நான் நரேந்திர மோடியின் மிகப் பெரிய ரசிகர்களுள் ஒருவனாக இருந்தேன். இந்தியாவின் 2014ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது மிகப் பெரிய நிகழ்வாக ஆவதற்கு முன்பே, நான் அவர் பிரதமர் வேட்பாளாராக நிற்பதற்கு ஆதரவு தெரிவித்தேன். என்னால் முடிந்தவரையில் மறைமுகமாக மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் என்றுகூடச் சொல்லலாம்.
துரதிர்ஷ்டவசமாக, நான் இப்போது அவருடைய ஆதரவாளர் அல்ல. தான் பிரதமராகும் பட்சத்தில், தான் செய்வதாகச் சொன்ன கொள்கை மாற்றங்கள் தொடர்பாக அவர் செய்த சத்தியங்களின் அடிப்படையிலேயே என் ஆதரவு இருந்தது. தொழில் ரீதியாக வளர்ச்சி சார் பொருளாதாரவியலாளராக நான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலேயே ஆர்வம் கொண்டிருக்கிறேன். பொருளாதாரத்தைக் கற்கட் தொடங்கிய நாளிலிருந்தே என்னைப் போன்றவர்கள் நாடுகளின் வளத்தின் தன்மைகளையும் காரணங்களையுமே புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. தொழில் ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும், உலகில் உள்ள ஏழை எளிய மக்களின், குறிப்பாக என்னுடைய சொந்த நாட்டு மக்களின் பரிதாபகரமான நிலை என்னைப் பாதிக்கிறது.
மோடிக்கான எனது ஆதரவு எதிர்காலத்தை உத்தேசித்ததாகவும் மாற்றத்துக்கான கருவியாகவும் இருந்தது. இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையான செயல்களை மோடி செய்வார் என்று நான் நம்பினேன். Transforming India என்ற புத்தகத்தையும் 2011ஆம் ஆண்டில் நான் எழுதினேன்.
உண்மை என்னவென்றால், மோடி பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், அவற்றில பெரும்பாலானவை என்னைப் போன்ற தாராளவாதிகளுக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த வாக்குறுதிகள் எங்கள் நம்பிக்கையுடனும் சித்தாந்தங்களுடனும் பொருந்தியதால் அவற்றை நாங்கள் நம்பினோம். அளவான அரசு நிர்வாகம், அரசு வணிக நிறுவனங்களை நடத்துவதைத் தடை செய்தல், பாகுபாடின்மை, மதச்சார்பின்மை, ஆகிய வாக்குறுதிகளை நாங்கள் நம்பினோம்.
‘நாங்கள்’ என்று நான் குறிப்பிடுவது என்னுடைய சக பயணிகள் பலரையும் சேர்த்துத்தான். வேறு எத்திட்டமும் இல்லாமல், நாட்டிற்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பில் மாற்றம் ஏற்படுவதைக் கண்ட பொறுப்புள்ள, உறுதியான, நேர்மையான மக்கள் நாங்கள். பழமையிலிருந்து வெளிவருவோம் என்றும், திடீர் மாற்றம் ஒன்று இந்தியாவை விடுவிக்கும் என்றும் நாங்கள் நம்ப வைக்கப்பட்டோம். பழைய அரசாங்கங்கள், குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ், பல தசாப்தங்களாக வளர்த்துவந்த போலியான பல சங்கிலிகளை மோடி உடைக்க வல்லவர் என்றும், இந்தியாவைச் சமூக அமைதி, பொருளாதாரச் செழிப்பு கொண்டவராக அவர் மாற்றுவார் என்றும், பல கோடி மக்கள் கொண்ட நம் நாட்டை உலகளாவிய அங்கீகாரம் கொண்ட நாடாக மாற்றுவார் என்றும் நாங்கள் நம்பினோம்.
நான் நினைத்தது தவறு; நாங்கள் எல்லோரும் நினைத்தது தவறு. நாங்கள் எல்லோரும் தவறாக வழி நடத்தப்பட்டோம், பொய் சொல்லப்பட்டோம், துரோகம் செய்யப்பட்டோம். இவையெல்லாம் மிகவும் மென்மையான சொற்கள்.
மோடி என்னும் பிரதமருக்கான வேட்பாளர், மோடி என்னும் பிரதமர் ஆகிய இருவரும் இரு வேறு நபர்கள். பற்பல தேர்தல் பிரச்சாரங்களில், வேட்பாளர் மோடி, “அரசுக்குத் தொழில் துறையில் எந்த வேலையும் இல்லை” என்று கர்ஜித்தார், மேலும் சந்தையில் அரசின் தலையீட்டைக் குறைப்பதாகவும் வாக்களித்தார்; பிரதமராக, நேரெதிரான காரியத்தைச் செய்தார். இதோ ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
1951 வாக்கில், மத்திய அரசின் பொதுப் பணித் துறைகளை ஒரு கையின் விரல்களில் எண்ணிவிடலாம்: ஐந்து அலகுகள் இருந்தன. இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1976ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 155ஆக உயர்ந்தது. 1984இல், 220 இருந்தன. அடுத்த வந்த 30 ஆண்டுகளில், 70 பொதுப் பணித் துறைகளை மத்திய அரசு சேர்த்தது- 2014இல் மொத்தம் 290 இருந்தன. இந்த அதிகரிப்பு விகிதத்தின்படி, ஒரு ஆண்டில் இரண்டை விடக் குறைவான துறைகள் சேர்க்கப்பட்டன.
மோடி பிரதமராகவும் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகவும் இருக்கும்போது, இந்த வளர்ச்சி விகிதமானது ஆண்டுக்கு 12 என்ற அளவில் உயர்ந்தது. 2014 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளில், ஏறத்தாழ 50 பொதுப்பணித் துறைகள் சேர்க்கப்பட்டன. மோடி “அரசிற்குத் தொழில் துறையில் வேலை இல்லை” எனத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்களித்தார். ஆனால் அதற்கு நேரெதிராகச் செயல்பட்டார்.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில், எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு: அதிகமான அரசுத் தலையீடு, அதிகமான அதிகாரத்துவம், அதிகமான வரி, அதிகமான பணப் பரிமாற்றம் மற்றும் அதிகமான பொதுச் செலவு. வேட்பாளர் மோடி கொடுத்த வாக்கு “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்”. அது சிறப்பான வாசகமாக இருந்தது, ஆனால் பின்னோக்கிப் பார்த்தால் போலியானதாக இருக்கிறது.
எந்த அரசும் அதன் குடிமக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நான் வெறுக்கிறேன். இஸ்லாமிய நாடுகளில் மதம் சார்ந்த பாரபட்சம் காட்டப்படுவது வழக்கமாக இருப்பதை நான் முழுமையாக வெறுக்கிறேன். இந்திய நாடு மதச்சார்புடன் தன் குடிமக்களிடம் பாரபட்சம் காட்டுவது அவமானமாக இருக்கிறது. வேட்பாளர் மோடி, கல்வி உரிமைச் சட்டம் போன்ற இந்துக்களுக்கு எதிரான சட்டத்தை நீக்குவதன் மூலமும், கோவில்களிலிருந்து அரசின் தலையீட்டை நீக்குவதன் மூலமும், இந்துக்களுக்கு எதிரான பாரபட்சத்தை ஒழிக்கப்போவதாக தெரிவித்தார். சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒன்றுதான் என்றும், எந்த ஒரு மதம் அல்லது குழு அடையாளங்களின் அடிப்படையில் சட்டம் இருக்கக் கூடாது என்றும், அப்படி ஒரு மதச்சார்புடன் அரசு இயங்குவது முறைகேடு என்றும் அவர் கூறிய கருத்துக்கள் என் காதில் தேனாகப் பாய்ந்தன.
“ஒரு மதத்தை நிறுவுவதற்காக காங்கிரஸ் எந்தச் சட்டத்தையும் நிறுவாது…” என்று அமெரிக்க அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தம் சொல்கிறது. பிரதமரானதும், மோடி இந்திய அரசியலமைப்பை இவ்வரிகளின் அடிப்படையில் மாற்றியமைப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஏற்கெனவே உடைந்து போயிருக்கும் ஆட்சி முறையை மதச்சார்புடன் மீண்டும் உடைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மாற்றங்களைச் செய்ய முன்னெப்போதும் கிடைக்காத ஒரு வாய்ப்பு மோடிக்குக் கொடுக்கப்பட்டது. இந்தியாவைப் பின்தங்கிய மற்றும் ஏழை நாடாக வைத்திருக்கும் அனைத்துக் கொள்கைகளையும் அவர் மாற்றியிருக்கலாம். அது ஒன்றும் ஏவுகணை அறிவியல் அல்ல: கெடுதல் விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்வதை நிறுத்துவது மட்டும்தான். ஆனால், அவர் தொடர்ந்தார், அதுவும் முன்பைவிடவும் முட்டாள்தனத்தையும் மனப் பிறழ்வுக்கொப்பான தன்மையையும் அக்கொள்கைகளில் அதிகரித்தார். தோற்றுப்போன கொள்கைகளை அதிகத் திறமையுடன் அமல்படுத்தினார்.
மோடி அரசாங்கத்திடம் இரண்டு அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. முதலில், கட்டமைப்புப் பிரச்சினைகளைத் திட்ட அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டு தீர்க்க முடியாது என்பது அவ்வரசுக்குப் புரியவில்லை. இயல்பிலேயே சிறுத்திருக்கும் ஒரு பிராணிக்கு எவ்வளவு செலவில் உணவு கொடுக்கத் திட்டமிட்டாலும், அது பெரிதாக வளர்ந்துவிடாது. எடுத்துக்காட்டாக, விவசாயக் கடன் தள்ளுபடியானது வேளாண்மைத் துறையில் ஊடுருவியிருக்கும் கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்த்துவிடாது. தொழிலாளர் சட்டட் சீர்திருத்தம், கல்வித் துறை சீரமைப்பு, நிலச் சீர்திருத்தங்கள் ஆகியவையே தேவை.
ஏன் தொழிலாளர் சட்டத் சீர்திருத்தம் தேவை? காரணம், அது விவசாயம் சாராத பல தொழில்கள் மீது நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது. ஏன் கல்வி? காரணம், துடிப்பான கல்வித் துறை இல்லாமல், வேளாண் உழைப்பை உற்பத்தியாக மற்றும் சேவைத் துறையாக மாற்ற முடியாது. ஏன் நிலச் சீர்திருத்தம்? காரணம், சிறு – குறு விவசாயிகளால் விவசாயத்திலிருந்து வெளியே வர இயலாது.
மோடி அரசாங்கத்தின் புரிந்துகொள்ள இயலாமை இரண்டாவது அடிப்படைப் பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது: அதற்குத் திறமை இல்லை. புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்கள் அதனிடம் இல்லை. துறைசார் வல்லுநர்கள் இல்லை. எந்த ஒரு அமைப்புமே, தனியாரோ பொதுத் துறையோ, விவேகமுள்ள தலைமை, துறையைப் புரிந்துகொள்ளப் பல தசாப்தங்களைச் செலவிட்டவர்கள், அந்தத் துறையில் திறமையை வளர்த்துக்கொண்டு அர்ப்பணிப்போடு பங்காற்றியவர்கள் ஆகியோரையே சார்ந்துள்ளது.
பிரதமராக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சிறந்த திறமையுள்ளவர்களின் வேலையைக் கேட்கும் பொறுப்பு மோடியிடம் இருந்தது. அவர் அதைச் செய்யவில்லை. மேலும், பல அமைப்புகளுக்குப் பொறுப்பாளராக அவர் நியமித்தவர்களின் தகுதியைப் பற்றி எவ்வளவு குறைவாக பேசுகிறோமோ அவ்வளவு நல்லது. இது ஏன் இப்படி என்பது ஒரு புதிராகவே விளங்குகிறது. ஒருவேளை, விவேகத்தின் முக்கியத்துவத்தை உணரும் அளவிற்கு அரசியல்வாதிகள் புத்திசாலியாக இல்லையோ என்னமோ.
எந்த ஒரு புத்தி சுவாதீனமுள்ள பொருளாதார நிபுணரும் பணமதிப்பிழப்பைப் பரிந்துரைத்து இருக்க மாட்டார். ஆனால், மோடிக்குத் தவறான ஆலோசனை வழங்கப்பட்டதால், ஜனநாயக அரசின் சொத்துக்கள் மீது எடுக்கப்படும் மிகப் பெரிய தாக்குதலை அவர் முன்னெடுத்தார். கறுப்புப் பணத்தை நீக்குவதுதான் குறிக்கோள். ஆனால், பணமதிப்பிழப்பு கறுப்புப் பணத்தை நிறுத்தவில்லை, காரணம் கையிலிருக்கும் பணத்தில் தவறில்லை; மாறாக, கறுப்புப் பணத்தை உருவாக்கும் பொருளாதாரக் கட்டமைப்பில்தான் தவறு இருக்கிறது.
சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அவ்வளவு மோசமான திட்டம் அல்ல. அதை மோசமாக்கியது, பல நிலைகளிலும் பல வகைகளிலுமான வரிகள். மக்களிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வருமானத்தைப் பெறுவதற்கான பேராசையால்தான் அது நடந்தது. சிறு குறு நிறுவனங்களைப் பணமதிப்பிழப்பு அதிகமாகக் காயப்படுத்தியது. பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஜிஎஸ்டியால் பலத்த அடி ஏற்பட்டது. கடன் தள்ளுபடிகளும் அதிகமான பொதுச் செலவும் மொத்தப் பொருளாதாரத்தையே பாதித்துவிட்டது. அடிப்படையில், மோடி அரசு எனும் இயந்திரம், ராட்சத வாக்வம் க்ளீனரைப் போல (தூசியை உறிஞ்சும் கருவி) அனைத்துப் பணப்புழக்கத்தையும் உறிஞ்சிவிட்டு, பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை வற்றச் செய்துவிட்டது.
நேரு, இந்தியாவை சோசலிஷப் பாதையில் செலுத்தினார், இது தவிர்க்க முடியாத வறுமைக்கும் கொடுமைக்கும் கூட்டிச் சென்றது. தீவிர வறுமையில் உள்ள மிக அதிகமான மக்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.
“காங்கிரஸ் அல்லாத பாரதம்” என்பது மோடியின் தேர்தல் பிரச்சார முழக்கம். ஆனால், நேரம் வந்தபோது அவர் தான் வெறுக்கும் காங்கிரஸின் தோற்றுப்போன பழைய கொள்கைகளையே பின்பற்றினார். இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் பிம்பம் மோடியின் பணமதிப்பிழப்பில் தெரிகிறது. தான் வெறுத்த நபர்களில் ஒருவராக அவர் மாறிவிட்டார். அவர்களைப் போல, இவரும் அதிகமான அரசாங்கத்தையும், அதிகமான ஒடுக்குமுறையையும், பொருளாதாரத்தில் அதிகக் குழப்பத்தையும், குறைந்த சுதந்திரத்தையுமே கொடுத்தார்.
மேலைக் கலாச்சாரத்தின் சிறந்த தத்துவவியலாளர்களில் ஒருவரும், நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட உலகத்தைக் கண்டவரும், கிறிஸ்துவர்களின் அறநெறியை ஆராய்ந்து, அதன் போதாமைகளை உணர்ந்தவருமான ஃபிரெட்ரிக் நீட்ஷே, தீய சக்திகளை எதிர்ப்பதில் உள்ள மிகப் பெரிய ஆபத்து நாமும் அத்தகைய சக்தியாக மாறிவிடுவதுதான் என்றார்.
“யாரெல்லாம் பூதங்களுடன் சண்டை போடுகிறார்களோ, அவர்கள் எல்லாம் அந்த முயற்சியில் தாமே பூதமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்., நீங்கள் நெடுநேரம் படுகுழியைப் பார்த்துக் கொண்டிருந்தால், படுகுழி உங்களைப் பார்க்கத் தொடங்கும்”.
ஒருவேளை, மோடி அதிக நேரம் படுகுழியைப் பார்த்துவிட்டார் போல. அதனால்தான், இந்தியா பொருத்தமற்ற, முக்கியத்துவமற்ற படுகுழியைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
எல்லாம் ஊழ்வினைப் பயன்தான், இல்லையா?
அடனு தே
(அடனு தே பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்ற் பொருளாதாரவியலாளர்)
நன்றி: தி க்வின்ட்
தமிழில்: ஆஸிஃபா
நம்ப வைத்து கழுத்தை அறுப்பது என்பார்கள் அது இதுதான் மோடி யின் செயல்பாடு
அப்பாவிகளையும் பாமர மக்களையும் நம்பவைக்கக்கூடிய அருமையான பதிவு. நல்ல முயற்சி ஆனால் பரிதாபம் சமூக வலைதளங்களில் உண்மை நிலவரம் பூதாகரமாக உள்ளது. எனது தாய்நாடு மோடிஜியின் தலைமையில் வெகு சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.
எதில்…?
வெறுப்பு அரசியலில், பசு பாதுகாப்பு என்கின்ற பெயரில் நடந்த படுகொலைகளில், மதக் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் ஆதாயம் அடைவதில், பொதுவாக மக்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியிலேயே வைத்திருப்பதில்.
இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிவிடும்.
உண்மை — அனைத்தும் நம்பினவர்களின் ஏமாற்றத்தின் உண்மை …!