தேர்வுகள், பிள்ளை வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் பதில் அளித்தாலும், இதில் புதிதாக எதுவும் இல்லை என மாணவர்கள் சிலர் கருதுகின்றனர்.
வாய்ப்பு கிடைத்தால், பிரதமர் நரேந்திர மோடியிடம், இணையம் முடக்கப்படுவது மற்றும் காவல்துறை என்கவுண்டர் அச்சத்தால் ஏற்படும் அழுத்ததை எதிர்கொண்டு தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஜியா பட் கேள்வி எழுப்ப விரும்பினார்..
இந்தூர் கல்லூரி மாணவரான உத்கார்ஷ், உயர் கல்வியில் ஏன் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என கேட்க விரும்பினார். இட ஒதுக்கீடு இடங்களுக்கான தகுதி மதிப்பெண் குறைவானது.
எனினும், புதுதில்லியில் டல்கோட்டோரா மைதானத்தில், நடைபெற்ற நரேதிர மோடியின், தேர்வுகள் தொடர்பான உரையாடலில் இந்த இருவராலுமே கேள்வி கேட்க முடியவில்லை.
தேர்வுகள் தொடர்பான விஷயங்களுக்கான பொது அரங்கு எனக் குறிப்பிடப்பட்டாலும், ஆன்லைன் தேர்வு மூலம் அனுமதி பெற்று வந்திருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அடங்கிய அரங்கில் கேள்விகள் விருப்பம் போல கேட்கப்படவில்லை. மாறாக நிகழ்ச்சி நடத்துநர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெயர்களை முன்கூட்டியே தீர்மானித்துப் பட்டியலிட்டிருந்தார். அவர்கள் கேள்விகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஒரு சிலர் காட்மாண்டு, குவைத், டெஹ்ரான், மாஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள கேந்திர விதியாலயாவில் இருந்து வந்திருந்தனர். இருவர் டிவி சேனல்கள் மூலம் வந்திருந்தனர்.
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியின் முதல் வடிவம் 2018 பிப்ரவரியில் நடைபெற்றது. மத்திய கல்வி வாரிய பள்ளிகளில் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட அதே ஆண்டில் இது நிகழ்ந்தது. 2018 போலவே, இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பானது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் இதை ஒளிபரப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
எதுவும் புதிதில்லை!
குஜராத் பல்கலைக்கழகத்தில் இருந்து மோடி பெற்ற எம்பிஏ பட்டம் தொடர்பாக சர்ச்சை நீடித்தாலும், பிரதமர், எக்சாம் வாரியர்ஸ் எனும் பெயரில் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பான புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
மன அழுத்தம், நேர நிர்வாகம், இலக்குகள் நிர்ணயிப்பது, போட்டி மற்றும் குறிப்பிட்ட பாடங்களில் மோசமாக மதிப்பெண் வாங்குவது பற்றி கேட்கப்பட்டபோது, மோடி, பெற்றோரின் அறிவுரை மற்றும் சுயமுன்னேற்றக் குறிப்புகளின் கலைவையாக பதில் அளித்தார். பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் பெற்றோர்களின் கனவுகளை பிள்ளைகள் நிறைவேற்ற நிர்பந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் இனியும் குழந்தைகளாக இல்லாத நிலையிலும் கூட, பெற்றோர் அவர்களுடன் தொடர்புகொண்டு தொடர்ந்து அவர்களை கவனிக்க வேண்டும் என பிரதமர் கூறினார். வகுப்பில் எப்போதும் கைதூக்கி பதில் அளிக்கும் சில மாணவர்களைக் கடந்து ஆசிரியர்கள் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.
ஆன்லைன் கேம் பற்றிய கேள்விக்கு அவர் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது பற்றிக் கூறினார். ஆரவாரத்திற்கு மத்தியில் பப்ஜி விளையாட்டு பிரியரா என அவர் கேட்டார். மொபைல் போன்களில் பிரபலமான இருக்கும் பப்ஜி (பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்ஸ்) விளையாட்டு பற்றிய இந்த குறிப்பு, தங்கள் வாழ்க்கை பற்றி அவருக்குத் தெரியும் என அரங்கில் இருந்த 2,000 மாணவர்களை நினைக்க வைத்தது.
கல்வியின் நோக்கமான, ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேர்வு முறை எந்த அளவு உதவுகிறது என ஒரு மாணவர் கேட்டார். மாணவர்கள் அறிவுத் தேடலில் ஈடுபட வேண்டும், பாடத்திட்டம் வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று கூறியவர், கல்வி முறை கல்வியை வாழ்க்கையில் இருந்து விலக்கி, தேர்வுகளுடன் இணைத்திருப்பதாக கூறினார்.
இருப்பினும் மோடி, வழக்கமான கல்வி முறைக்கு ஆதரவு தெரிவித்தார். “தேர்வுகள் மோசமானவை அல்ல, அளவீடு வைத்திருப்பதுதான் மோசமானது. அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியமானது” என்றார். “தேர்வுகள் ஒரு வாய்ப்பு. அவற்றைத் திருவிழா போல பாருங்கள்” என்றும் கூறினார். சோர்வு மிக்கவர்கள் ஆலோசனை பெறுமாறு கூறியவர், மனம் விட்டுப் பேசக்கூடிய ஒருவரைக் கண்டறியுங்கள் அல்லது குறைந்தபட்சம் மனதில் உள்ளதை எழுதுங்கள் என்றார்.
ஆனால் இந்த உரையாடல் எந்தப் புதிய உள்ளொளியையும் வழங்கவில்லை என மாணவர்கள் முறையிட்டனர். “இவற்றை நூற்றுக்கணக்கான முறை கேட்டிருக்கிறோம்” என்று தில்லி பள்ளி மாணவி ஒருவர் கூறினார். “கேள்விகள் மிகவும் பொதுவாக இருந்தன. எல்லோரும் ஒரே மாதிரி கேள்விகள் கேட்டனர்” என்றார் ஆந்த மாணவி. இருந்தாலும் மோடி தங்களுடன் தொடர்புகொள்ளும் தன்மை பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவரது பள்ளியிலிருந்து 17 மாணவர்கள் பங்கேற்றனர்.
‘பார்வையாளர் தேவை’
கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது பல மாணவர்கள் கைகளை உயர்த்த முயன்றனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மேற்கொண்ட மெனக்கடலைக் கருத்தில் கொள்ளும்போது, மேலும் உரையாடல் மற்றும் கேள்வி பதில் தேடலுக்கான வாய்ப்பை எதிர்பார்த்ததாக குரு கோவிந்த இந்திரபிரஸ்தா பல்கலை மாணவர் சலீல் திரிபாதி கூறினார்.
ஜிய பட், காஷ்மீரில் தேர்வு பதிவு மற்றும் எழுதுவதில் உள்ள சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன், தேசிய தகுதி தேர்வில் பங்கேற்க முயற்சி செய்தார். “படிவம் வழங்கப்பட்டபோது காஷ்மீரில் நான்கு நாட்களுக்கு இணையம் இல்லாததால் என்னால் அதைப் பூர்த்தி செய்ய முடியவில்லை, நீட்டிப்பு கேட்டாலும் வழங்கப்படவில்லை” என்றார் அவர்.
தமிழகத்தின் விஐடியைச் சேர்ந்த வேதாந்த் தீபக் கீதே, மாநில மற்றும் மத்திய கல்வி வாரியங்களின் வேறுபட்ட தரம் பற்றிக் கேட்க விரும்பினார். பல பள்ளிகளில் தொடர்க்க கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியம் பற்றியும், கல்வியின் நீண்ட கால தாக்கம் பற்றியும் கேட்க விரும்பினார்.
“இங்கு வந்த பிறகு தான் அவர்களுக்கு உரையாடல் தேவையில்லை, பார்வையாளர்கள் தேவை என உணர்ந்தோம்” என்கிறார் அவர்.
ஸ்ரேயா ராய் சவுத்ரி
நன்றி: ஸ்க்ரால்.இன்