கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் இயந்திரமாகும். அது புத்தொளி பெற்ற நாடுகளின் எழுச்சிக்கு வித்திட்டு, தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பொருத்தமில்லாத கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கி, நம் மனதின் வழக்கமான தன்மையை கேள்விக்குள்ளாக்க உதவுகிறது. இதன் போக்கில், ஜனநாயகத்தில் நாகரீகத்தன்மை மற்றும் குடிமக்கள் பண்பிற்கு வித்திடும் புதிய எண்ணங்களுக்கு வித்திடுகிறது.
இந்தப் பொருளில், அலிகாரில், ஜனவரி 30 மேற்கொள்ளப்பட்ட, அகில பாரதிய இந்து மகாசபையால், மகாத்மா காந்தி கொலையில் மறு உருவாக்கம், கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டின் அடையாளமாகக்கூடப் பார்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும், இந்திய ஜனநாயகத்தை பாதிக்கும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்பாகத் தீவிரமான பிரச்சினைகள் உள்ளன.
காந்தி படுகொலை மறு உருவாக்கம்
ஜனவரி 30, தேசம் காந்தி படுகொலையின் 71ஆவது ஆண்டை அனுசரித்தபோது, அகில பாரதிய இந்து மகாசபையின் தேசியச் செயலாளர் புஜா ஷகூன் பாண்டே, காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டார். அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி, காந்தியை கொன்றவரான இந்து மகாசபை உறுப்பினர் நாதுராம் கோட்சேவுக்கு மாலை அணிவித்தனர்.
1948இல் நடைபெற்ற காந்தி படுகொலை, அசாதுதின் ஓவுயாசி கூறுவது போல சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கவாதத் தாக்குதலாகும்.
இந்தியா வல்லரசாக உருவாவதை நாம் பார்க்க வேண்டும் எனில், இந்திய ஜனநாயகத்தில், காந்தி உருவ பொம்மையைச் சுடுவது, கோட்சே புகழ்பாடும் நாடகத்தை நிகழ்த்துவது அல்லது அவரை இகழும் படம் எடுப்பது ஆகியவை, சஜமாக இருக்க வேண்டும். இருப்பினும், இது போன்ற சூழல்களில் ஆளும் கட்சி மற்றும் சாமானிய இந்தியர்கள் வேறுபட்ட எதிர்வினை ஆற்றும்போது, பிரச்சினை உண்டாகிறது.
அரசியல் கட்சிகளின் இரட்டை நிலை
குற்றச்சாட்டைக் குற்றச்சாட்டால் எதிர்கொள்ளும் தன்மையால் இயக்கப்படும் குடிமக்களாகிய நாம், இது போன்ற நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளில் சார்புத் தன்மை பெறுகிறோம். ஒருவகையான போக்கிரிகளை நாம் கண்டிக்கிறோம் ஆனால் இன்னொரு வகையான மோசமான ஆசாமிகளை புகழ்கிறோம் அல்லது அவர்கள் செயலுக்கு மவுனம் காக்கிறோம். அரசியல் கட்சிகளும் இவ்வாறே செய்கின்றன. கவால் துறை அரசியல்மயமாக்கப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் செயல்படுவதால், ஒரே விதிகள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை.
2012இல் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்த சமயம். சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, முஸ்லிம் அமைப்பு ஒன்றின் மிரட்டல் காரணமாக, ஜெய்பூர் இலக்கிய விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம்கூடப் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மிரட்டலைவிடவும் முக்கியமான காரணம், முஸ்லிம்களின் உணர்வைப் புண்படுத்த மாநில அரசு விரும்பவில்லை என்பதுதான்.
இருப்பினும், பாஜக ராஜஸ்தான் ஆளும் கட்சியாக வந்தபோது, அதே காவல் துறை பசுக் காவலர்களுக்கு தாராளமாக அனுமதி அளித்தது. இத்தகைய இரட்டை நிலை இந்தியாவில் ஜனநாயக செயல்பாட்டை பாதிக்கிறது. இப்போது பாஜக ஆட்சியில் இருப்பதால், பசுக் காவலர்கள் மற்றும் இந்து மகாசபை போன்ற இந்துவாக குழுக்கள், ஒத்த கருத்துள்ள கட்சி ஆட்சியில் இருப்பதால் எதையும் செய்து தப்பிக்கலாம் என நினைக்கின்றன.
இத்தகைய தீவிரவாத குழுக்கள் தாக்குப்பிடிக்கக்கூடிய அரசியல் சூழலை பாஜக உருவாக்குகிறது.
துவேஷ பேச்சும் கருத்து சுதந்திரமும் ஒன்றல்ல
பூஜா பாண்டேவின் கணவர் அசோக் பாண்டே, காந்தி படுகொலை மறு உருவாக்கத்தை நியாயப்படுத்தும் வகையில், “நம்முடைய தாய்நாட்டின் ஒற்றுமைக்கு சவால் விடும் எவரையும் கொல்லும் வகையில் நம் குழந்தைகளுக்கு நாம் பயிற்சி அளித்திருக்கிறோம். … நம் குழந்தைகள் நம்மைப் போல அப்பாவிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பலரைப் கொலை செய்வார்கள்’ என கூறியுள்ளார். இது போன்ற கருத்துகள் குடிமைத் தன்மையை ஊக்குவிப்பவை அல்ல.
இத்தகைய போதனைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், அசோக் பாண்டேவையும் அவரது மனைவியையும் எளிதாகக் கைது செய்யலாம். இத்தகைய குழுக்கள் பொதுமக்கள் கண்டனத்திலிருந்து தப்பக் கூடாது. துவேஷப் பேச்சு என்பது சுதந்திரமான பேச்சுக்கு நிகரானது அல்ல.
துரதிருஷ்டவசமாக, பாஜக தலைவர்கள் நரேந்திர மோடி, அமித் ஷா, யோகி ஆதியநாத் ஆகியோர் இந்தச் சம்பவங்களைக் கண்டிப்பதில்லை, ஏனெனில் இவை அரசியல் நோக்கத்திற்கு உதவியாக இருக்கின்றன.
இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் ஆகியவை பாஜகவின் அங்கம் இல்லை என்றாலும்கூட, இந்தக் கருத்து இந்துத்துவக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 2014 டிசம்பரில், பாஜக எம்.எல்.ஏ. சாக்ஷி மகராஜ், கோட்சேவை தேசப்பற்று மிக்கவர் எனக் கூறிப் பின்னர் பின்வாங்கினார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, காந்தியின் பிறந்த ஊர் அல்லது படித்த ஊரை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை.
இதை ஒரு முஸ்லிம் செய்திருந்தால் என்ன ஆகும்?
இந்து மகாசபை உறுப்பினர்கள் பாஜக ஆதரவாளர்கள் என்பது தெளிவாகிறது. சமூக ஊடகங்கள் உலாவும் பூஜா பாண்டே படங்களில் அவர் பாஜக தலைவர்கள் உமா பாரதி, மற்றும் சிவ்ராஜ் சவுகானுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த இருவரும் தேர்தல் காரணங்களுக்காக, பூஜா மற்றும் அவரது அமைப்பிடம் இருந்து விலகி நிற்கின்றனர்.
பூஜா பாண்டே செய்தது போன்ற செயலை ஒரு முஸ்லிம் இளைஞர் செய்திருந்தால் என்ன ஆகும்? அவர் விசாரணை இன்றிக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
இந்துத்துவக் குழுக்கள், மத துவேஷத்தை பரப்பும்போது அல்லது காந்தி கொலையாளியைப் பாராட்டும்போது அல்லது சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது, டிவி செய்தித் தொகுப்பாளர்கள் மவுனம் காக்கின்றனர். அரசியல்வாதிகள் இவர்களை ஆபத்தில்லாத உதிரிக் குழுக்கள் என்கின்றனர். இதற்கெல்லாம் பெரும்பான்மை பலம் தரும் வலுவே காரணம்.
மறுபுறம், சிறுபான்மையினர் வேட்டையாடப்படுகின்றனர். ஓவியாசி துவேஷப் பேச்சுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுப் பாடம் கற்றுக்கொண்டுள்ளார். ஆனால் யோகி ஆதித்யநாத் முதல்வராகி இருக்கிறார். ஏனெனில் அவரது துவேஷப் பேச்சுகள் ஆளும் கட்சிக்கு அரசியல்ரீதியாக உதவுகின்றன. இப்போதைக்கு அலிகார் காவல் துறை பூஜா மற்றும அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனப் பார்க்க வேண்டும்.
பாஜக ஆட்சியில் தழைக்கும் இந்து பயங்கரவாதக் குழுக்கள்
பொதுவாகச் சொல்வது என்றால், மோடி ஆட்சியின்போது இந்துத்துவ அமைப்புகளுக்கு அனுமதிச் சீட்டு கிடைக்கிறது. ஏனெனில் இது இந்துத்துவ நோக்கத்திற்கு உதவுகிறது. கண்காணிக்கப்பட வேண்டிய அமைப்புகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு நீண்ட கால அச்சுறுத்தல் எனக் கருதப்படும் குழுக்களை பயங்கரவாத இயக்கங்களாக வகைப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் மத பாரபட்சம் இல்லாமல் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
துரதிருஷ்டவசமாக பேஸ்புக் பதிவுக்காக இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படும் காலம் இது. பத்திரிகையாளர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப்படும் காலம். இந்தக் காலத்தில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்.
காவல் துறை அமைப்புகள் மட்டுமே இதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என நினைப்பது தவறு. சாமானிய மக்களும் இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அரசியல் சார்பை மீறி, அரசியல் பாரபட்சத்தை எதிர்க்க வேண்டும். நம் ஜனநாயகத்தை வலுவாக்கும் வாதத்தை அளிக்க வேண்டும்.
டுபைல் அகமது
(கட்டுரையாளர் டுபைல் அகமது, முன்னாள் பிபிசி செய்தியாளர், மிடில் ஈஸ்ட் மீடியா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ரிசர்ச் பெலோ. அவரது டிவிட்டர் முகவரி: @tufailelif. )
நன்றி: தி க்வின்ட்
https://www.thequint.com/voices/opinion/hindu-mahasabha-gandhi-assassination-re-enactment-hindutva