கடந்த திமுக ஆட்சியின்போது பல அதிகார மையங்கள் செயல்பட்டு வந்தன. தனிப்பட்ட பாதுகாப்பு என்று எடுத்துக்கொண்டாலும்கூட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனி வீடுகள் செக்டார் ஏ, செக்டார் பி என்று அழைக்கப்பட்டு இந்த இரண்டு வீடுகளுக்குமே ஏறத்தாழ தலா நூறு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் அண்ணா அறிவாலயத்துக்கும் தனிப் பாதுகாப்பு என்று காவல்துறையினர் செயல்பட வேண்டிவந்தது.
அரசியல் சட்டப்படி துணை முதல்வர் என்கிற பதவிக்கு எந்தவிதமான அங்கீகாரமும் இல்லையென்றாலும் செக்டார் சி பாதுகாப்பு என்று மு.க. ஸ்டாலினின் வீட்டுக்கும் நூறு காவலாளிகள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும்போது எதிரில் வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவது கிடையாது என்றாலும் அவரது வாகனத்தை வேறு வாகனங்கள் – இரு சக்கர வாகனமோ, ஆட்டோ ரிக்ஷாவோ, காரோ – பாதுகாப்புக் காரணத்துக்காக கடந்துபோவது அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால், இந்த முறை ஜெயலலிதாவின் ஆட்சியில் அந்த அளவுக்குக்கூட காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்பது பாராட்ட வேண்டிய அம்சம்.
முதல்வர் தனக்காக அளவுக்கு அதிகமான பாதுகாப்புத் தேவையில்லை என்றும், எந்தக் காரணத்தாலும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகக்கூடாது என்றும் காவல்துறைக்கு கட்டளை பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஏனைய விஷயங்களில் காவல்துறையினருடைய கை ஓங்கியிருப்பதால் கட்சிக்காரர்கள் மனமொடிந்து போயிருக்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியின்போது கட்சியின் ஆதிக்கத்தில் செயலிழந்து போய்க்கிடந்த காவல்துறை இப்போது அதிமுக ஆட்சியில் திடீரென்று பெற்ற சுதந்திரத்தின் காரணமாகக் கடிவாளம் இல்லாத குதிரைபோல செயல்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சாதாரணமாக திமுக ஆட்சியின்போதெல்லாம் கட்சிக்காரர்கள் காவல்துறையினரைத் தங்களது கைப்பாவையாகச் செயல்பட வைப்பது வழக்கம். அதேபோல, அண்ணா திமுக ஆட்சி வரும்போதெல்லாம் கட்சிக்காரர்களைவிடக் காவல்துறைதான் மேலதிகாரம் பெற்றதாக இருக்கும். அந்தவகையில், இப்போது எந்தவிதமான கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் காவல்துறையினர் தங்களது அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டிருப்பது திமுகவோ ஏனைய எதிர்க்கட்சியினரோ அல்ல. ஆளும் அதிமுகவினரும், கூட்டணி கட்சியினரான தேமுதிகவினரும்தான்.
முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலையில் தில்லி செல்வதையொட்டி தென்சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் தோரணங்கள் கட்டுவதிலும் கொடிஏற்றுவதிலும் கட்சித் தொண்டர்கள் ஆர்வம் காட்டினர். அப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு தோரணங்கள் கட்டிவிட்டு ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பில் ஒரு ஹோட்டலில் பகுதிச் செயலாளர் நுங்கை மாறன் தலைமையில் தொண்டர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் விளக்குகளை அணைத்துள்ளனர். சாப்பிடும்போது விளக்கை அணைத்தது ஏன் என்று கேட்டதற்காக அவர்களை அடித்து வேனில் ஏற்றி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
தாங்கள் கட்சிக்காரர்கள் என்றும் முதல்வரின் தில்லி விஜயத்துக்காகத் தோரணம், கொடிகள் கட்டுவதில் ஈடுபட்டிருந்து விட்டு, சாப்பிடுவதற்காக வந்திருப்பதாகவும் சொன்னதை, அந்த வழியாக வந்த காவல் துறை துணை ஆணையர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை என்கிறார்கள். மேலிடத்தில் முறையிட்டுக் கொள்ளுங்கள் எங்களுக்குக் கவலையில்லை என்று கூறிவிட்டாராம்.
பிறகு ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பா. வளர்மதியும் தென்சென்னை மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை அமைச்சருமான ஜி. செந்தமிழனும் நேரடியாகத் தலையிட்டு அவர்களை அழைத்து வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதேபோல, கடந்த ஜூன் 4ஆம் தேதி திருவான்மியூர் காவல் நிலையத்தில், திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் ஒருவர் காவல் துறையினரால் பிடித்து வைக்கப்பட்டு விட்டார். அவர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சட்டப் பேரவைத் தலைவர் ஜெயகுமார் வரை விஷயம் எடுத்துச் செல்லப்பட்டு, அவரது தலையீட்டுக்குப் பிறகுதான் நியாயம் கேட்கப்போன அந்தத் தொண்டர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
“இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது அநேகமாக அதிமுகவினரும் எங்கள் கூட்டணி கட்சியினரான தேமுதிகவினரும்தான். எங்களால் கட்சித் தலைமையிடம் காவல்துறை அதிகாரிகளைப் பற்றி நேரிடையாகப் புகார் கொடுக்க முடியாது என்கிற தைரியத்தில் காவல்துறையினர் செயல்படுகின்றனர். இதனால், திமுகவினர் முன்னால் நாங்கள் தலைகுனிய வேண்டியிருக்கிறது’ என்று அதிமுக தொண்டர்கள் வருத்தப்படுகின்றனர். தமிழகம் முழுவதுமே இதே பிரச்னை காணப்படுகிறது.
தென் சென்னையையே எடுத்துக் கொண்டால், கட்டப் பஞ்சாயத்து, சமூகவிரோதச் செயல்களில் கடந்த ஆட்சியின் ஆதரவுடன் ஈடுபட்டதாகக் கருதப்படும் பலரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, காவல் துறையின் ஆதரவுடன் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டும் வருகிறார்கள் என்று தெரிகிறது.
சட்டவிரோதிகளுக்காகவும் தவறு செய்தவர்களுக்காகவும் காவல்நிலையங்களுக்குக் கட்சிக்காரர்கள் போவதோ காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுப்பதோ நிச்சயமாக கண்டனத்துக்கு உரியது. அதேசமயம், மக்கள் பிரச்னைகளுக்காக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுக்காமல் இருக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான பிரச்னைகளுக்குக்கூட ஆளும் கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவோ பாதிக்கப்பட்டவர்களுக்காக சிபாரிசு செய்யவோ முடியாவிட்டால் பிறகு அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டிய அவசியம்தான் என்ன? என்று கேட்கும் அதிமுகவினர் இதன் பாதிப்பு உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலித்து விடக் கூடாது என பயப்படுகிறார்கள்.
“தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே பார்களும் செயல்படுகின்றன. இங்கேயெல்லாம் வெளியில் நிற்பவர்களைக் கண்மூடித்தனமாகக் காவல்துறையினர் அடித்துவிரட்டுவதும் அதன் மூலம் அந்தப் பார்களில் இருந்து தங்களுக்கு மாமூல் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் நடந்து வருவதாகவும் புகார்கள் பரவலாக எழுந்துள்ளன. இதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு யார் எடுத்துச் செல்வது?’ என்று ஆளுங்கட்சியினர் தங்கள் மாவட்டச் செயலாளர்களிடமும், அமைச்சர்களிடமும் கேட்கிறார்கள். அவர்களோ செய்வதறியாது விழிக்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் கட்சிக்காரர்களின் அத்துமீறல்கள் முகம்சுழிக்க வைத்தன என்றால் இப்போது காவல்துறையினரின் அத்துமீறல்கள் திகைக்க வைக்கின்றன. மேல்மட்டத்தில் இல்லாவிட்டாலும் கீழ்மட்டத்தில் காவல்துறையின் மாமூல் வசூல் பல மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல நடைபெற்ற சம்பவம்தான் ஞாயிறு இரவு நடந்த நுங்கை மாறன் மற்றும் தொண்டர்களின் மீது தொடுக்கப்பட்ட காவல்துறையின் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
நன்றி தினமணி