சான்றோர்களின் குழு, இந்திய நீதித் துறை, ஊடகம், கல்வி, மருத்துவம், அரசியல் மற்றும் சமூக நலனுக்கான மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது.
நாங்கள் அக்கறை மிகுந்த குடிமக்களின் குழுவைச்சேர்ந்தவர்கள். நாங்கள் பலவகையான அரசியல் கருத்துக்களையும் சார்பையும் கொண்டிருந்தாலும், நம்முடைய ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கை, அரசியல் சாசனத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பது, பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயக குடியரசு எனும் கருத்தாக்கத்தை ஏற்பது ஆகியவற்றில் ஒன்றுபடுகிறோம். அண்மைக் காலமாக, குடியரசு எதிர்கொள்ளும் பலவிதமான சவால்களால் மிகவும் கவலையடைந்துள்ள நிலையில், இந்தச் சவால்கள் குறித்து ஆழமாக அலசிப்பார்த்து, நம்முடைய ஜனநாயக சமூகத்தையும் ஒற்றுமையான சமூகத்தின் அரசியல் சாசனப் பாதுகாப்புகளையும் பாதுகாத்து, வலுப்படுத்துவதற்கான வழிகளை சக குடிமக்களிடம் முன்வைக்க முற்பட்டுள்ளோம். எதிர்வரும் மக்களைத் தேர்தலை, நம்முடைய குடியரசைத் தவறான கையாளுதல், அடக்கி ஆளுதல் ஆகியவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்கான சரியான வாய்ப்பாகக் கருதுகிறோம்.
இன்றைய சூழ்நிலை, சட்டம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உடனடி சீர்திருத்த்தைக் கோருகிறது. இதற்கு, முதலில், தற்போதையை ஆளும் கட்சி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை சரி செய்ய வேண்டும் அல்லது நீக்க வேண்டும்: நம்முடைய நாட்டில் முறையான சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும், நீதித்துறை, ஊழலுக்கு எதிரான நிறுவனங்கள் ஆகியவற்றில் தலையிடாமல் இருக்க வேண்டும், நிர்வாக அமைப்புகளில் நேர்மையான தன்மை இருக்க வேண்டும். இறுதியாக, நம்முடைய ஊடகம், தேசிய நிகழ்வுகளைச் சுதந்திரமாக, துல்லியமாக, பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும். ஆனால், பாதிப்புகளைச் சரி செய்வது என்பது, பழைய நிலைக்குத் திரும்ப வைத்தல் மட்டும் அல்ல. எதிர்காலத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில், மறுகட்டுமானம் செய்வதையும் போதுமான நடவடிக்கைகளையும் உறுதி செய்ய வேண்டும். நீதி, சுதந்திரம், சமத்துவம், அரவணைப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான அரசியல் சாசன உறுதி கொண்டு, அந்த திசையிலான செயல்திட்டங்களை நிறைவேற்றும் வரை, இந்தச் செயலில் பெரும்பாலான இந்தியர்களை நம்மால் ஈடுபடுத்த முடியாது.
இதற்கேற்ப, மறுசீரமைப்பு, மீட்சி, பயிற்சிக்கான செயல்திட்டங்களையும் எண்ணங்களையும் உங்கள் முன் வைக்கிறோம்:
ஜனநாயக உரிமைகள்
1) தனிப்பட்ட உரிமைகளைக் கட்டுப்படுத்தி, அரசியல் செயல்பாட்டாளர்களை அச்சுறுத்தத் தவறாக பயன்படுத்தப்படும் காலாவதியானதும் கொடுமையானதுமான சட்டங்களை நீக்க வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ பிரிவு (பிரிவினை), 499 (அவதூறு), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்வது, வெளிநாட்டு பங்களிப்புக் கட்டுப்பாடு சட்டம், ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரம் சட்டத்திற்கான திருத்தங்கள், நீதித்துறை, சட்டமன்றங்கள் தொடர்பான அவதூறு சட்டங்களில் திருத்தம் ஆகியவை தேவை.
2) தேர்தல்களில் பணத்தின் ஆற்றலைக் குறைத்து, நம்முடைய தேர்தல் முறையை மேலும் ஜனநாயகமயமாக்குவதற்காகத் தேர்தல் சீர்திருத்தங்கள்.
தேர்தல் பத்திரத் திட்டம் போன்ற, தேர்தல் நிதி தொடர்பான அண்மைக்காலப் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும். தேர்தல் நிதி சீர்திருத்ததிற்கான விரிவான சட்டம் கொண்டு வந்து, தேர்தலுக்கு அரசு நிதி வழங்குவதற்கான தேசியத் தேர்தல் நிதியை அமைத்தல்.
3) ஊடகங்களை சுதந்திரமானதாக, பரந்த தன்மை கொண்டதாக, சுதந்திரமான கட்டுப்பாட்டாளரின் கீழ் அதிக பொறுப்பு மிக்கதாக ஆக்குவதற்காக ஊடகச் சீர்திருத்தங்கள்.
ஒலி / ஒளிபரப்புக்கான முந்தைய தணிக்கை, ஊடகங்களின் இணையத்தை முடக்குதல் போன்றவற்றைத் தவிர்க்க வழி செய்யக்கூடிய வகையில் அமெரிக்காவில் இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் அமென்ட்மென்டுக்கு (முதல் திருத்தம்) இணையான ஊடக சுதந்திர மசோதா பிறப்பிக்கப்பட வேண்டும். சுதந்திரமான அரசியல் சாசன அதிகாரம் கொண்ட உரிமம் வழங்கும் அமைப்பு, சுதந்திரமான முறையிடும் அமைப்பு ஆகியவற்றை அமைப்பது, பிரசார் பாரதியை உண்மையான சுதந்திரப் பொதுத்துறை ஊடகமாக மாற்றுவது ஆஇய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நலவாழ்வு அரசு
4) அனைவருக்குமான அடிப்படைச் சேவைகள், சமூகப் பாதுகாப்பு
கல்வி, மருத்துவம், தாய் சேய் நலம் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட தரமான சமுக சேவைகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் பொது விநியோக முறை மூலம் உணவு பாதுகாப்பு, மேலும் ரேஷனில் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள். பருப்புகள் மற்றும் எண்ணெய், குறைந்தபட்சக் கூலியில் பாதி அளவுக்கேனும் முதியவர்களுக்கான ஓய்வூதியம், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான சிறப்பு திட்டங்கள், வேலைவாய்ப்புக்கு உகந்த நிதி கொள்கை, பொது நலனை உருவாக்கும் முதலீட்டில் செலவுகளை அதிகரித்து வேலைவாய்ப்பை அதிகரிப்பது.
5) உறுதியான வருமானம், கடனிலிருந்து விடுதலை, நீடித்து நிற்கும் விவசாய முறைகளை உள்ளடக்கிய விவசாயிகளுக்கான புதிய திட்டம்.
விவசாய விளைபொருள்களுக்கான ஆதரவு விலைக்கான உறுதி (குறைந்த பட்சம் பயிர் செலவில் 50 சதவீதம்), ஒருமுறை விரிவான கடன் தள்ளுபடி, தேசியக் கடன் நிவாரணத் தீர்ப்பாயம், பேரிடல் இன்னல் பாதிப்பிலிருந்து குறித்த காலக் கெடுவுக்குள்ளான நிவாரணம், ஊள்ளிடு செலவு குறைப்பு, பசு வர்த்தகம் மீதான அனைத்து சட்ட, கண்காணிப்புத் தடைகளை நீக்குவது, விவசாயிகளுக்கான அனைத்து நலன்களையும் குத்தகை விவசாயிகளுக்கும், பெண் விவசாயிகள், பகிர்வு முறையில் பயிரிடுபவர்கள், ஆதிவாசி விவசாயிகள், நிலமில்லா விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் ஆகியோருக்கும் விரிவாக்குவது.
6) கல்வி பெறும் உரிமையை நடைமுறை யதார்த்தமாக்குவது.
அரசுப் பள்ளிகள் போதிய நிதியும் ஆசிரியர்களையும் பெற வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் கல்விக்கான உரிமையை அமல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தை (ஆர்டிஇ) 16 வயது வரை விரிவாக்குவது. காலியிடங்களை நிரப்பி ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவது. அனைவருக்குமான கல்வி அறிவையும் எண்ணறிவையும் உறுதி செய்வதற்கான தேசிய பிரச்சாரம்.
7) போதிய நிதி பெற்ற, கட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்கள்.
மாநிலப் பல்கலைக்கழகங்கள், சார்புக் கல்லூரிகளைப் புத்துயிர் பெற வைப்பதற்கான சிறப்புத் திட்டத்துடன், பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு ஜிடிபியில் ஒரு சதவீத நிதி; சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய அனைத்து மாணவர்களுக்கும் ஃபெலோஷிப் தொகை பத்து மடங்கு உயர்வு. உயர் கல்வி நிலையங்களின் தன்னாட்சியை மீட்டு, வலுப்படுத்துதல்.
8) பொது மருத்து முறை மூலம் அனைவருக்குமான செலவு குறைந்த மருத்துவ நலன்.
மருத்துவ நலனுக்கான அரசின் செலவை ஜிடிபில் 3 சதவீதமாக உயர்த்துவது, இந்த உயர்வில் மூன்றில் நான்கு மடங்கை மத்திய அரசு ஏற்க வேண்டும். அடிப்படை சுகாதாரம், நோய்த் தடுப்பு, நல மருத்துவம் ஆகியவற்றில் கவனம். பொது மருந்துகளை இணைந்து கொள்முதல் செய்தல், வலுவான பொது சுகாதார ஊழியர்கள், தனியார் மருத்து அமைப்பு மற்றும் கல்லூரிகள் கட்டுப்பாடு.
9) தற்போதைய 100 நாள் வேலைத் திட்டத்தை (எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ.) ஆண்டுக்குக் குறைந்தபட்சக் கூலியில் 150 நாட்களுக்குப் பணி என விரிவாக்கம் செய்தல்.
கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் குறைந்தபட்ச ஊதியத்துடன் அனைவருக்கும் 150 நாட்கள் வேலை உறுதி அளிப்பது.
10) கல்வி, மருத்துவம் முதலான பொதுச் சேவைகளில் அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படுவது.
அங்கன்வாடி, எம்.டி.எம். ஆஷா மையங்கள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் உள்பட, அத்தியாவசியச் சேவைகளில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் (கல்வி, மருத்துவம், தூய்மைபடுத்தல்) அரசு ஊழியர்களாகக் கருதப்பட வேண்டும்.
11) கூடுதல் செலவுகளை ஈடுசெய்ய வருவாய் பெருக்கத்திற்கான வழிகள்.
ரூ.10 கோடிக்கு மேல் வருமானமுள்ள பிரிவில் உள்ளவர்களுக்கு 20 சதவீத செல்வ வரி, வாரிசுரிமை வரி, லாபத்துடன் அல்லாமல் விற்றுமுதலுடன் தொடர்புகொண்ட வர்த்தக சமூக வரி, கார்பன் கமிஷனைக் கட்டுப்படுத்த பசுமை வரி, மாசு வரி ஆகியவற்றை விதிக்கலாம். இது ஜிடிபில் 3 முதல் 5 சதவீத கூடுதல் வருவாய் அளிக்கும்.
12) சுற்றுச்சூழல் விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்தலுக்கான சுதந்திரமான, அதிகாரம் மிக்க சுற்றுச்சூழல் ஆணையம்.
நதிகளைப் பாதுகாக்கத் தன்னாட்சி அமைப்பு, அதிக மாசு உள்ள பகுதிகளில் காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்கான மையங்கள், அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றுவதற்கான தேசிய எரிசக்தி கொள்கை, பொதுப் போக்குவரத்துக்கும் மோட்டார் அல்லாத தனியார் வாகங்களுக்கும் ஊக்கம். எண்ணெய் இயற்கை எரிவாயு ஆகியவற்றை தேசியமயமாக்க வேண்டும். சமூகத்தை இயற்கைச் செல்வத்தின் பாதுகாவலர்களாக, அறங்காவலர்களாக, பங்குதாரர்களாகக் கொள்வது.
சமூக நிதி
13) முடிவெடுத்தலில் பெண்களுக்கு முக்கிய பங்கு
நீதித் துறை, காவல் துறை ஆகியவற்றுடன் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளிக்க அரசியல் சாசனத் திருத்தம்.
14) வெறுப்பை எதிர்ப்பதற்கான விரிவான சட்டம்.
இத்தகைய சட்டத்தைப் பிறப்பிப்பதுடன், இது முறையாக நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிடச் சமவாய்ப்பு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். இந்தச் சட்டம் பலவீனமான அனைத்துக் குழுக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக, அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மதச் சிறுபான்மையினர், விளிம்பு நிலைக் குழுக்கள் மீதான வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க கூடியதாக இது அமைய வேண்டும். பழங்குடியினருக்கான துணைத் திட்டம், பழங்குடியினர் தங்கள் நிலத்திலிருந்து அந்நியமாதலைத் தடுப்பதற்கான சிறப்பு திட்டத்தையும் அதற்கேற்ற சட்ட ரீதியான மாற்றங்களையும் இது கொண்டிருக்க வேண்டும்.
15) பலவீனமான சமூகக் குழுக்களுக்கு சிறப்பு திட்டங்கள்.
மனிதர்கள் மலம் அள்ளுவது, சாக்கடைக் கழிவு அகற்றுவது ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கான தேசியத் திட்டம். மனிதர்கள் மலம் அள்ளுதலைத் தடைசெய்தல் மற்றும் அவர்கள் மறுவாழ்வுக்கான சட்டம் 2013ஐ முழுமையாக நிறைவேற்றுவது. பழங்குடியினர் பட்டியலிலிர்ந்து நீக்கப்பட்டோர், நாடோடிகள், பாதி நாடோடிகள் ஆகியோருக்குக் கல்வி, வீடு முதலான வசதிகளையும் அவரகளது மேம்பாட்டிற்கான ஆதரவையும் அரசு அளிக்க வேண்டும். அரசு மற்றும் பொது நிறுவனங்களின் அனைத்துத் திட்டங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும் வகையில் கட்டாய ஆய்வு நடத்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கான குழந்தைகள் நலன், அனைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஐசிடிஎஸ் ஒருங்கிணைப்பு.
வெளிப்படையான நிர்வாகம்
16) ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் அமைப்புகளின் பாதிப்பைச் சரி செய்வது.
ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிற்போக்கான திருத்தங்களை நீக்குவது, வெளிப்படையான முறையில் லோக்பால் அமைப்பது, முறைகேடுகலை அம்பலப்படுத்துவோருக்கான பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவது, புகார் நடவடிக்கை மசோதாவைக் கொண்டுவருவது.
17) பொறுப்பேற்கும் தன்மையும் வெளிப்படையான தன்மையும்.
சிபிஐ, சிவிசி, சி.ஏஜி போன்ற கண்காணிப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது, தகவல் அறிவதற்கான நிர்வாக முறைமையை வலுப்படுத்துவது, சட்டமியற்றுவதற்கு முந்தைய உரையாடலை அறிமுகம் செய்வது, அனைத்துப் பொதுத் திட்டங்களுக்குமான சமூக ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
18) நீதித் துறையை மேலும் சுயேச்சைத்தன்மை மிக்கதாக, செயல்திறன் மிக்கதாக, வெளிப்படையானதாக, பிரதிநித்துவம் கொண்டதாக, பொறுப்பேற்கும் தன்மை மிக்கதாக ஆக்குவது.
நீதிபதிகளைத் தேர்வு செய்து நியமிக்க சுயேச்சையான நியமன கமிஷன்கள், சுதந்திரமான புகார் கமிஷன், தொழில்முறை நீதிமன்ற நிர்வாகக் குழு, நீதிமன்றச் செயல்பாடுகள் வீடியோ பதிவு ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
19) பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 7 வழிகாட்டுதல்படி காவல் துறை சீர்திருத்தம்.
2006 மாதிரி காவல் துறை மசோதா, காவல் துறை – அரசு அமைப்புக்கு இடையிலான உறவுக்கான நல்ல தொடக்கப் புள்ளி.
பிரஷாந்த் பூஷண், அஞ்சலி பரத்வாஜ்
குடியரசை மீட்போம், (ரிகிளைம் தி ரிபப்ளிக்) உறுப்பினர்கள் ஆதரவு
நீதிபதி ஏபி ஷா (ஒருங்கிணைப்பாளர்)
பிரஷாந்த் பூஷண் (ஒருங்கிணைப்பாளர்)
அஞ்சலி பர்தவாஜ் (ஒருங்கிணைப்பாளர்)
அகார் பட்டேல்
அருணா ராய்
பெஸ்வடா வில்சன்
தீபக் நாயர்
இ.ஏ.எஸ். சர்மா
கோபால் குரு
கோபால் காந்தி
ஹர்ஷ் மந்தர்
ஜயதி கோஷ்
கவிதா கருகந்தி
கிருஷ்ண குமார்
நிகில் தே
பால் திவாகர்
பிரபாத் பட்னாயக்
பி.சாய்நாத்
எஸ்.பி. சுக்லா
ஸ்ரீநாத் ரெட்டி
சுஜாதா ராவ்
சக்தி செல்வராஜ்
ரவி சோப்ரா
சயேதா ஹமீத்
விபூல் முத்கல்
வஜஹத் ஹபிபுல்லா
யோகேந்திர யாதவ்
நன்றி: ஸ்க்ரால்.இன்
https://scroll.in/article/912101/manifesto-for-change-reclaiming-the-republic-19-issues-for-elections-2019