ட்விட்டருக்குப் பிந்தைய காலத்திலான தொலைக்காட்சி விவாதங்களில் ஒரே ஒரு விதிதான் உள்ளது: தற்போது பரபரப்பாக இருக்கும் எதையாவது பேச வேண்டும். அர்த்தமில்லாமல் உளறினாலும் சரி. கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். விளம்பர இடைவெளியின்போது, நீங்கள் குரங்குகள் மதிய உணவாக என்ன சாப்பிடும் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாலோ, எதிர்கால இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி சிந்தித்தாலோ அது முக்கியமில்லை.
தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் ஒரு அரசாங்கமானது வெளியேற்றப்படக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிதாக எந்த வாக்குறுதியையும் அளிக்காது என்ற நாகரிகமான விதிமுறைகளுக்கு எதிராக, நரேந்திர மோடியின் அரசு, நாடாளுமன்ற வளாகத்தில் பட்ஜெட் குமிழிகளை ஊதிக்கொண்டிருக்கிறது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இல்லாத நிலையில், பியுஷ் கோயல், இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை ஈர்க்கும் வகையிலும் விவசாயிகளுக்கு நண்பனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் விதத்திலும் பட்ஜெட் உரையாற்றினார்.
நான் தினசரி காலை உணவிற்குப் பின் இதைத்தான் செய்வேன், என் பிரெட் டோஸ்டின் சிறு துண்டுகளைக் காக்காவிற்குப் போடுவேன். சில துண்டுகளில் ஜாம்கூட ஒட்டியிருக்கும்.
தற்போதைய அளவுகோல்களின்படி சற்றே மென்மையான விமர்சகரான பர்கா தத், தொடங்கி ஆறு நாள் ஆன ஒரு தொலைக்காட்சி சேனலில், “வாக்களிப்பை மையப்படுத்தியே உருவாக்கப்பட்ட இந்த பட்ஜெட், எப்படி மூன்று மாதங்களில் தேர்தலை பாதிக்கும்?” என்று கேட்டார்.
ஒரு கணம்கூடத் தாமதிக்காமல் நான் பதிலளித்தேன், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொள்கைகள் வகுப்பதில் இதைவிடவும் மேம்பட்ட முறையில் செயல்பட்டது. தேர்தலில் வெற்றிபெற பட்ஜெட் உதவுமென்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிரந்தரமாக ஆட்சியில் இருந்திருக்கும்”.
எனவே தரவுகளை வைத்து மோடி ஆடும் ஆட்டம், சமூக வலைத்தளங்களில் இருக்கும் நிலவும் பக்தி, மழுமழுவென்று சவரம் செய்யப்பட்ட கோயலின் அழகிய முகம், இந்த பட்ஜெட் ஆகிய எதன் உதவியாலும் அல்லது வேறு எதன் உதவியாலும் இந்த ஆட்சியை வாக்காளர்களின் கோபத்திலிருந்து காப்பாற்ற இயலாது.
வருமான வரியின் உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டதால், நடுத்தர வர்க்கம் பரவசமாக வேண்டும்.
இந்த ‘நடுத்தர வர்க்கமானது’ ஒரு விசித்திரப் பிராணி. வாக்களிப்பு நாளில் அது டூர் கிளம்பிவிடும். அவர்கள் இந்த வரிச் சலுகையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வார்கள். நன்றி பியுஷ். தேர்தலுக்குப் பிந்தைய வெற்றிக் களிப்பில் சந்திப்போம்.
ஏன் விவசாயிகள் கொதிப்புடன் இருக்கிறார்கள்?
விளைபொருட்களின் விலை சரிந்துள்ளதாலும், உரம் போன்ற பொருட்களின் விலை குறையாமல் அதிகரித்துள்ளதாலும், அரசு நேரடியாக பணத்தைப் போட வேண்டிய ஜன் தன் கணக்குகள் செயலற்றுப் போயிருப்பதாலும், விவசாயக் கூலியை அதிகரிக்க உதவிய NREGA திட்டம் மோடியால் நாசம் செய்யப்பட்டுள்ளதாலும், விவசாயிகள் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு கவலையுமில்லை, இரண்டு ஹெக்டேர் அல்லது ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000ஐப் பரிசாகப் பெறுவார்கள். இக்கணக்குப்படி, சராசரியாக ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவிற்கு ரூ.500; அதாவது ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.100 அல்லது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.3.30. மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்கள், ஒன்றுமில்லாததற்கு இது எவ்வளவோ நல்லது என்கிறார்கள்.
உண்மையில் அப்படித்தான் நினைக்கிறீர்களா? நரேந்திர அண்ணன் ஒதுக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் NREGA திட்டம், குறைந்தபட்ச சம்பளத்தில், அதாவது ரூ.350 சம்பளத்தில், மாநிலங்கள்தோறும் தேவையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் நூறு நாள் வேலை அளித்தது. கஷ்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.35,000 ஆண்டுக்கு வழங்கப்பட்டது. ஒரு வீட்டில் இருவர் வேலை பார்க்கும் பட்சத்தில், இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ரூ70,000 சம்பாதித்தது.
அந்தத் தொகையைக் காட்டிலும் 9% குறைவான தொகையைத்தான் இப்போது மோடி வழங்குகிறார். இது எப்படி விவசாயிகளை மகிழ்விக்கும்?
எல்லாம் வல்ல ஸ்மார்ட் பணம் விரைவில் ஓடிப்போகும்
பொய்த் தரவுகளின் பக்கம் இந்தியா சாய்ந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்கள் ஒரு பெரிய எண்ணைப் பார்ப்பார்கள். அவர்கள், எப்போதும் அதிகாரத்தில் இருந்து வரும் கற்பனையான எண்ணாக இது இருக்காது என்று நம்புவார்கள். அது நிதிப் பற்றாக்குறையின் எண்ணாகும். வருமானத்தைவிட எவ்வளவு அதிகமாக அரசு செலவு செய்கிறது, இந்த இடைவெளி கடன் மூலம் எந்த அளவு குறைக்கப்படுகிறது என்பதைப் பார்ப்பார்கள்.
நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதம். இது 3.1% அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று மோடியின் பொருளாதார தூதர்கள் சொன்னதைக் காட்டிலும் மிகவும் அதிகம்.
மோடி ராஜ்யத்தில் இந்தியாவை விட்டுக் கூட்டமாக வெளியேறிய ஸ்மார்ட் பணம், அடுத்த மூன்று மாதங்களில் மேலும் வற்றிவிடும் என்று எதிர்பார்க்கலாம். அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் சந்தைகளுக்கு ஊக்கமளிப்பது எதிர்பார்த்ததுதான்.
உலகளாவிய அளவில் மோடி அரசின் மீதான எதிர்மறை எண்ணம் நிலவும் சூழலில் இந்தச் செயற்கையான ஊக்கம் கைகொடுக்காது. சந்தைகள் சரிந்து விழும்.
தொலைக்காட்சி ஸ்டூடியோவிற்கு வெளியில், நோய்டாவின் மாலைப் பனியில் நின்றிருந்தபோது, குரங்குகளுக்கு மதிய உணவிற்குப் பொரி கடலை பிடிக்கும் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால் பொருளாதாரத்திற்கு இதெல்லாம் போதாதே. மோடி போன்ற பொரிகடலை விற்பனையாளர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
அபீக் பர்மன்
நன்றி: தி க்வின்ட்
https://www.thequint.com/voices/opinion/budget-2019-piyush-goyal-tax-rebate-other-features?fbclid=IwAR2d5Pv0RZV_ec4m4GutKR6iKZjrQCiAvT5r3tol9zj1oGpoub3xxWz-hWA