வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏதுமின்றி, விசாரணை அமைப்புகளை வெளிப்படையாகவே அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திவருவது, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறது.
கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்ட தருணமும் அணுகுமுறையும் சற்றே சந்தேகத்துக்கு உரியது. இது, 16ஆவது நுற்றாண்டின் இத்தாலிய ராஜதந்திரியும், அரசியல் சிந்தனையாளருமான மாக்கியவல்லியின் அரசியல் வழிகாட்டுதலை அப்படியே பின்பற்றியதுபோன்ற சம்பவம். ஆம், ‘வஞ்சகத்தையும் நேர்மையின்மையையும் சக்திவாய்ந்த கருவிகளாகப் பயன்படுத்துவது, யதார்த்த அரசியலில் மிகவும் சாதாரணம்!’ என்று அவர்தான் சொன்னார்.
இந்தத் தத்துவத்தை இன்று நேற்று அல்ல, 2014இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்தே மிகச் சிறப்பாகக் கடைப்பிடித்துவருகிறது மோடி அரசு. குறிப்பாக, இந்த அரசியல் முறையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதால் பலவீனமடைந்துள்ள பிரதமர் அலுவலகம் இப்போது பாதகமான விளைவுகளை அறுவடை செய்துவருகிறது.
ஆளும் அரசு இத்தகைய மழுங்கலான கருவிகளைக் கொண்டு மிரட்டுவதன் எதிரொலியாக, எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றுபட்டு நிற்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனினும்கூட சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித் துறையை அரசியல் அழுத்தங்களுக்கான கருவிகளாக அதிகப்படியாகப் பயன்படுத்துவதை நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய மூவர் குழு தொடர்ந்தவண்ணமே இருக்கிறது. இதில் சுவைமிகு அம்சம் என்னவென்றால், மோடி 2014இல் அளித்த வாக்குறுதியின்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதையுமே தர்க்க ரீதியாக முடிவுக்குக் கொண்டுவரக் கூடாது என்பதில் தெளிவுடன் இருப்பதுதான்.
அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை உடனடியாக முடித்திட விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மக்களிடம் மோடி உறுதியளித்தார். தேர்தல் நிதி முறையைத் தூய்மைப்படுத்தும் வகையில் வலுவான லோக்பால் கொண்டுவரப்படும் என்றும் அவர் வாக்குறுதி தந்தார். இவற்றில் எதையும் செய்யக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், இந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளியாகளாகவோ அல்லது நிரபராதிகளாகவோ ஆகிவிட்டால் சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவற்றை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடியாமல் போயிவிடுமே. தன் அரசுக்கு இப்படி ஓர் இழப்பு நேர்ந்துவிடக் கூடாது என்பதால்தான் ஒரு விரைவு நீதிமன்றத்தை அமைக்கக்கூட மோடி முனைப்பு காட்டவில்லை.
அதேபோன்றதுதான் அயோத்தியில் ராமர் கோயில் விவகாரமும். இதுவும் முடிவுக்கு வந்துவிட்டால், அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். எனவே, இந்த விவகாரத்தில் உக்கிரத்தன்மைக் குறையாமல் பார்த்துக்கொள்ளும் மோடியும் அமித் ஷாவும், தேவையான தருணங்களில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்வதில் கவனம் கொண்டுள்ளனர்.
வெளிப்படையான வியூகம்!
மோடி அரசு செய்வது எந்த ஒரு சாமானியக் குடிமகனாலும் புரிந்துகொள்ளக்கூடிய வெளிப்படையான வியூகம்தான். உண்மையில், விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதை இந்த அரசு மிகவும் வெளிப்படையாகவே காட்டிக்கொள்கிறது. இதனால், மனசாட்சி மிக்க நேர்மையான அதிகாரிகள் கிளர்ந்தெழக்கூடிய வகையிலான பின்விளைவுகளும் ஏற்படும். இதைத்தான் சமீப காலமாக சிபிஐயில் அதிக அளவிலும், அமலாக்கப் பிரிவில் ஓரளவிலும் பார்த்துவருகிறோம்.
இந்தக் கிளர்ச்சி இப்போது வருமான வரித் துறையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளது. பினாமி பெயரில் கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகள் வைத்திருப்பதாக, மத்திய நேரடி வரி வாரியத் தலைவர் மீது குற்றம்சாட்டும் தகவலை மூத்த அதிகாரிகள் கசியவிட்டிருக்கின்றனர். அவர் ஓய்வு பெற்ற போதிலும், அரிதினும் அரிதானதொரு நடவடிக்கையாக, அவரது பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு பிரதமர் அலுவலகம் நீட்டித்ததன் பின்னால் இருக்கும் காரணங்கள் தெள்ளத் தெளிவானவை.
சிபிஐ விசாரணைகளில் பிரதமர் அலுவலகம் தலையிடுகிறது என்று குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை நேர்மையான சிபிஐ அதிகாரி ஒருவர் சமர்ப்பிப்பதற்குப் பின்னால் நிச்சயம் ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு டிஐஜியான எம்.கே.சின்ஹா தனது பிரமாணப் பத்திரத்தில், ‘சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை லஞ்ச வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்கு, ஒட்டுமொத்த அரசு எந்திரமும் முயற்சி செய்கிறது’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சிபிஐ என்றால் ‘Centre for Bogus Investigation’ (பொய் புலன் விசாரணை மையம்), இ.டி. என்றால் ‘Extortion Directorate’ (பணம் பறிக்கும் இயக்குநரகம்) என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் சின்ஹா வருணித்திருக்கிறார். கடந்த 60 ஆண்டு வரலாற்றில் இதுபோன்ற ஒரு கடுமையானக் குற்றச்சாட்டு எழுந்ததே இல்லை. அரசியல் அதிகார வர்க்கத்தால் நம் விசாரணை அமைப்புகள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை சின்ஹாவின் எதிர்வினையில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.
கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை மம்தா பானர்ஜி காப்பற்றுவதற்கான காரணத்தைக் கேட்கும் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “ராஜீவ் குமார் மறைந்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வி, அஸ்தானாவைக் காப்பாற்றுவதில் தீவிரம் காட்டும் பிரதமர் அலுவலகத்தும் பொருந்தும். “அஸ்தானா மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்ன?” என்று பதிலுக்கு எதிர்க்கட்சிகள் கேட்கத்தானே செய்வார்கள்.
அஸ்தானாவுக்குத் தொடர்பு
தற்போது நீடித்துவரும் மோடிக்கும் மம்தாவுக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் சிபிஐ சிறப்பு இயக்குநராகப் பதிவு உயர்வு பெற்ற அஸ்தானாவுக்கு முக்கியத் தொடர்பு உண்டு. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு சம்மன்கள் அனுப்புவதில் அவர் 2017இலிருந்தே தீவிரம் காட்டிவந்தது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பாஜகவில் அங்கம் வகிக்கும் நிஜமாகவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரிகளைக் குறிவைத்து சிபிஐ செயல்பட்டுவருவதாக, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு அனுப்பிய கடித்தில் போலீஸ் கமிஷனர் குறிப்பிட்டுள்ளார். அஸ்ஸாமில் சாரதா சிட் ஃபண்ட் நிறுவனம் இயங்குவதற்காக மாதம் ரூ.20 லட்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முகுல் ராயையும், அஸ்ஸாம் துணை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவையும் அவர் தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து சாரதா சிட் ஃபண்ட் உரிமையாளர் சுதிப்தா சென் பத்திரமாக வெளியேற துணைபுரிந்தார் என்பது முகுல் ராய் மீதான குற்றச்சாட்டு.
சாரதா முறைகேடு விசாரணை தொடர்பாக சிபிஐ – கொல்கத்தா போலீஸ் இடையே ஆலோசனை நடத்துவதற்கும் மேற்கு வங்க டிபிஜி முன்வந்திருக்கிறார். இது தொடர்பான தகவலை அலோக் வர்மாவும் பெற்றிருக்கிறார். ஆனால், கொல்கத்தா போலீஸ் அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே அஸ்தானா வலியுறுத்திவந்திருக்கிறார். இதுவே உள்நோக்கத்தைத் தெளிவுறக் காட்டுகிறது.
அரசியல் சார்பு நிலையுடன் விசாரணை அமைப்புகள் நடந்துகொள்வது ஒன்றும் இப்போது புதிதல்ல. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் ரெட்டி சகோதரர்கள் ஊழல் விவகாரத்தை சிபிஐ கையாண்ட விதம் அனைவருக்கு தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக, கர்நாடக காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் பல முறை சோதனை நடத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
சமீப காலத்தை எடுத்துக்கொண்டால், 2019 மக்களவைத் தேர்தலில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டணியை இறுதி செய்தவுடன், 12 ஆண்டு கால சுரங்க முறைகேடு வழக்கைத் தோண்டியெடுத்து, அகிலேஷ் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. அதேபோல், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, சந்திரபாபு நாயுடுவும் சில பழைய வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டது. மாயாவதிகூட சமீபத்தில் அமலாக்கத் துறையினரின் விசாரணை வளையத்துக்குள் வந்தார்.
இந்தத் தலைவர்கள் அனைவருமே இப்போது மம்தாவுக்கு ஒருசேர தங்களது தார்மிக ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மம்தாவின் தர்ணா போராட்டம் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜேடியும் தங்கள் கட்சிக்கு எதிராகவும் சிபிஐ பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. பாஜக, சிபிஐ, இடி மற்றும் ஐடி துறைக்கு எதிராக தாங்கள் ஓரணியில் திரண்டிருக்கிறோம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதில் எவ்வித வியப்பும் இல்லை.
வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏதுமின்றி, விசாரணை அமைப்புகளை வெளிப்படையாகவே அரசியல் காரணத்துக்காகப் பயன்படுத்துவதால் மோடிக்குப் பிரச்சனைகள் வலுபெற்றுள்ளன. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி முற்றிலுமாக நம்பகத்தன்மையை இழந்துள்ளது. நள்ளிரவுச் சோதனைகள், முதல் தகவல் அறிக்கைப் பதிவுகள் ஆகிய அனைத்துமே எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கப்படுகின்றன. ஆட்சியின் இறுதிக் காலத்தை எட்டிவிட்ட நிலையில், 2014ஐ போல மோடி இம்முறை ஊழல் விவகாரத்தைக் கையிலெடுத்துத் தேர்தல் பிரச்சாரங்களில் ஆவேசமாக முழங்க முடியாது. மாறாக, அவர் தனது ஆட்சிக் காலத்தில் முதலாளித்துவத் தோழமைகளுக்குத் தோள்கொடுத்த விவகாரங்கள் தொடர்பான பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் இருக்கிறார்.
எம்.கே.வேணு
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/modi-credibility-crisis-corruption-cases