இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினை, எதிர்பார்த்ததை விடவும் மோசமாக இருக்கலாம்
அரசாங்கமோ, ஏன் நீங்களேகூட கவனிக்கத் தவறிய பிரச்சினைதான் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம். சென்ற மாதம் அரசாங்கம் அவசரமாக அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து, “பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு” 10 சதவீத அரசாங்க வேலைகளை ஒதுக்கீடு செய்தது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் யாரென்றால், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக (சுமார் 11,200 அமெரிக்க டாலர்) வருமானம் உள்ள அல்லது மிகச் சிறிய அளவில் நிலம் வைத்திருக்கிற எந்தவொரு குடும்பத்தையும் சேர்ந்தவர் என்று அரசாங்கம் வரையறுத்துள்ளது. இந்த வரையறை இந்திய மக்கள்தொகையில் 95 சதவீதத்தைத் தொடுகிறது என்கிறார் சமூகவியலாளர் சோனால்டே தேசாய்.
ஒரு இட ஒதுக்கீடு கிட்டத்தட்ட எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்றால் அதிலே அர்த்தமே இல்லை. ஆனால், இதைக்காட்டிலும் மோசமான இன்னொரு அம்சம் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் இருக்கிறது. இந்தியாவின் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த, வேறு உறுதிப்பாட்டுச் செயல் நடவடிக்கைகளால் பயன்பெறுகிற தனிமனிதர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? அமெரிக்க அரசாங்கம் தனது 10 சதவீத வேலைகளில் 10 சதவீதத்தை, மிகப் பெரும் பணக்காரர்களான 5 சதவீதத்தினர் தவிர்த்து எல்லோருக்குமாக ஒதுக்கி அறிவிப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் அதற்கு ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று ஆணையிட்டால் எப்படி இருக்கும்? அதே போலத்தான் இருக்கிறது இந்திய அரசாங்கத்தின் இந்த ஒதுக்கீடு.
இந்த நிலைமைக்கு இந்தியா வந்தது எப்படி? அதுவும், 2014 தேர்தலில், அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியின் மேலேயும் அமர்ந்து சவாரி செய்து அதிகாரத்திற்கு வந்தவரான பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்த நிலைமை ஏற்பட்டது எப்படி? அப்போது பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் இந்திய உழைப்பாளிகள் படை பற்றி, “நமது வளர்ச்சியின் தூண்” என்று வர்ணித்திருந்தது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவாகிய தொழிலாளர் மையம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2013-14ல் இந்தியாவின் வேலையின்மை அளவு 4.9 சதவீதம். ஆனால், விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசாங்க அமைப்பாகிய தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தயாரித்துள்ள, அரசாங்கம் வெளியிடாமல் நிறுத்திவைத்துள்ள ஆய்வறிக்கையில், 2017-18இல் இந்தியாவின் வேலையின்மை 6.1 சதவீதம் – கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அதிக அளவு – என மதிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலவரத்தை மதிப்பிடுவதில் உள்ளார்ந்த சிரமம் இருக்கிறது. அதற்கு ஒரு காரணம், குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட ஊதியத்தில் முறையான பணி என்ற, வேலை என்பதற்கான வரையறையே தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளிலிருந்து வந்ததாகும். ஆனால், இந்தியாவில் வேலையில் இருக்கிற அல்லது வேலை தேடுகிற 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முறைசாராத் துறை சார்ந்தவர்களே என்று பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களில் பலர், வேலை கொடுக்கிற பலருக்காகப் பல்வேறு மாறுபட்ட வேலைகளைச் செய்பவர்களாவர். பொருளாதார வல்லுநர்களால் துல்லியமாக மதிப்பிட முடியாத அளவுக்கு அவர்களது பணிமுறைகள் சிக்கலானவை.
வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ என்எஸ்எஸ்ஓ அறிக்கையை அரசாங்கம் வெளியிடாமல் முடக்கிவைத்துள்ளது. இது சிக்கலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. நாம் நினைப்பதை விடவும் மோசமாக இருக்கிறது என்ற சந்தேகத்தை மூட்டிவிட்டுள்ளது. வெளியிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பப்பட்டுவிட்ட போதிலும், தங்கள் அலுவலகத்தின் அறிக்கையை வெளியிடுவதில்லை என்ற முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்க அதிகாரிகள் அல்லாதவர்களான என்எஸ்எஸ்ஓ உறுப்பினர்கள் இரண்டு பேர் கடந்த வாரம் பதவி விலகினர்.
வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாகப் பொருளாதார வல்லுநர்கள் வழக்கமாக எடுத்துக்கொள்கிற மற்றொரு அதிகாரப்பூர்வ அறிக்கை, தொழிலாளர் மையம் வெளியிடும் புள்ளிவிவரமாகும். கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக அந்தப் புள்ளிவிவரம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது – 2016 வரையில். அந்த ஆண்டில் திடீரென்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் அந்த அறிக்கைகளை இனித் தொடர்ந்து வெளியிடுவதில்லை எனத் திடீரென முடிவெடுத்தது.
இந்தத் தகவல் இருட்டடிப்பு இந்தியாவில் வழக்கத்துக்கு மாறானதாகும். உலக அளவில் புள்ளிவிவர அடிப்படையில் தகவல்களைத் திரட்டுவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்று நோபல் விருது பெற்ற பொருளாதார ஆய்வாளர் ஆங்கஸ் டீட்டன் உள்படப் பலரும் பாராட்டியுள்ளனர்.
இப்போது ஆய்வாளர்கள் வேறு தகவல்களையும், நேரடியாக வராத ஆதாரங்களையும், தனிப்பட்ட ஆய்வு முடிவுகளையுமே சார்ந்திருக்க வேண்டியவர்களாகிறார்கள்.
அந்த ஆய்வுகள் கூறும் தகவல்கள் பதறவைக்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துத் தகவல்களைத் திரட்டிவரும் மரியாதைக்குரிய வணிகத் தகவல் நிறுவனம் ‘தி சென்டர் ஃபார் மானிட்டரிங் தி இந்தியன் எகனாமி’ (இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்). நாட்டின் வேலையின்மை நிலவரம் 2018 டிசம்பரில் 7.38 சதவீதத்தை எட்டிவிட்டது என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைக்கத்தக்க வேலைவாய்பு மையம் மேற்கொண்ட ‘உழைக்கும் இந்தியாவின் நிலை – 2018’ என்ற விரிவான ஆய்வின்படி, இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு தற்போது 16 சதவீதமாக உள்ளது. சேவைத்துறை வேலைகளில் உள்ள பெண்கள் 16 சதவீதத்தினர்தான். 2011ல் உயரதிகாரிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளில் 13 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். 2015இல் அவர்களின் பங்கு 7 சதவீதமாகச் சரிந்துவிட்டது.
மக்களின் அவதிக் கதைகளைக் கூறும் தகவல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ரயில்வே நிர்வாகம் சுமார் 89,400 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்தது. அரசாங்க வேலை என்பது இந்தியாவில் எப்போதுமே மரியாதைக்குரியதுதான். ஏனெனில் அது பாதுகாப்பானது, கண்ணியமான ஊதியம் தருவது. அந்த 89,400 பணியிடங்களுக்காக வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு தெரியுமா? 2 கோடியே 30 லட்சம்! இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலகத்திலிருந்து, அதன் உணவக ஊழியர் வேலைக்காக 13 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்தது. மொத்தம் 7,000 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. அவர்களில் பலர் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் திடமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனால் பயன்பெறுகிறர்கள் முற்றிலும் மேல்தட்டில்தான் குவிந்திருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினரும் அடிநிலை நடுத்தர வர்க்கத்தினரும் பெண்களும் இளைஞர்களும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
இதெல்லாம் 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது (மிக மோசமாக வழிகாட்டப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே அது என்பது இன்று உறுதியாகிவிட்டது), மறைமுக வரி விதிப்பு முறையை சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) என்று மாற்றியது (அது ஒரு நல்ல நடவடிக்கை, ஆனால் படுமோசமாகச் செயல்படுத்தப்பட்ட, சிறு தொழில் நடத்துவோரைப் பெரிதும் பாதித்த நடவடிக்கை அது) போன்ற அரசாங்க முடிவுகளால் ஏற்பட்ட தற்செயல் விளைவுகள் அல்ல. பல்வேறு வழிகளில் இங்கே சமத்துவமின்மை வளர்ந்திருக்கிறது. இதனை அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் பாகுபாட்டோடு, சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டவைதான். சிறு நிறுவனங்களையும் வணிகர்களையும் விவசாயத் துறையையும் பெரும்பாலான தொழிலாளர்களையும் கைவிட்ட கொள்கைகள் அவை. அந்தக் கொள்கைகளின் விளைவுகள்தான் இன்று கண் முன் நிற்கின்றன.
கௌஷிக் பாசு
(கட்டுரையாளர் 2012 முதல் 2016 வரையில் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராகவும், 2009 முதல் 2012 வரையில் இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியவர். தற்போது அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகப் பன்னாட்டு ஆய்வுத் துறைப் பேராசிரியராக இருக்கிறார்.)
நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்
https://www.nytimes.com/2019/02/01/opinion/india-unemployment-jobs-blackout.html#click=https://t.co/x0W6JV0yf5
தமிழில்: அ. குமரேசன்