ட்விட்டர் அகழாய்வு தெரிவிக்கும் தகவல்கள் பிரதமர் மோடியை முதல்வர் மோடி வறுத்தெடுப்பதைக் காட்டுகின்றன.
‘நம் அனுமதி இல்லாமல் கடந்த காலத்தால் நம்மைக் காயப்படுத்த முடியாது’ என்பார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த கால ட்வீட்களின் ஆவியோ இப்போது அவரையே வீடுகட்டி மிகத் தீவிரமாகப் பழிவாங்கிவருகிறது. இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தற்போது பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் தாறுமாறாகக் கலாய்த்து வருகிறார் கடந்த கால முதல்வர் நரேந்திர மோடி.
சிபிஐ விவகாரம்
மேற்கு வங்கத்தில் சிபிஐயை வைத்து அரசியல் சதிவலையை மோடியும் பாஜகவும் பின்னுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சிபிஐ – மம்தா சச்சரவில் மோடி அமைதி காத்து வருகிறார்.
சிபிஐயின் தன்னாட்சி அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நாட்டையும் அரசமைப்புகளையும் காப்பாற்றுங்கள்” என்று தர்ணாவில் உரக்கக் குரல் எழுப்பினார். இதற்கு உடனடியாக பதிலடி தந்து, சிபிஐ மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நடவடிக்கையை நியாப்படுத்தும் விதமாக பேசிய பாஜக தலைவர்களோ, “சிபிஐ சட்டப்படி தமது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறார் மம்தா” என்று ஆவேசமாகினர்.
ஆனால், பாஜகவும் மோடியும் எப்போதுமே இதே அளவில் சிபிஐக்கு உறுதுணையும் உத்வேகமும் அளித்து வந்திருக்கிறார்களா என்றால், இல்லவே இல்லை. குஜராத் முதல்வராகப் பதவி வகித்தபோது, மோடி 2013இல் தட்டிய ட்வீட்களை எடுத்துப் பார்த்தால் நிஜ முகம் வெளிப்படும். 2002 குஜராத் கலவரம் மற்றும் போலி என்கவுன்டர்கள் விவகாரத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள் விசாரிக்கப்பட்டனர். அப்போது, அவர் கொந்தளிப்புடன் வெளியிட்ட ட்வீட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமெனில், மம்தாவின் தற்போதைய சாடல்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.
சிபிஐ குறித்த தனது பழைய ட்வீட்டுகளைப் பலரும் தோண்டியெடுத்து கலாய்த்து வருவது, மோடிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு ட்வீட்டில், “சிபிஐயைத் தவறாகப் பயன்படுத்துவதே பரவலாக நடக்கிறது” என்கிறார் முதல்வர் மோடி. மற்றொரு ட்வீட்டில் மத்திய அரசைக் குற்றம்சாட்டும் அவர், “அரசியல் எதிரிகளைக் குறிவைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட வைப்பது, உளவு அமைப்புகளை வலுவிழக்கச் செய்யும் செயல்” என்கிறார்.
கடந்த காலத்தில் ட்விட்டரில் செய்த ‘பாவங்களை’ ராகுல் காந்தியாலும் கழுவ முடியவில்லை. அவர் இப்போது மம்தாவுக்கு தனது முழு ஆதரவைத் தந்துள்ள நிலையில், அவரது ட்வீட்களிலும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. சாரதா முறைகேடு விவகாரத்தில் மம்தா மெளனம் காப்பதாகப் பதியப்பட்ட ராகுல் காந்தியின் ட்வீட் சாடல்களைக் கிளறி எடுத்து விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள்.
ஆனால், மோடியின் பழைய ட்வீட்கள் சிலவற்றை உருவி எடுக்கும்போது, முதல்வர் மோடிதான் பிரதமர் மோடிக்கு சிறந்த விமர்சகராகவும், மோசமான எதிரியாகவும் விளங்குகிறார் என்பது ஆதாரபூர்வமாகத் தெரியவருகிறது. அந்நிய நேரடி முதலீடு, ஆதார், பெட்ரோல் விலை அதிகரிப்பு, மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை குறித்து மிகக் கடுமையாக விமர்சித்து பதிவுகளைக் கொட்டியிருக்கிறார். பிரதமர் மோடியை நோகடிக்கக்கூடிய முதல்வர் மோடியின் சிறந்த ட்வீட்களில் சில இங்கே:
அந்நிய நேரடி முதலீடு
கடந்த 2018 ஜனவரியில் ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு மோடி அரசு ஒப்புதல் அளித்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் நம் நாட்டில் பெருமளவில் அந்நிய முதலீடு குவியும் என்றும், அதன் மூலம் முதலீடு, வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளில் வளர்ச்சி கிட்டும் என்றும் அரசு விளக்கம் அளித்தது.
ஆனால், சற்றே பின்னோக்கிச் சென்று மோடியின் முந்தைய ட்வீட்களை நோக்கும்போது, அந்நிய நேரடி முதலீட்டை அவர் விரும்பவில்லை என்பது புலப்படும். உண்மையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2012இல் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான மசோதாவைத் தாக்கல் செய்தபோது, அந்தச் சட்டத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகும் என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆம், ‘கடந்த காலம்’ என்பது மோடிக்கு மீண்டும் ஒரு கொடூர நினைவூட்டல் ஆனது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவருவதில் எந்த ரகசியமும் இல்லை. கடந்த 2018 ஆகஸ்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.1 ஆக வீழ்ச்சி கண்டிருந்தது. வெளிக் காரணிகளைச் சுட்டிக்காட்டி, எதுவுமே சம்பந்தம் இல்லாததுபோல் இந்த விவகாரத்தில் இருந்து நழுவியது மத்திய அரசு. மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடும்போது, ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே இருப்பதாகச் சொன்னார், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க். இதோ இந்தச் செய்திக் கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில், ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 71.74.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் பிரதமர் மோடி பேரமைதி காத்து வருகிறார். ஆனால், 2013இல் இதே பிரச்சினையில் கொந்தளிப்புக் காட்ட தவறவில்லை. ரூபாய் மதிப்புடன் சேர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் வீழ்ச்சி காண்பதாக, அவர் தனது ட்வீட்டில் பகடிக் கருத்தையும் பதித்திருக்கிறார். அவர் தனது ட்வீட்டுடன் ஒரு கட்டுரையையும் பகிர்ந்திருந்தார். அதில் “வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 ஆக இருந்தது. அதன்பின் ஒரு டாலரின் மதிப்பு ரூ.44 ஆகிவிட்டது” என்று மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
பெட்ரோல் விலை அதிகரிப்பு
பெட்ரோல் விலை குறித்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட கிராஃபிக் வரைபடம் ஒன்று, அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது நினைவிருக்கிறதா? 2004, 2009 மற்றும் 2014 ஆண்டுகளை விட 2018ஆம் ஆண்டு செப்டம்பர் நிலவரம் குட்டையாகக் கட்டம்போட்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. அதாவது, முந்தைய ஆண்டுகளை விட பெட்ரோல் விலை இப்போது குறைந்திருப்பது போன்றதொரு தோற்றம்.
சமூக வலைதளத்தில் பாஜகவையும் மோடியையும் வைத்துச் செய்து கலாய்த்தனர். ஆனால், இதைக் காட்டிலும் மோடிக்கு மிகுதியான சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது, அவரது மற்றொரு ஃப்ளாஷ்பேக் ட்வீட். அவர் 2012இல் குஜராத் முதல்வராக இருக்கும்போது, பெட்ரோல் விலை அதிகரிப்பை அப்போதைய மத்திய அரசின் ‘தோல்வி’ என்று வருணித்ததை இப்போது நோக்கும்போது இன்னும் சங்கடமாகவே இருக்கும்.
ஆதார் பாதுகாப்பு விவகாரம்
ஒருபக்கம் போராட்டங்களும், இன்னொரு பக்கம் ஆதார் அமைப்பு முறையில் பாதுகாப்பு குறைபாடுகளும் இருந்தபோதிலும், நாட்டில் அன்றாட வாழ்க்கையில் ஆதாரை இன்றியமையாதது ஆக்கியது மோடி அரசு.
எளிதான கூகுள் தேடல் வாயிலாகவே தனிநபர்களின் ஆதார் தகவல்களுடன் ஆயிரக்கணக்கான தரவுகளை எடுக்க முடியும் என்ற அளவுக்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் மிகுதியாக இருந்தபோதிலும், உதய் திட்ட நிர்வாகிகள் பெரிதாகக் கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு ஒருபடி மேலே சென்று பேசிய பிரதமர் மோடியோ, “நேர்மையற்றவர்கள், ஊழல்வாதிகள், இடைத்தரகர்கள் மட்டுமே ஆதார் காரணமாக கடுமையாக பாதிப்புக்குள்ளாவார்கள்” என்றார்.
ஆனால், மோடிக்கு ஆதாரில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு பிரச்சினைகள் குறித்து 2014ஆம் ஆண்டே தெரியும். ஆதார் மூலம் உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தனது கேள்விகளுக்கு அப்போதையை பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஆவேசமாக அவர் ட்வீட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.
ஆக, ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ‘உனக்கு நீயே மோசமான எதிரி’ என்று சொல்வதுண்டு. இது, ட்வீட் விஷயத்தில் பிரதமர் மோடிக்கு எழுத்துபூர்வமாக நிஜமாகிவிட்டது.
அடிலா மாத்ரா
நன்றி: தி க்வின்ட்
https://www.thequint.com/elections/social-dangal/cm-modi-is-pm-modis-biggest-enemy-reveal-old-tweets?fbclid=IwAR2jIqHiIN5ZQzxTT7WAid5l9QrjbYIM8JM8_Zi2IykVA7yXLJHinnXj3oA#gs.cBjMJl8E