அறிவுஜீவிகள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்; சுதந்திரமாகச் சிந்திக்கும் நம் உரிமையுடன் நெருக்கமாகத் தொடர்பு உடையவர்கள். அதனால்தான் சர்வாதிகார அரசுகளால் குறி வைக்கப்படுகின்றனர்.
அசாமிய மொழியில் சாகித்ய அகாடமி விருது வென்ற ஹிரேன் கோஹைன் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தலித அறிஞரான ஆன்ந்த டெல்டும்டே, பீமா கோரேகானில் வன்முறையைத் தூண்டிய “நகர்புற மாவோயிஸ” சதியில் அங்கம் வகித்ததாகச் சிறை தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார். அருண் பெரேரா சுதா பரதவாஜ், வரவர ராவ், கவுதம் நவ்லகா மற்றும் வெர்னான் கோன்சால்வஸ் ஆகியோர் கடந்த ஆண்டு இதே குற்றச்சாட்டுக்காக கைதானார்கள். இவர்கள் பழங்குடியினர் நலனுக்காகப் பாடும்பாடும் அறிவிஜீவிகளில் முக்கியமானவர்கள்.
பெரேரா, கோன்சல்வஸ் ஆகியோர் கடந்த ஆட்சிகளிலும் கைதானாலும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் பலர் சிறையில் இல்லாவிட்டாலும், பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர். சமூக ஊடகங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 2018 ஆகஸ்ட்டில், கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பசனகவுடா பாட்டில் யாட்னல், தான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவிஜீவிகளைச் சுடுமாறு காவல் துறைக்கு உத்தரவிடுவேன் எனக் கூறினார்.
தனிநபர்கள் மட்டுமல்ல, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற, தாராளவாதச் சிந்தனை கொண்ட வலுவான கல்வி நிறுவனங்கள்கூடத் தாக்குதலுக்கு உள்ளாகி, நிதிக் குறைப்பை எதிர்கொண்டுவருகின்றன.
அறிவி ஜீவிகளும் உயர் கல்வி நிறுவனங்களும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இத்தகைய அச்சுறுத்தலை அளிப்பது ஏன்? அதைவிட முக்கியமாக, இது ஏன் நமக்கெல்லாம் முக்கியம்?
“அழகியல் அல்லது தத்துவ நோக்கிலான விஷயங்களைப் போலவே, சிக்கலான வடிவங்களிலும் அறிவுத் துறைகளிலும், அறிவின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவற்றிலும் தேடல் கொண்டவர்கள், அவற்றின் மீது அதிக மதிப்பு உள்ளவர்கள்” என்பது அறிவுஜீவிகளுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை.
ஆனால் இந்த விளக்கம், அறிவிஜீவிகள் எனக் கருதப்படுபவர்களும் பிறருக்கு இடையே இடைவெளியை உண்டாக்குகிறது. தினசரிக் கவலைகளைத் தாண்டி, அவர்களை அரியதொரு நிலைக்கு உயர்த்துகிறது. அவர்களுக்கான நமது பரிவையும் இது குறைக்கிறது. ஆனால் இந்த வார்த்தைக்கான பரந்த பொருளைப் புரிந்துகொள்வது அவசியம்.
‘ஆனந்த டெல்டும்டேயின் சுதந்திரம் ஏன் முக்கியம்?’ எனும் கட்டுரையில் பேராசிரியர் அபூர்வானந்த் இது குறித்து விளக்கியிருக்கிறார். அறிவிஜீவி என்பவர் கலவிரீதியாகத் தகுதி உடையவர் மட்டுமல்ல, அநீதி அல்லது சமத்துவமின்மையைப் பார்க்கும்போது பொங்கி எழுபவரும் அறிவுஜீவி என அவர் குறிப்பிடுகிறார்.
“அநீதி அல்லது சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதால் இந்த நபர் கோபம் கொள்கிறார். இதன் காரணமாக அறிவு செயல்பட்டு, அவரது நலனுக்காக அல்லாமல், அநீதி மற்றும் சமத்துவமின்மையான பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கிறது”.
இதன் காரணமாகவே, ஒரு அறிவுஜீவி சுதந்திரமான குடிமகனாக இருபது அவசியமாகிறது. இது அவர்கள் நலனுக்கானது மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சமூக நலனிற்கானது. ஏனெனில், சாதாரன மனிதர்கள் யாருக்கு வாக்களிப்பது அல்லது ஆதரவு அளிப்பது என நன்றாக யோசித்துப்பார்த்து முடிவு எடுப்பார் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், நம்மில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விஷயம் குறித்து நன்றாக, ஆழமாக யோசிக்கும் திறன் பெற்றிருக்கிறோமா அல்லது மற்றவர்களிடம் இருந்து தீர்மானமான கருத்துகள் மூலம் நமக்கு வழிகாட்டுதல் தேவையா? சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்தில், கடினமான கேள்விகளுக்கு பதில் தேடுவது எப்போதுமே எளிதல்ல. உதாரணமாக, ஒரு வன்புணர்ச்சியாளரைத் தூக்கிலிட வேண்டுமா அல்லது திருடனின் தலையை வெட்ட வேண்டுமா அல்லது கொலைக்காரரை அடித்துக் கொல்ல வேண்டுமா (அல்லது தூக்கு தண்டனை வழங்க வேண்டுமா) போன்ற கேள்விகளுக்கு எளிதான பதில்கள் இல்லை.”
அபூர்வானந்த் மேலும் இப்படிச் சொல்கிறார்: “இந்தச் சிக்கலான விஷயங்களை ஆய்வு செய்துள்ளவர்கள், இவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகின்றனர். எனவேதான் மக்கள் சிறையில் அடைக்கப்படாமல், தங்கள் எண்ணங்களைச் சுதந்திரமாக, பொதுவில் வெளியிடுவது முக்கியமாகிறது. இதன் காரணமாகவே அடக்குமுறை அரசு, பொது உரையாடலில் ஆர்வம் காட்டும் நபர்கள், தங்கள் துறைக்குள் மட்டும் தங்களைச் சுருக்கிக்கொள்ள விரும்பாதவர்கள் மற்றும் பொது அறிவுஜீவு என்னும் பங்காற்றக்கூடியவர்கள் ஆகியோர் பொது மக்கள் பார்வையில் இருந்து மறைந்துபோக விரும்புகிறது. அவர்களைச் சிறையில் அடைப்பது அல்லது அகற்றுவது மூலம் இது நிகழ்த்தப்படுகிறது. இதனால் தான் அன்மைக்காலங்களில் “நகர்ப்புற நக்ஸல்” எனும் வார்த்தை உருவாக்கப்பட்டது.”
அமெரிக்க எம்பி ஜோசப் மெக்கார்த்தியும் இதர அரசியல்வாதிகளும் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஆட்சியை அகற்றலாம் எனும் பீதியை உண்டாக்கியதன் மூலம் இதைத்தான் செய்தனர். மெக்கார்த்தி யுகம் எனக் குறிப்பிடப்படும் 1950களில், ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள், விஞ்ஞானிகள், அனைத்து துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் ஆகியோர் குறி வைக்கப்பட்டு, கம்யூனிஸ்ட்கள் என முத்திரை குத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குறிப்பாகக் கல்வியாளர்கள், இளம் உள்ளங்கள் மீது அதிக தாக்கம் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட பல்கலைக்கழங்களிலிருந்து பிரிக்கப்பட்டனர். அண்மைக்கால உதாரணமாக, இர்டோகனின் துருக்கியில், எண்ணிலடங்கா அறிவுஜீவிகள் அரசைக் கேள்வி கேட்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்ற நிகழ்வுதான் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை அழிப்பதைக் கேள்வி கேட்பவர்கள் அல்லது தலித்களிடமிருந்து நிலத்தை அபகரிப்பவர்களைக் கேள்வி கேட்பவர்கள் அல்லது மனித உரிமைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறவர்கள் நகர்புற நக்சல்கள் என முத்திரை குத்தப்பட்டு, அவதூறுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் கைதாகும்போது பொதுமக்கள் மத்தியில் அவர்கள் மீது அனுதாபம் உண்டாவதில்லை.
அறிவுஜீவிகள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள். சுதந்திரமாகச் சிந்திக்கும் நம் உரிமையுடன் நெருக்கமாகத் தொடர்பு உடையவர்கள். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் உதவுகின்றனர். அதனால்தான் சர்வாதிகார அரசுகளால் அவர்கள் குறி வைக்கப்படுகின்றனர்.
புகழ்பெற்ற அமெரிக்கப் பொது அறிஞர் நோம் சாம்ஸ்கி, அதிகாரத்தின் முன் உண்மையைப் பேசுவது அறிவுஜீவிகளின் கடமை எனச் சொல்லப்படுவதுடன் வேறுபடுகிறார். ஏனெனில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை என்னவென ஏற்கனவே தெரியும். அதிகாரம் என்ன செய்ய இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார் சாம்ஸ்கி. எனவேதான் அதிகாரம் பற்றிய உண்மையைப் பொதுமக்களுக்குச் சொல்லும் அறிவுஜீவிகளின் பணி முக்கியமாகிறது.
இதன் காரணமாகவே, அறிவுஜீவிகள் எனக் கருதிக்கொள்ளாத நம்மைப் போன்றவர்கள், அறிவுஜீவிகள் எனக் கருதப்படுபவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கான தார்மிக, ஜனநாயக, அரசியல் சாசன பொறுப்பைக் கொண்டிருக்கிறோம். இல்லை எனில் மார்டின் நெய்மில்லர் சொன்னது போல், இறுதியில் நம் சார்பாகக் குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலை உருவாகிவிடும்.
ரோஹித் குமார்
(ரோஹித் குமார் கல்வியாளர். நல்லெண்ண உளவியல் மற்றும் சைக்கோமெட்ரிக்ஸ் பின்னணி கொண்டவர். அவர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உணர்வுசார் அறிவு மற்றும் அவர்களுடைய பதின் பருவத்துப் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்திவருகிறார். ஆதிக்கம் அற்ற பள்ளி வளாகத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.)
நன்றி: தி வயர்
https://thewire.in/rights/why-modi-governments-persecution-of-intellectuals-should-worry-us-all