அரசுப் பயணங்களோடு கட்சியை நிகழ்ச்சியை இணைக்கும் மோடி:
செலவை ஏற்பது யார்? – பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை!
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். ஜனவரி 1ஆம் தேதி முதல், 42 நாட்களில் அவர் 27 பயணங்களை மேற்கொண்டு, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சுற்றி வந்திருக்கிறார். சில இடங்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார்.
பெரும்பாலான பயணங்களில் அவர் அலுவல் பணியை, பாஜக பிரச்சார கூட்டங்களுக்கும் சேர்த்துப் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, ஜனவரி 3ஆம் தேதி அவர் பஞ்சாப்பின் ஜலந்தரில் இந்திய அறிவியல் மாநாட்டைத் துவக்கிவைத்தார். அதன் பின் அவர் மாநில பாஜக குர்தாஸ்பூரில் ஏற்பாடு செய்திருந்த கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார். ஜனவரி 5ஆம் தேதி ஒடிசாவின் பரிபாதாவில் மேற்கொண்ட பயணம் போன்ற சில பயணங்களில், அவர் அலுவல் பணி மற்றும் கட்சி கூட்டங்கள் ஆகியவற்றில் ஒரே நாளில் கலந்துகொண்டார்.
அலுவல் பணிக்கான பயணத்துடன் கட்சிப் பணியையும் இணைப்பது பிரதமருக்குப் பயண நேரத்தை மிச்சமாக்கும் பலனை அளிக்கிறது. ஆனால், பயணச் செலவுகளை யார் ஏற்பது? இது கட்சிக்கு அதன் நட்சத்திரப் பிரச்சாரகரை தில்லியிலிருந்து விமானத்தில் அழைத்து வரும் செலவையும் மிச்சமாக்குகிறதா?
பிரதமர் மோடியின் பயண செலவுகள் கட்சி – அரசு இடையே எப்படிப் பிரித்துக்கொள்ளப்படுகிறது எனும் விவரத்தைக் கோரிப் பிரதமர் அலுவலகத்திற்கு ஸ்க்ரால் இணையதளம் சார்பில் பிப் 8ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கப்படவில்லை. பதில் வந்தால், அந்த விவரம் சேர்த்துக்கொள்ளப்படும்.
பிரதமர் அலுவலகம் அவரது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயண விவரங்களைப் பொது வெளியில் வைத்திருந்தாலும், அவரது வெளிநாட்டுப் பயணம் தொடர்பான செலவுக் கணக்கை மட்டுமே அளிக்கிறது. மோடியின் உள்நாட்டுப் பயணச் செலவுகள் அல்லது அதற்கான அரசின் அதிகாரபூர்வமான நடைமுறை விதிகள் பற்றிய தகவல்கள் இல்லை.
கடந்த காலங்களில் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகர்கள் மற்றும் செயலர்களாகப் பணியாற்றிய நான்கு பேரை ஸ்க்ரால் தொடர்புகொண்டது. அவர்களில் யாருக்கும், அதிகாரபூர்வமான நடைமுறை விதிகள், அதிலும் குறிப்பாக அலுவல் மற்றும் அலுவல்சாராப் பணிகள் இணைந்த பயணத்துக்கான அதிகாரபூர்வமான நடைமுறை விதிகள் பற்றித் தெரியவில்லை.
மன்மோகன் சிங்கின் ஆலோசகர் ஒருவர், முன்னாள் பிரதமர் இத்தகைய இணைப்பைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மன்மோகன் சிங்கின் பயணத் தகவல்களின்படி, அவர் அலுவல் பணியாகப் பயணித்துள்ளார் அல்லது அலுவல்சாராப் பணிக்காகச் சென்றுள்ளார். ஆனால் இரண்டையும் ஒரே பயணத்தில் கலந்ததில்லை.
மோடியின் பயண ஆர்வம் முந்தைய பிரதமரின் பயண ஆர்வத்தை மிஞ்சுவதைப் பற்றி ஏற்கனவே ஸ்க்ரால் இணைய இதழ் குறிப்பிட்டிருக்கிறது. மன்மோகன் முதல் முறை பிரதமராக இருந்த போது, 369 நாட்களும் இரண்டாம் முறை 284 நாட்களும் பயணம் செய்துள்ளார். மாறாக மோடி, 565 நாட்கள், அதாவது பதவிக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்களில் பயணம் செய்துள்ளார்.
2014 மே முதல் 2017 பிப்ரவரி வரை பிரதமர் அலுவலகம், தேர்தல் காலத்தில் மோடி மேற்கொண்ட 128 அலுவல்சாராப் பயணங்களுக்காக பிரதமர் அலுவலகம், இந்திய விமானப் படைக்கு ரூ.89 லட்சம் செலுத்தியதாக 2017இல் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளிய்ட்டது. ஓய்வு பெற்ற தளபதி ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த கேள்விக்கு பதிலாக இந்திய விமானப் படை இந்தத் தகவலைத் தெரிவித்தது.
பிரதமர் அலுவலக்த்திற்கு இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டதாக பாஜக தெரிவித்தது. ஆனால், இந்த ஆர்டிஐ பதில், 1999இல் அறிவிக்கப்பட்ட வர்த்தகக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ரூ.31,000. இந்த தொகை, தனியார் தனி விமானக் கட்டணத்தை விட மிகவும் குறைவு.
மன்மோகன் சிங்கைவிட அதிகமாக மோடி அலுவல் சாராப் பயணங்களை, பெரும்பாலும் மாநிலத் தேர்தல்களின்போது மேற்கொண்டுள்ளார். இதற்குக் காரணம், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நிழலுக்குப் பின் இருந்த மன்மோகன் சிங் போல அல்லாமல், மோடி பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகராக இருப்பதுதான். பிரதமரே கட்சியின் முக்கியப் பிரச்சாரகராக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் காலங்களில் காங்கிரசிலும் இதே நிலை இருந்தது. ஆக, ஆட்சியில் இருக்கும் கட்சி – அப்போது காங்கிரஸ், இப்போது பாஜக – மக்களவைத் தேர்தலுக்கு முன் மிகப் பெரிய சாதகத்தைப் பெறுகிறது.
ஒவ்வொரு முறை பிரதமர் தில்லியை விட்டுச் செல்லும்போதும் பிரதமர் அலுவலகம் அதை ஒரு பயணம் எனக் குறிக்கிறது. உதாரணமாக, பிப்ரவரி 9ஆம் தேதி, மோடி அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றபோது அது பிரதமர் அலுவலகத்தால் ஒரே பயணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக ஸ்க்ரால் இதை இரு தனிப் பயணங்களாகக் கருதியுள்ளது.
ஜனவரி 1 முதல், பிரதமர் அலுவலகம் 12 பயணங்களைக் குறிப்பிட்டுள்ளது. ஜனவர் 4ஆம் தேதி மோடி மணிப்பூர், அசாம் சென்றது; 22இல் வாரணாசி சென்றது ஆகியவை ஏனோ குறிப்பிடப்படவில்லை. இவை தொடர்பாக பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் (PIB) செய்தி வெளியாகியுள்ளது. இதை ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
பிஐபி செய்திக் குறிப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கான பயணத்தைத் தனி பயணமாக கருதினால், இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து மோடி 27 பயணங்களை மேற்கொண்டுள்ளார் என ஸ்க்ரால் கண்டறிந்துள்ளது. பிரதமர் அலுவலகம் பயணங்கள், உள்நாட்டு, வெளிநாடு, அலுவல் எனப் பிரிக்கிறது. இருப்பினும், ஜனவரி 1க்குப் பிறகான பயணங்கள் இன்னமும் இவ்வாறு வகைப்படுத்தப்படவில்லை.
மோடி உரைகள் சொல்வது என்ன?
தேர்தல் காலத்தில் எப்படியும், அரசு நிகழ்ச்சிக்கும் கட்சி நிகழ்சிகளுக்கும் இடையிலான கோடு மிகவும் மங்கலாகிவிடுகிறது.
அரசு நிகழ்ச்சிகளில், மோடி தனது அரசின் சாதனைகள் பற்றி பேசுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். 2016இல் மேற்கொள்ளப்பட்ட, பெரும் பொருளாதாரத் தாக்கத்தை உண்டாக்கிய, பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக்கூட அவர் நியாயப்படுத்திப் பேசுகிறார்.
“பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன் என்ன என என்னிடம் கேட்கப்படுகிறது” என குஜராத்தின் சூரத்தில் ஜனவரி 30 அன்று பேசும்போது குறிப்பிட்டவர், “இந்த முடிவுக்குப் பின் குறைந்த விலையில் வீடுகள் வாங்க முடிந்த இளைஞர்களிடம் இது பற்றி கேட்க வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், ரியல் எஸ்டேட்டில் கறுப்புப் பணம் ஆதிக்கம் செலுத்தியது எல்லோருக்கும் தெரியும்” என அவர் கூறினார்.
பாஜக ஏற்பாடு செய்யும் பொது கூட்டங்களில், அவரது பேச்சின் ஒரு பகுதி உள்ளூர் விஷயங்களைப் பேசினாலும், எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனம் பொதுவான அம்சமாக இருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள், மகாபந்தன் கூட்டணையை அமைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டிவருகிறார்.
ஜனவரி 9 அன்று ஆக்ராவில், “பரஸ்பரம் பார்த்துக்கொள்ள விரும்பாதவர்கள்கூட, நம்மை எதிர்ப்பதற்காக ஒன்றாக சேர்கின்றனர்’ எனக் கூறினார்.
முக்கியமாக, அரசு நிகழ்ச்சிகளில்கூட மோடி, எதிர்க்கட்சிகளைத் தாக்கத் தயங்குவதில்லை. உதாரணமாக, ஜனவரி 5 அன்று ஜார்க்கண்டின் பலாமுவில், ஆறு பாசனத் திட்டங்களை துவக்கி வைத்தபோது, ஆளும் கட்சியை காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ ஆட்சியுடன் ஒப்பிட்டார். “இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வேற்பாடு. விவசாயிகளுக்குப் பலன் தரக்கூடிய திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றி இருந்தால், விவசாயிகள் கடன் பெற வேண்டிய நிலை வந்திருக்காது” என அவர் கூறினார்.
பாஜக அரசு கட்டிய வீடுகளின் எண்ணிகையைத் தொட ஐமுகூ அரசுக்கு இன்னும் 25 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
வட கிழக்கு மற்றும் மேற்கு வங்கத்தில், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் சர்சைக்குரிய ’குடியுரிமை திருத்த மசோதா’வை அவர் ஆதரித்துப் பேசினார். குடியேறிவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படலாம் என உள்ளூர் மக்கள் அஞ்சும் வடகிழக்கில் இந்த மசோதா பெரும் எதிர்வினையை உண்டாக்கியுள்ளது.
பிப்ரவரி 9இல் அசாமில் அமின்கோவன் விஜயத்தின்போது, நாட்டில் ஊடுருவியவர்களுக்கு இடமில்லை என இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய மோடி கூறினார். “எந்த விதத்திலும் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என வடகிழக்கு மக்களுக்கான தேசிய உறுதி இது, போதிய ஆய்வு மற்றும் மாநில அரசின் பரிந்துரைக்குப் பின் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்” என அவர் கூறினார்.
பிப்ரவரி 1இல் மேற்கு வங்கத்தின் துர்காபூரில், பேசியபோது மோடி இந்த மசோதாவை திரிணமுல் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றார். இங்குள்ள என சகோதர, சகோதரிகளுக்கு இது தேவை என்றார்.
கேரளத்தில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்கள் நுழைவதை ஆதரிக்கும் ஆளும் மார்க்சிஸ் கட்சி மீது தாக்குதல் நடத்துவதில் மோடி கவனம் செலுத்தினார். ஜனவரி 15, கொல்லத்தில் பேரணி ஒன்றில் பேசியவர், இந்தப் பிரச்சினைக்கான கேரள அரசின் எதிர்வினை வெட்கக்கேடானது என்ரார். “கம்யூனிஸ்ட்கள் இந்திய வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகத்தை மதிப்பதில்லை எனத் தெரியும், ஆனால் அவர்களுக்கு இவற்றின் மீது இத்தனை துவேஷம் இருக்கும் என யாருக்கும் தெரியாது” என்றார்.
ஆக, அரசு செலவில் பாஜக பிரச்சாரம் ஜாம் ஜாமென்று நடக்கிறது!
விஜயதா லால்வானி, நித்யா சுப்பிரமணியன்
நன்றி; தி ஸ்க்ரால்.இன்
https://scroll.in/article/912885/modi-keeps-combining-official-travel-with-bjp-events-but-who-is-paying-the-bills?