முன்பின் தெரியாத கம்பெனி பணப் பரிமாற்றத்தில்
முக்கிய இடம் பிடித்த கதை
2015-16 நிதியாண்டில் சுரு என்டர்பிரைசஸ் குழுமத்திற்கு லெமொனேட் கேப்பிட்டல் மூலம் பணத்தை மாற்றிய டிரீம்லைன் மேன்பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சில முதலீடுகளைச் செய்தது. அந்த முதலீடுகள், வீடியோகான் குரூப், எஸ்ஸெல் குரூப் நிறுவனங்களுக்கிடையேயான பெரியதொரு வணிகப் பரிமாற்றமாகத் தோன்றுகிறது.
2016-17 நிதியாண்டில் டிரீம்லைன் குழுமம், ஹிந்துஸ்தான் ஆயில் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (எச்ஓவிபி) என்ற நிறுவனத்தின் மாற்றத்தக்கதல்லாத கடன் பத்திரங்களை (என்சிடீ) வாங்கியது. அவற்றின் மதிப்பு 1,626 கோடி ரூபாய். அதே ஆண்டில், ‘பாடி கார்ப்பரேட்’ (கூட்டுருக் குழுமம்) என்ற வகையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து டிரீம்லைன் குழுமத்திற்கு ரூ.1,492 கோடி வந்தது. அந்தப் பணம் மேற்படி என்சிடீ பத்திரங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.
கார்ப்பரேட் கணக்குப் பதிவுகளின்படி, எச்ஓவிபி நிறுவனம் பெருமளவுக்கு தூத் குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருக்கிறது. பெரும் வணிகக் குழுமமான வீடியோகான் நிறுவனத்திற்குப் பின்னால் இருப்பது அந்தக் குடும்பம்தான். அதன் 49.90% பங்குகளை வைத்திருப்பவர் சவுரப் பி. தூத்.
இதன் இதர முக்கியப் பங்குதாரர்கள் (2015 மார்ச் 31 நிலவரப்படி) ஃபோர்ஸ் அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிட்டெட் (12%), வீடியோகான் ரியாலிட்டி அன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெட் (19%), +ஸ்ரீ தூத் டிரேடிங் அன் ஏஜென்சீஸ் லிமிட்டெட் (19%).
எச்ஓவிஎல் ஒரு முதலீட்டு நிறுவனம். அந்த நேரத்தில் அது எந்த வணிகத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. ஆகவே தூத் குடும்பத்தினர் சில வீடியோகான் கம்பெனிகளிடம் இருந்த வீடியோகான் டீ2எச் நிறுவனப் பங்குகளை, எச்ஓவிஎல் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அடமானம் வைத்து ஒரு அடமானப் பத்திரம் தயாரித்தனர் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.
2016 டிசம்பர் 30 அன்று எச்ஓவிஎல் நிர்வாகம், கேட்டலிஸ்ட் டிரஸ்ட்டீஷிப் லிமிட்டெட் குழுமத்திற்கு சாதகமாக ஒரு அடமான ஒப்பந்தம் செய்துகொண்டது. அதற்கான நிறுவன உத்தரவாதங்களை சினர்ஜி அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிட்டெட், சாலிட்டேர் அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிட்டெட், டோம்பெல் எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட், பிளாட்டினம் அப்ளையன்சஸ் இந்தியன் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய குழுமங்கள் அளித்தன.
அத்துடன் வேணுகோபால் என். தூத், அனிருத் வேணுகோபால் தூத் ஆகியோர் சொந்த உத்தரவாதங்கள் அளித்தனர்.
இந்தக் குழுமங்கள் அனைத்துக்கும் வீடியோகான் டீ2எச் குழுமத்தில் கணிசமான பங்குகள் இருந்தன. முன்பு என்ஏஎஸ்டீஏக்யூ (அமெரிக்கப் பங்குச்சந்தை நிறுவனம்) பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தக் குழுமம் பின்னர், பண மதிப்பு ஒழிக்கப்பட்ட 2016 நவம்பரில் ஜீ டிவி நிறுவனத்தைச் சேர்ந்த டிஷ் டிவி குழுமத்துடன் இணைந்தது.
எச்ஓவிஎல் இயக்குநர்கள் 2016 டிசம்பர் 28ல் நடத்திய கூட்டத்தில், ரூ.1,626 கோடி மதிப்புள்ள, மாற்றத்தக்கதல்லாத கடன் பத்திரங்களை (என்சிடீ), 24 மாத முதிர்ச்சிக்காலத்துடன் இரண்டு வரிசைகளில் வெளியிடுவது என்று முடிவு செய்தனர்.
சுருக்கமாகச் சொல்வதெனில், எஸ்ஸெல் நிறுவனத்திற்குச் சொந்தமான டிஷ் டிவி குழுமத்தின் பங்குதாரர்களுக்காக டிரீம்லைன் / நிட்யாங்க் வழியாக வீடியோகான் டீ2எச் பங்குகளை அடமானம் வைத்ததன் மூலம், தூத் குடும்பத்திற்கு ரூ.1,626 கோடி கிடைத்தது. ஆக, டிரீம்லைன் இரண்டாவது முதலீட்டினால் எஸ்ஸெல் குழுமம் மறைமுகமாக ஆதாயமடைந்தது.
சரி, எச்ஓவிஎல், வீடியோகான் குழுமங்கள் எதற்காக இதைச் செய்ய வேண்டும்? வீடியோகான் நிறுவனம், தனது குழுமங்கள் மூலமாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில், ஒரு ஏற்பாட்டின் பகுதியாக, எஸ்ஸெல் சார்பாக, தூத் குடும்பத்திற்குச் சொந்தமான குழுமங்களுக்கு “முன்தொகை” ஒன்றை நிட்யாங்க் வழங்கியது என்று தெரிவித்துள்ளது. அந்த ஏற்பாட்டின்படி, தூத் குடும்பத்தினர் தங்களது வீடியோகான் டீ2எச் பங்குகளை, எஸ்ஸெல் நிறுவனத்திற்கு, முன்பே முடிவு செய்யப்பட்ட, ஒரு பங்கிற்கு ரூ.106 என்ற விலையில் விற்பார்கள்.
‘தி எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்த செய்தியின்படி, “தூத் குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட ஒரு குழுமத்தின் கடன்பத்திரங்களை வாங்கியதன் மூலம்” அந்தப் பணவழங்கல் செய்யப்பட்டது. இறுதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட பங்குக் கொள்முதலால், “இணைக்கப்பட்டுள்ள டீ2எச் – டிஷ் டிவி நிறுவனத்தில் 20%க்குக் குறைவான பங்குகள் தூத் குடும்பத்தினருக்குக் கிடைப்பது உறுதியானது.”
டோம்பெல் போன்ற குழுமங்கள் மூலமாக சட்ட ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்ட வீடியோகான் நிலைப்பாடு என்னவெனில், இணைப்பு முயற்சி தோல்வியடையுமானால் டீ2எச் பங்குகளை எஸ்ஸெல் நிறுவனம் எடுத்துக்கொள்ளத் தோதாக அந்தப் பங்குகள் நிட்யாங்க் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன என்பதாகும்.
கடன் கொடுத்தவர் ஒருவர் 2018 நடுவில், திவால் அறிவிப்பு நடைமுறைகள் தொடர்பாக தேசிய குழுமச் சட்டத் தீர்ப்பாயத்திற்கு (என்சிஎல்டி) டோம்பெல் குழுமத்தை இழுத்தார். அதைத் தொடர்ந்து வீடியோகான், எஸ்ஸெல் நிறுவனங்களுக்கிடையே சட்டச் சண்டை தொடங்கியது.
தீர்ப்பாயத்தை அணுகிய நிட்யாங்க், ஒரு குறுக்கீட்டு மனு தாக்கல் செய்தது. வீடியோகான் டீ2எச் பங்குகள் சிலவற்றை ஒரு மூன்றாம் தரப்பிடம் அடகு வைக்க டோம்பெல் திட்டமிட்டதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அடகு வைக்கப்பட்ட அந்தப் பங்குகள் உண்மையில் தனக்குச் சொந்தமானவை என்றும் நிட்யாங்க் கூறியது.
என்சிஎல்டி முன் நிட்யாங்க் வைத்த கோரிக்கை வருமாறு: “திருவாளர்கள் டோம்-பெல் எலெக்ட்ரானிஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் இனம் காணப்பட்ட பங்குகளுக்கு மாற்றாக சமவிகிதப் பங்குகளை (ஈக்குவிட்டி) ஒதுக்கீடு செய்யுமாறு டிஷ் டிவி நிறுவனத்திடம் கோரியிருப்பதாக மனுதாரர் (நிட்யாங்க்) அறிகிறார். அந்தப் பங்குகளைப் பெற்றதும் (கார்ப்பரேட் கடனாளியான) டோம்-பெல் நிறுவனம் பங்குகளை விலக்கிக்கொள்ளலாம் அல்லது மீட்கப்படுவதைத் தடுக்கும் வகையில் அந்தப் பங்குகளைக் கையாளலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தப் பின்னணியில் மனுதாரரை ஒரு குறுக்கீட்டாளராக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அல்லது அதற்கு மாற்றாக, இசிஎல் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சாதகமாக வீடியோகான் டீ2எச் நிறுவனத்தில் உள்ள 3,40,00,000 பங்குகளை அடகு வைக்க இயலாத வகையில் கடனாளி நிறுவனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.”
எதிர்வினையாற்றிய டோம்பெல் நிறுவனமும், இதர வீடியோகான் குழுங்களும் 2018ல் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடின. நிட்யாங்க் உண்மையில் ஒரு எஸ்ஸெல் குரூப் நிறுவனம்தான் என்றும், டிஷ் டிவியுடனான இணைப்பு முயற்சி தோல்வியடையுமானால் ஒரு உத்தரவாத ஏற்பாடாக இருக்கட்டும் என்று அதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வீடியோகான் டீ2எச் பங்குகளை சட்டவிரோதமாக அடகு வைத்திருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் அந்த நிறுவனங்கள் புகார் செய்தன.
இணைக்கப்பட்ட டிஷ் டிவி நிறுவனத்தில் நிட்யாங்க்குக்குப் பங்குகள் ஒதுக்கப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
கடைசியில், இந்தப் பரிமாற்றம் விலக்கப்பட்டதன் முடிவில் டிரீம்லைன் / நிட்யாங்க் நிறுவனங்களுக்கு ரூ.1,626 கோடி எச்ஓவிஎல் கடன் பத்திரங்கள் கிடைத்தன.
அடுத்து என்ன?
டிரீம்லைன் குழுமம் இந்த எச்ஓவிஎல் பத்திரங்களை, சில எஸ்ஸெல் குழுமங்களுக்கு நிதி திரட்டுவதற்காகப் பயன்படுத்தியதாக வங்கி ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது.
எச்ஓவிஎல் தனது மாற்றத்தக்கதல்லாத கடன் பத்திரங்களை வெளியிட்ட சில நாட்களில், ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. 2016 டிசம்பர் 28ல் டிரீம்லைன் குழுமம் அந்தக் கடன்பத்திரங்களைப் பெற்றது.
அதே தேதியில் டிரீம்லைன் பெயரில் இ-ஸ்டாம்பிங் சான்றிதழ் வெளியிடப்பட்டது கார்ப்பரேட் ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. அந்தக் குழுமம் 2017 ஜனவரி 6 தேதியிட்ட அடமான ஒப்பந்தத்திற்கான முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தியிருக்கிறது. யெஸ் பேங்க் லிமிட்டெட் பெயரில் டிரீம்லைன் அந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
டிசம்பர் 31 அன்று எஸ்ஸெல் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று கம்பெனிகளுக்கும் யெஸ் பேங்க்கும் இடையே கடன் உடன்பாடுகள் கையெழுத்தாகின.
பான் இந்தியா நெட்வொர்க் இன்ஃப்ராவெஸ்ட் பிரைவேட் லிமிட்டெட் என்ற குழுமத்திற்கு ரூ.450 கோடி கடன் அனுமதிக்கப்பட்டது. ‘பிளேவின்’ என்ற இணையத்தள போட்டியை நடத்துவதற்கான உரிமம் பெற்ற இந்த குழுமம் எஸ்ஸெல் நிறுவனத்தின் ஒரு பகுதியேயாகும்.
ஆர்பிடபிள்யூ பிராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற எஸ்ஸெல் நிறுவனத்தின் மற்றொரு குழுமத்திற்கு ரூ.500 கோடி கடன் அனுமதிக்கப்பட்டது. பொறியியல் கொள்முதல் கட்டுமானம் (இபிசி) ஆகியவற்றை மேற்கொள்ளும் ஒரு ஒப்பந்ததாரரான ஆர்பிடபிள்யூ, எஸ்ஸெல் குழுமங்களின் தலைமை நிறுவனமான எஸ்ஸெல் இன்ஃப்ராபிராஜக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டதாகும்.
எஸ்ஸெல் குரூப்பின் மற்றொரு இபிசி ஒப்பந்தாரர் நிறுவனம் மும்பை டபிள்யூடிஆர் பிரைவேட் லிமிட்டெட். இதற்கு வங்கியிலிருந்து ரூ.750 கோடி கடன் வந்தது. இந்த நிறுவனம் தாக்கல் செய்த கடன் பத்திரங்களை விடவும் கடன் தொகை அதிகமாக இருந்ததால், பான் இந்தியா இன்ஃப்ராபிராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், பான் இந்தியா யுடிலிட்டீஸ் டிஸ்ட்ரிபியூசன் கம்பெனி, பான் இந்தியா நெட்வொர்க் இன்ஃப்ராவெஸ்ட் லிமிடெட், எஸ்ஸெல் இன்ஃப்ராபிராஜக்ட்ஸ் ஆகியவற்றிடமிருந்து கூடுதல் பங்குப் பத்திரங்களை வங்கி பெற்றுக்கொண்டது. இவை அனைத்துமே எஸ்ஸெல் குழுமங்கள்தான்.
இந்தப் பணப் பரிமாற்றங்கள் எப்படி நடந்தன? பணமதிப்பு ஒழிப்புக் காலத்தில் வைப்புத் தொகைகள் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஒரு கம்பெனி (டிரீம்லைன்) எதற்காக எஸ்ஸெல் குழுமங்கள் பெற்ற கடன்களுக்காக எச்ஓவிஎல் கடன்பத்திரங்களை வழங்க வேண்டும்? ‘தி வயர்’ செய்தியாளர்கள் இக்கேள்விகளைக் கேட்டபோது, நிறுவன அதிகாரி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் குறிப்பிடுகிற எஸ்ஸெல் குழுமங்களின் நிதிப் பரிமாற்றங்கள் முறையான ஒப்புதல்களோடு, உரிய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டுதான் நடந்துள்ளன.”
கதை முடியவில்லை
மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் தங்கள் கணக்குகளை இத்துடன் நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால் சற்று ஆழமாக ஆராய்கிறபோது, இதுவரை வெளியே தெரிந்ததைவிட விரிவானதாக இந்தக் கதை போகிறது என்பது தெரியவருகிறது.
மேற்படி 1,626 கோடி ரூபாய்க்கு மேல் மேலும் 2,250 கோடி ரூபாய்க்குக் கடன்பத்திரங்கள் வெளியிட எச்ஓவிஎல் நிர்வாகம் முடிவு செய்தது. முந்தைய பணப் பரிமாற்றங்களின் நடைமுறைகளைக் கவனித்துப் பார்த்தால், தூத் குடும்பத்தினர் டிஷ் டிவி – வீடியோகான் டீ2எச் இரண்டும் இணைந்த நிறுவனத்தில் அவர்களுக்கு உள்ள பங்குகள் அனைத்தையும் விற்க முடிவுசெய்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ஹிந்துஸ்தான் ஆயில் வென்ச்சர்ஸ் லிமிட்டெட் நிறுவனம் 2018 ஜனவரி 5 அன்று நடைபெற்ற தனது இயக்குநர்கள் கூட்டத்தில், ரூ. 2,250 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிட முடிவு செய்தது. முதலாவது வரிசையாக 12,300 என்சிடீ பத்திரங்களை 2018 பிப்ரவரி 6 அன்று பால்முக் கோட்ல்ஜ்வல் அன் மல்ட்டிடிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்குக் கொடுத்து, 1,230 கோடி ரூபாய் திரட்டியது.
2018 பிப்ரவரி 14 அன்று இந்தக் கம்பெனி இரண்டாவது பத்திர வரிசையாக 3,136 என்சிடீ பத்திரங்களை, அதே பால்முக் நிறுவனத்திற்குக் கொடுத்து ரூ.313.60 கோடி திரட்டியது. இப்போது வரையில் இக்கம்பெனி ரூ.1,543 கோடி திரட்டியுள்ளது. நிர்ணயித்த இலக்காகிய 2,250 கோடி ரூபாயைத் திரட்ட மீதியுள்ள பத்திரங்களை வெளியிட உள்ளது.
பால்முக் பற்றி…
பால்முக் கோட்ல்ஜ்வல் அன் மல்ட்டிடிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் (பீஜிஎம்எல்) 2016 ஜூன் 16இல் தொடங்கப்பட்ட நிறுவனமாகும்.
இதன் முதல் இயக்குநர்களாக இருந்தவர்கள் அமோல் தேஷ்முக், சச்சின் பால்சராஃப். இரண்டு எஸ்ஸெல் குழுமங்களில் இயக்குநராக இருப்பவரான அமோல் தேஷ்முக் சில மாதங்களிலேயே மாற்றப்பட்டு, ஆஷிஷ் கான்ஷியாம் நியமிக்கப்பட்டார்.
கான்ஷியாம், பால்ஷராஃப் இருவரும் இக்கட்டுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள, இந்தப் பணமாற்றங்களோடு தொடர்புள்ள ஆயாட்டி மல்ட்டிடிரேடிங், லெமொனேட் கேப்பிட்டல், ஹடாரா மல்ட்டிடிரேடிங் ஆகிய கம்பெனிகளில் இயக்குநர்களாக இருந்தவர்கள்.
2019 ஜனவரி வரையில், பீஜிஎம்எல் எந்த வணிகத்திலும் ஈடுபடவில்லை என்று கார்ப்பரேட் அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இக்கம்பெனி ரூ.80,000 இருப்புத் தொகை வைத்துள்ளது. 2018 ஜனவரி 30 அன்று நடைபெற்ற அதன் இயக்குநர்கள் கூட்டத்தில், எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்கத்தக்கதாக ரூ.2,000 கோடிக்கு மிகாத முதலீடுகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டம் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. அந்தப் பணத்தை வெற்றிகரமாகத் திரட்டினார்களா, கடன் பத்திரங்களை வாங்கினார்களா என்று தெரியவில்லை.
டிரீம்லைன் கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் 1,500 கோடி ரூபாய் இன்னமும் சும்மா இருக்கிறது. 2017 ஆகஸ்ட்டில் விருப்பப்படி மாற்றத்தக்க கடன் பத்திரங்களை டிரீம்லைன் வெளியிட்டது. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நான்கு நிறுவனங்களுக்கு அந்தப் பத்திரங்களை வழங்கி, ரூ.1,562 கோடியைத் திரட்டியது. டெர்ப்பான் மல்ட்டிடிரேடிங் (ரூ.200 கோடி), டிரைடென்ட் டெஸ்ட்டினி (ரூ.420 கோடி), அடிட் இன்ஃப்ராபவர் (ரூ.348 கோடி), ஆயாட்டி மல்ட்டிடிரேடிங் (ரூ.594 கோடி) ஆகியவையே அந்த நான்கு நிறுவனங்கள்.
பணமதிப்பு ஒழிப்பைத் தொடர்ந்து டிரீம்லைன் கம்பெனியின் வணிகச் செயல்பாடு சூடு பிடித்தது. 2017 பிப்ரவரியில், இதன் பெரும்பாலான பங்கு உரிமைகள் ஆர்வி டிரேடிங் என்ற மற்றொரு கம்பெனிக்கு மாற்றப்பட்டன. 2017 மார்ச் 31ல் முடிவடைந்த நிதியாண்டில், இக்கம்பெனி 95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. ஆனால் மொத்த இழப்பு 19 லட்சம் ரூபாய்.
2017 அக்டோபரில், எஸ்எப்ஐஓ தனது விசாரணையைத் தொடங்கிய நேரத்தில், இக்கம்பெனி தனது பெயரை நிட்யாங்க் இன்ஃப்ராபவர் மல்ட்டிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்று மாற்றிக்கொண்டது. நிறுவனத்தின் மையமான செயல்பாட்டைப் பிரதிபலிப்பதற்காகவே இந்தப் பெயர் மாற்றம் என்று கூறப்படுகிறது.
ஓராண்டு
டிரீம்லைன் மேன்பவர் சொல்யூசன்ஸ் நிறுவனம் இப்படிப் பெரும்பணத்தை முதலீடு செய்தது பற்றி முதலில் 2017 டிசம்பரில் செய்தி வெளியானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குச் சொந்தமான ‘மணி கண்ட்ரோல்’ என்ற வலைத்தளப் பத்திரிகையில் வெளியான அந்தச் செய்தியில், பணமதிப்பு நடவடிக்கை தொடங்கிய உடனேயே தனது வங்கிக் கணக்குகளில் பெரும் பணம் போட்ட டிரீம்லைன் மேன்பவர் உட்பட 18 நிறுவனங்கள் தொடர்பான புலன் விசாரணையைக் கடும் மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்எப்ஐஓ) தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“கம்பெனிகள் பதிவாளருடன், 18 கம்பெனிகள் மீது எஸ்எப்ஐஓ விசாரணையைத் தொடங்கியிருக்கிறது,” என்று கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் அந்தப் பத்திரிகையிடம் கூறினார்.
பின்னர் மத்திய அரசாங்கம், இதில் கையாளப்பட்டுள்ள பணத் தொகையைக் குறிப்பாகத் தெரிவித்து, அனைத்து மாநிலங்களின் காவல் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அந்தக் கம்பெனிகள் இருக்குமிடத்தைக் கண்டறியுமாறும், அந்தக் கம்பெனிகள் அளிக்கும் வாக்குறுதிகளில் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்தப் பரிமாற்றங்களில் எவ்வளவு பணம் மாற்றப்பட்டிருக்கும் என்று கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் கணக்கிட்டனர். வழக்கு எஸ்எப்ஐஓ வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஓராண்டு ஓடிவிட்டது. ஆனால் எஸ்எப்ஐஓ இன்னும் தன் புலன் விசாரணையை முடிக்கவில்லை. மேற்படி கிளிஞ்சல் குழுமங்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவுமில்லை.
ஆனால், அடுத்தடுத்த நிகழ்ந்துள்ள பரிமாற்றங்களைப் பார்க்கிறபோது, பதில்கள் தேவைப்படுகிற கேள்விகள் மேலும் பல எழுகின்றன.
எஸ்ஸெல் நிர்வாகம், நிட்யாங்க் ஒரு சுயேச்சையான நிறுவனம் என்றும் லெமொனேட் கேப்பிட்டலுடன் அதன் கொடுக்கல் வாங்கல்கள் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும்தான் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது.
அப்படியானால், முன்பின் தெரியாத நிறுவனமான நிட்யாங்க் நாடறிந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான வீடியோகான், எஸ்ஸெல் ஆகிய இரண்டுக்கும் இடையேயான பணப்பரிமாற்றங்களில் இவ்வளவு மையமான பங்கு வகித்தது எப்படி? மூன்று எஸ்ஸெல் நிறுவனக் குழுமங்கள் எடுத்த கடன்களுக்கு இந்த நிறுவனம் எதற்காக உறுதிப் பத்திரம் அளித்தது?
இறுதியாக, பணமதிப்பு ஒழிப்புக் காலத்தில் பணம் போடப்பட்டது தொடர்பாகவே நிட்யாங்க் மீது விசாரணை நடைபெறுகிறது என்றால், 2015 முதல் 2017 வரையில் இக்கம்பெனியின் உதவியோடு நடந்த பணப்பரிமாற்றங்கள் எந்த அளவுக்கு ஆராயப்பட வேண்டும்? இக்கேள்விக்கு எஸ்எப்ஐஓ மட்டுமே பதில் சொல்ல இயலும்.
குலாம் ஷேக் பூடான், அனுஜ் ஸ்ரீவாஸ்
நன்றி: தி வயர்
தமிழில்: அ. குமரேசன்