பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இரண்டு விஷயங்கள் நிச்சயம் நடக்க வேண்டும் என்பதே தற்போதைய யதார்த்த நிலையாக உள்ளது. முதலாவதாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எதிர்ப்பு மனநிலையை அக்கட்சி அகற்ற வேண்டும். இந்த எதிர்ப்பு மனநிலையானது, சமீபத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மக்களவை இடைத்தேர்தல்களிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாஜக எதிர்ப்பலை வழக்கத்துக்கு மாறானது. இதுபோன்ற எதிர்ப்பலையை மாறுவது அரிது. அது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது. மேலும், ஆந்திரப் பிரதேசம், கேரளம், ஒடிசா, தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக இதுவரை தான் பெற்ற இடங்களைத் தாண்ட இயலாமல்போனாலும் அதே இடங்களையேனும் பெற வேண்டும்.
எதிரலையின் வேகத்தைக் குறைப்பதோ மேற்படி மாநிலங்களில் கணிசமான இடங்களைப் பெறுவதோ பாஜகவுக்கு அவ்வளவு எளிதல்ல. மாநிலக் கட்சிகளின் வலுவான கூட்டணிகள், அதிர்வைத் தரும் காங்கிரஸ், மோடி அரசு மீதான அதிருப்திகள், தென்னிந்தியாவில் கட்சி செயலிழந்து இருப்பது ஆகியவையே இப்போதையை சூழல். இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு, 2014 போலவே 2019 மக்களவைத் தேர்தலும் வெற்றி பெற்றால், அது மற்றொரு மகத்தான சரித்திர சாதனையாகவே திகழும்.
மோடி பிம்பம் முற்றிலுமாக மங்கிவிடவில்லை
கடந்த 2014ஐப் போலவே இம்முறையும் மோடியின் பிரச்சாரத்தையே பாஜக நம்பியிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளூர் தேர்தல்களில் இருந்து மக்களவைத் தேர்தல் எவ்வகையில் வேறுபட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டு, மோடி தன் வழக்கமான ஆவேச உரைகளை இடத்துக்குத் தகுந்தவாறு நிகழ்த்தும் கட்டாயத்தில் இருக்கிறார்.
மோடியை விட்டால் பாஜகவுக்கு வேறு கதியல்ல என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தற்போது அவரது செயல்பாடுகள் மீதான அதிருப்தி அதிகரித்தும், நம்பகத்தன்மை சரிந்தும் காணப்படுகிறது. மோடி எனும் பிம்பமும் பொலிவு இழந்துவருகிறது. எனினும், பாஜகவுக்கு இன்னமும் அவரே வலுவான பிரச்சார பலமாக நீடிக்கிறார். வாக்காளரைக் கவரக்கூடியவராகவும் இருக்கிறார். ஆட்சியின் மீதான அதிருப்தி அவரது தனிப்பட்ட இமேஜைப் பாதித்துவிடாத அளவில் மோடியின் அரசியல் சூட்சுமமும் அவரது பிரச்சார அமைப்பும் காப்பாற்றிவருகின்றன. அவர் இன்னமும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய சக்தியாகவே திகழ்கிறார்.
சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியம்!
பாஜக, தற்போது எதிர்கொண்டிருக்கும் பாதகமான சூழலுக்கு இந்த மனிதர்தான் காரணமா என்பதையும் அக்கட்சி யோசிக்க வேண்டும். மோடி அளித்த அதீத வாக்குறுதிகள், மோடியின் யதேச்சாதிகாரப் போக்கும் முரட்டு ஆவேசமும் பழைய கூட்டணிக் கட்சிகளை விலக்கிப் புதிய கட்சிகள் சேர விடாமல் செய்திருக்கும் சூழ்நிலை, யாரையும் கலந்தாலோசிக்காமல் மோடி எடுத்த அவசரமானதும் அதிரடியானதுமான முடிவுகள் ஆகியவை பாஜகவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன. இப்படி நிகழ்ந்திராவிட்டால், பாஜக இப்போதைய நிலையைக் காட்டிலும் மேலான நிலையில் 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும்.
2014இல் பரவலான ஆதரவும், எதிர்க்கட்சிகளின் சரிவும் வெற்றிக்குத் துணைபுரிந்தன. கூடவே, தேர்தலில் செலவிடுவதற்கான்ன கணிசமான பணமும், சிறப்பாகச் செயல்படும் கட்சி அமைப்பும் இருந்தன.
கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், எளிதில் இலக்கை எட்டியிருக்கக்கூடிய நிலையில் ஆடத் தொடங்கிய அந்த அணி தடுமாற்றத்தில் உள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிறரையும் ஆட விடாமல் தானும் அதிகப் பந்துகளை வீணடித்து வெற்றி இலக்கைக் கடினமாக்கிவிட்டார்.
இறுதிக் கட்டத்தில் சாகசமாக ஆடி, அதிரடி காட்டி வெற்றி பெற்றுத்தந்தால் நட்சத்திர ஆட்டக்காரரின் பிம்பம் மேலும் வலுப்பெறும். தோல்வியைத் தழுவினால் அவரது அணுகுமுறை குறித்த கேள்விகள் எழும். எனவே, நட்சத்திர ஆட்டக்காரரும், அவரது அணியும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.
ஆட்டத்தில் பெரும்பகுதியில் கைகளைப் பிசைந்துகொண்டிருந்த எதிரணி, எதிரணியின் நட்சத்திர மட்டையாளரின் தவறால் திடீரென்று கிடைத்த சாதகத்தையும் ஆட்டத்தின் நடிவே ஆடுகளத்திலிருந்து கிடைத்த ஒத்துழைப்பையும் பயன்படுத்திக்கொண்டு உற்சாகமாக முன்னேறும் நிலையில் இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதல்ல.
ஆட்டத்தில் இடையே மாற்றங்களைச் செய்வதால் அணியில் குழப்பம்தான் மேலிடும். அத்துடன், சரியான தயார் நிலையில் இல்லாததால் ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும். ஆம், என்னதான் நிதின் கட்கரி பற்றிய பேச்சுகள் எழுந்தாலும், 2019 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு பதிலாக வேறொருவரை பாஜக முன்னிறுத்துவது சாத்தியமற்ற ஒன்று.
சில பல தொய்வுகளைச் சந்தித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளிலும், அடுத்தடுத்த தொடர்களில் மீண்டு வர முடியும் என்பது கிரிக்கெட் அணிகளுக்கு மட்டுமல்ல; அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தக் கூடியதுதான். ஆனால், அரசியல் களம் என்பது மிகவும் பெரிதானது. இந்த 2019 தேர்தல் களமானது, பாஜகவுக்கும் எதிரணிக்கும் கடுமையாகவே இருக்கும். எனவே, இரு தரப்புமே முழுவீச்சில் களம் காண வேண்டிவரும்.
மோடி அரசு… அடுத்து?
எனவே, தேர்தல் முடிந்து கணக்குகள் பார்க்கப்படும்போது, புதிதாக ஆதரவுக் கரங்களை ஈர்ப்பதற்கான வேலைகள் தொடங்கும். தேர்தல் நேரத்தைவிடவும் இந்தச் சமயத்தில்தான் மோடியின் சுமை பாஜகவை அதிகம் அழுத்தும்.
20க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறக்கூடிய எந்தக் கட்சியும் பாஜகவை ஆதரிக்கும் என்று சொல்லத்தக்க நிலை இன்று இல்லை. ஆட்சி அமைக்க உரிமை கோரும் எந்தக் கூட்டணிக்கும் இத்தகைய ஆதரவு தேவைப்படும். அப்போது, பாஜகவுக்கு எந்தக் கட்சியும் ஆதரவளிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி ஆதரவு அளிப்பது பாஜகவின் தோல்விகளுடன் அடையாளப்படுத்திக்கொள்வதாக அமையும். இப்படிக் கிடைக்கும் ஆதரவின் மூலம் சில மாநிலங்களில் பாஜகவால் தன்னுடைய நிலையை வலுப்படுத்திக்கொள்ளவும் முடியும் என்பதால் இந்த ரிஸ்க்கை எந்தக் கட்சியும் எடுக்காது.
தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றுதான். ஆனால், பாஜக அல்லாத ஆட்சி அல்லது மோடி இல்லாத பாஜக அரசு என்ற காட்சிகள் அரங்கேறுவதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. மோடி அரசு என்னும் பெயரால் வாக்குகளைப் பெற்ற பாஜக, மோடி இல்லாத அரசை அமைப்பதைக் காட்டிலும் பெரிய நகைமுரண் எதுவும் இருக்க முடியாது. மோடி கட்சியை எந்த அளவுக்குச் சிறுத்துப்போகச் செய்துள்ளார் என்பதற்கான சான்றாக இது அமையும். அரசியல் நெருக்கடிகள் எத்தகைய ஆற்றல் வாய்ந்த தலைவரையும் தேவையற்றவராக ஆக்கிவிடக்கூடும் என்பதையும் ஒரு அம்சத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தால் அதுவே ஒரு கட்டத்தில் பெரும் சுமையாக மாறிவிடக்கூடும் என்பதையும் இது காட்டிவிடும்.
நன்றி: தி க்வின்ட்
https://www.thequint.com/voices/opinion/alternatives-to-modi-govt-bjp-2019-general-elections?fbclid=IwAR14Ms4_ntMiAsb-c7KLb0inIoueeFDoZUaWDmrDg3LsLVhKSycDHAjcftI
How to change your website background into black.. Is there any manual way to change that. Very hard to read