளிர் அணியைச் சேர்ந்த நூர்ஜஹான் பேகம், கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் அழைத்தபோதும் மதிய உணவை ராஜாத்தி புறக்கணித்தார்.
பிறகு, மாலை 5.30 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளை நீதிபதி ஓ.பி. சைனி ஜூலை 4 வரை ஒத்தி வைத்தார். சிறப்பு நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை (ஜூன் 11 ) முதல், ஜூலை 4 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.