கருத்து மாறுபாடு கொள்கிறவர்கள் அல்லது கேள்வி எழுப்புபிறவர்கள் மனங்களில் அச்சத்தை விதைக்கும் முயற்சிகள் நடந்தாலும், கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களும் தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அதிகாரத்தில் இருப்போரை மக்களுக்குப் பதிலளிக்க வைப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
கௌரி லங்கேஷ் உயிருடன் இருந்திருப்பாரானால் கடந்த ஜனவரி 29 அன்று அவருக்கு வயது 57 ஆகியிருக்கும். இதைக் கவனத்தில் கொள்கிற அதே வேளையில், இந்தியாவில் நாம் காலமாகிவிட்டவர்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடுகிற முறைகளை அவர் விரும்பியதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பதே அவருடைய கருத்து.
அவருடைய பிறந்தநாளுக்கு மறுநாள்தான் ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட 71ஆவது ஆண்டு. காந்தி, கௌரி இருவரையும் கொலை செய்த ஆசாமிகளின் சித்தாந்தங்கள் ஒரே மாதிரியானவைதான்.
இதைத் தெரிவித்த பிறகு, கௌரியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வது பற்றி, அவரிடம் மன்னிப்புக் கோரியபடி, நாம் பேசத்தான் வேண்டும். 2017 செப்டம்பர் 5இல் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்காக அல்ல. அவருடைய துணிச்சலான பேச்சுகளுக்காக அல்ல. எதிர்த்தால் அபாயகரமானவர்களாக மாறுவார்கள் என்று தெரிந்தே அவர்களோடு மோதத் தயாராக இருந்தார் என்பதற்காக அல்ல. அடக்கிவாசிக்கும்படி தன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் அக்கறையோடு எச்சரித்தையும் மீறித் தனது செயல்பாட்டில் உறுதியாக இருந்ததற்காகவும் கூட அல்ல.
மாறாக, அவரது கொலையின் மூலம் ஒரு செய்தி விடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொள்கை நிலையை மேற்கொள்ளக்கூடிய, சமரசமின்றி உண்மைகளைப் பேசக்கூடிய, சிலருக்கு இடைஞ்சலான கேள்விகளை எழுப்பக்கூடிய பத்திரிகையாளர்களும் மற்றவர்களும் இந்த முடிவைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே அந்தச் செய்தி. அந்தச் செய்திக்காகவே கௌரியை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.
என்டீடிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரவீஷ் குமார் ‘எ ஃப்ரீ வாய்ஸ்’ (ஒரு சுதந்திரக் குரல்) என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர், தில்லியில் நடந்த கௌரி இரங்கல் நிகழ்ச்சியின்போது யாரோ ஒருவர் “நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்தபோது, எதற்காக என்பதற்கான காரணங்களில் ஒன்றாக, “தேசிய அச்ச விதைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தக் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், நாம் சரணடைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தை எங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்வதற்காகத்தான் என்னைப் போன்றவர்கள் இங்கே வந்திருக்கிறோம்,” என்று கூறியதைப் பதிவு செய்திருக்கிறார்.
பின்னர் 2017 பிற்பகுதியில் இது பற்றிப் பேசிய அவர், ‘தேசிய அச்ச விதைப்புத் திட்டம்’ என்று தான் குறிப்பிட்டது தங்களின் விமர்சனக் குரலை எழுப்பிய பத்திரிகையாளர்கள் எதிர்கொண்ட மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும்தான் – ஏன் கொலைகளையும் கூடத்தான் – என்று கூறினார். ஊடக உலகத்தைப் பொறுத்தமட்டில் இந்தத் திட்டம் நிறைவேறியிருக்கிறதா?
ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். கௌரி லங்கேஷ் பெருவாரியான ஊடக உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல. பத்திரிகையாளராக அறிமுகமான காலத்தில்தான் அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால் அங்கே அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தான் செய்துவந்ததை அவரால் தொடர முடியவில்லை. இந்துத்துவா ஆட்கள் பற்றிய தனது கூர்மையான விமர்சனங்களை அவர் தனது சொந்தப் பத்திரிகையில்தான் எழுத முடிந்தது. ஆகவே, அவரது மரணம், பெரும் ஊடகங்களைச் சேர்ந்த பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்காக விடுக்கப்பட்ட செய்தி அல்ல. ஆனால், ரவீஷ் குமார் போன்ற, இன்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களை நெளிய வைக்கும் உண்மைகளைத் தொடர்ந்து பேசுகிறவர்களை இலக்கு வைத்துதான் அந்தச் செய்தி விடுக்கப்பட்டிருக்கிறது.
மைய நீரோட்ட ஊடகங்கள் என்று சொல்லப்படுகிற நிறுவனங்கள் திடீரென்று மௌனமாகிவிடவில்லை. பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதோடும் இணைந்த அச்ச விதைப்புத் திட்டத்தால் அவர்கள் வாய்மூடிக்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் சுய விருப்பத்தோடுதான் உடன்பட்டுப்போகிறார்கள். ஒரே திசையில் பார்த்துச் செல்வதற்காகக் குதிரைக்குக் கட்டப்படும் கண்மறைப்புத் தோல் பட்டையை எடுத்துத் தங்கள் கண்களில் மாட்டிக்கொண்டுவிட்டார்கள், யாரும் கட்டாயப்படுத்தாமலே. தன் கண்களில் படாத எதையும் அவர்கள் செய்தியாக்க மாட்டார்கள். ஆகவே, எல்லாம் நல்லபடியாக இருக்கிறது என்றோ, தேசம் நல்லவர்களின் கைகளில் இருக்கிறது என்றோ, நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்றோ, ஏழைகள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றோ, சாதிப் பாகுபாடு இல்லை என்றோ, மதப் பகைமை இல்லை என்றோ அரசாங்கம் கூறுமானால் அதை இவர்கள் அப்படியே செய்தியாக்குவார்கள்.
நான்காவது தூண் என்ற கடமையை இந்திய ஊடகங்கள் நிறைவேற்றத் தவறுவது அச்சத்தால் அல்ல. இதற்கு மிகப் பெரிதும் காரணமாக இருப்பது, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த அளவுக்கு எதிர்மறையாகப் போகாமல் இருக்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் தாக்குப்பிடித்துப் பிழைத்திருக்க முடியும் என்ற நிலைமை. அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றால் அரசாங்க அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, வர்த்தக உலக அதிகாரத்தில் இருப்பவர்களும்தான். இந்தப் போக்கு பாஜக-வும் மோடியும் பதவிக்கு வருவதற்கு முன்பே வந்துவிட்டது.
தகவல்தான் எதிரி!
மேலும், நாவலாசிரியரும் பத்திரிகையாளருமான சித்தார்த் தேப் தனது ‘கொலம்பியா ஜர்னலிசம் ரிவ்யூ’ என்ற கட்டுரையில் சரியாகக் குறிப்பிட்டிருப்பது போல, கௌரி கொலை பத்திரிகையாளர்களுக்கு மட்டும் விடுக்கப்பட்ட மிரட்டல் அல்ல. “தகவல் என்பதை எதிரியாகப் பார்க்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. வெளிப்படைத்தன்மை, வெளிப்படுதல், விமர்சன்ப்பூர்வ சிந்தனை என ஒரு சுதந்திரமான வெளிப்படையான சமுதாயத்தின் அடையாளங்களாகக் காணக்கூடிய எதையும் போல, எல்லாவற்றையும் போல தகவலும் ஒரு எதிரியாகப் பார்க்கப்படுகிறது,“ என்று அவர் எழுதியுள்ளார்.
தகவல்தான் எதிரியாகப் பார்க்கப்படுகிறது என்கிறபோது, தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் உள்ளாகிற தகவல் உரிமைச் சட்டச் செயல்பாட்டாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போவதில் வியப்பில்லை. அவர்களது எண்ணிக்கை இதே நிலைமைகளை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது.
கௌரி கொல்லப்பட்ட சில மாதங்களில் குஜராத்தின் மானேக்வாடா கிராமத்தில் தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் நாஞ்ஜிபாய் சோண்டார்வே அடித்துக் கொல்லப்பட்டார். ஒரு சாலைத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என்று கோரியதுதான் அவர் செய்த குற்றம்.
சில நாட்களில், மார்ச் 20 அன்று மேகாலயா மாநிலத்தில் போய்ப்பைனும் மாஜா என்ற தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் கொல்லப்பட்டார். அந்த மாநிலத்தில் பலியான முதல் தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் அவர். 2018 ஏப்ரலில், பிஹார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்த் குமார் கொல்லப்பட்டார். கள்ளச் சாராயப் பெருந்தலைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்ததே அவருக்கு இந்த முடிவு ஏற்பட்டதற்குக் காரணம். பிஹார் மாநிலத்தில் மட்டுமே 2018இல் தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள்.
மேகாலயா மாநிலத்தின் நிலக்கரிச் சுரங்கங்களுக்குள் சிக்கிய 15 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி நாடறிந்ததே. எலிவளைகள் போன்ற அந்தச் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கக்கூடாது என்ற தடை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர்களுடைய உடல்களை கடற்படையினர்தான் பாடுபட்டு மீட்டனர். இந்தத் துயரம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகத்தான், அந்த மாநிலத்தின் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க முதலாளிகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய ஏக்னஸ் கார்ஷிங், அனிதா சங்மா என்ற இரண்டு பெண்கள் கொலைத்தாக்குதலுக்கு உள்ளானார்கள். தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களான அந்த இரண்டு பேரும் இன்னமும் அந்தத் தாக்குதலின் பததிப்புகளிலிருந்து மீளவில்லை.
பத்திரிகைளர்கள் தாக்கப்படுகிறபோது அல்லது கொல்லப்படுகிறபோது நாட்டின் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் இவர்களைப் போன்றவர்கள் அத்தகைய கவனத்தைப் பெறுவதில்லை. ஆயினும், பத்திரிகையாளர்கள் செய்கிறார்கள் என்று கருதப்படுகிற பணியை – பதிலளிக்கக் கடமைப்பட்டவர்களான அதிகார பீடத்தினரைக் கேள்வி கேட்பது, வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவது என்ற பணியை – இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அச்சத்தை விதைக்கிற திட்டம் கௌரி கொலைக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது விரிவடைந்திருக்கிறது. சிறிதும் குற்றவுணர்ச்சியோ சட்டத்தைப் பற்றிய கவலையோ இல்லாமல் இது விரிவடைந்திருக்கிறது. தனிநபர்களும் கும்பல்களும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் பாதையில் குறுக்கே வருகிற யாரையும் அடித்து நொறுக்குகிறார்கள், கொலையும் செய்கிறார்கள். சட்டம் தங்கள் மீது பாயாது என்ற நம்பிக்கையோடு செய்கிறார்கள்.
சட்டம் அவர்கள் மீது பாய்வதில்லை என்பது மட்டுமல்ல, அவர்களில் சிலர் அந்த வன்முறைகளுக்காகப் போற்றப்படுகிறார்கள். திட்டமிட்டே அச்சத்தை விதைப்பதற்கான முயற்சிகளை விட, சட்டத்தின் அதிகாரமே செல்லுபடியாகாத இந்தச் சூழல் பல மடங்கு அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஏனென்றால், குறிவைத்துத் தாக்கப்படுகிறவர்களுக்கு நன்றாகத் தெரியும் தங்களுக்கு நீதி கிடைக்காது என்பது.
ஆம், விமர்சிக்கிறவர்கள், கேள்வி எழுப்புகிறவர்கள் மனங்களில் அச்சத்தை விதைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டவை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்பூர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரது கொலைகள் மட்டுமே அல்ல. ஒரு மாணவர், அல்லது ஒரு தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் என்று குறிவைத்து கும்பல் வன்முறைக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகிற ஒவ்வொரு செய்கையும் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதான். “அர்பன் நக்சல்” என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படுகிற நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அந்த விரிவான அச்சுறுத்தல் திட்டத்தோடு இணைந்ததுதான்.
நல்வாய்ப்பாக, இத்தகைய மிரட்டல் சூழலைப் புறக்கணித்து, அதிகார பீடத்தில் இருப்போரை நோக்கிக் கேள்விகளை வீசத் துணிகிறவர்கள் – பத்திரிகையாளர்கள், தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், இதர களத் தொண்டர்கள் – தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எளிதில் அச்சுறுத்தப்பட முடியாதவர்கள் அவர்கள். ஜனநாயகத்தில் அதிகார பீடத்தினரின் பதிலளிக்கும் கடமைப்பொறுப்பை வலியுறுத்தும் உரிமை குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் அவர்கள்.
கல்பனா சர்மா
(கட்டுரையாளர் மும்பையில் செயல்பட்டு வரும் சுயேச்சையான பத்திரிகையாளர். தற்போது ஸ்க்ரால்.இன் இணையப் பத்திரிகையின் வாசக ஆசிரியராகப் பணியாற்றுகிறவர்)
நன்றி: தி வயர்
https://thewire.in/rights/why-we-should-remember-gauri-lankesh
தமிழில்: அ. குமரேசன்