பாஜகவின் வாட்ஸப், ஃபேஸ்புக் வியூகங்களால் இனி தேர்தல் வெற்றிகள் சாத்தியமா? – அம்பலப்படுத்துகிறார் பாஜகவின் முன்னாள் டேட்டா அனாலிஸ்ட்!
“பாஜகவிலிருந்து நான் ஏன் விலகினேன்?” – பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ‘டேட்டா அனாலிஸ்ட்’ ஷிவம் ஷங்கர் சிங் ஜூன் 2018இல் தனது வலைப்பதிவுத் தளத்தில் எழுதிய போஸ்டுக்கு இட்ட தலைப்பு இது. அதில், “நரேந்திர மோடி – அமித் ஷா அரசின் எதிர்மறை அம்சங்கள் இப்போது எனது நேர்மறை எண்ணங்களை சீர்குலைத்துவருகின்றன” என்பதை அக்கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஷிவம் ஷங்கர் 2017, 2018இல் மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்காக பணிபுரிந்தவர். தேர்தல் வியூகங்கள் வகுப்பதற்காகவும், வாக்காளர் குழுக்களைக் குறிவைப்பதற்காகவும் சமூக வலைதளங்கள் மூலமாகத் திரட்டிய தரவுகளைப் பயன்படுத்தியவர். அந்தக் காலக்கட்டம் குறித்து இவர் எழுதும்போது, “நம்பமுடியாத அளவுக்கு சாதக விளைவுகளைத் தரக்கூடிய வகையிலான பிரச்சாரத்தில் சில குறிப்பிட்ட செய்திகளை பாஜக பரப்பியது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்கட்சியின் வாக்குறுதிகளுக்கும், வெற்றி பெற்ற பின்னரான செயல்பாடுகளுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவின் நிஜ முகத்தைப் பார்க்க ஆரம்பித்த ஷிவன் சங்கர், அதுகுறித்து தன் வலைப்பதிவில் விமர்சிக்கும்போது, “தேசிய விவகாரங்களை ஓர் இருண்ட மூலைக்குள் பாஜக தள்ளுகிறது” என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
பிஹாரில் பாஜகவை எதிர்க்கும் மெகா கூட்டணியான ‘மகாகத்பந்தன்’ உடன் ஷிவம் ஷங்கர் இப்போது பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அவரை டெல்லியில் ‘தி கேரவான்’ நிருபர் துஷார் தாஹ்ரா சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, பாஜக தமது தேர்தல் வெற்றிகளுக்காக சாதி – மதவாத மோதல்களைத் தூண்டும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம் குறித்து ஷிவம் ஷங்கர் விரிவாகவே பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலில் அவர் கூறியவற்றின் சுருக்கமான வடிவம் இதோ:
நான் முதன்முதலாக 2013இல் பாஜகவுக்காகப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டபோது, நாட்டின் முக்கிய ஊழல் விவகாரங்களான 2ஜி, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் முறைகேடு ஆகியவை பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தன. அந்தத் தருணத்தில் நாடே நல்ல தலைமையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. அதற்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடியவராக மோடி தன்னைச் சிறந்த நிர்வாகத் திறமை வாய்ந்தவராக முன்னிறுத்திக்கொண்டார்.
தேர்தல் வியூக நிர்வாகி பிரஷாந்த் கிஷோரால் ‘சிட்டிசன் ஃபார் அக்கவுன்டபிள்’ (சிஏஜி) எனும் குழு உருவாக்கப்பட்டது. கே.பி.எம்.ஜி., ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் போன்ற தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டன்சி சர்வீஸ்களில் இருந்து இளம் திறமையாளர்கள் சிலர் தங்கள் வேலைகளைத் துறந்துவிட்டு மோடிக்குப் பிரச்சாரம் செய்வதற்காக சிஏஜியில் இணைந்தனர். இந்தப் பின்னணியில்தான் நான் பாஜகவில் இணைந்தேன். கட்டுரைகள், சமூக வலைதளப் பதிவுகள் எழுதுவது போன்றவற்றைச் செய்துகொண்டிருந்தேன். 2014இல் பாஜகவின் டேட்டா அமைப்பு முறை மிகவும் வலுவானதாக இருந்தது. ஆனால், தேர்தல் வெற்றிக்குக் காரணமே மோடிதான் என்று கட்சி நம்பியதால் வெகு சீக்கிரம் அந்தக் கட்டமைப்பே சிதைந்துவிட்டது. அதனால் 2015இல் ஏற்பட்ட மிகப் பெரிய விளைவுதான் டெல்லி மற்றும் பிஹார் சட்டப்பேரவைத் தோல்விகள்.
பின்னடைவும் சுதாரிப்பும்
பிஹார் சென்ற பிரதமர் மோடி, “உங்களுக்கு மின்வசதி இருக்கிறதா? சாலை வசதி இருக்கிறதா?” என்று பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முழங்கினார். மக்கள் “இல்லை!” என்று பதிலளிப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் கூட்டமோ, “இருக்கிறது” என்று ஒருசேர குரல் எழுப்பினர். இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று ஓர் எளிய ஆய்வுகூட நமக்குச் சொல்லிக் கொடுத்துவிடும். பாஜக கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டுக் காலை வாரிக்கொண்டது. அதன் பின்னர்தான் அவர்கள் டேட்டா அமைப்பு முறையை மீண்டும் கட்டமைக்கத் தொடங்கினர். அதன் பலனால், 2016இல் மீண்டும் வலுப்பெற்றனர்.
அந்த ஆண்டில் கிஷோரின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐபிஏசி எனப்படும் ‘இந்தியன் பொலிட்டிகல் ஆக்ஷன் கமிட்டி’யில் சேர்ந்து, பஞ்சாப் தேர்தலுக்காகச் சில மாதங்கள் பணிபுரிந்தேன். (அதன்பின் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸுக்காகப் பிரச்சாரம் செய்தது ஐபிஏசி.) அப்போது, ‘மகாராஜா’ என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அம்ரீந்தர் சிங்கின் செயல்பாடுகள் சோம்பேறித்தனத்துடனும் மெத்தனப்போக்குடனுமே இருந்ததாக பார்க்கப்பட்டது. பல இடங்களில் தங்களது தொண்டர்கள் சரியான களப்பணி செய்யாமல் இருந்ததே காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனமாகக் கருதப்பட்டது. அதற்கு, உணர்வுபூர்வமாக அவர்கள் முடுக்கிவிடப்படவில்லை என்பதே காரணம்.
ஆனால், ‘பஞ்சாபின் கேப்டன்’ எனும் பிரம்மாண்டமும் உத்வேகமும் மிகுந்த பிரச்சார வியூகத்தால் எல்லாம் மாறியது. அந்தப் பிரச்சாரம் இரண்டு மாற்றங்களைக் கொண்டுவந்தது. முதலாவதாக, ‘மகாராஜா’ என்ற அடைமொழி ‘கேப்டன்’ என மாற்றப்பட்டது. இரண்டாவதாக, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ஒவ்வொரு தொகுதிக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் மூலம் எல்லா மட்டத்திலும் அவர் நெருக்கமாக இருப்பதாகக் காட்டப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்களும் உணர்வெழுச்சி பெற்று உத்வேகத்துடன் தேர்தல் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர். அதன் பிறகுதான் வெறும் கன்சல்டன்ஸி – பிராண்டிங் என்பதைத் தாண்டி, அரசியல் மீது எனக்கு ஆர்வம் மிகுந்ததை உணர்ந்தேன்.
வாக்குச் சாவடிகளின் மீது விசேஷ கவனம்
அதன் பின்னர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவுடன் தொடர்பில் இருந்தேன். 2017இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக என்னை மணிப்பூர் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மணிப்பூரில் அலுவலகமோ, கட்சி அமைப்போ எதுவுமே இல்லை. கிராஃபிக் டிசைனர்கள், ஆய்வாளர்கள் சிலரைப் பணிக்குச் சேர்த்தோம். ஒரு பிரச்சாரக் குழு அமைத்து, சில கருத்துக் கணிப்பு ஆய்வுகளை மேற்கொண்டோம். அப்போது, உணர்வுபூர்வமான பிரச்சினைகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிராகவே இருந்தன. மணிப்பூரில் தடைகளைத் தகர்க்கவே படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. பாஜகவுக்கு 31 இடங்கள் தேவை; ஆனால், 21 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அவர்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர்.
அதைத் தொடர்ந்து, டெல்லி திரும்பியதும் டேட்டாக்களைப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன். மிகப் பெரிய பலனை ஈட்ட வேண்டும் என்பதுதான் பிரச்சாரத்தின் நோக்கம். ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால், அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். எந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் உழைப்பையும் கவனத்தையும் கொட்ட வேண்டியதில்லை.
முந்தைய மூன்று மக்களவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் தரவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடமிருந்து திரட்டினோம். அவை அனைத்தையும் ஒன்றிணைத்து வாக்குகளின் போக்குகளைக் கண்டறிந்தோம். வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸும் மாநிலக் கட்சிகளும்தான் இருந்தனவே தவிர, பாஜகவுக்கு அங்கு இடமே இல்லை. திரிபுராவில் ஆட்சி செய்துகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வாக்குகள் மிகுதியாகப் பதிவான வாக்குச்சாவடிகளை பகுப்பாய்வுகள் மூலம் கண்டுகொண்டோம். சமூகப் பொருளாதாரம், சாதி மற்றும் கருத்துக் கணிப்புத் தரவுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்துப் பகுப்பாய்வு செய்தோம். எந்தெந்த சாதியினர், பழங்குடியினர் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதில் கவனத்தைக் குவித்து விவாதித்தோம்.
வாக்குச் சாவடிகளில் வெற்றி பெற்றால், தொகுதியைக் கைப்பற்றிவிட முடியும்; தொகுதியைக் கைப்பற்றினால், மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியும் என்பதே பாஜகவின் தேர்தல் வியூகம். முந்தைய தேர்தல்களில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி வாரியாகவே ஆய்வு செய்தோம். தேர்தல் ஆணையத்தின் ஃபார்ம் 20 மூலம் வாக்குச்சாவடி வாரியாக வாக்குகள் பிரிந்த விதத்தைக் கண்டறியலாம். அதாவது, கோடிக்கணக்கான வாக்குகள் எப்படி கட்சி வாரியாகப் பிரிந்தன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
நாங்கள் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவமாக்கி, அதில் உள்ள பெயர்களை மொபைல் எண்களுடன் பொருத்தினோம். அதை வைத்து சமூக ஊடகம் மூலமாக தகவல்களைப் பரப்பினோம். ஒரு வாக்காளர் பட்டியலில் 60 பெயர்கள் இருக்கும். ‘பன்னா ப்ரமுக்’ என்று அழைக்கப்படும் அந்தப் பட்டியலைக் கொண்டு, பாஜகவின் பொறுப்பு வகிக்கும் பெண், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல்களைச் சேர்ப்பார். அத்துடன், அவர் சந்திக்கும் வாக்காளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கட்சியிடம் எடுத்துரைப்பார்.
மணிப்பூரில் நாங்கள் ஆட்சியமைத்தபோதும், தேர்தலில் பெரும்பான்மைப் பெறத் தவறிவிட்டோம். எனவே, திரிபுராவில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டோம். உதாரணமாக, முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் திரிபுராவை அமைதிப் பூங்காவாக நிலைநிறுத்தியது உண்மை. அந்த உண்மையை முறியடிக்கும் விதமாக, ‘கடந்த 15-20 ஆண்டுகளாகவே வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவிவருகிறது. எனவே திரிபுராவுக்கென்று மாணிக் சர்க்கார் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை’ என்று பிரச்சாரம் செய்தோம். திரிபுரா மாநில அரசு ஊழியர்கள் ஆறாவது ஊதியக் குழுவின்படியே சம்பளம் பெற்றுவந்ததால், அங்கே ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதைக் கண்டறிந்தோம். அவர்களுக்குக் கூடுதலாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்க வழிவகுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். அது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. பாஜக வெற்றி வாகை சூடியது.
உ.பி.யில் பலித்த ஓபிசி வியூகம்
இதே வியூகத்தை உத்தரப் பிரதேசத்திலும் பாஜக திறம்படச் செய்தது. அங்கே மக்களின் பெயர்களில் பெரும்பாலானவையும் சாதியையோ அல்லது மதத்தையோதான் தாங்கி வரும். அதனுடன், வாக்காளர் பட்டியலையும் மொபைல் நம்பர்களையும் இணைத்துவிட்டால், தனிப்பட்ட முறையிலேயே மெசேஜ் அனுப்பலாம். உதாரணமாக, இதர பிற்படுத்த சமூகத்துக்குள் ‘யாதவ்’ சமூகம் வரும்; சமாஜ்வாதி கட்சிக்கு அடித்தளமே கோடிக்கணக்கான ஓபிசி ஒட்டுகள்தான். எனவே, யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும், தலித்துகளையும் பாஜக குறிவைத்துக் காய் நகர்த்தியது.
‘சமாஜ்வாதி கட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை ஓபிசிக்கான இடஒதுக்கீடு சலுகைகளை யாதவ் சமூகத்தினரே அனுபவிப்பர். மற்றவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது’ என்று யாதவ் சமூகத்தினர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குத் தனிப்பட்ட முறையில் சமூக ஊடகம் மூலம் குறுந்தகவல்கள் அனுப்பப்படும். இந்தக் குறுந்தகவல்கள் பாஜகவின் அதிகாரபூர்வ சேனல்களின் வழியாக அனுப்பப்படாது. மாறாக, ‘நமோ சப்போர்ட்டர்ஸ் 2019 பனராஸ்’, ‘கத்தார் இந்து சேனா’, அல்லது ‘இந்து மகாசபா’ போன்ற தலைப்புகளைத் தாங்கிய வாட்ஸப் குழுக்களின் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு பகிரப்படும்.
மத வெறுப்பு வியூகம்
மாநிலம் முழுவதிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட இந்து சமூகங்களை பாஜக அடையாளம் கண்டது. இந்து மதத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு தனிப்பட்ட முறையில், ‘இந்து மக்கள்தொகையை இஸ்லாமிய மதத்தினர் மிஞ்சிவிடுவார்கள்’ என்ற குறுந்தகவலைப் பரப்பியது. அந்தத் தகவலில் துளியும் உண்மை இல்லை. ஆனால், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அதை நம்பவைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. இதுபோன்ற தகவல்களுடன் போலிச் செய்திகளையும் சேர்த்துப் பரப்பியது. உதாரணமாக, சிரியாவிலோ அல்லது வங்கதேசத்திலோ எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் ‘முசாஃபர்நகர்’ என்று குறிப்பிட்டு, மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளங்களுடன் நிறைந்திருக்கும் அந்த வீடியோவைப் பார்ப்பவர்களால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது.
மறைமுகத் தேர்தல் செலவுகள்
சமூக ஊடகம் மூலமாகச் செலவிடப்படும் பிரச்சாரச் செலவினங்களையும் நிதி நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையம் முழுமையாக கண்காணிப்பதில்லை. ஆனால், முழுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று அது. சமூக வலைதளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பெரும்பாலானவையும் பல்வேறு குழுக்களிடம் அவுட் சோர்ஸ் செய்யப்படுகின்றன. அந்தக் குழுக்களுக்கும் பாஜகவுக்கும் அதிகாரபூர்வமாக எவ்விதத் தொடர்பும் இருக்காது. ஆனால், டிவி அல்லது ரேடியோவில் தேர்தல் விளம்பரம் செய்வதற்கு நிகரான பலனைப் பெற முடியும்.
எனக்குத் தெரிந்து, மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் சில குழுக்கள் 20 முதல் 30 வரையிலான பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ‘வீ சப்போர்ட் இந்தியன் ஆர்மி’, ‘வீ சப்போர்ட் நமோ’ என்பன போன்ற பெயர்களுடன் உலா வரும் அந்தப் பக்கங்களில் 10-15 லட்சம் ஃபாலோயர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள். ‘நேஷன் வித் நமோ’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 15 லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்கள் இருந்தனர். அந்தப் பக்கத்துக்காக கிராஃபிக் டிசைனர்களும், வீடியோ எடிட்டர்களும் முழுநேரப் பணிகளில் ஈடுபட்டனர். அந்தக் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கம் மூலம் பதிவுகள் பலவும் விளம்பரப்படுத்தப்பட்டன.
ஃபேஸ்புக்கில் நமது போஸ்ட்களை பூஸ்ட் செய்ய முடியும். அதாவது, ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விளம்பரக் கட்டணம் செலுத்தி, ஒரு ஃபேஸ்புக் பக்கத்தின் பதிவுகளைப் பல லட்சம் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அப்படியாக, பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் மாதம்தோறும் ரூ.1.5 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை ப்ரோமோஷன்களுக்கு செலவிடப்பட்டன. பாஜகவிடம் அதுகுறித்து கேட்டால், அவை எல்லாம் தங்கள் அதிகாரபூர்வ பக்கங்கள் இல்லை என்றும், ஆதரவாளர்கள் எவராலோ நடத்தப்படும் அந்தப் பக்கங்களை நிர்வகிப்பது யாரென்றே தெரியாது என்றும் கைவிரித்துவிடும்.
இந்த சமூக ஊடகப் போக்கு என்பது எதிர்த் தரப்புகளிலும் நிறைந்திருக்கும். எந்த அரசியல் கட்சிகளையும் சாராத ஃபேஸ்புக் பக்கங்கள் பலவும் முளைத்தன. ‘பீஃப் ஜனதா பார்ட்டி’, ‘இந்தியா ரேசிஸ்ட்ஸ்’ போன்ற பக்கங்களில் பகிரப்பட்ட போஸ்டுகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரானவை.
பாஜகவின் வழியில் பிற கட்சிகள்
பாஜகவைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சமூக ஊடகங்களில் பிரச்சார வியூகங்கள் வகுக்கத் தொடங்கின. காங்கிரஸ் தனது கட்சித் தொண்டர்களின் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவமாக்கி டேட்டாபேஸ் தயார் செய்யத் தொடங்கியது. இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தவே இல்லை. பின்னர், ஊராட்சி அளவிலும் வெற்றியாளர்கள், ஆதரவாளர்களின் தரவுகளை காங்கிரஸ் தொகுத்தது. காங்கிரஸின் இத்தகைய வியூகம் மேம்பட்டாலும்கூட, அக்கட்சி மக்களை முழுமையாகச் சென்றடைவதில் சிக்கல் நீடித்தது.
அரசியல் கட்சிகள் பலவும் பாஜகவைப் போலவே அதிக எண்ணிக்கையில் வாட்ஸப் குழுக்களை உருவாக்க முயற்சி செய்தன. ஆனால், அவர்களால் பாஜகவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஏனெனில், சமீபத்தில் வாட்ஸப் தனது கொள்கைகளில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டது. பாஜக வாட்ஸப் குழுக்களை உருவாக்கியபோது, ஒருவர் தன் மொபைலில் அனைத்து நம்பரையும் சேமிப்பார்; ஸ்கிரிப்ட் எழுதியதும் அனைத்து எண்களையும் சேர்த்து எளிதில் வாட்ஸப் குழு உருவாக்கப்பட்டுவிடும். ஆனால், இப்போது அதுபோல் செய்தாலோ அல்லது அதிக எண்ணிக்கையிலான குழுக்களை உருவாக்கினாலோ, அந்த மொபைல் நம்பரையே வாட்ஸப் நிறுவனம் முடக்கிவிடும். அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றாலும்கூட, கடந்த ஆறு மாதங்களாகவே இதுதான் நடக்கிறது. அதேபோல், வாட்ஸப் தகவல்களை ஃபார்வர்டு செய்யப்படும் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு தகவலைப் பரப்ப முடியாத கட்டுப்பாட்டை வாட்ஸப் அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதற்கும் மாற்று வழிகள் உள்ளன. அவற்றைச் சில கட்சிகள் செய்துகொண்டும் இருக்கின்றன. அவர்கள் தங்களது வாட்ஸப் குழுக்களின் இணைப்புகளைப் பரப்புவர். அந்த இணைப்புகளை அழுத்தி உள்ளே வருவதன் மூலம் ஒருவர் அந்தக் குழுவில் இணைந்துகொள்ள முடியும். அப்படி இணையும் முறையை வாட்ஸப் முடக்காது. ஏனெனில், அந்த நபரை வாட்ஸப் குழுவை நிர்வகிப்பர் சேர்க்கவில்லை; அவர் தானாகவே சேர்ந்தார் என்பது லாஜிக். ஆனால், இந்த முறையைப் பின்பற்றுவது என்பது நேரத்தை மிகுதியாக விழுங்கும்.
வாட்ஸப் தகவல்களை அதிக எண்ணிக்கையில் ஃபார்வர்டு செய்வதற்காக வெளிநாட்டு நம்பர்களையும் வாங்கிப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது ஒரு மேசேஜை ஐந்து முறைக்கு மேல் ஃபார்வர்டு செய்ய முடியாது என்ற கட்டுப்பாட்டை உலக அளவில் வாட்ஸப் கொண்டுவந்துவிட்டதால் அந்த யுக்தியும் வீண். முன்னர் உருவாக்கப்பட்டதுபோல அதிக எண்ணிக்கையிலான வாட்ஸப் குழுக்களை இப்போது உருவாக்க முடியாது. ஆனால், பழைய குழுக்கள் அப்படியே இயங்குவதற்கு இன்னும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றை வாட்ஸப் முடக்கவில்லை. எனவே, பாஜக முன்னர் உருவாக்கிய வாட்ஸப் குழுக்கள் அனைத்துமே இன்னும் உயிர்ப்புடனே இருக்கும்.
முடங்கிப்போன ஐடி பிரிவு
கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதால் பாஜக ஐடி பிரிவு செத்துக் கிடக்கிறது. பாஜக ஐடி பிரிவில் தன்னிச்சையாக இயங்கிவந்த சில ட்ரால் பக்கங்கள் இப்போது அந்தக் கட்சிக்கு ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. சிலருக்கு அரசின் மீது அதிருப்தி; மேலும் சிலருக்கு பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியாவுடன் தகராறு.
ட்விட்டர் போன்ற தளங்களில் முன்பைப் போல துடிப்புடன் செயல்பட்டு உலக அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் செயல்படுவது கடினம். வேண்டுமென்றால் இன்னொரு வழி இருக்கிறது. வாட்ஸப் குழுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கானவர்களை அணுகி, தங்களுக்கு வேண்டிய ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்குவதற்கு ஆதரவை நாடலாம். இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கானவர்களை ஆரம்பத்தில் பாஜக பயன்படுத்திதான் வந்தது. ஆனால், மோடி வித்தையே போதும் என்று நம்பியதன் காரணமாக பின்னாளில் அவர்களைப் புறக்கணித்துவிட்டது. சமூக வலைதளங்களில் ஐடி பிரிவு, போலி கணக்குகள், பாட்ஸ் ஆகியவை துடிப்புடன் இயங்காததால் பாஜக இப்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பாஜக எதிர்வரும் மக்களவைத் தேர்தலை அரசு விளம்பர பட்ஜெட்டின் துணைகொண்டு தனது பிரச்சாரத்தைக் கட்டமைக்கும். அரசு விளம்பர பட்ஜெட் உயர்த்தப்பட்டதுகூட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் என்பது கவனத்துக்குரியது. பாஜகவின் தற்போதைய தேர்தல் வியூகம் என்பது ஒவ்வொரு சமூகம் / குழுக்களிடமும் தனிப்பட்ட எதிரியைப் பிரித்து உருவாக்குவதுதான். ஜே.என்.யூ. சர்ச்சையை எடுத்துக்கொண்டால், தன்னை தேசியவாதி என்று உணரும் எந்த ஒருவருக்கும் எதிரான எதிரியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ‘அர்பன் நக்ஸல்’ என்ற சொல்லையே பாஜக உருவாக்கி வைத்துள்ளது. நக்ஸல்கள் மீது கரிசனம் கொண்ட இடதுசாரிக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை ‘அர்பன் நக்ஸல்’ என்று அழைப்பதன் மூலம், அவர்களை நம் நாட்டுக்குக் கேடு விளைவிப்பர்களாக மக்கள் மத்தியில் தோற்றத்தை உருவாக்க முடியும் என்பதே அவர்களின் உத்தி.
பாஜகவின் பிரச்சார அடிநாதங்களுள் மிக முக்கியமானது ஒன்றுதான்: ‘சாதியை மறப்பீர்; நாட்டைக் காக்க இந்துவாக வாக்களிப்பீர்’ என்று மக்களிடம் சொல்ல முற்படுவதே அது.
(துஷார் தாராவிடம் கூறியதன் பதிவு)
நன்றி: கேரவான்
https://caravanmagazine.in/politics/shivam-shankar-singh-as-told-to-bjp-data