அதீதமான தன்முனைப்பே மோடியின் அடையாளமாக வரலாற்றில் நிற்கும்.
நம்முடைய பிரதமர்கள் அனைவருமே தத்தமது தனித்துவமான அடையாளத்தை விட்டுச்சென்றிருக்கின்றனர். பல நேரங்களில் இந்த மரபு கலைவையாக இருந்துள்ளது. இது அவர்கள் விரும்பிய வகையிலேயே உள்ளது என்று சொல்வதற்கில்லை.
ஜவகர்லால் நேரு, விஞ்ஞானம், மதச்சார்ப்பற்ற தன்மை ஆகியவற்றின் மீதான தீவிர ஈடுபாட்டிற்காக அறியப்படுகிறார். காஷ்மீர் சிக்கலுக்காகவும் அவர் அறியப்படுகிறார். 1962இல் சீனாவுடனான போர் தோல்விக்காகவும்தான்.
இன்னொரு பக்கம் பார்த்தால் லால் பகதூர் சாஸ்திரி 1965இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்காக, அவர் உருவாக்கிய ஜெய் கிசான் ஜெய் ஜவான் எனும் கோஷத்திற்காக, தாஷ்கண்டில் சந்தித்த மர்ம மரணத்திற்காக அறியப்படுகிறார்.
இந்திரா காந்தி வறுமையை ஒழிப்போம் போன்ற ஏழைகள் ஆதரவுக் கொள்கைக்காகவும், அணிசேரா நாடுகள் இயக்கத்தை முன்னின்று நடத்தியதற்காகவும், நெருக்கடி நிலை, ஆப்பரேஷன் புளுஸ்டார் ஆகிய நடவடிக்கைகளுக்காகவும் அறியப்படுகிறார்.
ராஜீவ் காந்தி இந்தியாவில் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்தது, தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது, போபர்ஸ் ஊழல் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறார்.
நரசிம்ம ராவ், பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததற்காகவும் பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்கப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவும் அறியப்படுகிறார்.
அடல் பிஹாரி வாஜ்பாயி 13 கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சியைத் திறம்பட நடத்தியதற்காகவும், பொக்ரான் அணு ஆயுதச் சோதனைக்காகவும், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்னும் பிரச்சாரத்தை மீறி பாஜக படுதோல்வி அடைந்ததற்காகவும் அறியப்படுகிறார்.
மன்மோகன் சிங், இந்தியாவை ஆண்டவர்களில் மிகுந்த கல்வித் தகுதி மிக்கவராக அறியப்படுகிறார். தனது பதவிக் காலத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியதற்காகவும் அவர் அறியப்படுகிறார். ஆனால், தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மலிந்த ஊழலை கட்டுப்படுத்த எதுவும் செய்யவில்லை என்பதற்காகவும் ஆர் அறியப்படுகிறார்.
எல்லாம் சரி, நரேந்திர மோடி எதற்காக நினைவுகொள்ளப்படுவார்?
பிரதமராக ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் நிலையில் தீர்ப்பு பிளவுபட்டதாக இருக்கிறது. அவரது ரசிகர் பட்டாளம், “இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச்செய்தற்காக” அவரைக் கொண்டாடுகிறார்கள். வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், முஸ்லிம்களை அவர்கள் இடத்தில் வைத்து இந்துப் பெருமையை நிறுவியவர் எனவும் அவர்கள் அவரைப் புகழலாம்.
விமர்சகர்கள், அவரை அதிக அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவராக, மத துவேஷம் கட்டுப்படுத்தப்படாமல் கொழுந்துவிட்டு எரிய அனுமதித்தவராக நினைவுகூரலாம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை, மோசமாகச் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்பு, ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தியது ஆகிய, விமர்சனங்களை அவர் மீது விமர்சகர்கள் வைக்கலாம்.
பிரதமரின் தீவிர ஆதரவாளர்கள், அமைச்சர்கள்/ செய்தித் தொடர்பாளர்கள் (இவர்கள் வேலை தங்கள் வாதத்திற்கு ஏற்பத் தகவல்களை வளைப்பது) தவிர, இந்தியாவில் உள்ள வெகு சிலரே, நரேந்திர மோடி தான் ஆட்சிக்கு வர உதவிய வாக்குறுதிகளை நிறைவேற்றினார் எனக் கூறுவார்கள். ஆண்டுக்குக் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இந்தியாவை உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவது, ஊழலை ஒழிப்பது, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக இந்தியாவை மாற்றுவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, எல்லோருக்கும் நல்ல காலத்தைக் கொண்டுவருவது ஆகிய வாக்குறுதிகள் இதில் அடங்கும்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, மோடியின் தன்முனைப்புதான் அவரைப் பற்றி நினைவில் கொள்ளப்படக்கூடிய மிக முக்கியமான விஷயமாக இருக்கும்.
2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி தனது 56 அங்குல மார்பு பற்றிப் பெருமையாக பேசிய போது இந்திய மக்கள் அவரது தன்முனைப்பின் லேசான கீற்றை முதலில் பார்த்தனர் (நமக்குத்தெரிந்தவரை வேறு எந்த பிரதமரும் வெளிப்படையாக தங்கள் உடல் அம்சம் பற்றிப் பேசியதில்லை).
அதன் பிறகு செல்ஃபீக்கள் மற்றும் காமிரா கலைஞர்களுடனான ஈடுபாடு வந்தது. தான் புகைப்படத்தில் சரியாகப் பதிவுபெற வேண்டும் என்பதற்காகப் பாதுகாவலர்களையும் மார்க் ஜக்கர்பர்கையும்கூடப் பிரதமர் தள்ளிவிட்ட சிறிய வீடியோ காட்சி வைரலானது. ஒரு பத்திரிகையாளரின் டெலிபோட்டோ லென்ஸ், அவரது 10 லட்சம் சூட் பட்டையைக் கவனித்த போது அதில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. பிரதமரின் சுயமோகம் தீவிரமானது என்பதை இது நாட்டுக்கு உணர்த்தியது.
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என அரசுத் திட்டங்கள் எல்லாம் பிரதமர் எனும் வார்த்தையோடு அறிமுகம் செய்யப்பட்டபோது இந்த எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.
ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இந்தியக் குடிமக்கள் பிரதமரின் முகத்தை- அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள், விளம்பரப் பலகைகள், காலண்டர்களில், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என எல்லா இடங்களிலும் காணத் துவங்கினர். இந்த மண்ணின் தலைவர்கள், பண்டைக் காலம் முதல், அரசியல் மீதான தங்கள் கட்டுப்பாட்டையும் வரலாற்று அடையாளத்தையும் விட்டுச்செல்வதற்காக நாணயங்களிலும் தூண்களிலும் தங்கள் முகத்தைப் பொரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், 2014 முதல் 2019 வரை தனது தலைவரை முன்னிறுத்துவதற்காக பாஜக அரசு செலவிட்டது போல விளம்பரத்துக்காகச் செலவு செய்த அரசை மக்கள் இதுவரை கண்டதில்லை.
மற்ற எவரைப் பற்றிய கவலையும் இல்லாமல் ஆபத்தான வகையில் தன் மீது கவனம் கொண்டிருக்கும் ஒருவரைத் தன்முனைப்பாளர் என நவீன உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த இடத்தில் தன்முனைப்பு என்பது ஆணவம், சுயநல லட்சியம், சொந்த முக்கியத்துவம் மீதான ஆரோக்கியமில்லாத நம்பிக்கையை குறிக்கிறது. தன்முனைப்புத்தன்மை பல நேரங்களில் மது போதையுடன் ஒப்பிடப்படுகிறது. இரண்டுமே மிகவும் போதைத்தன்மை மிக்கவை. தங்களுக்கு அடிமையானவர்களை யதார்த்தத்திலிருந்து விலக்கி வைக்கக்கூடியவை.
இரண்டுக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாட்டை ஹரோல்ட் கிரீன் வார்த்தைகளில் கூறுவது எனில், “தன்முனைப்பாளர் தடுமாறுவதில்லை. அவர் கோபத்தில் மேஜையில் உள்ள பொருட்களைத் தள்ளிவிடுவதில்லை. அவருகுத் தடங்கலோ திக்கலோ ஏற்படுவதில்லை. மாறாக அவர் மேலும் மேலும் ஆவேசமடைகிறார். சிலர், இந்த அணுகுமுறையின் கீழ், மறைந்துள்ள ஆவேசத்தின் பின் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் அதிகாரம், சுய நம்பிகை ஆகியவற்றின் அடையாளமாகக் கொள்ளும் தவறைச் செய்கின்றனர்”.
ஒரு நாட்டின் தலைவருக்குக் கட்டுப்படுத்தப்படாத தன்முனைப்பு மிகவும் ஆபத்தானாதாகும். ஏனெனில் அது உண்மையான தலைமைப் பண்புகளை அடைத்துவிடுகிறது. தன்முனைப்பு கொண்ட தலைவர்கள் மற்றவர்களோடு இணைந்து செயல்பட முடியாதவர்களாக இருக்கின்றனர், ஏனெனில் அவர்கள் மற்றவர்கள் கருத்துகளை முக்கியமாக கருதுவதில்லை. தங்களைவிடத் தகுதி மிக்கவர்களிடமிருந்து நல்ல கருத்துகளைப் பெறும் தன்மை இல்லாததால் அவர்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கின்றனர். அவர்கள் தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் மற்றவர்களிடம் பரிவு காட்ட முடிவதில்லை. அவர்கள், அரசியல் எதிரிகளை அழிக்க வேண்டிய பகைவர்களாகப் பார்க்கின்றனர்.
தன்முனைப்பு கொண்ட தலைவர்கள் தங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க அல்லது தங்கள் குறைகளை ஒப்புக்கொள்ள முடியாதவர்களாகத் விளங்குகின்றனர். திறமையின்மை அல்லது நேர்மையின்மை கண்டறியப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் கவலையும், அச்சமும் மிக்கவர்களாகிவிடுகின்றனர். அதிக அளவில் மேற்கொள்ளப்படும் தவறான முடிவுகள் இந்த வகையான தலைமையின் மோசமான தன்மையும் அதற்காக நாடு கொடுக்க வேண்டிய விலையும் இந்த வகையிலான தலைமையின் மோசமான தன்மை.
மோடியின் ஆண்டுகள் 2019ல் முடிவுக்கு வருமா அல்லது இன்னும் தொடருமா (இந்த வகை தன்முனைப்புத் தலைமையின் கீழ் இந்தியா எப்படி இன்னும் 5 ஆண்டு தாக்குப்பிடிக்கும் என்னும் கவலை இருந்தாலும்) என்பது தெரியவில்லை. அது எப்படி இருந்தாலும், அரசியல் விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள், உளவியல் வல்லுனர்கள், மோடியின் கொள்கை, முடிவுகளையும் உறவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்வார்கள். அவர்கள் பல கேள்விகளைக் கேட்பார்கள்:
அனுபவம் மிக்க பலர் வேண்டாம் என கூறியும், நாட்டின் மீது பணமதிப்பு நீக்கம் எனும் பாதிப்பை பிரதமர் ஏற்படுத்தியது ஏன்? அரைகுறையான தன்மையில் அவர் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தது ஏன்? அவர் ஏன் துதிபாடிகள் மட்டுமே தன்னைச் சூழ அனுமதித்தார்? கூட்டணிக் கட்சிகள் ஏன் ஒவ்வொன்றாக அவரை விட்டு விலகிச் சென்றன? நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு அவர் காலட்தில் சிக்கலானது ஏன்? பல எச்சரிக்கைக் குரல்களை மீறி அவரது தன்முனைப்பு ஆதிக்கம் செலுத்தியதுதான் இவற்றுக்கான காரணமா?
எல்லாப் பிரச்சினைகளுக்குக் தீர்வை வைத்திருக்கும் வலுவான தலைவர் எனும் பிம்பம் வெறும் மாயைதான். கடந்த 5 ஆண்டுகள் அதைத் தெளிவாக உணர்த்திவிட்டன. 21ஆம் நூற்றாண்டு சிக்கலான காலகட்டம். அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள நமக்குக் காதுகொடுத்துக் கேட்ககூடிய, இணைந்து செயல்படக்கூடிய, கற்றுக்கொள்ளக்கூடிய, பரிவு மிகுந்த, துணிச்சலான ஆனால் சுய நலமற்ற, சுயம் சாராத முடிவுகளை எடுக்ககூடிய தலைவர்கள் 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவை.
ரோஹித் குமார்
(ரோஹித் குமார் கல்வியாளர், நல்லெண்ண உளவியல் மற்றும் சைக்கோமெடிரிக்ஸ் பின்னணி கொண்டவர். மாணவர்களின் உணர்ச்சிநிலைசார் அறிவு, பதின்பருவம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்திவருகிறார்.)
நன்றி; தி வயர்
https://thewire.in/politics/what-will-narendra-modi-be-remembered-for
டிவி நிகழ்ச்சிகள் பார்க்கும்பொழுது சில விளம்பரங்களை பார்த்தவுடன் வெறுப்பும் நம்மை அதைப்பார்க்க விடாமல் நம்மை அறியாமல் ரிமோட் மூலம் அதை மாற்ற நமது கையானது முயற்சிப்பது எப்படியோ அதுபோலத்தான் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களது விளம்பர புகைப்படங்களை பார்க்கும் போது வாக்கு பதிவு எந்திரத்தை மனதில் நினைத்து மாற்றவேண்டும் எண்ணம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.